About Me

2020/08/30

தரணியெல்லாம் எங்கள் தாயகமாம்

 விழுமியத்தின் விழுதுகள் தாங்கட்டும் பூமியை

அழுகையின் ஓசைகள் கரையட்டும் ஆழிக்குள்

எழுகின்ற அதிர்வுக்குள் அமைதி ஒலிக்கட்டும்

வாழுகின்ற வாழ்வினை நிம்மதியே ஆளட்டும்


ஒரே வானம் ஒன்றித்த பூமிக்குள்

ஒருங்கிசையும் சிந்தனைகளே ஏற்றத்தினுள் உயிர்க்கும்

வருங்காலம் சிறந்திடவே துறந்திடலாம் சுயநலத்தை

விரும்பிடுவார் யாவரும் அன்பின் வருடலை  


பேதங்களும் வாதங்களும் முரண்பாடுகளாய் வெடிக்கையில்

பேரிடியாய் ஓலமிடும் இனவாதத்தின் அக்கினியே

சாந்தியில்லா நெறிமுறை அறுக்கும் தலைமுறைகளை

வெந்தணலில் அகத்தினையும் முழுதாகப் போர்த்திடுமே


வேதங்கள் மொழிவது மேன்மையான வாழ்வையே

வேதனைகளும் விரண்டோட மனிதமாக மாறிடலாம்

வேற்றுமையேது தரணியெல்லாம் எங்கள் தாயகமாம்


ஜன்ஸி கபூர் - 30.08.2020



வாராயோ பிறைக் கீற்றே

நிலவைத் தொட்டுவிட ஏங்கும் கரங்களிலோ

இலக்கின் துடிப்பிருக்கு வெல்லுகின்ற ஆசையிருக்கு

துலங்கிடும் முயற்சிக்கு துணையும் அருகென்றால்

மலருமே இதயத்தினில் ஆகாயமும் வசப்படுமே

 

சிறு மலர்களின் எண்ண அசைவினில்

இறங்கிடுமோ பிறைக் கீற்றும் தரையினில்

உள்ளத்தின் ஊக்கத்திற்கு வெற்றியோ உச்சத்தில்

உயரமும் தாழ்ந்தே வாழ்த்திடுமே தன்னம்பிக்கையை  


ஜன்ஸி கபூர் 

விடையில்லாத முள்மரம்

ஏடெடுக்கா கரத்தினில் வன்மத்தின் ரேகைகள்/

ஏழ்மையின் ஏக்கத்துக்குள் எரிமலைப் பூக்கள்/

தோற்றுப்போன வாழ்வில் தொடாத வசந்தங்களும்/

பற்று வைத்ததோ பாலகன் வாழ்வினில்/


இனிமையான வாழ்வோ இரும்புத் திரைக்குள்/

தனிமைக்குள் தள்ளாடுதே அறியாத வயதும்/

கனிந்திட்ட மனதுக்குள் கறைகளே குற்றங்களாய்/

மனிதம் துறந்ததனால் மலராதே எதிர்காலமும்/


விழி நீருக்குள் வீழ்ந்திட்ட கனவெல்லாம்/

அழிகின்றனவே நெறி துறக்கும் வாழ்வினால்/

வழி தவறுகையில் சட்டம்தான் பிணைத்திடும்/

பழித்திடுமே வையகமும் பாதகங்களை நினைவுறுத்தியே/


பாசமில்லா மாந்தரும் வகுத்திட்ட விதியால்/

வாசனை அறியாத பூவோ வெயிலுக்குள்/

பழகிய நண்பரும் பழக்கிய பாதகங்களால்/

அழகிய வாழ்வும் சிதறுதே வெறுமையில்/


ஜன்ஸி கபூர் 



  •  

     

தேநீரும் நானும்

உரு மாறும் மேகங்களின் ஊற்றால்/

திரு மேனிக்குள் நடுக்கப் புரட்சி/

தருகிறாள் இல்லாள் சூடான தேநீர்/

விருப்பின் விருந்தாய் ஊறுகின்றது நாவுக்குள்/

பருகும் பானம் படர்கின்றது உணர்வினுள்/

 

உறைக்கின்ற வடையும் உற்சாகத்தில் புரள/

குறைகின்றதே தேநீரும் வெறுமைக்குள் மனசும்/

மறைகின்ற நீராவிக்குள் உறைகின்றதே சுவாசமும்/

நிறைந்திருந்த சோர்வும் அறுந்தோடுகிறது தானாய்/

புத்துணர்ச்சித் துள்ளலோடு அன்றைய பொழுதுகள்/


ஜன்ஸி கபூர்- 30.0/8.2020