About Me

2021/04/29

கள்ளிச் செடி

முட்கள் கூட என் கிரீடங்களே

இருந்தும் சாம்ராஜ்யம் மறுக்கப்பட்டிருக்கின்றது எனக்கு

வனப்புக்களால் வசீகரமாகின்றவர்கள் தருகின்ற வலி

தினமும் என் மொழியாகிப் போகின்றது


வீழ்கின்ற ஒவ்வொரு நீர்த் துளிகளுக்குமாக

விரிகின்ற முட்களுக்குள்தானே என் உலகு

விரும்பிப் பார்க்காதோரை திரும்பிப் பார்க்க

விரல் பற்றுகின்றேன் அவாவின் உச்சத்தில்

முட்களின் பாஷைக்கு அவர்கள் செங்குருதிதானே 

நலம் விசாரித்து தொட்டுப் பார்க்கின்றது.  


பாலைவனங்களும் மயானங்களும் என் முகவரியானதில்

வலை விரிக்காத ஏமாற்று உலகு

தொலைபுள்ளியாகி தள்ளியே நிற்கின்றது தினமும்

வறட்சிக்குள்ளும் பசுமையைக் காக்கின்ற என்னை

யாருமே திரும்பிப் பார்ப்பதாக இல்லை. 


முட்களாக திரிபடைந்த மென் மலர்களுக்காக

பட்டுடல் விரிக்காத வண்ணாத்திகளை சபிக்கவில்லை

புறக் கவர்ச்சி தேடும் உலகில்

தோற்றுப் போகின்றது என் மென்மை


இருந்தும் என்  தேடல் நீள்கின்றது  

தூசிகளுக்குள் தூங்கிக் கொண்டிருக்கின்ற மலர்களின்

மகிமையை பறை சாட்டுமோ பறவைகள்

வெந்தணலைச் சுவைக்காத கவிஞர்களின் கருக்கள்

பூஞ்சோலைகளைத்தானே  எட்டிப் பார்க்கின்றன மோகத்துடன்


இருந்தும் என்னை தினமும் மதிக்காத

ஓட்டகங்களும் வணிகர்களும் கடந்து செல்கையில்

கடும் வெப்பமும் சிதைக்காத அழகு

என்னிடம் இருப்பதாக பெருமிதம் கொள்கின்றேன்  


வறண்ட தேசங்களின் வைரம் நானே

வளர்கின்றேன் பசுமையை உயிர்க்கும் தருவாக


ஜன்ஸி கபூர் - 29.04.2021


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!