About Me

2021/05/01

மேகங்களோடு



சிறகுகளை உதிர்த்தவாறே நகர்கின்ற மேகங்களை

தன் விரல்களால் வருடிக்கொள்கின்றது வானம்

காற்றின் முடிச்சுக்களால் சிறைப்பட்டிருக்கின்ற மேகத்தினை

தன் இதழ்களால் அவிழ்ப்பது சுகம்தான்போலும்

வான் துளைகளுக்குள் தம் முத்தங்களை

நிரப்பியவாறு பயணிக்கின்ற பஞ்சு மேனிதனை

தன் இதழ்களால் ஈரப்படுத்துகின்றது வானும்

காதலின்பத்தின் இதம் வரையத் தொடங்குகின்றது

மேகங்களுக்கும் வானுக்குமிடையிலான அற்புதக் காதலை


கீற்றுமின்னலெனும் மாங்கல்யமும் முழங்குகின்ற இசையும்

வானுக்கும் மேகத்திற்குமான உறவுநிலையை வெளிப்படுத்தும்போது

மேகங்கள் தன்னைக் கருங்கூந்தலுக்குள் ஒளித்தே

மொய்க்கின்ற நாணத்துக்குள் நனைந்து அலைகின்றன


வானும் விடுவதாக இல்லை துரத்துகின்றது

வெவ்வேறு திசைகளில் கலைந்தோடுகின்றன அவை

மகிழ்வின் சிதறல்கள் ஆங்காங்கே அப்பிக்கொள்கின்றன

பொன்னிறத்தூறல்களின் சங்கமத்தில் இசைகின்றது இயற்கையும்


பூமிக்கும் வானுக்கும் இடையிலான வெளிதனில்

தொங்கிக்கொண்டே சென்றாலும் விழுவதாக இல்லை

ஈர்ப்பின் இரகசியம் இயற்கையின் ஆற்றல்

நிலத்தின் வரைகோடுகளையும் சலனமற்ற குளங்களையும்

அவை கடந்து செல்கையில் இணைகின்றன

உயிர்களின் ஏக்கப் பெருமூச்சுக்களின் திரட்சிகளும்

கண்ணீர்ப் பாறைகளின் வெடிப்பொலிச் சப்தங்களும்


மேகங்கள் நகர்வை நிறுத்துகின்றன நிதானத்துடன்

கீழே எட்டிப் பார்க்கின்றன கவலையுடன்

கருகிய வயல்களின் சாம்பல் மேடுகள்

ஒட்டியுலர்ந்த தேகங்களின் கூக்குரல்களின் தரிசனங்கள்


பேரன்பு கொண்ட மேகங்களைத் தீண்டுகின்றது

இருண்ட விழிகளில் வெடிக்கின்றது அழுகை

அவற்றின் ஈரம் தரையைப் போர்த்துகின்ற

ஆடையாக மாறத் தொடங்குகின்றது பேரிரைச்சலுடன்

மேகங்களின் கண்ணீர் தெறிக்கின்றது கன்னங்களில்


ஜன்ஸி கபூர்

அழகென்னும் அபாயம்



குடையென விரிந்திருக்கின்ற மரக் கிளைகள்

ஓன்றோடொன்று மோதி விரிக்கின்றனவோ நிழலை

மறுப்பின்றி இருளும் விழுந்து கொண்டிருக்கின்றது

ஆதவன் மேலிருந்தும்கூட சாமத்துச் சாயலில்

அகன்ற வனமும் மாறிக் கொண்டிருக்கின்றது.


ஒளியைத் தனக்குள்ளே உறுஞ்சாப் பாதையில்

உராய்ந்து நிற்கின்றது என்றன் ஊர்தி.

இயந்திர அதிர்வின் துடிப்பொலி கேட்டு

எட்டிப் பார்க்கின்றன கானகத்துச் சருகுகள்


ஆதவச் சுவாலையின் அணைவை சூட்சுமமாக

அறிவித்துக் கொண்டிருக்கின்றது மாலை நேரமும்

தரைக்குள் பதிக்கின்ற காலடிச் சத்தமும்

விரட்டத் தொடங்குகின்றது கானக அமைதியை


இலைச் சருகுகளில் ஒளிந்திருக்கின்ற எறும்புகள்

விளையாடத் தொடங்குகின்றன கால் விரல்களுக்கிடையில்

குறும்பான கருவண்டுகளின் சிறகடிப்பின் ஓசையும்

செவிக்குள் நுழைகின்றது இரைச்சலை நிரப்பியபடி


சிறகுகளை மடித்து உறங்குகின்ற பறவைகள்

சீற்றத்துடன் பறக்கையில் காற்றும் அலறுகின்றதே

மென்மேனியைத் தழுவிய இம்சையின் முறைப்புக்குள்

தைரியத்தையும் மெல்லத் தொட்டுப் பார்க்கின்றேன்


மங்குகின்ற வெளிச்சத்தில் தொங்குகின்ற குளவிக்கூடு

மொய்க்கின்ற பிரமையில் நிம்மதியும் அறுந்துவிட

வேகமாக நடக்கின்றேன் ஒற்றையடிப் பாதையில்

சோகமாகச் சரிகின்றன பற்றைப் புற்கள்

என்னாடையின் உரசலினால் மெல்ல நிமிர்கின்றன

வெட்டவெளிக்குள் பூத்துக் கிடக்கின்ற பூக்களின்

உறக்கத்தினை கலைக்கின்றேன் போலும் அவற்றின்

கலக்கப் பார்வைகூட துளைக்கின்றது உயிரை


தொலைவில் நகர்கின்றனவோ பெரும் மலைகள்

பிளிறல் ஓசைக்குள்ளும் பின்னலிடுகின்றது பீதி

அலறுகின்ற உணர்வினை அடக்கிக் கொண்டே

மெதுவாகப் பதுங்குகின்றேன் பெருமரத்தின் பின்னால்


உயர்ந்த மரக்கொப்பை முறிக்கின்ற ஆவேசத்தில்

ஊஞ்சலாடுகின்ற செங்குரங்குகளின் கண்களும் பளிச்சிடுகின்றன

வெஞ்சினத்தின் எதிரொலியாய் குரங்குகள் வீசுகின்ற

காய்களின் மோதலில் வலிக்கின்றதே தலையும்


பறக்கின்ற வண்ணாத்திகளின் சிறகுத் தொடுகையும்

உயிரின் உயிர்ப்பைத் தடுக்கின்ற நஞ்சோ

காதோரம் வெடிக்கின்றது அச்சத்தின் பிரமை

படர்கின்ற வியர்வைக்குள் மூச்சும் கரைகின்றதே


அனுபவங்கள் திணிக்கின்ற மரண பயத்திலிருந்து

உணர்வுகள் மீள்கின்றபோது சுவாசமும் சுகமாகின்றது

புன்னகைக்கும் சிறு குழந்தைபோல் பிறப்பெடுக்கின்றேன்

மனதுக்குள் மகிழ்வையும் நிறைத்துக் கொள்கின்றேன்

ஜன்ஸி கபூர்

நெல்லியும் உதிரும் கனிகளும்

 

யுத்தம் துப்பிய உதிரத்தின் சாயலில்

செம்மண் பரப்பிய கொல்லைப் புறம்

அங்கே காற்றை விரட்டிக் கொண்டிருந்தது

அகன்ற கிளைகளைக் கொண்ட வேம்பு

அசையும் இலைகள் குவிக்கின்ற நிழலுக்குள்

ஒடுங்கி நிற்கின்றது ஒற்றை நெல்லி


எல்லைச் சுவரை முட்டும் கொப்புக்களில்

உராய்வுக் கீறல்கள் எம் இரணங்களாய்

கொப்புக்களை உதைக்கின்ற கொத்துப் பூக்களும்

கொழுத்த குண்டுப் பழங்களின் அழகும்

கண்களை ஈர்த்து கைகளை உயர்த்துகின்றன

பழங்களின் சுவையில் நாவும் இனிக்கின்றதே

பழச்சுமையில் பாதி சாய்ந்து இருக்கின்ற

மரத்தினை தினமும் பார்க்கின்றேன் விருப்போடு


கனி உதிர்க்குமந்த சிறு நெல்லியில்

உப்பும் ஊற்றி காயைச் சுவைக்கையில்

அருகில் இருப்போர் உமிழ்நீர் சுரக்கின்றனர்.

சில பழங்கள் சீனிப் பாகினுள்

நாவுக்குள் தேனும் ஊறுகின்றது சுவையுடன்


தெருவோரம் எட்டிப் பார்க்கும் கொப்பெல்லாம்

கல்லெறிக் காயத்தினால் சிவந்திருக்கின்றன

ஒவ்வொன்றாய் பொறுக்கி பாதுகாக்கின்றேன் எனக்குள்

உதிரும் வலிக்குள் எனையே பொருத்துகின்றேன்


யுத்தத்தின் சத்தம் செவியைக் கிழிக்கின்றது

அந்நேரம் கொப்பும் தகரத்தில் உரசுகின்றது

எழுகின்ற சப்தத்தில் கலக்கின்றது அவலம்

வருந்தும் மனதின் பிம்பமாக நெல்லியும்

தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கின்றது பதற்றத்தில்


நெல்லியின் நீளமான நிழலில் பதிக்கும்

என் தடங்களுக்குள் கொட்டுகின்றேன் துன்பத்தை

மரணத்தைப் பற்றியதான பேசுபொருள் அது

அணைத்த உறவுகளின் சிதைவுப் பிழம்புகள்

என் விழிநீராலும் அணைக்காத சுவாலையாய்

எரிந்து கொண்டிருக்கின்றது வெயிலின் இம்சைபோல்


விண்ணை உடைக்கின்றதோ இயந்திரப் பறவை

இரும்புச் சிறகுகளின் உரப்பான அதிர்வில்

தேகம் மட்டுமல்ல நெல்லியும் உதிர்க்கின்றது

முதுமைக்குள் போராடும் சில இலைகளை

தரைக்குள் மொய்க்கின்ற சருகுகளின் ஆக்கிரமிப்பும்

விமானத்தின் உறுமலில் சிதறி ஓடுகின்றன


விண்ணையும் மண்ணையும் பொசுக்குகின்ற தீப்பிழம்பும்

என்னில் அச்சத்தை விதைக்கவில்லை மாறாக

இறப்பையும் புறந்தள்ளி சுவைக்கின்றேன் கனியை

உறவாகித் தழுவுகின்றது வேப்பக் காற்றும்

துரத்துகின்றேன் வெயிலையும் எனைப் போர்த்தாமல்


வட்டமிடுகின்ற இயந்திரத் தும்பியும் பொம்பரும்

சகடையும் உரசுகின்றன ஒலியை உமிழ்ந்து

செவிப்பறையின் கிழிசலில் உயிரும் அலறுகின்றதே

அக்கணத்தில் தொலைத்த நிம்மதியைத் தேடுகின்றேன்

ஆன்மாவின் ஒவ்வொரு அணுவுக்குள்ளும் நிரம்புகின்ற

வலி இறுக்கிப் பிடிக்கின்றதே மேனியை


தசாப்தங்களைக் காலங்கள் புரட்டுகின்றன விரைவாக

அடையாளப்படுத்துகின்றன அடுத்த ஊர்கள் அகதிகளென

கழிகின்ற ஒவ்வொரு விநாடியும் கலியே

களிப்பினைத் தொலைக்கின்ற அந்தக் கணங்கள்

ஆயுள் வரை நீட்டுகின்றதே அக்கினியை


தினமும் நெல்லிக்கனியில் தினக்குறிப்பு எழுதுகின்ற

என்னுள் விரக்தி நலம் விசாரிக்கின்றது

மூச்சேந்தும் ஒவ்வொரு நொடியும் தெளிக்கப்படுகின்ற

மரண அவஸ்தையினை நுகர்ந்தவாறே வாழ்கின்றேன்

என் சுவாசப் பாதையை நிரப்புகின்றது

நெல்லியின் சுவைக்குள் நனைந்த காற்று

அவ்வையும் சுவைத்த நெல்லி யன்றோ

என்றன் உயிரையும் சேதமின்றிக் காக்கின்றது

இன்றுவரை உணர்வுக்குள் விருட்சமாகின்றது அழிவின்றி


ஜன்ஸி கபூர்

கடும் புனல்

ஒளி உமிழ்கின்ற ஒற்றை வெண்ணிலாவும்

கொட்டிக் கிடக்கின்ற நட்சத்திரக் கலவைகளும்

தென்றலின் வருடல் விரல்களும் எனக்குள்ளே

தனிமையை விரட்ட சூழ ஆரம்பிக்கின்றன


நள்ளிரவு நிசப்தத்தை கரைக்கின்ற உணர்வினை

மெல்ல அவிழ்க்கின்றது மெல்லிருட்டுக் கரங்கள்

எட்டிப் பார்க்கின்ற பத்திரப்படுத்தப்பட்ட பசியின்

திணிப்பில் தேகம் திணறிக் கொண்டிருக்கின்றது


வெறுமையைத் துடைக்கும் கடிகாரத்தின் புறுபுறுப்போடு

தனிமை கொஞ்சம் முரண்பட ஆரம்பிக்கின்றது

பூமியின் உறக்கத்தில் விழிக்கின்ற துடிப்பில்

நீள்கின்ற காத்திருப்பின் அலறல் ஆன்மாவுக்குள்


காற்றில் தீயூற்றும் இம்சைக்குள் எதிர்பார்ப்புக்கள்

ஏக்கத்தில் பிசையப்பட்ட மனதோ கசங்குகின்றது

எதிர் சுவற்றில் துணையுடன் பிணைகின்ற

பல்லியின் மோக முணங்கல் நாடியுடைக்கின்றது


எங்கோ நாயின் ஊளைச் சப்தம்

நள்ளிரவின் ஓட்டம் நாடித் துடிப்பினுள்


கதவு தட்டப்படுகிறது எதிரே ஆன்மா

நறுமணக் குவியலின் வீரியப் பார்வையில்

நாணம் கசக்கப்படுவது புரிந்தும் ரசிக்கின்றேனதை


உள்ளே மெல்லிய காற்று நுழைந்து

மோகப் பூக்களை பஞ்சணைக்குள் நிறைகின்றது

பசியை அவிழ்ப்பதற்கான அழகிய தருணமிது

இதழோரங்களில் பத்திரப்படுத்தப்படுகின்றது இதமான ஈரம்

அன்பின் விரல்கள் பிசைகின்ற ஆசைகளை

பரிமாறுகின்ற மடியும் ஏந்துகின்றது ஏக்கத்தினை


இருள் தன்னை மறைப்பதாக இல்லை

எட்டிப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றது இரகசியங்களை

இழுத்திப் போத்திக் கொண்டிருக்கின்ற ஆன்மாக்களை

இரசிக்கின்றது போலும் சிவக்கின்றது இராப்பசி

மயக்கத்தில் அப்பிக் கொண்ட காதல்

இன்னும் விடுவதாக இல்லை அணைக்கின்றது


விழிக்குள் துயிலினை ஊற்றாமல் துரத்தும்

ஏதோவொன்று என்னைப் பிழிந்தெடுக்க விழுகின்றது

பார்வையும் நிதர்சனத்தில்.....ஓ.......பிரமை


பற்றிக் கொள்கின்ற பனியின் விரல்களை

வேகமாக உதறுகின்றேன் மூச்சுக்குள் அனல்

வெளியே நிலாக்கீற்றின் பிரகாச வளையங்கள்

தவிப்புக்களின் பிழம்புகளோடு விளையாடிக் கொண்டிருக்கின்றன


ஆழ்மனதைப் புரட்டுகின்ற மலையின் ஓசை

இடிக்கின்றது உணர்வுகளை துடிக்கின்றது வலி


ஓவ்வொரு இரவும் விட்டுச் செல்கின்ற

எதிர்பார்ப்பின் வேட்கையில் மனம் தினமும்

புதிதாகவே உயிர்க்கின்றது விடியல் காணாது


மௌனமாக வடிந்தோடுகிறது இரவுத் துளிகள்

எண்ணுவதற்குள் ஒளிப்பிழம்பு தட்டியெழுப்பி

உளத்தில் ஊறும் தணல்பொறியினைச் சீண்டுகின்றது


ஜன்ஸி கபூர்