About Me

2021/05/14

இணைந்த கரங்கள்

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பார்கள். 

உண்மையில் ஒவ்வொரு ஆசானும் தான் உருவாக்குகின்ற மாணவர்களின் உயர்வான முன்னேற்றம் கண்டு தனக்குள் பெருமை கொள்கின்ற தாய்மைக் குணத்தை தமது  உணர்வுக்குள் தேக்கி வைத்திருக்கின்றார்கள்   என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

இச்சம்பவம் முகநூல் வாயிலாக அறியக் கிடைத்த விடயம். இச்சம்பவக் கருவினை எனது பார்வையில் பதிவிட்டுள்ளேன்.  

அது......

கேரளா மல்லாபுரம் புகையிரத நிலையம்.

பரபரப்பு மிக்க அந்த பொழுதொன்றில் அவளும் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றாள். எதிரே வயதானவர் ஒருவர் அவள் கவனத்தை சற்றுக் கலைக்க நிதானித்து நிற்கின்றாள்.

'அம்மா...தாயீ...ஏதாவது ...தாம்மா...பசிக்குது'

அந்தக் குரல் எங்கோ........எப்போதோ கேட்ட குரல்...

யோசித்தாள். தனது கணித ஆசிரியையின் சாயல். தனது கணித ஆசிரியர் இரயில் நிலையத்தின் அருகே பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை அவளால் நம்ப முடியவில்லை.

அவரா....

இருக்காது. அந்த அன்பும் நொடிப் பொழுதில் தோன்றி மறைந்தது.

அந்தக் குழப்பம் வீடுவரை தொடர்ந்தது.

வீட்டுக்குச் சென்றதும் தனது பாடசாலைப் பருவ புகைப்படங்களை ஆராய்ந்தாள். அதே முகம்தான்.. இப்போது வறுமையும் முதுமையும் முழுமையாக நிரம்பியிருந்தன.

மறுநாள் அவரைத் தேடி அதே புகைவண்டி நிலையம் சென்றாள் மாணவி.

ஆனால் அந்தப் பெண்ணால் மாணவியை அடையாளம் காணமுடியவில்லை. இருந்தும் தன்னைப் பற்றிய விபரங்களை மாணவியிடம் பகிர்ந்து கொண்டார்.

 "நான் ஓய்வு பெற்ற பிறகு எனது குழந்தைகள் என்னை  விட்டு விலகி  போய் விட்டாங்க. அவர்கள் எனது வாழ்வாதாரத்தைப் பற்றி எந்த வகையிலும் கவலைப்படவில்லை.   அதனாலேயே  நான் இந்த முடிவுக்கு வந்தேன்" என்றார்.

அதனைக் கேட்டதும் அம்மாணவியின் மனம் வருந்தியது. பின்னர் ஆசிரியரின் எதிர்கால வாழ்க்கையைத் திட்டமிடுவதற்காக தான் படித்த மற்ற எல்லா நண்பர்களையும் தொடர்பு கொண்டார். மேலும் அன்பான ஆசிரியருக்கு சுதந்திரமாக வாழ ஒரு சிறந்த இடத்தையும் தயார் செய்து, ஆசிரியரை தனது சொந்த தாய் போலவே நடத்தினார்.   

பெற்ற  பிள்ளைகள் கைவிட்டாலும்கூட கற்பித்த குழந்தைகள் அவர்களை விடவில்லை. 

இது ஆசிரியர்- மாணவர் தலைமுறையின் சிறப்பின் பிரதிபலிப்பாகும்.

தேவைப்படுகின்றபோது செய்கின்ற சின்னச் சின்ன உதவிகளுக்கான பிரார்த்தனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

சிறு புள்ளிகள்தானே கோலங்களாகின்றன. அவ்வாறே பல தனிக் கரங்கள் ஒன்று சேர்கையில் வலுவான நம்பிக்கையை உருவாக்கக்கூடிய எதிர்காலங்கள் உருவாகின்றன.

ஜன்ஸி கபூர் - 14.05.2021


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!