About Me

2021/04/06

தாய்மை

ஒவ்வொரு பெண்ணிற்கும் இறைவனால் வழங்கப்பட்ட மிகப் பெறுமதியான பொக்கிசம்தான் இந்தத் தாய்மை. தாய்மையின் விம்பத்திற்குள் தெரிகின்ற அம்மாவின் அன்புக்கு நிகராக இவ்வுலகில் எதுவும் இல்லைதானே. தன் இருதயத் துடிப்புக்குள் நமது நலத்தையும் பிணைத்து நமக்காகத் துடித்துக் கொண்டிருக்கின்ற அந்தத் தூய்மையான உறவுக்குள் இந்த உலகமே அன்புடன் அடங்கித்தானே கிடக்கின்றது. 

தன் கண்ணீருக்குள்ளும் பிள்ளைகளை பன்னீரால் நீராட்டும் இந்த இரத்த ஆன்மாவின் உணர்வுகளைப் புரிந்து கொள்கின்ற ஒவ்வொரு மகவும் தாயின் மடியில் சுவர்க்கத்தை சுவாசிக்கின்ற உத்தமமான உயிர்க்கூடு தானே....

 - ஜன்ஸி கபூர் - 06.04.2021

2021/01/06

தன் சுத்தம்

 

சூழலுடன் தொடுகையுறுகின்ற உடலின் வெளிப்பகுதி தினமும் நுண்ணங்கியுடன் போராடிக் கொண்டிருக்கின்றது. கோரமான தொற்று நோயின் பிடியில் சிக்கித் தவிக்கின்ற இன்றைய காலகட்டமானது மனிதர்களின் தனிச் சுத்தம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மதங்களும் மனிதனின் தன் சுத்தத்தை வலியுறுத்துகின்றன. தூய்மையான உடல் தூய்மையான மனதின் வெளிப்பாடாகும். இறைவனுடன் உணர்வு ரீதியாக தொடர்பு கொள்ளவும் இத் தூய்மை உதவுகின்றது.

சுகாதாரம் என்பது நலமான வாழ்வின் தொடக்கப் புள்ளியாகக் காணப்படுகின்றது. எனவே நாம் உட்கொள்ளும் உணவு, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும் முறை, உடற்பயிற்சி   போன்ற   ஆரோக்கியச்  செயற்பாடுகளில் நம் வாழ்வின் ஆரோக்கியம் தங்கியுள்ளது. தன் சுத்தமும், சமூக தூய்மையும் பேணப்படும் போது தான் சுகாதாரமான, பாதுகாப்பான வாழ்க்கை மக்களுக்கு கிடைக்கும்.  அதை ஒவ்வொருவரும் தன்னில் இருந்து தொடங்க வேண்டும். அப்பொழுதுதான் சமூகமும் அவ்வழியினை விருப்போடு பற்றி நடமாடும்.

நாம் வாழ்கின்ற வீடு பாடசாலை பொது இடங்கள் என நாம் நடமாடுகின்ற ஒவ்வொரு இடங்களிலும் தன் சுத்தம் மிளிரும் விதமாக நமது நடத்தைகளை மாற்றியமைக்க வேண்டும். சிறுவர்களுக்கு சிறு வயதிலேயே தன் சுத்தம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தல் வேண்டும். தன்னைப் பற்றிய சிந்தனையே பொது நலத்திற்கான தூண்டுகோலாகும்.இந்நிலையில் ஒவ்வொருவரும் தன் சுத்தத்தைப் பேணுவதன் மூலமாக சமூகத்தையும் காக்க முடிகின்றது.

 அழகான வாழ்வென்பது உடல், உணர்வு, வாழ்கின்ற சூழல் சார்பானது. நாம் வாழ்கின்ற ஒவ்வொரு நிமிடங்களிலும் நமது வாழ்வினை ரசித்து வாழ்கின்ற மனநிலையை இத் தன் சுத்தம் தருகின்றது. "சுத்தம் சுகம் தரும்" என்பது பழமொழி. தன் சுத்தமான வாழ்வியலுடன் இசைந்து வாழ்கின்றபோது நமது பழக்க வழக்கங்களும் பிறர் மதிக்கின்ற விதமாக மாறும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

நாம் வாழ்கின்ற ஒவ்வொரு நொடி வாழ்வும் நமது உடலினதும், உளத்தினதும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக வாழ  வேண்டும். அப்பொழுதுதான் உளத் தூய்மையுடனான சமூகக் கட்டமைப்பு தோற்றுவிக்கப்படும். 

எனவே தன் சுத்தம் பேணி  சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான    சிறந்த சமூகத்தையும் உருவாக்குவது எமது கடமையாகின்றது.

ஜன்ஸி கபூர் - 06.01.2021


தோழமை



அன்பு படர்கின்ற மனதினில்/

உணர்வுகள் பேசிடும் அழகாக/

இதமான வருடலில் இதயமும்/

இனித்திடும் பேதமில்லாத் தோழமையால்/


ஜன்ஸி கபூர்

2021/01/02

புன்னை மரம்

அழகும் இதமாகின்றது புன்னையின் புன்னகைபோல்

அருமையின் அடையாளமாகவே உயிர்க்கின்றது தானாகவே

வறுமையும் வளமற்ற சூழல்ப் போராட்டமும்

நிறுத்துவதில்லை இயல்பான இயற்கை வளர்ச்சியை

இருந்தும் சூழ்கின்ற சிறைக்கரத்தின் வன்மத்தில்

கரைந்தே விடுகின்றது மென்மையான  மனம்


அடுத்தவரால் மலினப்படுத்தப்படுகின்ற உணர்வுக் குவியலுக்குள்

புதைந்தே புகைகின்ற பெண்மைத் தடத்திலும்

எதிர்பார்ப்புக்களை ஏந்தியவாறே பூத்துக் குலுங்குகின்றன

அடக்கமான அமைதியான வாசனைப் பூக்கள் 

                                                                     

ஊர்விழிகளால் மொய்க்கப்படாமல் மூடி மறைகின்ற  

இயற்கை பராமரிக்கின்ற இதமான அழகும்

இதழ்களுக்குள் நசிகின்ற மென் புன்னகையும்

சிந்துகின்ற வாசம் மௌனத்திலேயே உறைகின்றது


அடுத்தவரோடு இசைந்து வாழ்கின்ற வாழ்விலும்

விரிக்கப்படுகின்ற சுதந்திரச் சிறகின் நீளுகை

முறிக்கப்படுகின்றது முற்றத்தில் தரித்து நிற்போரால்

நிழலாகின்ற கொடைக்குள்ளும் குறிவைக்கின்றது செந்தணல்


தன்னலம் களைந்து வாழ்கின்ற வாழ்விலும்

விண்ணைத் தொட முயற்சிக்கும் போதெல்லாம்

புண்ணாய்ச் சிதைக்கின்றனர் உணர்வினை உடைத்து

நாற் சுவருக்குள் நாடித்துடிப்பை அடக்கி

பெண்ணைப் போலவே புண்ணையும் மொண்ணையாகவே மாற்றுகின்றனர் தரணிப் பரப்பிலே


ஜன்ஸி கபூர்  - 03.01.2021