பபா அம்புலி


வான் இருளை சற்றுக் கலைக்கும் வண்ணம் வானில் கால்வாசி மாத்திரம் நிரப்பப்பட்ட வண்ண நிலாவொன்றும் , தம்மழகையும் ரசிக்கும்படி கண்ஜாடை செய்யும் பல நட்சத்திரங்களும், தம் ஒளியை வானில் அள்ளி வீசி இருளை சற்று அகற்றிக் கொண்டிருந்த அந்த நேரம் எங்கள் வீட்டுச் செல்லம் அஸ்கா, என் கைகளைப் பற்றியிழுத்தவாறே வீட்டின் முற்றத்தில் கொண்டுபோய் நிறுத்தினாள்....

" என்ன குஞ்சு காட்டப் போறீங்க எனக்கு " 

நான் அவள் கன்னத்தை செல்லமாக வருடியவாறே கேட்டேன்.

"பபா அம்புலி வந்திருக்கு......அதைப் பார்க்கணும் "

என்றாள் அந்த மூன்று வயதும் நிரம்பாத மழலை!

பபா அம்புலி..........!

பாதி உடைந்திருக்கும் அந்த நிலாவுக்கு அவளிட்ட அந்தப் பெயர் கூட அழகாகத்தான் இருக்கின்றது. நானும் ரசித்தேன் . அந்நிலவின் எழில் கசியுமந்த அழகை அவளுடன் சேர்ந்து நெடுநேரமாய்!

அஸ்கா............

வழமையாக அம்புலிக்குப் பயம்...அவளுக்கு தினமும் உணவூட்டுவதென்பது எங்கள் வீட்டில் பெரும் போராட்டம் தான். குழந்தை சாப்பிடுவதில் அக்கறை காட்டமாட்டாள். இரவில் உணவுண்ண அடம் பிடித்தால் இந்த நிலாவைக் காட்டித்தான் உணவூட்டல் நடைபெறும். அம்புலி மீதான பயத்திலும், தனதுணவை அம்புலிக்கு கொடுத்து விடுவார்களோ எனும் ஆதங்கத்திலும்  உண்ணச் சம்மதிப்பாள். இப்படியாவது ஏதோ சிறு உணவுக் கவளங்கள் அவள் சமிபாட்டுத் தடத்தில் இறங்கிவிடுகின்றதே எனும் திருப்தி எமக்கு!

அம்புலிக்குப் பயப்படும் பிள்ளை என்னை இழுத்து வந்து வானத்தைக் காட்டும்படி இன்று கூறியதைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன்......

"அஸ்கா பபா........நீங்க அம்புலிக்குப் பயமில்லையா"

நான் அப்பாவிபோல் பிள்ளையிடம் கேட்க, அவள் பயம் என தலையாட்டினாள்

"நான் உம்மா அம்புலிக்குத்தான் பயம் , ஏன் நம்ம வீட்டுக்கு வருது" 

பிள்ளை தொடுத்த வினாக்களை ரசித்தேன் மெல்லிய புன்னகையை என்னுள் பரப்பியபடி !

ஏனோ சின்னப் பிள்ளைகள் தொலைவில் எட்டிப்பார்க்கும் நிலா மீது ஆசையை வைத்தாலும் கூட, பயத்தையும் வெளிப்படுத்துகின்றார்கள்..நிலா பற்றிய பிரக்ஞ குழந்தைகளுக்கு வெறும் கற்பனையுருவாகவே அமைந்து விடுகின்றது..கொஞ்சம் வெளியுலகைப் பார்க்கும், பிரித்தறியும் பக்குவம் வரும் போது நிலாவைத் தோழியாக்கி ரசிக்கின்றது பிள்ளை மனம்!

"ஓ..........உம்மா அம்புலி ( பூரண நிலா) இன்னும் கொஞ்ச நாள்ல வந்திடுவா..அதுவரைக்கும் இந்த பபா அம்புலிதான் நம்மட வீட்டுக்கு வரும் " 

நானும் குழந்தையுலகில் பயணித்து ,அவளுக்கு சில விடயங்களைப் புரிய வைக்கத் தொடங்கினேன்.

"பபா அம்புலி எங்க போயிருந்தது " 

குழந்தை வினவ, நானும் சளைக்காமல் அவளுக்கேற்ப பதில் சொன்னேன்..

"பபா அம்புலி காலைல ஸ்கூல் பொயிட்டு, நைற்தான் அச்சா பபாவ பார்க்க வந்திருக்கு.......அந்த பபா அம்புலியோட விளையாடுவோமா நாம ரெண்டுபேரும்"

நான் இயல்பாகக் கேட்க, குழந்தை அபிநயத்து தான் அதற்குப் பயமென்பதை கூறி அவசரமாக மறுத்தாள்.

குழந்தையின் ஆர்வம் திடீரென நட்சத்திரங்கள் மீதும் பரவியது.

"இது என்ன"  வினவினாள் ஆவலுடன்...........

"இது தான் நட்சத்திரம்....ஸ்டார் .........."   

ஒற்றை நட்சத்திரமொன்றைச் சுட்டிக் காட்டிச் சொன்னேன். பிள்ளையும் கஷ்டப்பட்டு தன் மழலை மொழியில் நான் கூறிய அந்த வார்த்தைகளை மீள எனக்கு சொன்ன போது, அந்த மழலைத் தமிழை சில நிமிடங்கள் மெய்மறந்து ரசித்தேன்.

"அப்ப ஸ்டார் என்ன செய்யுது, ஏன் அங்கு வந்துது"  

பிள்ளையின் அடுத்த வினாத்தேடல் களத்தில் இறங்கியது.

"பபா நிலாட விளையாட்டுச் சாமான்கள் தான் நட்சத்திரம்.........பபா நிலா குழப்படி அதுதான் தன் விளையாட்டுச் சாமான்கள வானத்தில வீசியிருக்கு.... அஸ்கா பபா அச்சாவா கூடாதா, இப்படி விளையாட்டுச் சாமான்கள வீசியெறிவீங்களா"

நான் கேட்க , குழந்தை தன் கைகளை விரித்துக் காட்டியபடி  "அச்சா பபா" என்றாள்..அவளை வாரியணைத்து கன்னத்தில் என் அன்பைப் பதித்து அவள் தலையை மெதுவாக வருட ஆரம்பித்தேன். இரவில் மெதுவாக வீசிக்கொண்டிருக்கும் கூதல் நிரம்பிய காற்றின் வருடலில் அவள் மழலை சுகம் மனதுக்குள் மானசீகமாக இறங்கிக் கொண்டிருந்தது.

இந்த வயதில்தான் பிள்ளை தன் சூழல் அனுபவங்களால் உலகையறிய முயற்சிக்கின்றது.  குழந்தையின் புத்திக்கூர்மையும் மெதுவாகப் பட்டை தீட்ட ஆரம்பிக்கப்படுகின்றது.  எனவே எதற்கெடுத்தாலும் வினாக்களே சிந்தனைத் தூண்டலாக மாற்றப்படுகின்றது. ஏன்.............எப்படி......எங்கு......இவ்வாறான வினவல்கள் தான் அவள் வார்த்தைகளுடன் இணைந்து தன்னைச் சூழவுள்ள நிகழ்வுகளை மனதுக்குள் படமாக்கவுதவுகின்றது. நான் குழந்தை உளவியல் பற்றி அறிந்திருப்பதால் அவளின் வினாக்களுக்குப் பொறுமையுடன் உண்மையான விவரங்களை அவள் புத்திக்கேற்ப அவள் பாணியில் கூறுவேன்.......இது எனக்கும் பிள்ளைக்குமிடையிலான தின நிகழ்வு..பிள்ளை விரும்பும் உலகத்திற்கு நான் அழைத்துச் செல்லத் தயங்குவதில்லை....

"யூ டியூப்பில்" குழந்தை விரும்பும் ரயில் கார்ட்டூன்களும், வானத்து நிலாவும் தினமும் இரவில் பிள்ளை ரசிக்கும் உலகங்களாக கவிழ்ந்திருக்கின்றன!

நாளையும் நிலா வரும்...........பிள்ளை கேட்கும் இதே கேள்விகளுக்கு , எனது விடைகள் மாத்திரம் வேறுபடும்.........

இயற்கையின் ரசிப்புடன் கூடிய மழலை சுகம் , என் இரவுத்துளிகளை பனித்துளிகளாக்கி என்னுள் உலாவவிடத் தொடங்கின வாஞ்சையுடன் ! அகம் மெய்மறந்து அந்தவுலகில் வேரூன்றத் தொடங்கினேன் யதார்த்தவுலகின் இம்சைகளைக் கலைந்தபடி!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை