About Me

2020/08/01

அன்புக்குப் பஞ்சமில்லை

 

'என்னப்பா....செய்யுது.......காய்ச்சல் காயுதே.......இந்த இரவுல ஆசுபத்திரிக்கு எப்படி போறது......எனக்கென்டா ஒன்னுமே புரியல'

கண்கலங்கிய சாரதாவை ஆறுதல்படுத்தினார் மணி.

'இங்க........பார் புள்ள எனக்கு ஒன்னுமில்ல லேசான காய்ச்சல்தான். நாளைக்குப் பார்க்கலாம்'

என்றவரை மீண்டும் இடைமறித்தாள் மனைவி சாரதா. 

'சொன்னா கேப்பியளோ.........ஒங்களுக்கென்ன மழயில நனைஞ்சிட்டு சும்மா இருமிட்டு இருப்பீங்க. என்ர மனுசு படுற வேதனை ஒங்களுக்குத் தெரியுமா' 

தான் அணிந்திருந்த சேலைத் தலைப்பால் தனது மூக்கை உறிஞ்சித் துடைத்தாள் அவள்.

'புரியுது சாரு........ஒனக்கு நான்........எனக்கு நீயுன்னு வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த அன்ப ஆண்டவன் உடைப்பான்னு நெனைக்கிறியா. பேசாம தூங்கும்மா...நாளைக்குப் பார்க்கலாம்'

என்றவரை கவலையுடன் பார்த்தாள் மனைவி. 

'சரி இந்த மாத்திரைகளையாவது குடிச்சிட்டுப் படுங்கோ என்னப்பா' 

என்றவாறு மனைவி கொடுத்த மாத்திரைகளை வாங்கி விழுங்கினார் மணி.

மணி சாரதா தம்பதியினருக்கு குழந்தைகள் பிறக்கவில்லை. யாரிடம்  குறையிருக்கிறது என்பதை அவர்கள் தேடிப் பார்க்கவுமில்லை. மணி ஓய்வு பெற்ற அரச ஊழியர். அந்த ஊரில் நடைபெறும் எல்லா   விடயங்களிலும் அவரைக் காணலாம். 'மாஸ்டர் சுகமோ' என காண்பவர்களெல்லாம் கேட்டு விட்டே செல்வார்கள். அவரின் மனைவி சாரதா அவருக்கு முறைப்பெண் என்பதால் அன்புப் பொருத்தத்தை தவிர வேறெந்த பொருத்தத்தையும் குடும்பத்தார் பாராமலே  திருமணத்தில் இணைத்து வைத்தார்கள்.
  
'என்னங்க....இப்ப எப்படி இருக்குது'

இருளையும் துளைத்துக் கொண்டு வந்த அவளின் குரல் அவரை மெதுவாக உசுப்பியது. அவளைப் போல அவரும் தூங்காமல் தன்னைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தார்.

'இப்ப பரவாயில்ல தூங்கு புள்ள'

அவரின் வார்த்தைகளில் நம்பிக்கையில்லாதவளாக அவரின் உடலைத் தொட்டுப் பார்த்தாள். மனசு லேசான உணர்வு. நிம்மதியாக உறங்கப் போனாள்.

இந்த உலகத்தில் சிறு துன்பம் வந்தாலே நெடுந் துயர் கொண்டு வருந்துகின்ற அன்புள்ளங்களை சம்பாதிப்பதே மிகப் பெரும் சேமிப்பு. அந்த இனிய தம்பதிகளின் அன்புக்குத்தான் பஞ்சமேது....ஆனந்த உலகம் அவர்களுக்காக விரிந்து கொண்டிருக்கிறது அழகாக.

ஜன்ஸி கபூர்  
 



 

விரிவாக்கமும் விளைச்சலும்


விரிந்திடும் அபிவிருத்தி விரட்டுது மாந்தரை/
விரித்திடும் வலையிலும் சிக்கவும் வைக்குது/
அரித்திடும் கறையானாய் வேரினைப் பிடுங்குது/
அழகென்ற பெயரினில் அவலமும் ஊட்டுதே/

விரிவாக்கம் செய்கையில் சுருங்கிடுமே வளங்களும்/
வியப்பூட்டும் வீதிகள் கண்ணீரிலே நனைந்தோடும்/
கண்ணை விற்றே வாங்கிடும் அழகால்/
பண்ணை வயல்களின் உயிர்த்துடிப்பும் அறுந்திடும்/

எண்ணற்ற தெருக்கள் புண்ணாக்கும் வயல்களை/
எண்ணங்களில் சோகம் வார்த்திடும் அகோரமாய்/
ஊரையே அழித்திடும் நவீனத்தின் ஓட்டத்தால்/
உயிர்களின் சாபமே பெரும் விளைச்சலாகும்/

ஜன்ஸி கபூர்  



 

ஹஜ் பெருநாள் கவிதை

பத்தாம் பிறைமுனைப் பேனாவில் துளிர்க்கும் தியாகத்தின் பிரகாசம் - 

துல்ஹஜ் பத்தில் முழங்கிடும் தக்பீரும்
துணிந்திட்ட தியாகமதை நமக்குள் திருநாளாக்கும்
அணிந்திட்ட புத்தாடையும் இசைந்திடும் நறுமணமாய்
இனித்திடும் பலகாரம் கனிந்திடும் உறவெனவே
சூழ்ந்திடும் மனதைத்தான் பள்ளியும் தானழைக்கும்

தீனொளிச் சுவைதனில் தீதுக்கள் கரைந்திடவே
தீட்டிடுவோம் நன்மைதனை துரத்திடுவோம் முரண்களையே
எட்டுத்திக்கெங்கும் இப்றாகிம் நபியவரின் 
இறையன்பில் வியந்து நிற்க
கொட்டிடுமே  மாண்புகளும் ஈகையேந்தும் அழகினிலே

கனவுக் கட்டளையும் கருத்தை நிறைத்ததனால்
கல்பின் வெளியெல்லாம் உயிர்த்திடுமே தியாகம்தான்
புத்தாடை புனைந்தே புதுப் பாதை அமைத்திடவே
பக்குவமாய் நாமும் வாழு 
நமக்குள்ளும் உரைத்திடுமே தியாகத்தை

பிறை ஒன்பதிலே அரபா நோன்பும்
பிரார்த்தனைகளுடன் குர்பானும்
இறையன்பை வருடும் நமக்குள்
இதயங்களையும் இணைக்கும் உறவாய்

இறையன்பின் ஆழமும் சிகரமென உயர
இணைந்திட்டோம் நாமே சாந்தி நெறியினில்
இறை பள்ளியில் மறை ஓதிடும் நெறி வாழ்வுதனில்
இதயமும் நனைந்தே வாழட்டும் தினம்

ஈதுல் அழ்காவின் ஈகையழகை ஈர்த்திடும்
ஈகையாளரின் மாண்புகளும் உவப்பேறி போகுமே
சுங்கை பொருந்திய திருநாளில் சமூக 
இடைவெளி நாம் பேணி
இல்லாதொழிப்போம் தொற்றுக்களை
வல்லோனின் ஆசி பெற்று
வையகத்தினில் வாழ்ந்திடுவோம் நலமாக

ஜன்ஸி கபூர்

01.08.2020 ஆம் திகதியன்று இலங்கை வானொலி முஸ்லிம் சேவை 
கவிதா சாளரம் விசேட நிகழ்வில் ஒலிபரப்பான எனது கவிதை
 

இல்லறத் தாய்


நாகரிகத் தேடலும் 
மௌனித்துக் கிடக்கும்/

நவீனத்து வாழ்வின் 
நளாயினியைக் கண்டே/

நினைவில் வந்தவன் 
பெருநோய் கொண்டதனால்/

நீங்கிடுமோ மெய்க்காதலும் 
பாசமும் துறந்தே/

நுகர்ந்திட்ட காதலும் 
வலிதனை மறந்து/

நெஞ்சத்தில் ஏந்திடும் 
இல்லறச் சுவைதனை/

வறுமையும் முதுமையும் 
துரத்திடும் போதிலும்/

வலிமை கொண்டே 
காத்திடும் அன்பிது/

ஜன்ஸி கபூர்