கசக்கப்படும் மலர்கள்                                                Fathima Afra 

இவ்வுலகம் எவ்வளவு விரைவாக நவீனத்தை நோக்கி முன்னேறிக் கொண்டு செல்கின்றதோ, அதற்கு எதிர்மாறாக வக்கிர உணர்வுகளையும் அதிகளவு சம்பாதித்துக் கொண்டு செல்கின்றது. மூடநம்பிக்கைகள், நரபலி என அற்பமான சிந்தனைகள் இன்னும் இவ்வுலகத்தின் நடைப்பயணத்திலிருந்து விலகிப் போகாமலிருப்பது ஆச்சரியமே!

கொலை, கொள்ளை, களவு, கற்பழிப்பு என தொடரும் பஞ்சமாபாதகங்களின் ஆணிவேர் முற்றாக அறுக்கப்படாத நிலையில், மனித சமுகம் எவ்வளவுதான் நாகரிகமடைந்ததாக தன்னைக்காட்டிக் கொண்டாலும் அதன் பெறுமதி பூஜ்ஜியமே

அண்மையில் நான் கேள்விப்பட்ட சம்பவமே என்னை இவ்வாறு எழுதத்தூண்டியுள்ளது.

இறைவனின் அழகிய, அற்புத படைப்புக்களில் குழந்தையும் ஒன்று. குழந்தைப்பருவம் ஒரு சில வயதேற்றங்களின் பின்னர் பிள்ளைப்பருவமாக மாற்றப்பட, வீடென்று இருந்த பிள்ளையின் உலகம் பாடசாலை வரை நீளுகின்றது..மலரைப் போன்று மென்மையான உணர்வும், உடலும் கொண்ட இந்த சின்னவர்களின் அன்பும் , அவர்கள் சார்பான உலகமும் எம்மை மகிழ்ச்சிப்படுத்தும் நந்தவனங்கள் என்பதனை  மறுப்பவர் யாருமில்லை !

பாத்திமா அfப்ரா...................!

வெலிகம, கோட்ட கொடையைச் சேர்ந்த தரம் ஒன்று கற்கும் பால்மணம் மாறாத சிறுமி...பாடசாலை வாழ்விற்குள் நுழைந்து இன்னும் ஒருவருடம் கூட பூர்த்தியாகாத மலரிவள்..

அச் சிறுமிக்கு அவன் முகம் ஏற்கனவே பழக்கப்பட்ட நிலையில், அவன் அன்று அச்சிறுமியை அணுகி பூச்செண்டு தருவதாக கூறி ஆசைப்படுத்தவே அப்ராவும் அவனுடன் அவன் வீட்டுக்குச் சென்றுள்ளாள்.

அவன் காமுகன். பெண்கள் குளிப்பதையெல்லாம் மறைந்திருந்து பார்த்து, பல தடவைகள் பிடிபட்டு நையப்புடைக்கப்பட்டவன். அவன் பொழுதுபோக்கே ஆபாசப்படக்காட்சிகளை ரசிப்பதுதான்!

அவன் முன்பு மனநலப்பாதிப்படைந்து குணமடைந்தவன். அந்தக் கொடியவன் மூடநம்பிக்கைகளிலும், அதிக விசுவாசம் கொண்டிருந்தான்.. அவனது தீராத நோய் குணப்படுத்தப்பட வேண்டுமானால், சிறுவர் ஒருவரை நரபலியிட வேண்டுமென்பதில் அவன் குடும்பத்தினரும் அதிக  நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்களின் அந்தத் தேடலுக்கு அfப்ரா இரையானாள்.

அந்த ஆறு வயதுச் சிறுமி அfப்ராவை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற அவன் , வீட்டில் மறைத்து வைத்திருந்தமண்வெட்டியினால் அf ப்ராவைத் தாக்கி , அவள் முகத்திலும் பயங்கரக் காயங்களை ஏற்படுத்தி, சிறுமி சிந்திய இரத்தத்தில் தன் நரபலி வெறியைத் தணித்துள்ளான் அந்தக் காமுகன்.

அவனது தாக்குதலில் துடிதுடித்துக் கசக்கப்பட்ட அப்பிஞ்சு , தனது  மூச்சையடக்கிய  பின்னர் , அவளது சிதைந்த  உடலை ஒரு குறித்த வாழைமரத் தோட்டத்தில் மறைவாக வீசியிருக்கின்றான். எனினும் அவனது துரதிஷ்டம் இறந்த அfப்ராவின் உடல் வெளியுலகப் பார்வைக்குத் தென்பட்டு விட்டது.

பிள்ளை கொல்லப்பட்ட செய்தி கேட்டு திரண்ட உறவுகளும், ஊரும் அவனைத் தேடிக் கண்டுபிடித்து நையப்புடைத்து சட்டத்தின் கரத்தில் ஒப்படைத்துள்ளனர். அவன் இப்பொழுது சட்டத்தின் பிடியில் சிக்குண்டிருக்கின்ற ,  ஓர் கைதி..............!


அfப்ராவைக் கொலை செய்த பாதகன் இவன்தான்


அfப்ரா.........!

இப் பூவுலகில் இன்னும் பல காலம் வாழ்ந்து  , தனக்கு விதிக்கப்பட்ட வாழ்வை வாழ வேண்டிய பூ ! சத்தியமும், மனிதாபிமானமுமற்ற மனிதர் சதியினால்  தன் காலடித்தடம் பதித்தோடித்திரிந்து , விளையாடிய  மணற்றரையிலேயே  அப்பிள்ளை நிரந்தரமாக உறங்குகின்றாள். மனித உயிர்களை தம் சுயநலத்திற்காக காவு கொள்ளும் எவரையும் என்றும் மன்னிக்கவே முடியாது!

சிறுமியைக் குருரமான முறையில் கொலை செய்த இவனுக்கு உயர்ந்த பட்சத் தண்டனை வழங்கவேண்டுமென்பதே, மனிதாபிமானமுள்ள மக்களின் ஒருமித்த குரலாக ஒலிக்கின்றது.

இந்த மென்மையைக் கூடச் சிதைக்கும் வக்கிரத்தைப் பெற்றுள்ள இவனைப் போன்றவர்களை இப்புவியில் தரிக்க விட்டால், இன்னும் பல அப்ராக்கள் கசக்கப்படுவார்கள் என்பது கசப்பான, வேதனையான உண்மை! இந்தக் கொடும் பாவிக்கு மன்னிப்பு எனும் வார்த்தை லாயக்கற்றது.

இலங்கைச் சட்டத்தில் இப்பொழுது மரணதண்டனை நிறைவேற்றப்படுவதில்லை.  இவ்வாறான கொலைக் குற்றமெல்லாம் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுவதனால்தான் இந்தப் பாவிகளும் மரணதண்டனை அவஸ்தையிலிருந்து தப்பித்து விடுகின்றார்கள்...

சட்டம் ஒரு இருட்டறை என்பார்கள். சட்டத்தின் பிடியில் இவர்கள் தப்பித்துக்கொண்டாலும் கூட இறை தண்டனைக்கு நிச்சயம் ஆளாவார்கள் என்பதும்  மறுக்கப்படாத உண்மை!

காலம் பதில் சொல்லும்............!

இரத்தங்களால் அசுத்தமாகாத பசுமையான பூமியொன்றில் மனிதர்கள் வாழ்கின்றார்கள் எனும் சேதியை அது தாங்கிக் கொள்ளும்......இவ்வாறான காலமொன்று வருமா....அல்லது இதுகூட  நிறைவேற்றப்படமுடியாத காத்திருப்பா!

நம்பிக்கைதான் வாழ்க்கை......காலம் பதில் சொல்லும்!
2 comments:

 1. உண்மையை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறீர்கள். கட்டுரையைப் படித்த அனைத்து உள்ளங்களும் பாத்திமா அஃப்ரா எனும் பிஞ்சுக் குழந்தைக்காகப் பிரார்த்திக்கவும். http://www.kalaimahanfairooz.co.cc/2012/08/blog-post_5492.html

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக.......!
   இவ்வாறான சோகமும், கொடுமையும் இனி எங்கும் நடக்காமலிருக்க அல்லாஹ் துணை நிற்பானாக!

   Delete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை