About Me

2012/07/18

ப்ரிய சகி!


என் மனப் பிரபஞ்ச வெளியின்
ஒற்றை நிலா வுன்னில் 
சூழுமந்தக் கார்மேகக் கசிவால்
அழுது வடிகின்றதென் ஆத்மாவும்!

கரைந்தோடும் மேகத் துளிகளால்
வார்க்கப்பட்ட   - உன்
வியர்வைத் துளிகளெல்லாம் 
கண்ணீர்த்துளிகளாய் என்னுள்ளிறங்கி
தொட்டுப் பார்க்குதேயென்
கன்னத்தையும் சேர்த்தே !

தென்றலின் மோதுகையில் கூட
நொந்து துடிக்குமுன்  மேனி 
தாங்குமோ
பிரிவின் 
அகோரச் சீண்டலை - நீ
அடிக்கடி உள்வாங்கும் போது!-

உன் கனவு முகங்களைக் கிறுக்கிச் சென்ற
அந்த விதியைச் சபிப்பதிலேயே 
இப்பொழுதெல்லாம் - என்
பொழுதுகளின் நிமிடங்கள்
பொறுப்போடலைகின்றன  - நீ
அறியாமலே!

கலைந்தோடும் மேகங்களில் - நீ
முடித்து வைத்த தூதோலைகளின்
கற்பை 
துவம்ஷம் செய்யும் காற்றை- நீ
விரட்டும் போராட்டம் கண்டு
பேச்சற்றுக் கிடக்கின்றன - பல
கரும்பாறைகள் தம் வலிமையை
உன்னுள் கண்டு!

பனிப் பாறைக்குள் உறைந்து கிடக்கும்
உன் காதல் ஞாபகங்களை 
பிய்த்தெறியத் துடிக்கும்
சூரிய உஷ்ணம் கூட
விரண்டோட தருணம் தேடுது
உன் பெருமூச்சின் வெம்மை கண்டு !

உன் காதல் கருத்தரிப்புக்களை
கருக்கலைப்புச் செய்தே 
கானலுக்குள் ளுன்னை வீழ்த்தும்
விதியின் சூழ்ச்சியெல்லாம் 
அவிழ்ந்தோடுமினி
புதைகுழிக்குள் வீழ்ந்து கிடக்கவே!

நீ ஒளிந்து வைத்திருந்த
வண்ணக்கலவைகளை 
வீம்பாய் நீரூற்றி 
கனவு கழற்றும் பல எத்தனங்கள்
காணாமல் போகட்டுமுன்
வாழ்க்கைப் பாதையிலிருந்து
நிரந்தரமாய்!

சிலுவையறையப்பட்ட வுன் காதலின்
செந்நீர்த்துளிகளால் 
சிதையு மென்னிருதயத்தின் இருப்பும்
மனுக் கொடுத்து மன்றாடுதே - உன்
உயிரணுக்களிலின்பம் மீளச்சேரவே! 

கலங்காதே!
நீ யிடறி வீழ்ந்த - அந்த
தடைக் கற்களின் வெடிப்புக்களிலிருந்தும்
முளையெட்டிப் பார்க்குமினி - அந்த
வெற்றித் தளத்திலுன் பாதத்தை
பொறித்துச் செல்ல!

காத்திரு !
உன் காதல் யாகத்தின் வலிமை 
வேரூன்றுமுன் காலடியோரம்- அதுவுன்னுள்
எட்டிப் பார்க்கும் 
புன்னகைப் பூக்களின் நந்தவனமாய்
நிதமும் !

உன் நெஞ்சக் கூட்டில் 
மோதியெழும் கடலலைச் சங்கமமினி 
சந்தத்துடன்
இசையாகு மோர் நாள்
உன்
காதல் ராஜ்ஜியத்தின் சரித்திரத்தை
எம்முள் விட்டுச் செல்லும் இனிதாய் !

ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!