About Me

2020/07/17

காவிய மாலை – 07

கானகம் மீண்ட பாண்டுவின் கரங்கள்/
கொன்றன கலவியி லிணைந்த மான்களை/
கொடுங் குற்றமோ முனிவர் சாபமும்/
தடுத்து நிறுத்தியது சந்ததிப் பெருக்கத்தை/

வனமும் சென்ற மன்னனும் குந்தி தேவி/  
வரத்தால் பெற்றான் உயர்பண்பு முத்துக்களை/ 
தருமன் வீமன் அருச்சுனன் நாமத்துடன்/
மாத்திரியும் ஈன்றாள் நகுலன் சகாதேவனையும்/

பொங்கியே அழித்த காந்தாரியின் பிண்டமும்/
பெற்ற வரத்தால்  நூற்றவராய் தளிர்த்தது/
பிறப்பெடுத்தான் துரியோதனன் கெட்ட சகுனத்திலோ/
பிழம்புத் தீயுடன் யுத்தங்களும் மூண்டனவே/

ஜன்ஸி கபூர் 

மரணத்தில் வீழ்ந்தெழுந்த கணங்கள்

 இறப்பும் பிறப்புமாய் உருண்டோடும் வாழ்வில்
இதய வலியின் ஓலங்களோ ஆழ்திரையில்

நாளென்பதோ யந்திரச் சுழற்சியின் விசையாக
வாழ்நாளின் ஓய்வளவும் பணிச்சுமையால் சுருங்க
காலையெழுந்தே கடுகதியானேன் வேலைத்தளத்திற்கே
தலைமை நானே முகாமைப் பணியோ கண்முன்னே

விரைகிறேன் அருகிலுள்ள பேரூந்து தரிப்பிடத்திற்கே
விருட்டென்று வந்ததொன்று உறைந்தே நின்றது
விரைந்தேற சப்தமிட்டார் பேரூந்தின் நடத்துனர்
விருப்பின்றி சனங்களும் அடைக்கப்பட்டனர் மூச்சுத்திணறலுடன்

ஏறமுயன்றேன் கால்களோ அந்தரத்தில் - இடர்
கூற முன்னர் உருண்டது விரைவாய் - நானோ
எறியப்பட்டேன் வெளியே கழுத்தோ சக்கரங்களுக்கிடையில்
மரண நெடிக்குள் வீழ்ந்த மனசும்
உதிரக் கசிவும் வலியோடு உறைந்தன 

விபரீதம் உணர்ந்ததும் நிறுத்தினர் பேரூந்தை
விளைந்த தவறுக்கு வருந்தி நின்றனர்
மன்னிப்பும்; சிறந்த அறமென்றே நானும்
மருத்துவம் பெற்றே வலியும் துடைத்தேன்

 ஜன்ஸி கபூர்    07.07.2020



தாலாட்டும் தென்றல்


மேகமாய் குவிந்தே மோகிக்கும் தென்றலே
தேகம் நனைகையில் தேன்மல்லி வாசமே
மோதும் வெப்பத்தையும் மெல்லப் பிழிந்தே
மோகன பூமிக்குள் மெல்ல  ஊற்றுகிறாய்

என்றும் இளமையிற் துள்ளிடும் பூங்காற்றே
மனசள்ளிப் போகின்றாய் தென்பொதிகைப் பாசமாய்
தேனைக் குளிர்த்தி அனலுக்குள் வீசி
எண்ணங்களைக் குளிர்த்துகின்றாய் புன்னகையை ரசித்தபடி

முற்றத்து மலர்கள் திரைதனை நீக்க
முத்தத்தில் நனைத்தே ரசிக்கிறாய் வெட்கத்தை
முட்டி மயிலின் இறக்கையும் மறித்தே
மூச்சின் உயிர்ப்புக்குள் உறைகிறாய்  அமிர்தமாய்

இரவுத் தனிமையை மெல்லிசையால் உடைத்தே
இனிதாய் கரைக்கிறாய் இதய சோகங்களை
இடர் தணித்தே இன்பங்களால் ரசிப்பூட்டி
இதமாய்த் தாலாட்டுகிறாய் என்னைத் தாய்மையுடன்

ஜன்ஸி கபூர்    - 16.07.2020


நாளைய வாழ்விற்காய்


விரலுக்குள்ளோ விஞ்ஞானம் பழமையோ விலகியோடும்
விவசாயப் பற்றின்றி வரட்சியோடு வயலோரம்
மாற்றம் கண்டாலே முன்னேற்றங்கள் வென்றெழும்
ஏற்றங் காணவே வயலுழும் சிறார்களிங்கே

மழை வாசம் மண்ணோடு குலைந்திருக்க
மனசெல்லாம் சிறகடிக்கும் நாற்றும் தழுவ
தொற்றுக்கள் தந்த விடுமுறையி லிப்போ
பற்றுடன் பஞ்சம் தீர்க்கும் முயற்சியோ

சின்ன விழிகள் வீழ்த்தும் கனவுகள்
சிதையாமல் வளர்த்திடுமே புதுத் தொழினுட்பமும்
உழவுத் தொழிலை வந்தனை செய்தால்
வாழும் வாழ்க்கையும் என்றும் வசந்தமே

ஜன்ஸி கபூர் - 16.07.2020