நாம் வாழ்க்கையில் சந்திக்கும் நபர்கள் ஏதோ ஓர் வகையில் நமக்குப் படிப்பினையாக உள்ளனர். அந்த படிப்பினைகளைப் பகிரும் பதிவு இது
---------------------------------------------------------------------------------------------
இன்று....
யாழ்ப்பாணம் - கொழும்பு பஸ் என்னைச் சுமந்தவாறு பயணித்தது என் இருப்பிடத்தை நோக்கி! சிறிது நேரத்தின் பின்னர் முன்பக்கத்தில் ஓர் இருக்கை கிடைக்க.
அப்பாடா.... அமர்ந்தேன்!
எனது சற்று முன்புறமாக ஓர் கிறிஸ்தவப் போதக சிஸ்ரர் இருந்தார். அவர் ஆங்கிலத்தில் பஸ் சாரதியுடன் தான் இறங்க வேண்டிய இடம் தொடர்பாக கேட்டுக் கொண்டே வந்தார். பஸ்ஸில் இருந்தவர்கள் தமிழ் அல்லது சிங்களம் பேசக்கூடியவர்கள். கோவாவிலிருந்து வந்த இச்சிஸ்ரரின் பிரச்சினையை யாரும் காது கொடுக்கவில்லை.
பேரூந்து
சாலியவெவயில் உணவுக்காக நிறுத்தப்பட்டபோது, அச்சிஸ்ரர் என்னை நெருங்கினார். ஆங்கிலத்தில் , எங்கே போகின்றாய்" என்றார்.
நானும் பதில் கூறினேன்.
தான் ஹபரணை போவதாகவும், எப்படி எந்த பஸ்ஸில் போக முடியும் என்றும் கூறினார். நானும் பதில் கூறினேன்.
அநுராதபுரம் வந்து போங்கள் என்று சொன்னபோது அவர் மறுத்தார். தனக்கு நேரம் போகுமென்று சீக்கிரம் தானங்கு போக வேண்டுமென்றும் கூறினார்.
பேரூந்து மின்னல் வேகத்தில் பறந்தது. திடீரென போக்குவரத்துப் பொலிசார் பஸ்ஸை நிறுத்தி அரை மணித்தியாலம் தாமதிக்க வைத்தபோது அவர் பதற்றமும் அதிகரித்தது.
போகும் வழியில் பஸ் இறக்கம் இருந்தால் இறக்கி விடும்படி சாரதியிடம் கூறினார்.
ஆனால் அவர் கோரிக்கை நிறைவேறவில்லை.
பஸ் அநுராதபுரத்தை அடைந்தது. என்னுடன் வரும்படி அழைத்தேன். இறங்கினார். வழமையாக மட்டக்களப்பு பஸ் நிறுத்தப்படும் இடத்திற்கு அழைத்துச் சென்றேன். அவர் கெட்ட காலம் அங்கிருந்தோர் மாலை 4.30 ற்குப் பிறகு பஸ் புதிய பஸ் நிலையத்திற்கு வருவதில்லை என்றும் பழைய நகர் சென்றால் தம்புள்ள பஸ்ஸில் ஏறி செல்ல முடியுமென்று கூற, நானும் ஆட்டோ ஒன்றை அவருக்காகப் பேசினேன்.
ஆட்டோக்காரன் 150 ரூபா கேட்க சிஸ்ரர் 100 ரூபா சொல்ல பயணம் தடைப்பட்டது. மீண்டும் சிறிது தூரம் நடந்து இன்னுமொரு ஆட்டோவை பேரம் பேச அவனும் அதே வாடகையை கேட்க வேறு வழியின்றி சிஸ்ரர் ஆட்டோவில் ஏறினார். தனக்கு பழக்கமில்லாத ஊரென்பதால் என்னையும் பஸ் நிலையம் வரும்படி அழைத்தார்.
அப்பொழுது நேரம் மாலை 6 மணி. அவர் அழைப்பை நிராகரிக்க மனமில்லை என்றாலும்கூட மறுத்தேன். என்னை வீட்டில் தேடுவார்களென!
அவ் ஆட்டோக்காரனுக்கு விபரம் சொல்லி பத்திரமாக அவரை அனுப்பி வைத்தது மனதுக்கு திருப்தியாக இருந்தது.
உண்மையில் நமக்கு பழக்கமில்லாத ஊரில்கூட உதவி செய்ய யாரேனும் வருவார். இறை நம்பிக்கை பலமாக இருந்தால்!
-Jancy Caffoor-
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!