நிலாக் கீற்றின் உதய தரிசனத்தில்
வான விழிகள் கிறங்கிக் கிடக்க.-எம்
"கல்பின்" கறை கழுவிடத்தான்
மாண்போடு வந்ததே புனித 'ரமழான்!
"திக்ர்" செய்தே இறையோ னிறைஞ்சி
"இறையில்லம் தனை நோக்கி சிரந்தாழ்த்தி
திருமறையின் நேசிப்பிலெம்
வாழ்வைப் பொருத்தி - நிதம்
இறையோ னன்பில் வீழ்ந்து கிடக்க
வந்ததே ரமழான்
தந்ததே மாண்பு பல!
விடியல் தொடாத இருள் கூடலில்
மடி தரும் "ஸஹரில்" அமர்ந்தே
உதடு குவிந்து "நிய்யத்" மொழிந்து
உவகையோடு நோன்பு பிடித்திடவே
வந்ததே ரமழான்
தந்ததே மனத் தூய்மையை!
"ஈமானால்" நிரப்பப்பட்ட எண்ணங்கள்
"இபாதத்" தாய் எட்டிப் பார்க்க
இச்சையறுக்கப்பட்ட வுடலும்- மன
தூய்மையோ டொன்றித்துக் கிடக்க
வந்ததே ரமழான்
தந்ததே நன்மை பல!
இடர்படுவோரின் துயரறிந்து
ஈகை பல செய்திடவே
"ஸஹாத்" பரிமாறலின் சேவகர்களாய்- எம்
மனசும் கரங்களும் உருமாற்றிக் கிடக்க
வந்ததே ரமழானும்
தந்ததே ஈடேற்றமும்!
அகிலத்தின் தரிப்பிடத்தில்
ஈமானிய விருட்சங்களாய் எமை வேரூன்ற
உறவுகளும் நேசங்களு மெமக்களித்த
அல்லாஹ்வூக்கே நன்றி பகிர்ந்திட
வந்ததே இனிய ரமழான்
தந்ததே நல்லமல்களை!
மனசோரம் பாவம் விரட்டி
மாண்பான நன்மை பல கோர்த்தே
மாநபி வழியொற்றி தடமும் பதித்து- எம்
மனவெளியின் சந்தனத் தோப்புக்களில்
மானசீகமாய் நாம் வீழ்ந்து கிடக்கவே
வந்ததே புனித நோன்பும்
தந்ததே இனிய வசந்தமும்!
நரகத்தின் நாடி யறுத்தே
விரசங்களின் பாவமெரித்தே
சொர்க்க வாசலை நாம் நுழையவே
மார்க்க மெம் இஸ்லாத்தின்
புனித கடமையாய்
முகங்காட்டும் ரமழானே
வந்ததே ..............வாசத்தோடு!
"லைலதுல் கதிர்" ஒளியினிலே
எழிலாகும் ரமழான் இரவினிலே
வசந்தமே எம் காலடி நிழலாய்
வாசத்தோடு கதை பலபேசிச் செல்ல
வந்ததே இனிய ரமழான்
தந்ததே பல அருள்மொழிதனை!
ஆகாயம் அண்ணார்ந்து பிரமித்திருக்க.
பாதாளம் பரவசத்தில் வீழ்ந்து கிடக்க
சாகரங்கள் சரித்திரம் வாசித்துச் சொல்ல
புன்னகை உதிர்வோடு புளாங்கிதம் தரவே
வந்ததே புனித ரமழான்
தந்ததே பல மாண்புகளையெம்முள்!
இறையோனின் அருள் மாதத்தில்
நோன்பாளியாய் நாமும் அமல் செய்ய
கைகட்டி நிற்கின்றன எம் பொழுதுகள்
நாளைய விடியலுக்காய்!
(கல்பு = மனம் ) (ஸஹர் = நோன்பிருப்பதற்காக ஆயத்தமாகும் சூரியன் உதயம் காட்டாத நடு சாமப்பொழுது) (ஈமான் = நம்பிக்கை) (ஸஹாத் = வறியவர்களுக்கு கொடுக்கும் கொடை) (லைலதுல் கதிர் = 27 ம் நோன்பின் புனித இரவு) இவை என் சகோதர மத நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க பதிவிட்ட சில சொற்களின் விளக்கம்)
-Jancy Caffoor -
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!