வாழ்க்கை என்பது தனிப் புள்ளியல்ல. உணர்வுகளால் சூழப்பட்ட கோலம். இந்த உணர்வுகளை ஆள்வோர் நமது உறவுகளே. நாம் நமது இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளக் கூடிய இதயங்களாக இவர்கள் இருக்கின்றார்கள். நம்மை குறித்த பாதையில் நகர்த்தக் கூடியவர்களாக இவர்கள் இருக்கின்றார்கள். நம்மை எப்பொழுதும் அவதானித்துக் கட்டுப்படுத்தும் சக்தியாக இவ்வுறவுகள் இருப்பதனால் நாம் நமது எல்லைகளை விட்டு வெளியேறாது நம்மை நாமே கட்டுப்படுத்தி வாழக்கூடியவர்களாக இருக்கின்றோம் என்பதே உண்மை.
உறவுகளை நம்முடன் இணைப்பது அன்பு பாசம் சார்ந்த பிணைப்பே. உண்மை அன்பானது உபத்திரமாக மாறாது. நம்மைச் சூள்கின்ற ஆபத்துக்களைக் கூடத் தடுக்கின்ற சக்தி உண்மை உறவுகளுக்கு உண்டு
சூழ்நிலை மாற்றமில்லாத பொழுதுகள் சலிப்படைந்து விடுகின்றன. இந்நிலையில் வீடு எனும் கூட்டுக்குள் எப்போதும் அடைந்து கிடப்பதும் சலிப்பினையே ஏற்படுத்துகின்றது. இச்சலிப்பே மன அழுத்தத்தினைத் தோற்றுவிக்கின்றது. இந்நிலையில் உறவினர் வீடுகளுக்குச் சென்று உரையாடி அன்பினைப் பகிரும் தொடர்பாடல் மூலமாக ஆரோக்கியமான மனம் உருவாகச் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.
வாழ்க்கையில் எதிர்பாராதவிதமாக இழப்புக்கள் ஏற்படுகின்றபோது அவற்றைத் தாங்கிக் கொள்ளமுடியாமற் துவண்டு விடுகின்றோம். இந்நிலையில் நம்மை ஆறுதல்படுத்துகின்ற அன்பான உள்ளங்களாக உறவுகள் மாறுகின்றன. வடிகின்ற கண்ணீரைத் துடைக்கின்ற அக்கரங்கள் நமக்கு உறுதுணைதானே?
பிறருடனான முரண்பாடுகள் நமக்கு ஏற்படும்போது அப்பிறர் நம்மை விமர்சிப்பவர்களாக மாறி விடுகின்றார்கள். இந்நிலையில் நம்மை விட்டுக்கொடுக்காமல் நமக்காக வாதிடுபவர்களாகவும் பல உறவுகள் மாறி விடுவதை யாரும் மறுக்க முடியாது.
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் அடங்கியிருக்கின்ற ஆற்றல்களே சாதனைகளாக மாற்றமடைகின்றன. நாம் சாதிக்கின்ற பொழுதெல்லாம் நம்மைப் பாராட்டிப் பெருமைப்படுவதுடன் ஊக்கப்படுத்துகின்ற சக்தியாகவும் உறவுகள் மாறி விடுகின்றனர்.
கூட்டுக் குடும்பம் உடைந்து தனிக் குடும்பமாக மாற்றமுறும்போது உறவுகளின் நெருக்கத்தில் தொய்வு காணப்படுகின்றன. இருந்தும் அதே அன்பு காப்பு கரிசனை போன்ற பன்முக உணர்வுகளின் தன்மையில் மாற்றமில்லை என்றே சொல்ல வேண்டும்.
பணக் கஷ்டம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பணம் தந்து உதவ முடியாவிட்டாலும்கூட அப்பணத்தினைப் புரட்டுவதற்கான ஆயிரம் வழிகளை நம்முடன் இணைந்து ஆலோசிப்பவர்களாகவும் இவ் உறவுகள் காணப்படுகின்றனர். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நம்முடன் அவர்கள் இணைந்திருக்கின்றார்கள் எனும் உணர்வே பாரிய சிக்கல்களிலிருந்து நாம் மீண்டெழுவதற்கான திருப்தியைத் தருகின்றது.
நம்மையுமறியாமல் நாம் தவறுகள் செய்கின்றபோது உரிமையுடன் தட்டிக் கேட்பவர்களாகவும் நமது பிழைகளைத் தைரியமாகச் சுட்டிக் காட்டுபவர்களாகவும் இவ்வுறவுகள் இணைந்திருப்பதனால் நமது ஒழுக்கம் மீறப்படாமல் பேணப்படுகின்றது.
எனது தந்தை மரணித்தபோது இடிந்துபோய் செயலற்றுக் கிடந்தோம். சகல காரியங்களையும் உறவுகளே செய்து முடித்தார்கள். இன்பமோ துன்பமோ ஒரு நிகழ்வினைக் குறையின்றி நிகழ்த்துவதற்கு கட்டாயம் உறவுகளின் அனுசரிப்பும் பக்கபலமும் தேவைப்படுகின்றது .
இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்போது வீடு வாசல்களை இழந்து வெளியேறும்போது நம்மை தாங்கிக் கொள்ளும் மனைகள் உறவுகளுடையதே. எமது ஊரில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக சொத்து எல்லாவற்றையும் இழந்து அயலூருக்கு அகதிகளாகச் சென்றோம். எம்மை அனுசரித்து ஆதரவாக இருந்தவர்கள் தாயின் உடன்பிறப்புக்களே. நீண்டகாலமாக நாம் அவர்களின் தயவில் வாழ முடியாவிட்டாலும்கூட எல்லாவற்றையும் இழக்கும்போது ஏற்படுகின்ற அந்த அதிர்ச்சிக் கணங்களிலிருந்து நம்மை மீட்டெடுத்து படிப்படியாக இயல்பு நிலைகளுக்கு நம்மை மீட்டெடுப்பவர்களாகவும் அவர்கள் விளங்குகின்றார்கள்.
3.12.2020
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!