இவ்வுலகின் அற்புத சக்தியாக காதல் இருப்பதால்தான் தமக்கிடையேயுள்ள எந்த வேறுபாடுகளையும் அது கண்டுகொள்ளாமல் அன்பை நோக்கியே பயணிக்கின்றது. உண்மையான அன்பு இதயங்களாக வாழும் இந்த சனா – தவூத் தம்பதியினரை எனக்குப் பிடித்ததால் அவர்களை உங்களுக்கும் அறிமுகப்படுத்துகின்றேன். நன்றி பீபீசி - தமிழ்
தவுத் சித்திக்கி சனா முஷ்டாக் இருவரும் உறவினர்கள். சந்தித்த சந்திப்பு காதலாகப் பூக்க இருவரும் காதல் வானில் பறந்து திரிந்தார்கள். ஒரு வருடக் காதல் மகிழ்ச்சியாகக் கழிந்தது. ஒன்றாகவே இருவரும் வெளியே சுற்றுமளவிற்கு காதலும் உறுதி பெற்றிருந்தது. இருவரும் ஒருவர் இல்லாமல் மற்றவர் இல்லை எனும் அளவிற்கு மனதாள் வலுப் பெற்றார்கள்.
தவுத் வீட்டிலிருந்து வேலை செய்து கொண்டிருந்தபோது உயர் அழுத்த மின்கம்பியிலிருந்து பாய்ந்த மின்சாரம் காரணமாக ஏற்பட்ட விபத்தால் அவனது இரண்டு கைகளும் காலும் பறிபோனது. எட்டு மணி நேர சத்திரசிகிச்சை உடல் உறுப்புக்களை இழக்கச் செய்தாலும் உயிரைக் காப்பாற்றியது.
ஆனால் உள்ளங்கள் சம்பந்தப்பட்ட காதல் புறத்தோற்றங்களால் மாறுபடுமா? செய்தி கிடைத்ததும் சனா கலங்கியவாறு ஆஸ்பத்திரிக்கு விரைந்தாள். கண்ணீரில் கரைந்த காதலால் அந்த வைத்தியசாலையும் வலி சுமந்தது.
தாவுத் நினைவு திரும்பவில்லை. ஆனாலும் சனா அவனது காதினருகே போய் முணுமுணுத்தாள். அந்த ஒலிச் சப்தம் அவனது உணர்வுகளை மெல்ல வருடியிருக்க வேண்டும். கண்களைத் திறந்தான். பூக்களாக மலர்ந்திருந்தாள் காதலி சனா.
தவுத்தோ அவள் தன்னைப் பார்க்க வருவாள் என்று நினைக்கவேயில்லை. இந்த விபத்தால் அவள் தன்னை வெறுப்பாள் என்றே எண்ணினான். இது வாழ்க்கை சம்பந்தப்பட்ட விடயம். ஊனமுற்ற தன்னுடன் அவளை வாழக் கட்டாயப்படுத்துவது தனது அன்புக்குப் பொருத்தமில்லை என்றே எண்ணினான். அவள் பிரிவிற்கேற்ப வாழ தன்னை தயார்படுத்த நினைத்திருந்தான்.
ஆனால் அவள் அன்பு அவனைக் கைவிடவில்லை. அவனுடன் கூடவேயிருப்பதாக ஆறுதலளித்தாள். அவனது இழந்த உறுப்புகளுக்குப் பதிலாக தனது கை கால்கள் இருப்பதாகவும் அவற்றால் உதவுவதாகவும் உணர்வுபூர்வமாகக் கூறினாள்.
தவுத்திற்கு சனாவை கஷ்டப்படுத்த விருப்பமில்லை என்பதால் அந்த திருமணத்திற்கு அவன் சம்மதிக்கவில்லை. தம் பிள்ளைகளின் வருங்காலம் தொடர்பாக ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் ஆசைகளும் கனவுகளும் இருக்கும்தானே. உன் பெற்றோர் நன்மைக்குத்தானே சொல்கின்றார்கள். அதனால் பெற்றோர் விருப்பப்படி வாழ்க்கைத் தெரிவு செய்யும்படி கூறினான்.
விபத்தின் பின்னர் சனாவின் பெற்றோரும் இக் காதலை விரும்பவில்லை. அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியதும். அவள்; வீட்டை விட்டு வெளியேறி தனது மாமி; வீட்டில் தங்கியிருந்;தாள். தவுத்துடன் தொடர்பு கொண்டாள். உன்னுடன் வாழ்வதற்காக எல்லாவற்றையும் இழந்து வந்திருக்கின்றேன் ஏற்றுக் கொள் என்றாள். அவளது விருப்பத்திற்கு தவுத் ஆரம்பத்தில் உடன்படாவிடினும் ஈற்றில் அவளது அன்பின் பலம்; வென்றது. தனது வாழ்க்கை அவனுடன்தான் என அவள் எடுத்த முடிவு உயிர் பெற்றது. தவுத் பெற்றோர் ஆதரவுடன் அவனைத் திருமணம் செய்தாள்.
அடுத்தவர் உதவியின்றி நம் வேலைகளை நாமே செய்வது பெரும் அதிஷ்டம்தானே. அவனோ தான் எப்பொழுதும் பிறரை நாடி இருப்பதை எண்ணிக் கலங்கி நிற்கும்போதெல்லாம் மனைவி அவனை ஆறுதல்படுத்துகின்றாள். இறைவன் தன்னை இப்படிக் கலங்க வைத்ததை எண்ணி வேதனைப்படும்போதெல்லாம் சனா உணர்வுகளால் தன்னம்பிக்கையூட்டுகின்றாள். உற்சாகப்படுத்துகின்றாள். அவனுக்காகவே அவள் பிறந்திருப்பதாக நேசத்தைப் புதுப்பிக்கின்றாள். ஒரு தாயாக தாரமாக மாறி அவனை தன் உள்ளத்தில் பதிவேற்றி வாழ்ந்து வருகின்றாள்.
அவள் தனது சோகத்தை வெளிப்படுத்தாமல் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவே காட்டிக் கொள்வாள்.
ஆனாலும் அவனது மனம் அவளுக்கு தான் பாரமாக இருப்பதை ஏற்கவில்லை. அவளுக்காக தானும் வாழ வேண்டுமெனும் நோக்கில் செயற்கை அவயங்களைப் பொருத்த எதிர்பார்த்துக் காத்திருக்கின்றான். இருவரும் மகிழ்ச்சியாகவே வாழ்கின்றார்கள். ஒருவரை ஒருவர் புரிந்து வாழும் இப்புரிதலில் காதல் தினமும் துளிர்விட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனாலும் அவளுக்குள் இன்னுமொரு வலி. அவளது பெற்றோர் தவுத்தை இனனும்; மருமகனாக ஏற்கவில்லை.
காலம் யாருக்காவும் காத்திருப்பதில்லை. மாற்றங்களுடன் கூடியதே வாழ்க்கை. பணம் பதவி அந்தஸ்து என மாய வலைக்குள் சிக்குண்டு அல்லல்படும் பலரின் மத்தியில் இவர்களது காதல் நெஞ்சம் நமக்கு தடைகளையும் வலியினையும் கடந்து வாழ கற்றுத் தருகின்றது.
சோர்வல்ல வாழ்வு. சோகத்தையும் தூசாக்கி துணிவுடன் கடந்து போக கற்றுத் தருவது. இக்காதல் தம்பதியினரின் வாழ்க்கை வளம்பெற நாமும் வாழ்த்துவோம்.
ஜன்ஸி கபூர் - 05.06.2021
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!