About Me

2021/04/30

பிரச்சினைகள்


இப்படித்தான் வாழ வேண்டுமென எல்லோருக்கும் எதிர்பார்ப்புக்களும், ஆசைகளும் இருக்கும். ஆனால் எதிர்பாராத சூழ்நிலைகள் நம்மை திசை திருப்பி விடுகின்றபோது நிலைகுலைந்து போய் விடுகின்றோம். 

பிரச்சினைகள் சூழ்கையில் ஏன் பிறந்தோமென்ற தவிப்பிலும், விரக்தியிலும் மூழ்கி, நகர்கின்ற ஒவ்வொரு நாட்களும் நரக நெருப்பில் நிற்பதாக உணர்வோம். ஆனாலும் பிரச்சினைகள் நம்மைச் சூழும்போதுதான் சிந்திக்கின்றோம். அதற்குள் உருவாகின்ற புதிய பாதைகளைக் கண்டறிகின்றோம்.


ஜன்ஸி கபூர் - 30.04.2021

எசப்பாட்டு


 💓💓💓💓💓💓💓💓💓💓 

கன்னக்குழி வேர்த்திருக்க 
கருத்தமணி கழுத்திலாட
கருதுமேடும் கலங்கிடவே 
காத்திருக்கும் புள்ள
துடிக்காதே  நீயும் 
சீக்கிரமே வந்திடுவேன்

கத்தரி வெயிலால கருத்திடுவே  
சித்திர விழியும் நொந்திடுமே புள்ள
சத்தியமா உன் நெனைப்புதான்
சாமத்துலயும் அணைக்குதடி மெல்ல  

நெத்தியில பூத்த மச்சம்
வெட்கத்தில சுருங்காதோ 
பக்கத்தில வாரேன் புள்ள
காதோரம் காதல் கொஞ்ச                    
 
ஜன்ஸி கபூர் - 30.04.2021

 

2021/04/29

தன்மானம்

 


தன்மானத்தையும் சுரண்டுகின்ற மிகப் பெரிய ஆயுதம் வறுமையே. தன்மானம் இழந்து அடுத்தவரின் புறக்கணிப்பிற்கும் ஆளாகின்ற ஒவ்வொருத்தரின் சோகத்தின் வலி கண்களின் வழியாகிச் செல்கையில் அதனை தனது மொழியாகி உணருமோ உணர்வுகள்.  

நாவிலே பொய்யும் புரட்டும் இயல்பாகவே சரளமாகின்றபோது மெய்யும் மெய்க்குள் மௌனமாக அடங்கி விடுகின்றது.

ஜன்ஸி கபூர் - 29.04.2021


கள்ளிச் செடி

முட்கள் கூட என் கிரீடங்களே

இருந்தும் சாம்ராஜ்யம் மறுக்கப்பட்டிருக்கின்றது எனக்கு

வனப்புக்களால் வசீகரமாகின்றவர்கள் தருகின்ற வலி

தினமும் என் மொழியாகிப் போகின்றது


வீழ்கின்ற ஒவ்வொரு நீர்த் துளிகளுக்குமாக

விரிகின்ற முட்களுக்குள்தானே என் உலகு

விரும்பிப் பார்க்காதோரை திரும்பிப் பார்க்க

விரல் பற்றுகின்றேன் அவாவின் உச்சத்தில்

முட்களின் பாஷைக்கு அவர்கள் செங்குருதிதானே 

நலம் விசாரித்து தொட்டுப் பார்க்கின்றது.  


பாலைவனங்களும் மயானங்களும் என் முகவரியானதில்

வலை விரிக்காத ஏமாற்று உலகு

தொலைபுள்ளியாகி தள்ளியே நிற்கின்றது தினமும்

வறட்சிக்குள்ளும் பசுமையைக் காக்கின்ற என்னை

யாருமே திரும்பிப் பார்ப்பதாக இல்லை. 


முட்களாக திரிபடைந்த மென் மலர்களுக்காக

பட்டுடல் விரிக்காத வண்ணாத்திகளை சபிக்கவில்லை

புறக் கவர்ச்சி தேடும் உலகில்

தோற்றுப் போகின்றது என் மென்மை


இருந்தும் என்  தேடல் நீள்கின்றது  

தூசிகளுக்குள் தூங்கிக் கொண்டிருக்கின்ற மலர்களின்

மகிமையை பறை சாட்டுமோ பறவைகள்

வெந்தணலைச் சுவைக்காத கவிஞர்களின் கருக்கள்

பூஞ்சோலைகளைத்தானே  எட்டிப் பார்க்கின்றன மோகத்துடன்


இருந்தும் என்னை தினமும் மதிக்காத

ஓட்டகங்களும் வணிகர்களும் கடந்து செல்கையில்

கடும் வெப்பமும் சிதைக்காத அழகு

என்னிடம் இருப்பதாக பெருமிதம் கொள்கின்றேன்  


வறண்ட தேசங்களின் வைரம் நானே

வளர்கின்றேன் பசுமையை உயிர்க்கும் தருவாக


ஜன்ஸி கபூர் - 29.04.2021