About Me

2012/09/03

இது எப்படி இருக்கு



கடந்த மாதம்  எனக்குரிய கல்விமாணிப் பட்டப்படிப்பு (B.Ed) இரண்டாம் வருடப் பரீட்சை நடைபெற்றது. இப்பரீட்சைக்காகத் தோற்றும் எமக்காக 10 பாடசாலை தினங்கள் அரசின் அனுமதியுடன் கற்கை விடுமுறையாக  வழங்கப்படுகின்றன.

நானும் முறைப்படி உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து, அதிபர் அனுமதியுடன்   வலயக் கல்விப்பணிப்பாளர்   கையொப்பமும் அனுமதியும் பெற்று, எமது பாடசாலைக் கோவைகளை நிர்வகிக்கும் கிளார்க்கிடம் ஒப்படைத்தேன். அக்கடிதம் உடனடியாக கல்வி அதிகாரியிடம் கையொப்பமிட்டு, எமது பைலில் (கோவை) இடப்பட்டிருக்க வேண்டும். நாம் பரீட்சைக்குத் தோற்றினோம் என்பதற்காக பரீட்சை இறுதிநாளில் வழங்கப்படும்  வரவுச் சான்றிதழை கல்வி நிறுவனத்தில் ஒப்படைத்தால், எமது லீவு அனுமதிக்கப்பட்ட கடிதம் எமது கைகளுக்கு உடனடியாக வரும்.  இதுவே நடைமுறை!

எமது பாடசாலைக்குப் பொறுப்பாக அலுவலகத்திலிருக்கும் அந்தக் கிளார்க்கோ சோம்பலுற்று,  அந்த வேலையை  பிறிதொரு நாள் செய்வதாகக் கூற, எனக்கும் அக்கடிதம் உடனடியாகப் பயன்படாது என்பதால் மறுப்பின்றி, வீடு சென்று விட்டேன். 

எமக்கென நியமிக்கப்பட்டிருக்கும் அலுவலகக் கிளார்க் (இலிகிதர்) எந்த வேலையையும் ஒழுங்காக, சுயமாக செய்யத் தெரியாது. பலரிடம் ஆலோசனை கேட்டுத் திரிவார்.   இது பலருக்கும் தெரியும். 

நானும் உரிய அவ் லீவுகளைப் பெற்று, பரீட்சையையும் எழுதி முடித்தேன். பரீட்சை வரவுச் சான்றிதழ்கள், பரீட்சை நிலைய மேற்பார்வை அதிகாரியால் எனக்கு வழங்கப்படவே, உரிய கிளார்க்கிடம் அதனை ஒப்படைத்து, எனக்குரிய லீவு அனுமதிக் கடிதத்தைத் தரும்படி கூறினேன். கடிதம் தட்டச்சு செய்யப்பட்டிருப்பதாகவும், கையொப்பமிட அதிகாரியில்லையெனவும் கூறினார். 

(ஒரு மாதம் அக் கடிதம் அவர் வசமிருந்தும், அதிகாரியிடம் கையொப்பமிட கிளார்க்கிற்கு நேரமில்லையாம்)

மீண்டும் ஒருவாரத்தின் பின்னர் வலயக்கல்வி அலுவலகம் சென்றேன்.

"கிளார்க் லீவு. 
தொடர்ச்சியாக லீவாம்.
வீடு கட்டுறாராம்.
லீவில் நிற்கின்றாராம்"

பக்கத்து சீட்டு அம்மணி புன்னகைத்தவாறே கூறினார். அவர் எனக்கு கொஞ்சம் பழக்கம்.!

இரண்டு தடவை அலுவலகம் சென்றும் இதே பதில்தான். வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டேன். இனி இது தொடர்பாக போவதில்லை. நடப்பது நடக்கட்டும் என மௌனித்திருந்தேன்! பொறுமைக்கும் எல்லையுண்டுதானே!

பாடசாலை மூன்றாம் தவணைக்காக ஆகஸ்ட்  22ம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், எனக்குரிய லீவு அனுமதிக்கப்பட்டு கடிதம் பாடசாலை அதிபருக்கு தபாலில் அனுப்பப்பட்டது.  

இன்று (2012.09.03) காலை பாடசாலை சென்றதும் எமது பாடசாலைக் கிளார்க் சகோதரி என்னிடம், அக்கடிதத்தில் லீவிற்கான திகதி பிழையாக அச்சடிக்கப்பட்டிருப்பதாகக் கூறி சுட்டிக்காட்டினார்.

மீண்டும் அலுவலக் கிளார்க் முருங்கை மரம் ஏறிவிட்டாரோ வேதாளமாய்!

இன்று பாடசாலை முடிவடைந்ததும்,  அக்கடிதத்துடன் அலுவலகம் சென்று இது தொடர்பாக அலுவலகக் கிளார்க்கிடம் கதைத்தேன். 

இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் அலுவலகத்தில் கடமையாற்றுபவர்கள்  ஏதோ செய்து முடிக்க வேண்டும் எனும் நினைப்பில் அரைகுரையாகச் செய்வதால்,  பிழைகள் ஏற்படுகின்றன. அதனைச் சுட்டிக் காட்டினாலோ அவர்கள் ஏற்பதில்லை. முரண்படுகின்றனர்.

அலுவலகக் கிளார்க்கும்,  தன் தவறை ஏற்பதாக இல்லை. ஆனால் நானோ அவரை விடுவதாக இல்லை. என் நச்சரிப்பு தாங்காமல், அந்தக் கடிதத்தை ஒவ்வொருவரிடமும் காட்டி, தன்னை நியாயப்படுத்த முயன்றார். 

அங்கு கடமையாற்றிய வயோதிப பெண் அலுவலரிடம் இது கொண்டு செல்லப்பட்டது. உடனே அவரும் அந்தப் பரீட்சையை பற்றி அற்பமாகக் கதைத்து லீவு தரமுடியாது என்றார். சில தமிழ்மொழி நடைமுறையிலுள்ள ஊர்களின் பெயரைக் குறிப்பிட்டு, அங்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினேன்.

கடைசியில் அலுவலக் கிளார்க் சென்ற இடம், அந்தப் பகுதிக்கு பொறுப்பாக உள்ள இரண்டாவது மேலதிகாரி....

நான் இணைத்திருந்த சுற்றுநிருபப்பிரதி தமிழ். அதனை மொழிபெயர்ப்பதில் அரை உயிர் போனது! அந்த இரண்டாம் நிலை அதிகாரி முரண்பாடுகளை ஆதரித்து, தன்னை பலமிக்கவராக நிருபிக்க முனைந்து கொண்டிருப்பவர்.  அரசு அனுமதித்த விடயத்தை, ஏதோ தனது சொத்தை எமக்கு அள்ளிக் கொடுப்பதைப் போல் மனநிலையில் செயற்படுபவர்!! அவரும் ஆணித்தரமாக மறுத்தார் லீவு தரவே முடியாதென்று!

எமது பரீட்சைக்குப் பொறுப்பான நிறுவனமாகிய தேசிய கல்வி நிறுவனத்தின் இவ் லீவு அனுமதிக்கப்பட்டிருப்பதால், கொழும்பு உள்ளிட்ட இப் பரீட்சையை எழுதிய இலங்கையில் உள்ள சகல ஆசிரியர்களினதும் லீவு பிரச்சினையின்றி அனுமதிக்கப்பட, அநுராதபுர வலயக் கல்விப் பணிமனை மேலதிகாரியும் இவ் லீவினை வழங்குமாறு அனுமதி கொடுத்திருக்க, இரண்டாம் நிலை இவ்வதிகாரியோ லீவு தரமுடியாது என உறுதியோடு நின்றார். தங்கள் பிடிவாதத்தை வலுப்படுத்தவும், பலகீனத்தை மறைக்கவுமே இக் கோஷம்!

என்னுள் கொதித்த ஆத்திரத்தை அடக்கியவாறே, இவற்றுடன் தொடர்பாகவுள்ள பல அதிகாரிகளுக்கும் உடனடியாக கைபேசியில் விடயத்தைக் கூறி ஆலோசனைப் பெற்றேன். சகலரும் இப் பரீட்சைக்கு லீவுண்டு எனக் கூறினார்கள். ஆதாரம் சொன்னார்கள்!

இதில் வேடிக்கை என்னவென்றால் சென்ற வருடம் இதே பரீட்சையின் முதலாம் வருடத்திற்குரிய லீவு  பிரச்சினையின்றி பெற்றிருந்தேன்.  

கற்கைக்கு பொறுப்பாகவுள்ள தேசிய மஹரகம நிலையத்திலும் தொடர்பு கொண்டேன். லீவு அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறினார்கள். ஆனால் எனக்குத் தேவை.   சிங்களத்தினாலான அதுதொடர்பான ஒர்  சுற்றுநிருபமே!

மஹரகம தேசிய கல்வி நிறுவனத்தில் எமது இக்கற்கைக்குப் பொறுப்பான மேலதிகாரி இன்று லீவில் நிற்பதால் உடனே அதுவும் சாத்தியமற்றுப் போனது!  நாளை தொடர்பு கொள்ளும்படி கூறினார்கள்!

மிக விரைவில் அச்சுற்றுநிருப்பத்தை பெற்று,  முறைப்பாட்டுக் கடிதத்துடன் அதனை இணைத்து, அதன் பிரதிகளை மேலதிகாரி உள்ளிட்ட கல்வியமைச்சிற்கு அனுப்ப முடிவெடுத்துள்ளேன்.  

 





No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!