About Me

2020/07/19

ஆற்றல் கொள்

ஆற்றல்_கொள் அவனிக்குள் அடையாளமாய்/
 ஊற்றாய் மாறியே ஊட்டமிடு வளங்களைத்தான்/
காற்றின்  மொழியுடனே சேற்றிலும் பலனுண்டே/
போற்றுவார் உன்னையே பெண்மையாய் நிமிர்ந்திடு/

ஆளுமை வளர்த்திட்டால் அண்டமும் தலைசாய்க்கும்/
ஆழிப்பேரலையும் அடங்குமே அறிவின் துணையுடன்/
அஞ்சாமல் பணியாற்று மானுடம் பெருமையாகும்/
ஆக்கங்கள் படைத்திடவே சிந்தனையைக் கூராக்கு/

தன்னம்பிக்கை கொண்டெழு திறமைகள் உனதாகும்/
வென்றெடுப்பாய் விருதுகளே சாதனைகள் சரித்திரமே/
சென்ற விடமெல்லாம் முன்மாதிரி நீயன்றோ/
கொண்டாடும் மாந்தரெல்லாம் பின்வருவார் அன்போடு/

வேராகத் தாங்கிடு ஊரே போற்றிடுமே/
போராடும் வாழ்வினிலே வலியும் வல்லமையே/
நாரும் துணைதானே மாலையாய் பிறப்பெடுக்க/
பாருக்கும் தெரியட்டும் ஆற்றலோடு வாழ்ந்திடு/

ஜன்ஸி கபூர் 

நல்வாக்கு


தூய்மை கடைப்பிடித்தால் தேகம் சுகமாகும் 
வாய்மை வாக்கினிலே வாழ்வும் மகிழ்வாகும் 
நேர்மை உழைப்பினிலே மனிதமே பிறப்பெடுக்கும் 
தாய்மை நெஞ்சினிலே அன்பே ஊற்றெடுக்கும் 


ஜன்ஸி கபூர்  



காதலெனும் மலர்வனம்

காதலெனும் மலர்வனத்தின் காத்திருப்பு நாமாக
கசிந் துருகும் அன்பி லிணைந்தே
கனிந்திருக்கும் நறுஞ்சுவைக் கனிகள்
காலத் தேய்விலும் உதிரா நறுமலர்கள்

இதழ் கசியும் கற்கண்டுச் சாறெடுத்தே
இதயம் நனைத்தோம் இன்னுயிர் வருடி
இசைந்திட்ட என் விழியே உன் மொழியாய்
இணைத்திட்டாய் என் பருவச் சுவையினில்
       
மொட்டென நீளும் உன் விரல்கள்
பட்டாலே தேகம் நனைக்கும் பனித்தூறல்
கட்டுடலும் கற்பைச் சிதைக்கா அறமாக
தொட்டுணர்வேன் நானும் காமம் தீண்டாக் காதலால்

ஜாதி மல்லிகை சூழ்ந்திடும் குணமே
சாதி மறந்தே இணைவோம் வாழ்வில்
ஓதி ஒழுகும் நல்லறமே நமதாய்
சோதி ஒளிர்வில் சேர்ந்திருப்போம் நாமே

ஓளி உமிழ்வில் மலரும் மென்மலராய்
ஓர விழி மலர்வாய் என் நிழல் கண்டே
வாசம் வீசும் நறுமணமே – நம்
வாழ்வில் இனி என்றும் வசந்தமே

ஜன்ஸி கபூர் 

காத்திருப்பு


கருப்பாயி.................!

தோட்டத்துரையின் குரல் சற்று அதிகாரமாக ஒலித்தபோது உறிஞ்சிக் கொண்டிருந்த தேயிலைக் கோப்பையை கீழே வைத்தவளாக ஓடிச் சென்றாள் அருகே....

துரையின் பார்வையில் சூடு கொதித்துக் கொண்டிருந்தது. அவர் கோபிக்கும் அளவிற்கு தான் செய்த தப்பு என்ன.... அவனால் அனுமானிக்க முடியவில்லை.

'ஐயா..........'

அப்பாவித்தனமாய் அவரைப் பார்த்தாள்.

'இப்ப நேரம் என்ன......எத்தனை கூடை கொழுந்து பறிச்சே'

'ஓ.....இன்று கொஞ்ச நேரம் தாமதித்து வந்ததற்கான விசாரணதானா இது'

மனம் காரணத்தைக் கண்டறிந்தது. தாமதித்து வேலைக்கு வந்தால் அவளது நாட்கூலிதானே குறையும். இது அவளுக்கும் தெரிந்ததுதானே. ஆனாலும் வரமுடியாத சூழ்நிலை. கொதிக்கும் அனலோடு வந்திருக்கிறாள். அவளுக்கென்று இந்த உலகத்தில் இருப்பது எண்பது வயது அப்பத்தா மாத்திரம்தானே. அவள் பிறந்ததும் அம்மா இறந்து விட்டதாகச் சொன்னார்கள். குடிகார அப்பாவோ   இவளைக் கைவிட்டுவிட்டு யாரோ ஒருத்தியின் பின்னால் ஓடிவிட்டதாக ஊரார் பரிகசித்தார்கள்;. வறுமையுடன் அல்லல்பட்ட இந்த வாழ்வே வெறுத்துப் போய்விட்டது. இருந்தும் அவளை நம்பி வாழும் அப்பத்தாக்காக  வாழ்ந்தே ஆக வேண்டும். அழகை ரசிக்கும் இந்த உலகம் முகத்தில் தழும்புகளுடன் பிறந்த அவளை சற்று ஒதுக்கியே வைத்து விட்டது. தன்னை நிராகரிப்பவர்களின் பின்னால் சரணடைந்து ஓட அவளும் தயாரில்லை. இந்த சமூகத்தில் தன்னையும் நிலைநிறுத்தும் அவளின் போராட்டம் தொடர்ந்தே கொண்டே இருக்கிறது. காலையில் அப்பத்தாக்கு உடம்பு கொஞ்சம் முடியாமலிருந்தது. அவருக்கு கசாயம் வைத்துக் கொடுத்தாள். நாட்டுப்புற வைத்தியம் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். அப்பத்தா முன்பு சொல்லிக் கொடுத்த கை வைத்தியங்களின் பலனாக தன்னை நாடி வருவோருக்கு ஏதோ தன்னாலான கை வைத்திய உதவிகளை செய்து கொடுப்பதில் திருப்தியை உணர்கிறாள் கருப்பாயி.

'விசாரணைக் கைதியாக குறுகி நிற்பவள் இந்தத் துரையிடம் தன்னை நியாயப்படுத்த விரும்பவில்லை. நியாயம் கிடைக்காத இடத்தில் வாதிட்டு என்ன பயன். சுகவீனமுற்றிருக்கும் அப்பத்தாவின் நினைவும் மனதை வருத்திக் கொண்டிருந்தது. லீவு கேட்டாலும் தரமாட்டாங்க. கஞ்சி குடிக்கிற காசில கொஞ்சத்தை வெட்டும்போது அந்த ஈர் உயிர்களும் பட்;டினியால் வாட வேண்டுமே. முழித்திருந்து விடிய விடிய அப்பத்தாவை கவனித்ததில் அவளது உடலும் சற்று அசௌகரிகப்பட்டது போன்ற பிரமை. நண்பகல் 12 மணிக்குள்ள அஞ்சு கூடையாவது கொழுந்து பறிக்கணும். மனதால் தன்னை தயார்படுத்தினாள்.

'என்ன பேசாம நிற்கிறே. போ அந்தப் பக்கம் நெறைய கொழுந்திருக்கு பிய்ச்சுட்டு வா'

துரை சுட்டிக் காட்டிய திசையில் விழிகள் குத்தி நின்றதும் லேசான படபடப்பை உணர்ந்தாள். அந்தப் பகுதியில் உள்ள மரங்களில் பெரிய பெரிய குளவிக் கூடுகள் இருப்பதை அவள் அறிவாள். துரைக்குப் பிடித்தவர்கள் அந்தப் பக்கம் செல்வதில்லை. யாராவது இப்படி மாட்டிக் கொண்டால் பலிவாங்குவதைப் போல் அந்தக் குளவிகளுக்கு இரையாக்குவதில் கொடூர இன்பம் போல்.

வேறு வழியின்றி வயிற்றுப் பசி தணிக்கும் அந்த நாட்கூலிக்காக துரை கூறிய பகுதியில் கொழுந்து பறிக்கச் சென்றாள். அங்கே ஓரிரு முகங்கள் தெரிந்ததும் மனம் சற்று ஆறுதலடைந்தது. மனதுக்குள் இறைவனை துதித்தவளாக கொழுந்து பறித்து முதுகில் சுமந்து கொண்டிருந்த கூடைக்குள் போடத் தொடங்கினாள். சிறிது நேரத்தில்,

'கிர்...கிர்...........'

தலைக்கு மேலே பறந்து கொண்டிருந்த குளவிக் கூட்டங்கள் அவளை மொய்க்கத் தொடங்கின. உயிருக்குள் தீ வார்த்த பிரமை.

'ஐயோ...........'

அவளின் சப்தம் கேட்டு அருகிலிருந்தோர் அவளை நெருங்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஆவர்களின் ஆரவாரச் சப்தம் கொஞ்சம் கொஞ்சமாக அவளது ஞாபகத்திலிருந்து குறைந்து போக ஆரம்பித்தது. கண்களும் மயக்கத்தில் சொருவ ஆரம்பித்தது. அந்த மயக்கநிலையிலும் அப்பத்தாவை நினைத்துபோலும் அவளது கன்னங்கள் கண்ணீரால் நனையத் தொடங்கின.
அங்கே... அவள் குறித்த நேரத்தில் வருவாளென்ற நம்பிக்கையில் அப்பத்தா காத்துக் கொண்டிருக்கிறார்.

ஜன்ஸி கபூர் - 19.07.2020
யாழ்ப்பாணம்