About Me

2021/05/14

இணைந்த கரங்கள்

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பார்கள். 

உண்மையில் ஒவ்வொரு ஆசானும் தான் உருவாக்குகின்ற மாணவர்களின் உயர்வான முன்னேற்றம் கண்டு தனக்குள் பெருமை கொள்கின்ற தாய்மைக் குணத்தை தமது  உணர்வுக்குள் தேக்கி வைத்திருக்கின்றார்கள்   என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

இச்சம்பவம் முகநூல் வாயிலாக அறியக் கிடைத்த விடயம். இச்சம்பவக் கருவினை எனது பார்வையில் பதிவிட்டுள்ளேன்.  

அது......

கேரளா மல்லாபுரம் புகையிரத நிலையம்.

பரபரப்பு மிக்க அந்த பொழுதொன்றில் அவளும் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றாள். எதிரே வயதானவர் ஒருவர் அவள் கவனத்தை சற்றுக் கலைக்க நிதானித்து நிற்கின்றாள்.

'அம்மா...தாயீ...ஏதாவது ...தாம்மா...பசிக்குது'

அந்தக் குரல் எங்கோ........எப்போதோ கேட்ட குரல்...

யோசித்தாள். தனது கணித ஆசிரியையின் சாயல். தனது கணித ஆசிரியர் இரயில் நிலையத்தின் அருகே பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை அவளால் நம்ப முடியவில்லை.

அவரா....

இருக்காது. அந்த அன்பும் நொடிப் பொழுதில் தோன்றி மறைந்தது.

அந்தக் குழப்பம் வீடுவரை தொடர்ந்தது.

வீட்டுக்குச் சென்றதும் தனது பாடசாலைப் பருவ புகைப்படங்களை ஆராய்ந்தாள். அதே முகம்தான்.. இப்போது வறுமையும் முதுமையும் முழுமையாக நிரம்பியிருந்தன.

மறுநாள் அவரைத் தேடி அதே புகைவண்டி நிலையம் சென்றாள் மாணவி.

ஆனால் அந்தப் பெண்ணால் மாணவியை அடையாளம் காணமுடியவில்லை. இருந்தும் தன்னைப் பற்றிய விபரங்களை மாணவியிடம் பகிர்ந்து கொண்டார்.

 "நான் ஓய்வு பெற்ற பிறகு எனது குழந்தைகள் என்னை  விட்டு விலகி  போய் விட்டாங்க. அவர்கள் எனது வாழ்வாதாரத்தைப் பற்றி எந்த வகையிலும் கவலைப்படவில்லை.   அதனாலேயே  நான் இந்த முடிவுக்கு வந்தேன்" என்றார்.

அதனைக் கேட்டதும் அம்மாணவியின் மனம் வருந்தியது. பின்னர் ஆசிரியரின் எதிர்கால வாழ்க்கையைத் திட்டமிடுவதற்காக தான் படித்த மற்ற எல்லா நண்பர்களையும் தொடர்பு கொண்டார். மேலும் அன்பான ஆசிரியருக்கு சுதந்திரமாக வாழ ஒரு சிறந்த இடத்தையும் தயார் செய்து, ஆசிரியரை தனது சொந்த தாய் போலவே நடத்தினார்.   

பெற்ற  பிள்ளைகள் கைவிட்டாலும்கூட கற்பித்த குழந்தைகள் அவர்களை விடவில்லை. 

இது ஆசிரியர்- மாணவர் தலைமுறையின் சிறப்பின் பிரதிபலிப்பாகும்.

தேவைப்படுகின்றபோது செய்கின்ற சின்னச் சின்ன உதவிகளுக்கான பிரார்த்தனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

சிறு புள்ளிகள்தானே கோலங்களாகின்றன. அவ்வாறே பல தனிக் கரங்கள் ஒன்று சேர்கையில் வலுவான நம்பிக்கையை உருவாக்கக்கூடிய எதிர்காலங்கள் உருவாகின்றன.

ஜன்ஸி கபூர் - 14.05.2021


2021/05/11

உம்மா

 

தாயே

எனது கைவிரல்கள் தொட்டு நீங்கள் பழக்கிய வாழ்க்கைக் கோலச் சுவடுகளைப் பார்த்து இவ்வுலகம் பிரமித்து நிற்கின்றது.

பிறர் அறியாது என்னுள் முகிழ்த்த வலிகளை நீங்கள் இரகஸியமாக உங்கள் கண்ணீரால் பொறுக்கியெடுக்கையில், என் தாயின் சுவர்க்க நிழலின் அருகாமை என் வேதனைகளைக் குறைத்திருப்பதை நீங்கள் அறிவீர்களா?

என் ஏற்றத்தின் ஏணியான உங்கள் தாய்மையின் மானசீக ஆசிர்வாதமும் படைத்த வல்லோனின் அருளும் என் பயணப் பாதையை எவ்வித இடையூறுகளுக்கு மத்தியிலும் தொய்வின்றிக் கொண்டு செல்கின்றது.

தாயே....

உங்கள் அருகாமையுடன் நான் வாழ்கின்ற பிரமாண்டமான உலகம் அழகாக இருக்கின்றது. ஆறுதலாகவும் இருக்கின்றது.

நான் தோள் சாய்கின்ற உங்கள் மடியின் மானசீக விசாலம் யாருக்குப் புரியும்?

உங்கள் அன்பின் மொழியை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

என் சாதனைகளின் ஒவ்வொரு வெற்றிகளுக்கும் நீங்கள்தான் தன்னம்பிக்கையின் ஊற்று.

அன்னையர் தின வாழ்த்துக்களை என் அன்பின் மொழி கொண்டு வரைகின்றேன். இனித் தொடர்ந்து வருகின்ற ஒவ்வொரு நாட்களும் உங்கள் ஆரோக்கியப் பேணுதலுடன் தொடரட்டும்.

அன்னையர் தின வாழ்த்துக்கள் உம்மா....

ஜன்ஸி கபூர் -09.05.2021


2021/05/09



 

கொவிட் தொற்றும் கர்ப்பிணித் தாய்மாரும்

இலங்கையில் தற்போது வேகமாகப் பரவி வருகின்ற கொவிட் மூன்றாம் அலையின் பாதிப்பில் தற்போது கர்ப்பிணித் தாய்மாரும் உள்ளடங்கி வருகின்றனர். ஒருவர் மரணித்துள்ள நிலையில் 130 இற்கும் மேற்பட்டோர் தொற்றாளர்களாக இனங் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிசுவின் துடிப்பினை தன்னுள் ஏந்திக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு தாயும் கொரோனாவின் பிடியிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளக்கூடிய தேவைப்பாடு உள்ளது.

எனவே கூறப்பட்டுள்ள பின்வரும் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

  • அத்தியாவசிய காரணங்களை தவிர வேறு எச்சந்தர்ப்பத்திலும் எதற்காகவும் வீட்டை விட்டு வெளியேறாதீர்கள். 
  •  காற்றோட்டமற்ற இடத்தில் தரித்திருப்பதை இயன்றளவு தவிர்த்தல்.
  • எப்பொழுதும் உரியவாறு முகக்கவசத்தை அணிதல்.
  • நபர்களுக்கிடையான தூரத்தை உரியவாறு பேணல்.
  • மரண உற்சவம் போன்ற சன நெரிசல் மிக்க இடங்களுக்கு செல்லாதிருத்தல்.
  • எப்போதும் சவர்க்காரம் இட்டு இரு கைகளையும் கழுவி சுத்தமாக வைத்திருத்தல்.
  • உரியவேளைகளில் கிளினிக்கிற்கு செல்வதிலும் மற்றும் சிகிச்சைகளைப்  பெறுவதிலும், ஏற்படுகின்ற தாமதம்  காரணமாக கர்ப்பிணித் தாயினதும் கருவிலுள்ள சிசுவினதும் ஆரோக்கியத்திற்கு இடையூறு ஏற்படலாம்.

  • கர்ப்ப காலத்தில் ஏற்படுகின்ற காய்ச்சல், குருதிப்பெருக்கு, கடுமையான தலையிடி, மூச்செடுப்பதில் கஷ்டம், பார்வைக் குறைவு, வலிப்பு, நெஞ்சில், வயிற்றில் ஏற்படுகின்ற வேதனை, சிசுவின் துடிப்புக் குறைவு, உடல் வீக்கம், அத்துடன் வேறு ஏதாவது கடினமான அசௌகரிக நிலை ஆபத்து சமிக்கைகளாக அடையாளம் காணப்பட முடியும். இவ்வாறான ஆபத்தான சமிக்கை தோன்றினால் உடன் வைத்தியசாலைக்கு செல்வது கட்டாயமாகும். அது தொடர்பில் உங்களுடைய குடும்ப நல சுகாதார உத்தியோகத்தருக்கு அறிவியுங்கள்.
  • கர்ப்பிணியான உங்களுடைய பாதுகாப்பு தொடர்பாக,கொவிட் நோய்த் தொற்றிலிருந்து உங்களை  தவிப்பதற்குரிய உரிய சகல ஏற்பாடுகளும்  வைத்தியசாலையில் செய்யப்பட்டுள்ளது. ஆதலால் அவசிய வைத்திய சிகிச்சை பெற்றுக்கொள்ள ஒருபோதும் தயங்கவேண்டாம்.
  • உங்களுடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் அல்லது கொவிட் நோயாளி என சந்தேகிக்கப்படும் நபரொருவர் உங்கள் வீட்டில் வசித்தால் அது தொடர்பாக உடனடியாக உங்களுடைய குடும்ப நல சுகாதார உத்தியோகத்தருக்கு அறிவியுங்கள். உங்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக முடிந்தவரை   அவரிலிருந்து விலகி இருங்கள்.
  • தற்செயலாக, உங்களுக்கு ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் கொரோணா நோய் அறிகுறி உள்ளதாக சந்தேகித்தால் உடனடியாக உங்கள குடும்ப நல சுகாதார உத்தியோகத்தருக்கு அறிவியுங்கள்.
  • அவசிய சிகிச்சைகளை உடனடியாகப்பெறுங்கள். வைத்தியசாலைக் கட்டமைப்பு உங்களுக்காக தயார் நிலையில் 
  • இச்சகல நிகழ்வுகளுக்கிடையே உங்களுக்கு ஏதாவது மன உளைச்சல் தோன்ற முடியும். அதை தவிர்ப்பதற்காக, மனதை எப்போதும் நிதானமாகவும் தெளிவாகவும் வைத்திருக்க  முயற்சி செய்யுங்கள்.
  • தேவைப்படும் எந்தநேரத்திலும் உங்களுடைய குடும்ப நல சுகாதார உத்தியோகத்தரை அல்லது 1999 சுவசெரிய தொலைபேசி சேவையினூடாக வைத்தியரொருவரை தொடர்பு கொண்டு உங்களுடைய பிரச்சனை தொடர்பான காரணங்களை கலந்தாலோசிக்கவும் முடியும்.

- பகிர்வு- 09.05.2021