About Me

2021/06/06

விதியின் கோர முகம்


மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொரு நிமிட வாழ்வும்

விண்ணில் தங்குகின்ற நிரந்தர வாழ்விற்குத் தானோ?

எண்ணற்ற கனவுகளும், ஆசைகளும், ஏக்கங்களும்

புண்ணாகி ரணத்துடன் புதையுண்டு போவதுதான் விதியா?

ஆம்...

விதியின் முகம் இயற்கை அழிவாகி, மண்ணுக்குள் இழுத்துத் தள்ளிப் புதைத்த, மண்சரிவின் கோரப் பிடிக்குள் நேற்று சிக்குண்ட ஒரு குடும்பத்தின் கதையை இன்று என் விரல்கள் கண்ணீர் நனைத்து எழுதுகின்றன.

ஓன்றா.........இரண்டா...............

எத்தனை உயிர்கள் ஊனமாக, ஊமையாக இயற்கை அழிவுக்குள் தம் முகம் புதைக்கும் கோரங்களின் அகோரங்கள் நம் செவியை அவ்வவ்போது அதிரச் செய்கின்றன.

யாரை யார் குற்றம் சொல்வது?

இயற்கையை அழிக்க, இயற்கை தன் சினத்தைக் கொட்ட, இதயங்கள் கிழிந்து போகின்றன. குருதியின் வெந்தணலில் மூச்சுக்கள் கருகுகின்றன.

வெள்ளம், புயல், மண்சரிவு, சுனாமி என, இயற்கை அனர்த்தங்கள் அவ்வவ்போது உயிர்களை பலி கொண்டு வருகின்றன. இவ் அனர்த்தங்களின்போது காவு கொள்ளப்படுகின்ற உயிர்களின் இழப்புக்களை பார்க்கையில், வெளியே நிற்கின்ற வெளித்தரப்பினருக்கே மனக்கஷ்டங்கள் ஏற்படுகையில், உண்மையில் உறவுகளின் வலிக்கு வார்த்தைகள் ஏதுமில்லைத்தான்.

நாளைய வாழ்வு எப்படி இருக்கும் என நமக்கு முன்கூட்டியே அறிந்து கொள்ளுகின்ற சக்தியிருந்திருந்தால், ஒவ்வொருவரும் அதற்கேற்ப தம்மை தயார்படுத்துவார்களோ என்னவோ!...

தாய், தந்தை, மகன், மகள் என நான்கு உயிர்கள், குடும்ப உறவுகள் நேற்று 05.06.2021 ஆம் திகதி   இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி உயிர்நீத்த செய்தியினைக் கேட்கின்றபோது இனம், மதம், சாதி எனும் புறவேறுபாடுகளையெல்லாம் தகர்த்தெறிந்து, மனிதாபிமானமுள்ள நெஞ்சங்கள் கண்ணீர் சிந்தும்.

மகள் ஆசிரியை. கல்விப் பணிபுரிந்த அந்த சகோதரியை மண் விழுங்கியபோது எத்தனை மாணவ நெஞ்சங்கள் கதறியிருப்பார்கள். எத்தனையோ ஆசைகள், கனவுகளைச் சுமந்து எதிர்காலம் தொடர்பான எதிர்பார்ப்போடு வாழ்ந்து கொண்டிருந்த அந்த இளம் உள்ளங்கள் தமக்கு நேரப் போகின்ற அனர்த்தங்களை அறிந்திருந்தால் உதடுகளில் விரிகின்ற அந்தப் புன்னகை மலர்ந்திருக்குமா என்ன?

மண்சரிவு நடைபெற்ற பின்னர், இருந்த வீடு முற்றாக மறைந்து விட்டது என்பது வேதனைதான். அதிலும் புதையுண்டவர்களை எங்கு தேடுவது? அத்தடுமாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது அவர்கள் வளர்த்த பாச நாய்தான்;. பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் மீட்புப் பணியாளர்கள் செல்ல  அந்த நாயும் சம்பவ இடத்திற்கு வந்தபோது விரட்டினர். ஆனால் அது திரும்பி வந்து, அதன் முன் பாதங்களால் சேற்றைத் கிளறத் தொடங்கியது. ஒரு துப்பு கொடுத்தது. இதன்போது சடலங்கள் அந்த இடத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டன.

வாழ்க்கை அற்பமானது, சொற்பமானது ஆனால் நாம் அதை உணர்வதாக இல்லை. ஒவ்வொரு மரணங்களும் நமக்கு உணர்த்திச் செல்கின்ற தத்துவங்கள் அவைதானே!

ஜன்ஸி கபூர் - 06.05.2021

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!