About Me

2012/09/07

சிவகாசி



இயற்கையின் மோகனத்துள்- பல
வுயிர்கள் தம் யதார்த்த வாழ்விலிணைய.......
கிழக்கு தொட்டு  விடியல் பரப்பி
ஒளி சிந்திச் சென்றான் ஆதவன்!

பட்டாசு  உரு கோர்த்துத் தொழிலாற்ற
இட்டத்துடன் தொழிலகம் சென்றவர்களால்........
சிவகாசியில் மட்டுமன்று அஸ்தமனம் முகங்காட்ட
பூத்த விடியலும் கருகிப் போச்சு !

பாதுகாப்பற்ற தொழிலறைகள்
ஆபத்துக்களோடு பேரம் பேசியதால்...........
வெடிப்பூக்கள் மோதுகைக்குள் வீழ்ந்து சிரிக்க
துடிபடக்கி வெந்து நின்றனர் பலர்..........

விழிகளில் கனவு தேக்கி
வாழ்வைத் தேடலில் செதுக்கியோர்
கல்லறைக்குள் வீழ்ந்து கிடக்க
விதியிங்கு வினையொன்று செய்ததோ!

மனசெங்கும் சோகம் பிழிந்து
கன்னவோரம் நீர் நனைத்துக் கிடக்க.........
மனிதவுடல்கள் சதை கிழிந்தறுந்து
இன்னொரு ஹிரோசிமாவாய் சரிதம் தொட்டது!

பசுமையில் குஷாலித்த சுற்றமெங்கும்- வெடி
மாசுக்களால் மோகித்துக் கிடக்க........
வெண்ணிற மேகங்களும் தமக்குள்
கருமை பூசி கண்டனம் செய்தன ...........

எட்டப்பராய் எட்டிப் பார்த்த மரணங்கள்
பட்டாசு நிலவறையைக் குத்தகைக்கெடுத்ததில்...
கண்ணீரும் அவலமும் தேசியமாகிப் போகவே
சுக நலமிங்கு சிதைந்துதான் போனது!

இரசாயனங்கள் தம்முள் மோதியெழுந்ததில் - பல
இரகஸியங்கள் யிங்கு பரகஸியமானதே.......
கந்தக நெடியின் அராஜகத்துள்
சிந்திக் குழறின குருதித்துளிகள் கனமாய்!

தீக்குச்சியாய் இவர்கள் மாறியதில்- சிவகாசித்
திக்கெங்கும் பொசுங்குமுடல்களே மலையாக.............
தேசமெங்குமிவை செய்தியாய் பரவியதில்.......
பாசத்தின் கண்ணீரஞ்சலி ஈரம் தந்தது!

இழப்புக்கள் கண்ட பாசங்களினி
அழுகைக்குள் தமை சிறைப்படுத்த..........
வெடிவிபத்தின் சோகங்களைப் பிழிய- இனி
இடி மழையாய் அரசியல் கோஷங்கள் மோதும்!

உரிமையாளர் தேடலும்  பலர் கைதுமென- இனி
வருடங்களும் கடந்தோடும்!
பலிக்கடாக்களாகும் மனிதங்களுக்காய்
நீலிக் கண்ணீர் சிந்தும் அரசியலினி !

வெறுமைப் பட்ட சிவகாசி யினியும்
உயிரறுக்குமோ பட்டாசுக்களால் !
வருங்காலத்திலும் மனிதவுயிர் காக்கப்படவே
இறைவன் தானருள வேண்டுமென்றும்!







(படங்கள் உதவி- நண்பர்  Isac Jcp - சிவகாசி)

மேலதிகக் காட்சிகளைக் காண இவ் விணைப்பை அழுத்துக.

சிவகாசியிலுள்ள , முதலிப்பட்டி ஓம்சக்தி பட்டாசு ஆலையில் , விபத்தைப் பார்க்கப் போனவர்களும், காப்பாற்றப் போனவர்களும் கூட பலியாகியுள்ளனர். பலர் இதில் பலியாகி (அரசு தரப்பு கூறும் தொகை 35) யுள்ளதுடன், பலர் கடும் காயங்களுக்குமுள்ளாகியுள்ளனர். இன்னும் பலர் எரிகாயங்களுடன் சுயநினைவற்றுள்ளனர்.

இவ்விபத்துக்குக் காரணம் பட்டாசு அதிபர்களின் விதிமுறை மீறல்களும், தலைவிரித்தாடும் லஞ்சமுமென குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    நன்றி- ஜூனியர் விகடன்



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!