About Me

2020/08/31

நெகிழிப் பூதம்

மாற்றம் வேண்டுமே நெகிழிப் பாவனையில்

சீற்றத்தினில் இயற்கையும் சிக்காமல் காக்கவே

காற்றினில் நழுவுகின்ற மாசினை சுவாசிக்கையில்

பற்றுதே மரணமும் பறக்குதே ஆரோக்கியமும்

ஏற்றது நமக்கு உக்கும் துணிப்பைகளே

கற்றிடுவோம் பண்பாட்டை காத்திடலாம் நானிலத்தை 


ஜன்ஸி கபூர் - 31.08.2020




நீரோடு அலமரும் கண்

காதல் மனதில் உறைந்திட்ட மன்னவன்/

காத்திருக்க வைத்தான் கடலலைகள் தாண்டி/

சொத்தாய் நானிருக்க பொருளீட்டப் போனான்/

சொந்தம் என்னுள்ளே சோகத்தின் பேரலையே/


கண்ணே கலங்காதே காரினுள் வந்திடுவேன்/

என்றானே தலைவனும் ஏக்கத்தில் மனதாட/

வெய்யோன் இளைப்பாற பசுமையான முல்லையும்/ 

வெட்க முடைத்து மலர்ச்சியினில் சிந்திய/


நறுமணத்தில் வண்டுகள் மயங்கின காதலில்/

தேனின் களிப்பினில் மகிழ்ந்தாடின கூடலில்/

நானோ பிரிவின் தவிப்பினில் துடிக்கிறேன்/ 

வெம்மை தணிந்த மாலைக் குளிர்ச்சியினில்/


கொண்டல்  கூடியே கொட்டிய பெருமழையும்/

எந்தன் கண்ணிலே காட்சியாய் ஊறுகையில்/

விழிநீரும் வடிகின்றதே காரிலும் காணாத/

அழகிய தலைவனின் திருவுருவம் கண்ணிலே/

வெம்மினேன் நானும் தொலைவிலோ மன்னவன்/


சிந்திய மழையினில் கண்ணாளன் நினைவெழ/

சிந்துகின்றேன் கண்ணீரை விழிக்குள்ளும் காரே/

எந்தன் துயர் எனையே வாட்டுதே/

அன்புத் தோழியே அல்லலுறுகின்றதே உயிரும்/

என்றாளே பிரிவின் வலியில் தலைவி/


ஜன்ஸி கபூர் - 30.08.2020




2020/08/30

தொடர்கவிதை

காத்திருந்தேன் நானும் பூத்திருந்தேன் மானே/

கருவறைப் பூமிக்குள் திருவுரு  காட்டிடும்/

உந்தன் தளிர்த் தேக அசைவினில்/

எந்தன் தாய்மைக்குள்ளே இன்பத்தின் தேனூற்று/


ஜன்ஸி கபூர்

திருக்குறள் - 642

 ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்

காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு   


உதட்டின் வார்த்தைகளே உள்ளத்தின் கண்ணாடி

உரைத்திடும் நற்சொற்கள் நன்மையில் கூடிடுமே

வருந்திடுமே மனமும் நாசச் சொற்களால்

அருமையான வாழ்விற்கு விழிப்பான சொல்லாடல்


புண்படுத்தும் நெஞ்சினை பண்படுத்தும் நல்வார்த்தை 

துண்டாடுமே மனதினையும் தீதான பேச்சொலியே

பண்பாடு காத்திடுமே சிந்தனை உரையாடல்

எண்ணம்போல் வாழ்ந்திடவே வேண்டுமே பயனுரைகள் 


பேசும் ஆற்றலால் பெருமைகள் தேடி

பேணிடுவோம் நாவினை மகிழ்வும் கோடி


ஜன்ஸி கபூர்