பிறக்கின்ற எல்லோரின் நாமங்களையும் இவ்வுலகம் உச்சரிப்பதில்லை. திரும்பியோ, விரும்பியோ பார்ப்பதில்லை. வாழ்த்துப் பூக்களுடன் ஆற்றலும், ஆளுமையும் கொண்ட சாதனையாளர்களுக்கென தனியிடத்தினை எப்பொழுதும் வைத்தேயிருக்கின்றது.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம் என்பார்கள்.
சித்திரம் வரைகின்ற உணர்வு ஆன்மாவுடன் ஒருங்கிசைந்தால்தான், உயிரோவியங்கள் பிறக்கும்.
வெறும் வண்ணக் கலவையுடன் படிந்த தூரிகைகளின் அசைவுக்குள்ளும் இரசனை இருந்தால்தான் தத்ரூபமான ஓவியங்கள் கிடைக்கும்.
இவ்வாறான தத்ரூபமான ஓவியங்களை வரைந்த கலைஞன் திரு இளையராஜா அவர்கள் கொரோனாத் தொற்றுக் காரணமாக இறந்திருக்கின்றார்.
விரல் தூரிகைகளின் உயிர்ப்பான கவி வரிகளை
வண்ணங்கள் குலைத்து
விழிகளுக்குள் ஓவியமாக
உயிர்ப்பித்த கலைஞனின் இழப்பு
கலையுலகிற்கான பேரிழப்புத்தான்.
43 வயதான ஓவியர் இளையராஜா இன்று இப்பிரபஞ்சத்தின் காற்றின் பிம்பங்களுக்குள் வண்ணங்களாக கரைந்திருக்கின்றார்.
இசைக்கோர் ராஜாவென்றால்
ஓவியத்திற்குள்ளும் இந்த அற்புத ராஜா ஒளிந்திருக்கின்றார்.
இவர் சென்னை கும்பகோணம் அருகே செம்பிய வரம்பில் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். ஐந்து அண்ணா, ஐந்து அக்காக்களைக் கொண்ட பெரிய குடும்பத்தின் கடைக்குட்டி ராஜா.
ஆரம்ப காலத்தில் தான் வரைகின்ற அழகிய ஓவியங்களை இணையத்தில் பதிவேற்றி வந்தார். 2010 ஆம் ஆண்டு முதல் ஆனந்தவிகடன் தனது இதழின் சிறுகதை, கவிதைகளுக்காக இவரது ஓவியங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தபிறகு உலகம் இவரைத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தது. பல எழுத்தாளர்களின் கற்பனைக்கு தனது ஓவியத் திறமையால் உயிர்ப்பூட்டினார். இவரது பொருளாதார நிலையும் உயர்ந்தது. பல விருதுகள் இவரது ஓவியங்களைக் கௌரவித்தன.
கிராமத்துப் பெண்களின் அழகை தனது தூரிகையால் வண்ணங் குலைத்து பேரழகாக்கினார். இவரது ஓவியங்கள் வெறும் ரேகைகளும், வண்ணங்களும் கலந்த வரைபடங்களாக இருந்ததில்லை. வாழ்வியல் கலைகளாகவே பிரதிபலித்தன.
இவரது ஓவியங்களுக்காக எழுத்தாளர்கள் கதைகளை எழுதியிருக்கின்றார்களென்றால் அவ்வோவியங்களின் ஈர்ப்புசக்தி பற்றி நாம் கூறத்தேவையில்லை.
தன் கண்முன்னால் காணும் காட்சிகளை உருச் சிதறாமல் வரைவதுதான் ஓவியப் பண்பு. அத்தகைய ஓவியனாக, கண்முன் காணும் தரிசனங்களை மாற்றமின்றி, தனது தூரிகைகளுக்குள் சிறைப்பிடித்த இளையராஜா இன்று புகழின் அமயத்துக்குள் தன்னை நிரப்பிக் கொண்டுள்ளார்.
குக்கிரமம் பூர்வீகம். அப்பா தச்சுத் தொழிலாளி. அவர் செய்கின்ற சக்கரவேலைகளை ஆர்வமாகப் பார்க்க ஆரம்பித்தபோதே, விரல்களும் தூரிகைகளாக மாற ஆரம்பித்தன. ஏழு வயதிலேயே வரைய ஆரம்பித்து விட்டார். தொலைக்காட்சியில் வருகின்ற நடிகர்களைப் பார்த்து வரைந்து தன்னாற்றலை சுயமாக வளர்க்க ஆரம்பித்துள்ளார்.
பள்ளிக்குப் போக விருப்பமில்லை. இராணுவத்தில் சேர்கின்ற முடிவோடு வாழ்க்கையில் நகர்ந்தவரை, ஓவிய ஆசிரியர்கள் இவரது திறமைக்கேற்ற பாதையைக் காட்டினார்கள்.
பெற்றோர் மறுப்பினையும் பொருட்படுத்தாது, கும்பகோண ஓவியக்கல்லூரியில் இணைந்து முழுமையான ஓவியராக மாறினார். ஆசானால் வழங்கப்படுகின்ற ஓவிய நுட்பங்களை இலகுவில் புரிந்து கொண்டு பிறருக்கும் கற்றுக் கொடுத்துள்ளார். நமக்கு கிடைக்கின்ற அறிவினைக் கொண்டு அனுபவங்கள் எழும்போதே திறமையான சாதனைப் பக்கங்கள் நமது இருப்புக்காகக் காத்திருக்கத் தொடங்குகின்றன.கண்களை அளவுத்திட்டமாகக் கொண்டு மனித உடலை அழகாக வரையக் கற்றுக் கொண்டார். பின்னர் சென்னை ஓவியக்கல்லூரியில் முதுகலை கற்றார்.
அக்காமார், அண்ணிமார் எனப் பெண்களைச் சூழ வாழ்ந்த பின்னணியால் இவரது ஓவியத்திற்கான கரு பெண்களாகவே இருந்தது. அழகான மண்ணியல் வாழ்வினை தத்ரூபமாக ஓவியங்களின் ஊடாக வெளிப்படுத்தினார். உடன்பிறப்புக்கள் திருமணமாகிச் செல்ல, கிடைத்த தனிமையின் காத்திருப்பு இவரது ஓவியங்களில் பிரதிபலித்தன. இவரது ஓவியங்கள் பெண்களின் அழகினை பேரழகாக்கின. வியப்படையச் செய்தன. இவை ஓவியங்களல்ல. புகைப்படங்களே எனப் பார்ப்போரை வியப்படையச் செய்வதே இவரது பாணியாக இருந்தது.
வண்ணங்களினூடாக வாழ வேண்டிய கலைஞனை தன் எண்ணத்துள் சிறை பிடித்ததோ கொரோனாவும்.
ஏற்பட்ட சளி நுரையீரலின் உயிர்ப்பினை அறுத்து மாரடைப்பென அறிவுப்புச் செய்ததுவோ.
சிறு அலட்சியம்கூட பெறுமதியான உயிரைப் பிளந்து விடுகின்றது.
ஓவியர் கொரோனாவால் உயிரிழந்தாலும்கூட, அவரின் தூரிகையின் மொழி இவ்வுலகம் அழியும் வரையும் தத்ரூபமான அவரது கலையாற்றலின் அடையாளத்தினை பரப்பிக் கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை
கலைஞன் இறப்பதில்லை.
என்றும் கலைகளினூடாக வாழ்ந்து கொண்டேயிருப்பான்.
ஜன்ஸி கபூர் - 08.06.2021
Superb and Congratulations
ReplyDeleteThank You
Delete