About Me

2019/06/23

விஸ்வரூபம்




கலைகள் - இனவாதக்
களைகளாய்  இங்கே!
அலைகின்றன வரவேற்புக் கோஷங்கள்............
அல்லாஹ்வுக் கஞ்சாதோரால்!

விஸ்வரூப எழுத்துக்களே
அரபெழுத்தணி சாயல்களாய்............
சரிதம் தொடர்கின்றன
கமலின் சாகஸங்களை!

தளிர்க் கரங்களில் துப்பாக்கி திணிக்கும்
பழிக் கூட்டங்களாய் எம்மவர்கள்.........
இன அழிப்பார்களின் கைக் கூலிகளாய்
உருதுலக்கப்படுகின்றதோ கலையுலகம்!

மறை ஓதி மாண்பு தரும் - நம்
இறைகூடங்களின் புனிதங்கள்.......
பறைசாட்டப்படுகின்றன தீவிரவாதக்
கறைகளின் பள்ளியறைகளாய்!

சாந்திமார்க்க விழுதுகளில்
காயம் தரும் கோடாரிகளிங்கே........
சாய்க்கின்றன மறை வேத நெறிகளை
மாற்றோரின் குதர்க்க வேட்டைக்காய்!

இறை வசனங்களின் உயிர் மூச்சுக்கள்
சொருகப்படும் சன்னங்களாம்.......
காவு கொள்ளப்படுகின்றது சன்மார்க்கமிங்கே
விஸ்வரூபத்தின் வசை பாடலில்!

இனத்துக்காய் குரல் கொடுப்போன்
போராளியென்றே அறிவிப்போரிங்கே.....
சுட்டு விரல் நீட்டுகின்றனர் அடுத்தவனுக்கு
தீவிரவாதி நீயென்று !

புரட்சிக்காய் புறப்பட்ட கமல் - துப்பாக்கி
ரவைகளின் அரக்கத்தனத்தில் தீனை முடிந்து..........
பரபரப்பாகின்றாரிங்கே - முஸ்லிம்
உம்மாக்களின் குருதி உறிஞ்சி!

விலைக்காய் கலை விற்கும்
சகலாகலாவல்லவனின் வில்லத்தனத்தில்......
இனவாதக் களையொன்று
நம்மையெல்லாம் கடந்து செல்கின்றது
விஸ்வரூபமாய்!

விஸ்வரூப  வில்லத்தனம் - தீனுல்
இஸ்லாம் குதறும் மூடத்தனம்............
திருமறையின் அருள்மொழியை
திமிரோடு உயிரறுக்கும் வில்லங்கம்!

இறை நிராகரிப்போர் கலையிது
இதை நிராகரித்தல் தவறில்லை!- நம்
மறை நிராகரிப்போர் தூவுமிந்த விதை கூட
கறைதான் எம் இனக் குலத்தவருக்கு!

"சீ " தனம்



பெண் மலர்களுக்கிடப்படும்
முள்வேலி

வாழ்க்கை வியாபாரத்திற்கான
முதலீடு

பெண்மை ஸ்பரிசங்களுக்கான
நுழைவுச்சீட்டு

ஏழைக்கன்னியரின் சுயம்வர
கைவிலங்கு

திருமணத்தின் வருங்காலத்திற்கான
உத்தரவாதம்!

ஆணிண் வாழ்வியலுக்காக பரிந்துரைக்கப்படும்
நன்கொடை

பணத்திற்கேற்ப விலை நிர்ணயிக்கப்படும்
பண்டம்

சொகுசு வாழ்விற்காக வழங்கப்படும்
அனுமதி

' சீ ' தனம் சொல்லாதோர் கையேந்தும்
பிச்சை

ஏழைகளின் கனவுகளுக்கு விதிக்கப்படும்
அபராதம்

சோம்பேறிகள் கணக்கில் வைக்கும்
அதிஷ்டலாபச் சீட்டு!


யுத்தம்





நிமிடங்களை யுகங்களாய் மாற்றிய யுத்தம்
உன்னை ................
வாசித்துச் சென்றதில் வலிப்புடன்
வீழ்ந்து கிடக்கின்றாய் அகதியாய்!

சுகம் மறந்த சுவாசம்
விட்டுச் சென்ற சோகங்களின் வரலாறாய் ........
விரல் பிடிக்கின்றாய் - உன்
வெற்றுடல்களில் பீதியை நிரப்பியவாறு!

யுத்த டயறிக்குள் வரிகளான - உன்
வாழ்க்கையின் தொடக்கத்தில்........
கழுகுகளும் காட்டேறிகளும் காவல் காக்கின்றன
உன் னிரத்தத்தை உறிஞ்சியவாறு!

வாழ்வை இன்னும் நீ
தொடங்கவேயில்லையில்லை
ஆனால்........
முடிவுரைகளின் விண்ணப்பங்கள்
உன்னிடம் வந்து குவிகின்றன ஆர்வமாய்!

இன்னும் நீ பூக்கவேயில்லை
முட்கள் குதறுகின்றன உன்
அழகான மேனியை சாம்பல் மேட்டுக்குள்
சிறைவைத் தழிக்க!..

உன் பிள்ளைச் சரிதத்தில்....
கறைகளாக்கப்பட்ட அகதி வாழ்வில்
வேரறுக்கப்பட்ட வசந்தங்களின் வலியே
உன் பேச்சொலியாய் உருளுது அகிலத்தில்!

மகளே.....!

உன் பிஞ்சு விழிக்  கனாக்களில்
விசம் தடவுமிந்த
சாத்தான்கள்........
இருந்தென்ன....இறந்தென்ன
அழிந்தே போகட்டும் ஓர் நாள்!


உன் விடியலுக்கு நாள் குறிக்குமிந்த
நரபலியினர் - அன்று
மரித்துப் போவார்  தம்
ஊழ்வினைப் பயனால்!

தோற்றுப் போன வசந்தங்கள்


சோலைக்குள் தீச்சுவாலைகள்
வேலியாய் முளைத்திருக்க.......
வறுமையின் முகவரியாய் இவர்கள்
வாழ்க்கை அடிக்கடி!

தோற்றுப் போன வசந்தங்கள்
இவர்களுக்கு.........
வேரறுந்து போனதில்.............
கண்ணீர்ச் சந்ததியினராய் - தம்மை
அறிவிப்புச் செய்கின்றனர் !

ஒட்டியுலர்ந்த மேனியில்
எட்டியுதைக்கும் என்புகளும்.......
ஏக்கம் நிறைந்த வாழ்வும்
இவர்களின்
உரிமைகளாய் பிசைந்து கிடக்க...

புறப்பட்டு விட்டனர்
பசியின் நிழல்களில் கோலம் போட்டே
தம் உயிரணுக்களில் மரணம் தேக்கி!