About Me

2021/05/01

யாரோ கிசுகிசுத்தார்



இருள் தொலைகின்ற நிலவுப் பயணத்தில்

அலைப் புன்னகையினை ரசித்தபடி தழுவுகின்ற

ஈரக் காற்றின் இதமான வருடலில்

ஓராயிரம் கனவுகளை உயிர்ப்பிக்கின்ற ஆசைகளுடன்

நாமிருவர் தனியாகப் படகேறிப் பயணமொன்று

செல்ல வேண்டுமென்று யாரோ கிசுகிசுத்தார்


முற்றுப் பெறாத கடலலைத் துடிப்பினைப் போல

ஒருவரை ஒருவர் அன்பினால் பற்றி

வெற்றிட வாழ்விற்குள்ளும் உயிர்ப்பினை நிரப்பி

அடுத்தவர் விழித் தேடலுக்குள் விரிகின்ற

அழகான வாழ்க்கையாக நாமும் மாறுவோமென

நமதான பயணம்பற்றி யாரோ கிசுகிசுத்தார்


துள்ளியோடுகின்ற மீன்களை அள்ளிச் செருகி

கள்ளத்தனமாக விழிகளில் வைத்திருக்கின்ற உன்னுடன்

இசைகின்ற எனது இதயத் துடிப்பொலிகளையும்

ஏந்திக் கொண்டே அலைகின்ற அலைகளில்

நீ நனைகின்ற போதெல்லாம்

நுரைப் பூக்களால் உனக்கு மாலையிட்டு

கரை தொட்டிடாத நீண்ட பயணத்தில்

உன்னிழலுடன் ஒன்றிக்கிடக்க மனம் ஏங்குகின்றது


ஏன்தானோ இக்காலம் இன்னும் வரவில்லை

இன்னும் என் பணிகள் உள்ளனவோ


ஆதவன் சிறகசைத்து மெல்லக் கீழிறங்குகையில்

நீயும் எனது எதிர்பார்ப்பிற்கு கைவிலங்கிட்டு

பிரிய ஆயத்தமாகின்றாய் பிரியமனமின்றி நானும்

தொலைக்கின்றேன் உன்னை மறைகின்றாய் அந்திக்குள்


விண்ணுக்கே முகவரியாகி மின்னும் உன்னை

நினைவூட்டுகின்றன குறையொளியில் கண்ணுக்குத் தெரிகின்ற

கரையை நாடுகின்ற கடல்ப் பறவைகள்


நீ ஒளிந்து கொண்டிருக்கின்ற தொலைப்புள்ளியின்

முடிச்சவிழ்த்து மூச்சினை நிரப்பிடத் துடிக்கின்றேன்

அடுத்தவர் அறிந்திடாத நமக்கிடையிலான தூரம்

எமக்கு மட்டும் தானே தெரியும்

வேறு எவருமே அறிந்திருக்க மாட்டார்கள்.


ஜன்ஸி கபூர்

வழி கூறும் பட்டாம்பூச்சி

  

அசைகின்ற காற்றில் தடுமாறுகின்ற மலர்களை

அனுதாபத்துடன் பார்க்கின்றேன் இயற்கைக்குள் இசையாவிட்டால்

துடிதுடித்து வீழுமே இதழ்களும் மெல்ல

தரையைத் தொட்ட சிறகுகளாகப் பறந்திடுமே


மலரின் அமைதி பற்றிக் கவலைப்படாத

பட்டாம்பூச்சிகளை இரசித்துப் பார்க்கின்றேன் நானும்

தன் படபடப்பால் மலருக்குள் துடிப்பேற்றும்

தேன் உண்ணும் தீவிரவாதத்திலும் வியக்கின்றேன்


வானவில்லும் உடைந்து பறக்கின்றதோ தரையில்

வனப்பான சிறு உயிரின் துடிப்பில்

மனதும் ஒன்றித்துப் போகின்றதே அடிக்கடி

மகிழ்வின் உச்சத்தில் உறைந்து போகின்றேன்


வாசத்தை வளியில் பிழிந்தூற்றி வனப்புடனே

பூத்திருக்கின்ற மலர்களை நோக்குகின்றேன் புளாங்கிதத்தில்

காத்திருக்கின்றதோ தவிப்புடனே அமைதியும் அலைய

காதலில் படபடக்கின்ற பட்டாம்பூச்சிக்கான அழைப்பிது

அறிந்ததால் ஏந்தினேன் அதனசைவை எனக்குள்


தன் ஊசித்துளை உறிஞ்சியால் தினமும்

ஊனம் ஏற்றாத மென்னிதழ்களைக் கசக்காத

உயர்ந்த ஒழுக்கத்தினை எங்கு கற்றதோ

உராய்ந்து மகரந்தம் அள்ளும் பணியும்

உயிரோடு இசைகின்ற மேலான தாய்மைதானே

உருவாகின்ற ஒவ்வொரு பிறப்பிற்கும் வழிகாட்டும்

உத்தம குணம் கண்டு வியக்கின்றேன்.


உறிஞ்சிய தேனைக் காற்றும் உலர்த்தவில்லை

வருத்தத்தில் இதழ்கள் சிவக்கவும் இல்லை

அரு உயிர் கடத்திடும் பணிக்காக

விருப்பும் கொண்டதோ சிறு இதழ்களசைத்து

மறுப்பில்லாத அமைதிக்குள் அலங்கார மலர்களும்

மயக்கத்தின் தித்திப்பில் பட்டாம்பூச்சியும் சூழ்கின்றதே


உருக்களில் பல வண்ணங்கள் ஏந்தி

உற்சாகமாகப் பறக்கின்ற பட்டுடலைத் தொட்டுவிட

காற்றையும் துரத்துகின்ற சிறுவர்களின் மனதாக

உருமாறுகின்றேன் நானும் பட்டாம்பூச்சியை தொட்டுவிட


விண் நோக்கி நீண்டிருக்கும் பூவுக்குள்

இன்பம் துளைக்குதோ பட்டாம்பூச்சியும் அடிக்கடி

மலரைப் பற்றிய சிந்தனை இல்லாக்

காமத்தின் சூத்திரம் இதுவாக இருக்கலாம்

ஒவ்வொரு பூக்களாக நுகர்ந்திடும் சேர்க்கைக்குள்

கொஞ்சம் கற்பினையும் கற்றுக் கொடுத்திருக்கலாம்


அமைதியான மலர்களுக்குள் பரபரப்பை ஊற்றுகின்ற

அழகான பட்டாம்பூச்சியின் சுறுசுறுப்பும் ஈர்க்கின்றது

நானும் அந்த ரசிப்பினில் உறைகின்றேன்

நானிலத்தின் உயிர்ப்பிற்கும் கருதானே இவ்வுருவும்


குவிந்த இதழ்களின் விரல் நீட்டத்தில்

குதூகலகமாகப் பற்றுகின்ற பட்டாம்பூச்சியின் துடிப்புக்குள்

கலக்கின்றதோ உற்சாகமும் விடியலைத் துடைத்தவாறு

விரைவினைக் கற்றுக் கொள்ளும் நேரமிது


பட்டாம்பூச்சியின் பக்குவ முட்டைக்குள் நெளிகின்ற

முட்களைக் கொண்ட கம்பளிப்பூச்சியை விரும்புவாரோ

தொடுகையில் தெளிக்கின்ற விடத்தினை வெறுக்கின்றோம்

தீயதினைத் துரத்திடும் வேட்கையில் ஒதுங்கியே

நசுக்கிக் கொல்கின்றோம் பறந்திட முன்னரே

தீயோராகி துன்பத்தினை நுகர்கின்றதே பாவம்


ஆனாலும் பட்டாம்பூச்சியாக துளிர்க்கையில் துள்ளும்

மனதால் அள்ளுகின்றோம் அழகினை ஆசையாக

வெறுப்பும் விருப்பும் வாழ்வின் பக்கங்களாய்

வாழ்கின்றதே நம் எதிரில் பட்டாம்பூச்சியாக


ஜன்ஸி கபூர்

மேகங்களோடு



சிறகுகளை உதிர்த்தவாறே நகர்கின்ற மேகங்களை

தன் விரல்களால் வருடிக்கொள்கின்றது வானம்

காற்றின் முடிச்சுக்களால் சிறைப்பட்டிருக்கின்ற மேகத்தினை

தன் இதழ்களால் அவிழ்ப்பது சுகம்தான்போலும்

வான் துளைகளுக்குள் தம் முத்தங்களை

நிரப்பியவாறு பயணிக்கின்ற பஞ்சு மேனிதனை

தன் இதழ்களால் ஈரப்படுத்துகின்றது வானும்

காதலின்பத்தின் இதம் வரையத் தொடங்குகின்றது

மேகங்களுக்கும் வானுக்குமிடையிலான அற்புதக் காதலை


கீற்றுமின்னலெனும் மாங்கல்யமும் முழங்குகின்ற இசையும்

வானுக்கும் மேகத்திற்குமான உறவுநிலையை வெளிப்படுத்தும்போது

மேகங்கள் தன்னைக் கருங்கூந்தலுக்குள் ஒளித்தே

மொய்க்கின்ற நாணத்துக்குள் நனைந்து அலைகின்றன


வானும் விடுவதாக இல்லை துரத்துகின்றது

வெவ்வேறு திசைகளில் கலைந்தோடுகின்றன அவை

மகிழ்வின் சிதறல்கள் ஆங்காங்கே அப்பிக்கொள்கின்றன

பொன்னிறத்தூறல்களின் சங்கமத்தில் இசைகின்றது இயற்கையும்


பூமிக்கும் வானுக்கும் இடையிலான வெளிதனில்

தொங்கிக்கொண்டே சென்றாலும் விழுவதாக இல்லை

ஈர்ப்பின் இரகசியம் இயற்கையின் ஆற்றல்

நிலத்தின் வரைகோடுகளையும் சலனமற்ற குளங்களையும்

அவை கடந்து செல்கையில் இணைகின்றன

உயிர்களின் ஏக்கப் பெருமூச்சுக்களின் திரட்சிகளும்

கண்ணீர்ப் பாறைகளின் வெடிப்பொலிச் சப்தங்களும்


மேகங்கள் நகர்வை நிறுத்துகின்றன நிதானத்துடன்

கீழே எட்டிப் பார்க்கின்றன கவலையுடன்

கருகிய வயல்களின் சாம்பல் மேடுகள்

ஒட்டியுலர்ந்த தேகங்களின் கூக்குரல்களின் தரிசனங்கள்


பேரன்பு கொண்ட மேகங்களைத் தீண்டுகின்றது

இருண்ட விழிகளில் வெடிக்கின்றது அழுகை

அவற்றின் ஈரம் தரையைப் போர்த்துகின்ற

ஆடையாக மாறத் தொடங்குகின்றது பேரிரைச்சலுடன்

மேகங்களின் கண்ணீர் தெறிக்கின்றது கன்னங்களில்


ஜன்ஸி கபூர்

அழகென்னும் அபாயம்



குடையென விரிந்திருக்கின்ற மரக் கிளைகள்

ஓன்றோடொன்று மோதி விரிக்கின்றனவோ நிழலை

மறுப்பின்றி இருளும் விழுந்து கொண்டிருக்கின்றது

ஆதவன் மேலிருந்தும்கூட சாமத்துச் சாயலில்

அகன்ற வனமும் மாறிக் கொண்டிருக்கின்றது.


ஒளியைத் தனக்குள்ளே உறுஞ்சாப் பாதையில்

உராய்ந்து நிற்கின்றது என்றன் ஊர்தி.

இயந்திர அதிர்வின் துடிப்பொலி கேட்டு

எட்டிப் பார்க்கின்றன கானகத்துச் சருகுகள்


ஆதவச் சுவாலையின் அணைவை சூட்சுமமாக

அறிவித்துக் கொண்டிருக்கின்றது மாலை நேரமும்

தரைக்குள் பதிக்கின்ற காலடிச் சத்தமும்

விரட்டத் தொடங்குகின்றது கானக அமைதியை


இலைச் சருகுகளில் ஒளிந்திருக்கின்ற எறும்புகள்

விளையாடத் தொடங்குகின்றன கால் விரல்களுக்கிடையில்

குறும்பான கருவண்டுகளின் சிறகடிப்பின் ஓசையும்

செவிக்குள் நுழைகின்றது இரைச்சலை நிரப்பியபடி


சிறகுகளை மடித்து உறங்குகின்ற பறவைகள்

சீற்றத்துடன் பறக்கையில் காற்றும் அலறுகின்றதே

மென்மேனியைத் தழுவிய இம்சையின் முறைப்புக்குள்

தைரியத்தையும் மெல்லத் தொட்டுப் பார்க்கின்றேன்


மங்குகின்ற வெளிச்சத்தில் தொங்குகின்ற குளவிக்கூடு

மொய்க்கின்ற பிரமையில் நிம்மதியும் அறுந்துவிட

வேகமாக நடக்கின்றேன் ஒற்றையடிப் பாதையில்

சோகமாகச் சரிகின்றன பற்றைப் புற்கள்

என்னாடையின் உரசலினால் மெல்ல நிமிர்கின்றன

வெட்டவெளிக்குள் பூத்துக் கிடக்கின்ற பூக்களின்

உறக்கத்தினை கலைக்கின்றேன் போலும் அவற்றின்

கலக்கப் பார்வைகூட துளைக்கின்றது உயிரை


தொலைவில் நகர்கின்றனவோ பெரும் மலைகள்

பிளிறல் ஓசைக்குள்ளும் பின்னலிடுகின்றது பீதி

அலறுகின்ற உணர்வினை அடக்கிக் கொண்டே

மெதுவாகப் பதுங்குகின்றேன் பெருமரத்தின் பின்னால்


உயர்ந்த மரக்கொப்பை முறிக்கின்ற ஆவேசத்தில்

ஊஞ்சலாடுகின்ற செங்குரங்குகளின் கண்களும் பளிச்சிடுகின்றன

வெஞ்சினத்தின் எதிரொலியாய் குரங்குகள் வீசுகின்ற

காய்களின் மோதலில் வலிக்கின்றதே தலையும்


பறக்கின்ற வண்ணாத்திகளின் சிறகுத் தொடுகையும்

உயிரின் உயிர்ப்பைத் தடுக்கின்ற நஞ்சோ

காதோரம் வெடிக்கின்றது அச்சத்தின் பிரமை

படர்கின்ற வியர்வைக்குள் மூச்சும் கரைகின்றதே


அனுபவங்கள் திணிக்கின்ற மரண பயத்திலிருந்து

உணர்வுகள் மீள்கின்றபோது சுவாசமும் சுகமாகின்றது

புன்னகைக்கும் சிறு குழந்தைபோல் பிறப்பெடுக்கின்றேன்

மனதுக்குள் மகிழ்வையும் நிறைத்துக் கொள்கின்றேன்

ஜன்ஸி கபூர்