About Me

2020/12/03

மழைக்கால மேகம்

 



இருண்ட வானின் இறக்கைகளோ மழைமேகம்/

வருணன் வடிவெடுத்து வனப்பாக்குது மண்ணையும்/


துள்ளுகின்ற நீர்த்துளிகள் துயரினைப் போக்கிட/

உள்ளச் செழிப்பினால் உழைப்பும் உயருது/


உழவும் களித்திடும் பெருமழையால்/

கழனிப் பெருவெளியும் களிக்குதே பசுமைக்குள்/


ஜன்ஸி கபூர் - 3.12.2020

 







உறவுகள் நமக்கு உறுதுணையே

வாழ்க்கை என்பது தனிப் புள்ளியல்ல. உணர்வுகளால் சூழப்பட்ட கோலம். இந்த உணர்வுகளை ஆள்வோர் நமது உறவுகளே. நாம் நமது இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளக் கூடிய இதயங்களாக இவர்கள் இருக்கின்றார்கள். நம்மை குறித்த பாதையில் நகர்த்தக் கூடியவர்களாக இவர்கள் இருக்கின்றார்கள். நம்மை எப்பொழுதும் அவதானித்துக் கட்டுப்படுத்தும் சக்தியாக இவ்வுறவுகள் இருப்பதனால் நாம் நமது எல்லைகளை விட்டு வெளியேறாது நம்மை நாமே கட்டுப்படுத்தி வாழக்கூடியவர்களாக இருக்கின்றோம் என்பதே உண்மை. 

உறவுகளை நம்முடன் இணைப்பது அன்பு பாசம் சார்ந்த பிணைப்பே. உண்மை அன்பானது உபத்திரமாக மாறாது. நம்மைச் சூள்கின்ற ஆபத்துக்களைக் கூடத் தடுக்கின்ற சக்தி உண்மை உறவுகளுக்கு உண்டு

சூழ்நிலை மாற்றமில்லாத பொழுதுகள் சலிப்படைந்து விடுகின்றன. இந்நிலையில் வீடு எனும் கூட்டுக்குள் எப்போதும் அடைந்து கிடப்பதும் சலிப்பினையே ஏற்படுத்துகின்றது. இச்சலிப்பே மன அழுத்தத்தினைத் தோற்றுவிக்கின்றது. இந்நிலையில் உறவினர் வீடுகளுக்குச் சென்று உரையாடி அன்பினைப் பகிரும் தொடர்பாடல் மூலமாக ஆரோக்கியமான மனம் உருவாகச் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

வாழ்க்கையில் எதிர்பாராதவிதமாக இழப்புக்கள் ஏற்படுகின்றபோது அவற்றைத் தாங்கிக் கொள்ளமுடியாமற் துவண்டு விடுகின்றோம். இந்நிலையில் நம்மை ஆறுதல்படுத்துகின்ற அன்பான உள்ளங்களாக உறவுகள் மாறுகின்றன. வடிகின்ற கண்ணீரைத் துடைக்கின்ற அக்கரங்கள் நமக்கு உறுதுணைதானே? 

பிறருடனான முரண்பாடுகள் நமக்கு ஏற்படும்போது அப்பிறர் நம்மை விமர்சிப்பவர்களாக மாறி விடுகின்றார்கள். இந்நிலையில் நம்மை விட்டுக்கொடுக்காமல் நமக்காக வாதிடுபவர்களாகவும் பல உறவுகள் மாறி விடுவதை யாரும் மறுக்க முடியாது.

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் அடங்கியிருக்கின்ற ஆற்றல்களே சாதனைகளாக மாற்றமடைகின்றன. நாம் சாதிக்கின்ற பொழுதெல்லாம் நம்மைப் பாராட்டிப் பெருமைப்படுவதுடன் ஊக்கப்படுத்துகின்ற சக்தியாகவும் உறவுகள் மாறி விடுகின்றனர்.

கூட்டுக் குடும்பம் உடைந்து தனிக் குடும்பமாக மாற்றமுறும்போது உறவுகளின் நெருக்கத்தில் தொய்வு காணப்படுகின்றன. இருந்தும் அதே அன்பு காப்பு கரிசனை போன்ற பன்முக உணர்வுகளின் தன்மையில் மாற்றமில்லை என்றே சொல்ல வேண்டும்.

பணக் கஷ்டம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பணம் தந்து உதவ முடியாவிட்டாலும்கூட அப்பணத்தினைப் புரட்டுவதற்கான ஆயிரம் வழிகளை நம்முடன் இணைந்து ஆலோசிப்பவர்களாகவும் இவ் உறவுகள் காணப்படுகின்றனர். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நம்முடன் அவர்கள் இணைந்திருக்கின்றார்கள் எனும் உணர்வே பாரிய சிக்கல்களிலிருந்து நாம் மீண்டெழுவதற்கான திருப்தியைத் தருகின்றது.

நம்மையுமறியாமல் நாம் தவறுகள் செய்கின்றபோது உரிமையுடன் தட்டிக் கேட்பவர்களாகவும் நமது பிழைகளைத் தைரியமாகச் சுட்டிக் காட்டுபவர்களாகவும் இவ்வுறவுகள் இணைந்திருப்பதனால் நமது ஒழுக்கம் மீறப்படாமல் பேணப்படுகின்றது.

எனது தந்தை மரணித்தபோது இடிந்துபோய் செயலற்றுக் கிடந்தோம். சகல காரியங்களையும் உறவுகளே செய்து முடித்தார்கள். இன்பமோ துன்பமோ ஒரு நிகழ்வினைக் குறையின்றி நிகழ்த்துவதற்கு கட்டாயம் உறவுகளின் அனுசரிப்பும் பக்கபலமும் தேவைப்படுகின்றது .  

இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்போது வீடு வாசல்களை இழந்து வெளியேறும்போது நம்மை தாங்கிக் கொள்ளும் மனைகள் உறவுகளுடையதே. எமது ஊரில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக சொத்து எல்லாவற்றையும் இழந்து அயலூருக்கு அகதிகளாகச் சென்றோம். எம்மை அனுசரித்து ஆதரவாக இருந்தவர்கள் தாயின் உடன்பிறப்புக்களே. நீண்டகாலமாக நாம் அவர்களின் தயவில் வாழ முடியாவிட்டாலும்கூட எல்லாவற்றையும் இழக்கும்போது ஏற்படுகின்ற அந்த அதிர்ச்சிக் கணங்களிலிருந்து நம்மை மீட்டெடுத்து படிப்படியாக இயல்பு நிலைகளுக்கு நம்மை மீட்டெடுப்பவர்களாகவும் அவர்கள் விளங்குகின்றார்கள்.

3.12.2020
 



 


 


2020/12/02

மனம் விரும்புதே

 


ஏழ்மையும் சிதைக்காத எழில்ப் பூவழகி/

வீழ்கின்றேனடி தினமும் விழிகளின் ஒளிர்வினில்/

கன்னத்தில் கரைந்திடும் வசீகரப் புன்னகையில்/

இன்பத்தைச் சுவைக்கின்றேன் இதயமும் சிறகடிக்க/

அன்பைக் குலைத்தே அமுதாய் ஊட்டுகையில்/

உன்னோடு வாழ்ந்திடவே மனம் விரும்புதே/


ஜன்ஸி கபூர் - 2.12.2020



2020/12/01

விழிகளின் மொழி

விழிகளின் மொழி 

-------------------------------

விழி அன்பிற்கு மொழியும் உண்டோ/

பழகும் பண்பில் பேதங்கள் கலையும்/

அழகான சிரிப்பினில் தந்தையும் இங்கே/

கலங்குகின்றதே மனமும் அவர் பிரிவினிலே /

ஜன்ஸி கபூர் -1.12.2020


-------------------------------------------------------------------------------------


மின்னலாய் ஒரு பின்னல்
++++++++++++
சிரம் கரம் தரம் வரம்
++++++++++++
வரம் பெற்றோம் பகுத்தறிவு மாந்தராக/
கரம் உழைப்பிற்கான உரமே/
தரம் கண்டோம் வாழ்விலே/
சிரம் தாழ்த்துவோம் படைத்த இறைவனையே/

ஜன்ஸி கபூர் - 3.12..2020
--------------------------------------------------------------- 


மூழ்கிய பயிர்களால் முடங்கியதே வாழ்வும்
+++++++++++++++++++++++++++++++++++++++++
புயலும் அழைத்த கனமழை கண்டு/
வயலும் அழுததே வாழ்வையும் இழந்து/
பயிர்கள் அழித்துப் பாய்ந்த வெள்ளம்/
துயரும் சேர்க்க துடிக்கின்றதே மனமே/

ஜன்ஸி கபூர் - 5.12.2020
---------------------------------------------------------------- 


கனவலைகளில் கவர்ந்தாயே
++++++++++++++++++++++++++
மனதில் நுழைந்து நினைவுகளாக உயிர்த்தவனே/
கனவலைகளில் படர்ந்தே விளக்காகின்றாய் விழிகளுக்கு/
தினமும் அழகாகிறேன் உன்னாலே/

ஜன்ஸி கபூர் - 5.12.2020
------------------------------------------------------------------- 
கிராமத்து வீடு
**********************
மரங்கள் பேசுகின்ற காற்றின் மொழி/
உரசும் காதினுள் மனதையும் வருடி/
இருப்பிடத் திண்ணையில் மனிதக் கலகலப்புடன்/
இயற்கையின் அழகை இதயமும் ரசித்திடும்/
வேடம் தரிக்காத மானுட நேயங்கள்/
அன்பைப் பரிமாறுகின்ற அழகான இல்லம்/

ஜன்ஸி கபூர் - 6.12.2020
-------------------------------------------------------------- 



மின்னலாய் ஒரு பின்னல்
_____________________________
முற்று கற்று சுற்று பற்று
++++++++++++++++++++++++++
 முற்று இல்லாக் கருணைப் பிறவியாய்/
மானிடம் நீயும்  கற்று/
பார் எங்கும்  சுற்று/
நேயத்தை உள்ளத்தில்  பற்று வை/

ஜன்ஸி கபூர் - 17.12.2020