About Me

2020/08/04

வாழ்க்கை வாழ்வதற்கே

தள்ளாடும் முதுமை  தளராத தன்னம்பிக்கை/
உள்ளத்து உறுதி  உடைந்திடாத உயர்வு/
எள்ளி நகையாடுவோர் புறந்தள்ளும் வீரம்/
வெள்ளமாய் வழிந்தோடும்   வியர்வைக்குள் வாழ்க்கை/

ஈருருளி உருளுகையில்  உயிரேந்தும் மூச்சில்/
ஈரமாய் படியுமே  ஏழ்மையின் சுவடே/
இரவும் பகலுமறியாத   சுமையேற்றும் உழைப்பினில்/
இணைந்திட்ட உறவுகளும்  வாழப் பழகுமே/

அடுத்தவர் தயவேந்தா  ஆணிவேராய் மனசும்/
வடுக்களை உரித்தெடுக்கும்  பக்குவமும் வளர்ந்திருக்கு/
பாடுபட்டு உழைப்பதெல்லாம்  எண்சாண் உடம்பிற்கே/
தடுமாற்றம் காணா  எளிமைக்குள்ளும் உயர்விருக்கு/

ஜன்ஸி கபூர் 
 




 

2020/08/03

ஈன்றவள் மடியே இறைவனின் கோயில்



கருவறைத் தொட்டிலினில் குறையின்றி ஈன்றவளே
அரு உயிரையும் காத்திட்டாள் அமுதாய்
மருதாணி வாசத்தில் அன்பினைக் குலைத்தே
தருகின்ற தாய்மையில் இறையோனின் பரிவு

அல்லல் தொடர்கையில்; களைந்திடும் துடிப்பில்
தொல்லைகளும் விரண்டோடும் கனிவின் மனங்கண்டே
கல்லும் கரைந்திடுமே தாய்மைப் பண்பினிலே
சொல்லேதுமுண்டோ அன்னைக் கீடாய் இவ்வுலகில்தான் 

கொடுந்தணலும் குளிரும் தாயவள் நிழலில்  
வாட்டிடும் துன்பமும் வடிந்திடுமவள் பரிவினில்
தேடும் பார்வையும் குவித்திடும் நினைவுகளை 
 நாடுகின்ற தாய்மடிதான் புனிதமான இறைகோயில் 

ஜன்ஸி கபூர் - 03.08.2020









எழுதாத வரம் நீ


விழிகளைத் திறக்கிறேன் வீழ்கிறாய் பார்வைதனில்/
தழுவுகிறேன் உனையே நழுவுகிறாய் நாணத்துடன்/
மெழுகுச் சிலையே உருகுகிறேனடி உன்னன்பில்/
விழுதாய் பற்றுகிறேன் உனையே என்னுள்/

புன்னகைச் சரந்தொடுத்த உந்தன் வதனமதில்/
அன்பும் சுவைத்தேன் ஆருயிரும் வருடவே/
தென்றலின் வாசம் நனைத்த மூச்சுக்குள்/
நின்றேன் உந்தன் சுந்தர சுவாசிப்பாய்/ 

இருள் நனைக்கும் கனவெல்லாம் உயிர்த்தாய்/
இதயவெளியில் இணைந்திட்ட உறவாய் முகிழ்த்தாய்/
இன்பச் சாரலிலும் நனைந்திட்ட அமுதுமானாய்/
இணைந்தாய் நீயே எழுதாத வரமாய்/

ஜன்ஸி கபூர்
 



 


மங்கள நாள்

பொங்கிடும் ஆறுகள் தாங்கிடும் நீர்வளம்
மங்கள விழாவில் மகிழ்ந்திருக்கும் காவிரியும்
நுரைத்தெழும் நீரோட்டத்தில் உயிர்த்தெழும் முளைப்பாலிகையும்
கரையோர மங்கலத்தில் சுமங்கலிகள் தாலியுமேறும்

ஜன்ஸி கபூர்