மரணப்பூக்கள்


ஒவ்வொரு விடிகாலையும் - எனக்கு
நிச்சயமற்ற பொழுது !

இரவின் சயனத்தில் வீழ்ந்துகிடக்குமிதயம்
அறுந்துவிடத் துடிக்கின்றது பலமாய்!

கனாக்கள் காலாவதியாகிப் போனதில்
காவுகொள்ளப்பட்டனவோ உணர்வு வேரறுக்கப்பட்டு!

பறக்கத் துடிக்குமென் எத்தனங்களில் - யாரோ
சிறகுகளை கத்தரிக்கின்றனர் சளைக்காமல்!

வெந்நீரின் சகவாசத்தில் வீழ்ந்த மனசும்
ஆவியாகிபோகின்றது  அடிக்கடி மகிழ்வும் துறந்து!

எங்கோ தொலைந்த சந்தோஷங்கள்- நீராய்
இங்கிதமின்றி  விழிமடலுக்குள்  ஊற்றப்படுகின்றன!

குரல்வளையின் பட்டிகையாய் தூக்குக்கயிறொன்றும்
வரமாகி மூச்சுக்காற்றில் தரித்து நிற்கின்றது!

ஒட்டடைபடியாத மயானமொன்று எனக்காய்
காத்துக் கிடக்கின்றது அந்தரிப்புடன்!

பாறைகளின் போர்க்களத்தில் பதியமிடப்பட்ட வாழ்க்கை
கோரமாகிக் கிடக்கின்றது தினமும் !

ஒருவேளை சந்தோசங்களின் மீள்பிறப்பு
இறப்பின் காலடியிலோ!

இளமையின் போஷிப்பில் துடிக்கும் நாடியே..........
உனக்கேனின்னுமென் மூச்சறுக்கத்  தயக்கம்!

சபிக்கின்றேன் என் ஆரோக்கியத்தை.........!

இருந்தபோதும்...................!

நாளை சேதியொன்றும் வரும்!- என்
ஆயுள் அண்டம் ஆறடிக்குள் சிதைக்கப்பட்டதாய்!

அன்று மண்ணறை மடி  தர- உறவினர்
கண்ணீர்த்துளிகளென்னைத் தாங்கிப் பிடிக்க...

பதித்துக் கொண்டிருப்பேன் என்னையும் .....
மதியில் இம்சைகள் தொடாத புதுத்தேசத்தில்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை