About Me

2014/08/16

குற்றாலம்



இந்தியாவின் திருநெல்வேலி மாவட்டம் எனக்கு மிகவும் பிடித்த ஊர். அதற்குக் காரணம் அல்வா மட்டுமல்ல இன்னொன்றும். என் உறவுகள் அங்கும் பிணைந்துள்ளார்கள்.

இம்மாவட்டத்தில் இருக்கும் பேரூராட்சிகளுள் குற்றாலமும் ஒன்று. இது திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 55 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. குற்றாலத்திலிருந்து 100 கிலோ மீற்றர் தூரத்தில் தூத்துக்குடி விமான நிலையம் அமைந்துள்ளது. தென்காசி புகையிரத நிலையம் குற்றாலத்தின் அருகிலுள்ள நிலையமாகும். எனவே குற்றாலம் தென்காசிக்கு அருகிலுள்ளது.

குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகை மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி இது என்பதால் குற்றாலம் எனப்பெயர் ஏற்பட்டுள்ளது.

குற்றாலம் என்றவுடன் பலருக்கும் நினைவுக்கு வருவது குற்றால அருவிதான். இது திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது.

குற்றால அருவியின் சிறப்பு குளிர்ச்சியான காலநிலை, எண்ணெய்க்குளியல், மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆக்ரோசத்துடன் பாய்ந்தோடும் அருவி என்பவற்றின் அனுபவங்களாகும்.!

இங்கு குளியல் வெறும் பொழுதுபோக்கல்ல...இந்த அருவியில் பாய்ந்தோடும் நீர் பல மூலிகைச் செடிகளையும் தழுவிப் பாய்வதால் இது மருத்துவ குணம் வாய்ந்த நீரைக் கொண்டுள்ளது.



1. பேரருவி
----------------
இது குற்றாலத்தின் மிக முக்கியமான அருவியாகும். செங்குத்தான பாறையிலிருந்து நீரை வௌியேற்றுவதனால் அதிகமாக நீர் வௌியேற்றம். பல உயிர்களைக் காவு கொண்டுள்ளது. எனினும் இங்கு பாதுகாப்புக் கருதி தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இத் தடுப்புச்சுவருக்கு வௌியே நீர் பாய்ந்தால் குளிக்கத் தடை ஏனெனில் நீரின் வேகமும் வௌியேற்றமும் உக்கிரமமாக இருக்கும்.

தடுப்புச்சுவருக்குள்ளே நீர் பாய்ந்தால் யாரும் குளிக்கலாம். இக்காலங்களில் இங்கு அதிகமான மக்கள் கூட்டம் காணப்படும்.  கோவிலுக்கு அருகிலுள்ள இவ்வருவியே இன்றைய குற்றாலத்து அருவியாகும்.

2. சிற்றருவி-
-----------------
இது பேரருவிக்கு மேலே உள்ளது.பேரருவியிலிருந்தே இங்கு நீர் பெறப்படுகின்றது.

3. செண்பகதேவி அருவி -
---------------------------------
பேரருவிக்கு மேல் 2 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது. காடு போன்ற பகுதியைக் கடந்தே இதனை அடைய வேண்டும். சற்று பாதுகாப்பு குறைவு



4. தேன் அருவி -
---------------------
இங்கு பல தேன்கூடுகள் இருப்பதனால் இது அபாயகரமான பகுதியாகும். இங்கு குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.




5. ஐந்தருவி -
-----------------
இது பேரருவியிலிருந்து 5 கிலோ மீற்றர் தூரத்திலுள்ளது. திரிகூடமலையில் தோன்றி சிற்றாறின் வழியே பாயும் இவ்வருவி பாறையிலிருந்து பாயும் இடத்தில் 5 பகுதிகளாகப் பிரிந்து பாய்வதனால் இப்பெயர் பெறப்பட்டுள்ளது. அதுமாத்திரமுமன்றி இது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆறுகளின் பிறப்பிடமுமாகும்.



6. பழந்தோட்ட அருவி
------------------------------
இது பேரருவியிலிருந்து 8 கிலோ மீற்றர் தொலைவிலுள்ளது. சுதந்திரமாகக் குளிக்கலாம்.

7. புலியருவி
-------------------
இது பேரருவியிலிருந்து 8 கிலோ மீற்றர் தொலைவிலுள்ளது. சுதந்திரமாகக் குளிக்கலாம்.

8. பாலருவி
-----------------
இது தேனருவிக்கு அருகிலுள்ளது. குளிக்கத் தடை

9. பழைய குற்றால அருவி
--------------------------------------
இது பேரருவியிலிருந்து 16 கிலோ மீற்றர் தொலைவிலுள்ளது. இங்கும் தண்ணீர் மிகவும் உயரத்திலிருந்து பாய்கின்றது. முன்னர் மக்கள் இதனைப் பயன்படுத்தினாலும்கூட  தற்போது இங்கு மக்கள் நடமாட்டம் குறைவு.



மேற்கூறப்பட்ட ஒன்பது அருவிகளிலிருந்தும் கிளம்பும் சாரல் வெகுதொலைவு வரை தென்படுவதனால் , அந்தக் குளிர்மை நம்மைக் கூல்படுத்தும்...

மாரிகாலத்தில் இங்கு விழும் அருவிகளில் குளிப்பதற்கு பலர் வருவதுண்டு. தென்மேற்கு பரவகாலத்தில் குற்றால அருவியில் நீர் ஆர்பரித்து விழத்தொடங்கும். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் "குற்றால சீசன்" எனப்படும்.

இவ்விடத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ் சிற்றிலக்கியங்களில் புகழ் பெற்றது. சங்க காலத்தில் பெண்ணின் அழகுக்கு இவ்வூர் உவமையாகக் கூறப்பட்டுள்ளதால் இவ்வூர் தேனூர் எனப் பெயர் பெற்றது.

ஈரலிப்பில் நனைக்கும் இந்த இயற்கையை நானும் ரசிக்க ஆசை....

இன்ஷா அல்லாஹ்....

அங்குள்ள என் உறவுகளின் அருகாமையுடன் இது நிறைவேறட்டும்!








No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!