அந்தக்காலம் மனசெங்கும் ஏமாற்றம் தராத , எதிர்பார்ப்புக்களையும் ஏக்கம் நிறைந்த கனவுகளையும் மட்டுமே சுமக்கக் கூடிய பள்ளிப்பருவம். எமக்கு க.பொ.த (சா/த ) பரீட்சை நெருங்கிக் கெண்டிருந்தது. நாம் எழுதப் போகும் முதல் பொதுப்பரீட்சையிது,,,,,,அதனால் பரீட்சை பற்றிய பயம், டென்ஷன் அதிகமாகவே இருந்தது.
மறுபுறமோ பிரியப் போகும் நட்புள்ளங்கள் பற்றிய கவலை. தம் கண்ணீர்த்துளிகளால் பாடசாலை நாட்களின் நினைவுகளையும் அந் நினைவுகள் சேமித்து வைத்திருக்கும் அன்பையும் , நட்பையும் நண்பிகள் ஆட்டோகிராப்பினில் வார்த்தையாக்கிக் கொண்டிருந்தார்கள்....
நான் கற்றுக் கொண்டிருந்த பாடசாலை யாழ் நகரின் பிரபல்யமான பெண்கள் பாடசாலையென்பதால் பல திசைகளைச் சேர்ந்த நண்பிகள் என் அன்புக்குள் அடைக்கலமாகிக் கொண்டிருந்தனர். ஜாதி, பேதம், மதம் எனும் வேறுபாடுகளை மறந்த, துறந்த இனிமையான நட்பு எம் வசம் இறுக்கமாகவே இருந்தது !
"புஷ்பா".............
அது அவளின் பெயர்ச் சுருக்கம். காரைநகரின் இளைய கன்னி. குறும்புக்காரி...எப்பொழுதும் வம்பளப்பாள். அடுத்தவருக்கு பாதிப்புத் தராத வம்பது...அந்த அன்பும் ,வம்பும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
நாங்கள் பிரிவைத் தொட நெருங்கிக் கொண்டிருக்கும் அந்தக்காலத்தில்தான் என் ஆட்டோகிராப்பும் நண்பிகளிடம் தாவியது..............ஈற்றில் புஷ்பா கரம் தொட்டது.
"உமக்கு நிறைய எழுதணும்....நாளைக்குத் தாரன் "
இயல்பாகச் சொன்ன அவளிடம் அரைமனதுடன் சம்மதித்தேன். என்னிடமுள்ள கெட்ட பழக்கம் என் பொருட்களை யாரிடமும் இலேசில் கொடுக்க மாட்டேன்..அவர்கள் அதனை என்னைப் போலப் பத்திரப்படுத்தமாட்டார்களோ எனும் ஐயமே அதற்குக் காரணம்...
கேட்பது அவளாச்சே.............!
நான் சம்மதித்த போது கண்களைச்சுருக்கி மெல்லிய புன்னகையை தவழவிட்டாள் தன் னிதழோரம்.. அவள் பாடசாலை விடுதி மாணவி என்பதால் என் பொருள் பத்திரமாக வந்துசேரும் எனும் நம்பிக்கை மனதில் கனத்தவாறே என்னை அமைதிப்படுத்தியது.
மறுநாள் விடிந்தது. அன்று நேரத்துடனேயே பாடசாலை சென்றேன். ஆனால் புஸ்பா பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்திலேயே வந்தாள். காலை ஆராதனை முடிந்து என் ஆட்டோகிராப் அவளிடத்திலிருந்து என் கைகளுக்குள் தாவிய போது பாடத்திற்கான மணியும் ஒலித்து விட்டது..
அவளின் வரிகளை என் விழிகள் மேயத் துடித்த போது , அருகிலிருந்த அவள் மெதுவாக எனக்கு மட்டும் கேட்கும்படியாகக் குசுகுசுத்தாள்.
"டீ ..சயன்ஸ் ரீச்சர் வாரா..................பிடிபட்டே அவ்வளவு தான்"
அவளின் ஞாபகமூட்டலில் அந்த ஆசையும் அறுந்து போக ..................., அப்பாவித்தனமாய் எனக்குள் மட்டும் அசடுவழிந்தேன்.. அவள் மௌனமாகச் சிரித்ததைக் கண்டு போலியாக முறைத்தேன்.
தொடர்ந்து வந்த நிமிடங்களில் பாட விடயங்களுக்குள் மூழ்கிப் போனதில் அந்த ஆட்டோகிராப் நினைவும் மறந்து போனது..
சயன்ஸ் ரீச்சர் பொல்லாதவர்..சற்றுக் கண்டிப்பு.....என் வகுப்பாசிரியை ......எங்கள் வகுப்பில் நானும் இன்னுமொருவர் தான் முஸ்லிம்கள் என்பதால் எங்கள் மீது அவர் வேற்றுமை காட்டமாட்டார். அதுமட்டுமல்ல விஞ்ஞானம் எனக்கு மிகவும் பிடித்த பாடமென்பதால் அவவுக்கும் என்னை ரொம்பப்பிடிக்கும்........
"குணரட்ணம் மிஸ்"
அப்படித்தான் நாங்கள் அவரை அழைப்போம்.. சற்று வயதான ஆசிரியைதான். இருந்தும் அவ படிப்பிக்கும் விதம் என்னை ரொம்பக் கவரும்..நான் தனியார் வகுப்புக்களுக்குச் செல்வதில்லை. அவரையே நம்பியிருந்து அவர் கற்றுத் தருபவற்றை மட்டுமே உள்வாங்கி அதிக புள்ளிகளைப் பெறுவது அவருக்கு என்னைப் பிடித்துப் போக இன்னுமொரு காரணமாகும்..
மிஸ்ஸையும் நாங்கள் பிரியப் போகின்றோம் எனும் கவலை மனதைப் பிறாண்ட என் ஆட்டோகிராப்பை ரீச்சரிடம் நீட்டினேன்.
"மிஸ் சைன் பண்ணித் தாங்கோ"
தயக்கத்தில் நா தடுமாறியது
"தாரும்"
இயல்பாகவே வாங்கியவர் ஆட்டோகிராப் பக்கங்களை வேகமாகப் புரட்டினார்.ஆட்டோகிராப் பக்கங்களை நிறைத்துக் கொண்டிருந்த என் நண்பிகளின் சீண்டலை அவர் ரசித்திருக்க வேண்டும்..மெதுவாகப் புன்னகைத்தார்.
"அப்பாடா..........மிஸ்ட மூட் நல்லம்"
மனது தைரியப்பட்டு ஒட்டிக் கொண்டிருந்த பயத்தை வெளியேற்றிக் கொண்டிருந்தது. ஆனால் அந்த சந்தோஷம் அதிக நேரம் கூட நிலைக்கவில்லை. மெடம் தன் மூக்குக் கண்ணாடியைச் சற்றுத் தாழ்த்தி என்னை உற்றுப் பார்த்தார்.........
" இங்க வாரும்" என் பெயரோடு சேர்ந்து உச்சரித்த வார்தைகளிவை!.
அவர் சுட்டிக்காட்டிய பக்கத்தில் நிறைத்திருந்த அந்த வசனங்களில் விழிகள் குத்திட்டு நின்றன..நானே இப்பொழுதுதானே இதனைப் பார்க்கின்றேன்.. ஒருவேளை இது புஷ்பாவின் வேலையோ ! கவலை மனதை நிறைக்க அவளைப் பார்த்த போது அவள் அவசரமாக தானில்லையென தலையசைத்தாள்.
என் நாடித்துடிப்பு அடங்கிப்போகும் வலி.......வரிகளாக காதல் கவிதையொன்று எட்டிப்பார்த்தது..ஆண் நண்பர்களே எனக்கில்லாத போது காதலன் எங்கிருந்து முளைத்தான்...?
வியர்த்தது...காதல் அனுபவமில்லாத மனசு......அந்தப் பேரிடியால் சிதைந்த போது அழுதே விட்டேன்.......
"மிஸ்..நான்தான் எழுதினேன்'
என் கண்ணீர் அந்த நண்பியின் உள்ளத்தை கரைத்திருக்க வேண்டும். விளையாட்டின் விபரீதமறிந்த அவள் தன் மௌனத்தைக் கலைத்து குற்றவாளியாய் தலைகுனிந்து நின்றாள்............புஷ்பா !.
ரீச்சரோ சூடானார்..........
"படிக்கிற வேலைய மட்டும் பாரும்"
புஷ்பாவை ஆசிரியை கண்டிக்க கண்டிக்க அவளோ தன் விழிகளால் "சொறி கேட்டு என்னிடம் கெஞ்சத் தொடங்கினாள்...அவள் அபிநயம் கண்டு நானோ கவலை மறந்து சிரித்தே விட்டேன்..
அந்த நட்பு, அன்பு எல்லாமே பசுமையாய் இன்றும் நெஞ்சில் இனிக்கின்றது..
யுத்தத்தால் நாங்கள் அகதிகளாக்கப்பட்ட போது அந்த ஆட்டோகிராப்பும் எங்கோ சிதைந்து போனது.. ஆனால் அந்த நண்பிகளின் நேச வரிகள் மட்டும் மறக்காமல் மனதுக்குள் பத்திரப்படுத்தப்பட்டு கிடக்கின்றன...
புஷ்பமலர். அன்பரசி, சசிகலா, கௌரி, சந்திரிகா, கவிதா விஜியவேணி,யசோதரா, சுஜாதா,ஜிற்னீஸ், கீதா, அன்பு, இளமதி, சசிரேகா என நீளும் அந்த நேசமுகங்கள் இன்று எங்கோ ஓர் மூலையில்........திசையில் !
எல்லோரும் வளர்ந்திருப்பார்கள்..குடும்பம் ,பிள்ளை குட்டி, பதவிகளென வாழ்ந்து கொண்டிருப்பார்கள் . அவர்கள் மனதிலும் நான் ஞாபகங்களாக விழுவேனா.......காலத்தின் காலடியில் என் வினா தொக்கி நிற்கின்றது. இருந்தும் என் மனதில் அவர்கள் உருவம் இன்னும் அந்த மாணவப் பருவத்தின் சாயலில்தான் அப்பிக் கிடக்கின்றது...
எங்கள் பெருநாள் விசேடத்திற்கு எல்லா நண்பிகளும் என் வீட்டுக்குப் படையெடுத்து விருந்தும் கலகலப்புமாய் எங்கள் மனையை நிறைத்துச் செல்லும் அந்த நினைவுகள் எல்லாம் இன்னும் காயாமல் ஈரலிப்பாகத்தான் உள்ளது...
பெருநாள், கிறிஸ்மஸ், பொங்கல், தீபாவளியென பண்டிகைகள் எம்மை நாடி வருகையில் வாழ்த்தட்டைகளை மறவாது பகிர்வதும், தபாலட்டைகள் வீட்டில் நிறைவதும் வசந்தகால ராக நினைவுகளாய் என்னை மீட்டிச்செல்கின்றது.
நான் ஆசிரியையாக கடமைபுரிவதால் என்னிடம் கற்கும் மாணவர்கள் தங்கள் ஆட்டோகிராப்பை என்னிடம் நீட்டும் போதெல்லாம் என் நண்பிகளின் ராஜ்ஜியமும் அதன் நினைவுகளும் எனக்குள் ஒட்டிக் கொள்கின்றது..
பசுமையான பள்ளி நினைவுகள் இனிமையான சுகம் !