'என்னப்பா....செய்யுது.......காய்ச்சல் காயுதே.......இந்த இரவுல ஆசுபத்திரிக்கு எப்படி போறது......எனக்கென்டா ஒன்னுமே புரியல'
கண்கலங்கிய சாரதாவை ஆறுதல்படுத்தினார் மணி.
'இங்க........பார் புள்ள எனக்கு ஒன்னுமில்ல லேசான காய்ச்சல்தான். நாளைக்குப் பார்க்கலாம்'
என்றவரை மீண்டும் இடைமறித்தாள் மனைவி சாரதா.
'சொன்னா கேப்பியளோ.........ஒங்களுக்கென்ன மழயில நனைஞ்சிட்டு சும்மா இருமிட்டு இருப்பீங்க. என்ர மனுசு படுற வேதனை ஒங்களுக்குத் தெரியுமா'
தான் அணிந்திருந்த சேலைத் தலைப்பால் தனது மூக்கை உறிஞ்சித் துடைத்தாள் அவள்.
'புரியுது சாரு........ஒனக்கு நான்........எனக்கு நீயுன்னு வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த அன்ப ஆண்டவன் உடைப்பான்னு நெனைக்கிறியா. பேசாம தூங்கும்மா...நாளைக்குப் பார்க்கலாம்'
என்றவரை கவலையுடன் பார்த்தாள் மனைவி.
'சரி இந்த மாத்திரைகளையாவது குடிச்சிட்டுப் படுங்கோ என்னப்பா'
என்றவாறு மனைவி கொடுத்த மாத்திரைகளை வாங்கி விழுங்கினார் மணி.
மணி சாரதா தம்பதியினருக்கு குழந்தைகள் பிறக்கவில்லை. யாரிடம் குறையிருக்கிறது என்பதை அவர்கள் தேடிப் பார்க்கவுமில்லை. மணி ஓய்வு பெற்ற அரச ஊழியர். அந்த ஊரில் நடைபெறும் எல்லா விடயங்களிலும் அவரைக் காணலாம். 'மாஸ்டர் சுகமோ' என காண்பவர்களெல்லாம் கேட்டு விட்டே செல்வார்கள். அவரின் மனைவி சாரதா அவருக்கு முறைப்பெண் என்பதால் அன்புப் பொருத்தத்தை தவிர வேறெந்த பொருத்தத்தையும் குடும்பத்தார் பாராமலே திருமணத்தில் இணைத்து வைத்தார்கள்.
'என்னங்க....இப்ப எப்படி இருக்குது'
இருளையும் துளைத்துக் கொண்டு வந்த அவளின் குரல் அவரை மெதுவாக உசுப்பியது. அவளைப் போல அவரும் தூங்காமல் தன்னைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தார்.
'இப்ப பரவாயில்ல தூங்கு புள்ள'
அவரின் வார்த்தைகளில் நம்பிக்கையில்லாதவளாக அவரின் உடலைத் தொட்டுப் பார்த்தாள். மனசு லேசான உணர்வு. நிம்மதியாக உறங்கப் போனாள்.
இந்த உலகத்தில் சிறு துன்பம் வந்தாலே நெடுந் துயர் கொண்டு வருந்துகின்ற அன்புள்ளங்களை சம்பாதிப்பதே மிகப் பெரும் சேமிப்பு. அந்த இனிய தம்பதிகளின் அன்புக்குத்தான் பஞ்சமேது....ஆனந்த உலகம் அவர்களுக்காக விரிந்து கொண்டிருக்கிறது அழகாக.
ஜன்ஸி கபூர்
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!