About Me

Showing posts with label உணர்வுகள். Show all posts
Showing posts with label உணர்வுகள். Show all posts

2015/02/24

பிரியாவிடை ஓ . எல். 13


டிசம்பர் 2 - 2013
-------------------
பாடசாலைப் பருவம் என்பது துன்பம் துறந்து, சிறகு விரித்துப் பறக்கும் பருவம். பொதுப்பரீட்சைகள் தடையும் பிரிவும் விதிக்கும் வரை நட்பின் வலி யறியாப்பருவம்.

எம் பாடசாலையின் தரம் 11 மாணவர்களுக்கும் இது பொருந்தும். இன்னும் கா. பொ. த சா/த பரீட்சைக்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில், பரீட்சை பற்றிய எதிர்பார்ப்பும் பயமும் ஒரு புறமிருக்க.....பல வருடங்களாக பின்தொடர்ந்த நண்பர்களைப் பிரியும் பிரிவு வலி மறுபுறம் நெருக்க வேதனையுடன் பிரியாவிடைக்கு தயாராகி விட்டனர் அம் மாணவச் செல்வங்கள்.

இரண்டு வருடங்களாக இவர்களுக்கு விஞ்ஞானப் பாடம் எடுக்கின்றேன். நான் கண்டிப்புக் காட்டும் நேரத்தில் கூட அவர்கள் என்னை ஒருபோதும் வெறுத்ததில்லை. தங்கள் குடும்பத்தில் என்னையும் ஓர் அங்கத்தவராய் கருதி புன்னகையும் அன்பையும் சிதறும் இம் மாணவர்களின் பிரியாவிடைக்கும் பாடசாலையில் நாள் குறித்தாகி விட்டது.

ஓ.எல். விடுதி மாணவர்களின் பிரியாவிடை அழைப்பிதழை இன்று என் கையேந்தியபோது கண்கள் லேசாய் பனித்தன. மனசும்தான்.

அவ் அழைப்பிதழில் காணப்பட்ட பின்வரும் வரிகள் மனதைத் தொட்டுச் சொல்ல.

எதிர்வரும் பரீட்சையில் சிறப்பாக சித்தி பெற இறைவனைப் பிரார்த்தித்தேன். எல்லோரும் பிரார்த்திப்போம்!

"ஏர் பிடிக்க இருந்தோம்
எழுத்தறிவித்தாய்....
எட்டி முயற்சித்தோம்
ஏணியானாய்....
பிரிந்து செல்கின்றோம்
என்செய்வாய்?
பணிந்து சொல்கிறோம்
நீ சிறப்பாய்!"


- Jancy Caffoor-
  24.02.2015

2015/02/22

கோணப்புளி


யுத்தம் சத்தமில்லாமல் பலரின் ஆதாரங்ளைப் பிடுங்கியது.
பறந்து போன இந்தப் பல வருடத்தில்  சிலர் வசதி வாய்ப்புக்களுடன் வேரூன்ற இன்னும்  பலர் அகதிகளாய் நிர்க்கதிக்குள்ளாகி  அலைய காலம் எப்படியோ கழிந்து  கொண்டிருக்கின்றது.

இதில் நாங்கள் இரண்டாவது வர்க்கம். யாழ் நகரில் எம் பிறப்பிடம் வனாந்தரமாகி காய்ந்து கிடக்க, நாங்களோ இன்னும் பேரம் பேசும்  உலகில் இருப்பிடங்களை  மாற்றிக் கொண்டிருக்கின்றோம் நிரந்தர முகவரியில்லாமல்.

சரி விசயத்திற்கு வருகின்றேன்.

யுத்த காலத்தில்கூட   சன்னம் துளைக்காத எங்கள் வீடு சில எம்மினத் துரோகிகளால்  தன் சுவர்களையும்  கட்டடங்ளையும் இழந்து வனாந்தரமானது. மரங்களின் சுய ஆட்சியின் விஸ்வரூபமாய் ஓர் கோணப்புளிய மரமும்  கிணற்றுக்கு அருகிலுள்ள முற்றத்தை குத்தகை  எடுத்ததை நாங்கள்  அறிந்துகொண்டோம்.


யுத்தம் ஓய்ந்து சமாதான காலத்தில் வெறிச்சோடிப் போன எங்கள் வீட்டைப் பார்க்கப் போன போது  மரத்தை அயலாளர் அறிமுகப்படுத்தினார்கள். கிணற்றைச் சுற்றி  பசுமையாய் கிளைகள்  விட்டிருந்தது மரம்... அடி தண்டுப் பகுதிகள் முட்களற்றும், மேல்க் கிளைகள்  கொழுக்கி போன்ற வளைந்த முட்களையும் தனக்குள் நிரப்பி வைத்திருந்தன.

வளவை துப்பரவு செய்யும் முயற்சியில் இறங்கினோம். காடாகிப் போன வீட்டைத் துப்பரவு  செய்ய  பல ஆயிரங்கள் கூலிக்காரர்களுக்குள் இடமாறின. கிளைகளில் பசுமையும்  சிவப்புமாக சுருள்களாய்   தொங்கிக்  கிடந்த சீனிப் புளியங்காய்களுக்காக அம்மரத்தை  வெட்ட  அயலாளர் விடவில்லை.


"கோணப்புளியை  எங்க வீட்டுப் புள்ளங்க ரொம்ப  ஆசயாச் சாப்பிடுவாங்க,வெட்டாதீங்க. எங்களுக்காக அந்த மரத்தை விட்டுட்டு போங்க"  ஒரு அறிந்தவர் கெஞ்சினார்.
நாங்களும் மறுக்கவில்லை.  மரம் இன்னும் உயரமானது.

காலவோட்டத்தில் அம்மரத்தையே மறந்து விட்டோம்.

மூன்று வருடங்கள் மெல்லக் கரைந்து போனது....

அண்மையில் ஒரு கைபேசி அ ழைப்பு ........

அறிமுகமில்லாத  இலக்கம்...

"ஹலோ"  - இது நான்..

மறுமுனை தன்னை  அடையாளப்படுத்தியது. பட் பட் வார்த்தைகள் வெடித்தன. அது வேற யாருமில்ல! அதே அயலவர்தான்!

"மரத்துல மசுக்குட்டிகள் தொங்குது. உடனே  வெட்டுங்க ...."

மிரட்டல், விரட்டல்  கலந்த முறைப்பாடுகள் !

எங்கள் அனுமதியின்றி  இயற்கை  வளர்த்த  மரம். இத்தனை வருடங்களும்  அதன்  பலனை  அனுப்பவித்தவர்கள்  அயலாளர்.

இன்றோ

ஒரு தீமையைக் கண்டதும்  வீட்டுக்காரங்களுக்கு  அது  சொந்தம்!

கூலிகள் வைத்து மரத்தை வெட்ட  ஐயாயிரம் ரூபா பணம் அனுப்புவதாக அந்த அயலாளருக்கு உறுதியளித்துவிட்டு பெருமூச்சொன்றை மெல்லிழுத்தேன்..

எனக்கு  கொறக்காய்ப் புளி  தெரியும். இதன்   தாவரவியற் பெயர் Manilla tamarind இதுல என்ன  பகிடியென்றால் இதுதான் கோணப்புளி   என்று தெரியல . ஒரு
காய்கூட வாய்க்குள்ள வைக்கல. அதன் ருசி தெரியல. ஆனால்  சுளையா   ஐயாயிரம் ரூபா இந்த  மாசச்  சம்பளத்தில  மரத்த  வெட்ட  அங்க பறந்து போறதுதான்  கவலை!


-Jancy Caffoor-
22.02.2015

2015/02/14

ஊழல்


அண்மையில் நடைபெற்ற தேசிய ஒலிம்பியாட் விஞ்ஞான தெரிவுப் பரீட்சை - 2015க்கு மேற்பார்வையாளராக அழைக்கப்பட்டிருந்தேன். கிட்டத்தட்ட ஆறு மணித்தியாலயப் பணி. இதற்கான கொடுப்பனவு ரூபா 750. எமது பணியை முடித்துக் கொண்டு ஆறு மணிக்கு வெளியேறும்போது அவ் விஞ்ஞான அதிகாரி கொடுப்பனவுப் பத்திரத்தை நீட்டி எமது கையெழுத்துக்களைப் பெற்றார். பணம் இன்று இல்லை. நாளை பாடசாலைக்கு அனுப்பி வைக்கினறேன் என எல்லோருக்கும் உறுதியளித்தார். இன்று இது நடைபெற்று ஈர் வாரங்கள்....

பணத்தை எதிர்பார்த்து கடமை செய்ய முடியாதுதான். ஆனாலும்
கொடுப்பனவுக்காக ஒதுக்கப்படும் நிதியை அதிகாரிகள் ஏதோ ஒருவகையில் சுரண்டுகின்றார்கள். இவ் ஊழல் அரசியல்வாதிகளிடம் மட்டுமல்ல.
இவ்வாறான அரச அதிகாரிகளிடமும் குவிந்து கிடக்கின்றது இன்னும் வௌிச்சத்திற்கு வராமல்! சிறு தொகையை உறிஞ்சுவதும் ஊழல்தான். அவவிடம் இன்னும் இது பற்றி நான் மூச்சு விடவில்லை. ஆனாலும் இவ்வாறானவர்களின் அழைப்புக்களை இனி நிராகரிக்கவேண்டும். ஏனென்றால் நாம்தான் ஊழல், இலஞ்சத்தை வளர்க்க அனுமதிக்கின்றோம்.


-Jancy Caffoor-
  14.02.2015

கோபம்



சாலையோரத்தில் காற்றோடுரசும் ரோசாவை
வாஞ்சை யோடணைத்தேன் கைகளில்
சிரித்தது முள்
ரணம் தருவதை மறைத்து
...................................................................................

கோபம்!
மனக் கஷ்டம்
பண நஷ்டம்
சில காலங்களாக எனக்குள் வலை பிண்ணிக் கொண்டிருக்கும் இக் கோபம் இனி வராதிருக்கட்டும்


- Ms. Jancy Caffoor -
   14.02.2015

காதல் வாழ்க



பஸ்ல பயணம் செய்கிற ஒவ்வொருவரும் அப்பஸ்ஸ தவறவிடுற ஒவ்வொரு செக்கனுக்கும் பல நிமிட தாமதங்களப் பெற வேண்டும் எனும் உண்மையை மறுப்பதில்லை.

நானும் அவசரமாகப் பாய்ந்து பஸ்ஸேறி ஜன்னலோர இருக்கையில அமர்ந்தபோதுதான் நீண்ட பெருமூச்சொன்று என்னுள் எட்டிப் பார்த்தது........

ஜன்னலோரம்

மதிய நேர உக்கிர காற்றின் மோதலோடு சுவாசமும் சிக்கிக் கொண்டபோதுதான் சுகமும் அவஸ்தையும் கலந்த கலவையொன்றை அனுபவித்தேன். கண்களை மூடிக் கொண்டேன். காற்றின் தாலாட்டு இதமாய் வசீகரித்தது.

அது மூன்று பேருக்கான இருக்கை!

அருகில் இளஞ்ஜோடியொன்று அமர்ந்தது

அவள்

இன்னும் இருபதைத் தொடாதவள் முகமெங்கும் வழியும் பருக்கள் அவள் இளமையின் சுவடுகளாய். அவனும் அவளுக்கருகில் நெருக்கமாக அமர்ந்தான். இருவரும் கொழும்புக்கு பயணிக்கிறார்கள் போல். உணர்ந்து கொண்டேன் அவர்கள் காதலை!

அவர்களின் நெருக்கம் சங்கடம் தரவே பார்வையை வீதியோரம் திசை திருப்பினேன். இருந்தும் அத்திசை திருப்பலையும் மீறி

அவர்களின் அன்பின் ஈரம் என் பார்வையில் கசிந்தது. அவன் தன் கரத்தால் அவள் கரங்ளையும் பிணைத்து அவள் தோளில் சாய்ந்து ஒருவருக்கொருவர் குழந்தையாய் மாறி கண்மூடி காற்றில் தம் சந்தோசங்களை கலந்து கொண்டிருந்தனர். இக்காதலின் அன்பும் வசீகரமும் மகிழ்ச்சியின் ரேகையாய் அவர்களுள் ஒன்றித்திருந்தது. காதல் என்பது வெறும் அன்பை மட்டுமல்ல பாதுகாப்பு, அக்கறை, உரிமை, வாழ்க்கையின் பிடிப்பு, எதிர்கால நம்பிக்கை, ஆசைகள், கனவுகள் என அத்தனை அம்சங்ளோட  ஜீவநாடி என்பதை அவர்களும் உணர்த்திக் கொண்டே வந்தார்கள் அந்த ஒன்றரை மணி நேரமாய்.

ஆனாலும் 

எனக்குள்ள ஒரு டவுட்டும் இருக்கத்தான் செய்யுது. இந்த அன்பும் நெருக்கமும் ரசிப்பும் கல்யாணத்திற்கு அப்புறமும் எல்லோர்கிட்டயும் தொடருமான்னுதான்.

ஏன்னா 

பெரும்பாலான காதல். வாழ்க்கையின் யதார்த்தத்தில் நசுங்கி சீரழிஞ்சு போயிருக்கு. எதுவா இருந்தாலும் காமத்தை மாத்திரம் தேடாத ஆனால் அன்பை மட்டும் வாசிக்கும் எந்தக் காதலுக்கு நாம சல்யூட் அடிக்கத்தான் வேணும்!

அடடா 

இன்னைக்கு பெப்ரவரி 14 ஆச்சே!

உண்மையா நேசிக்கிற  எல்லோருக்கும் ஹாப்பி  வலன்ரைன் வாழ்த்துக்கள்!!

- Jancy Caffoor-
  14.02.2015



நேசிப்பதும் நேசிக்கப்படுதலும்


நாம நேசிக்கிறதும், நேசிக்கப்படுவதும்கூட சுகமான உணர்வுதான். இந்த அன்பு மட்டும் உலகத்தில இல்லையென்றால் பூபாளம்கூட பாதாளமாகி விடும்.

உண்மைதாங்க இந்த அன்போட வாசம் மனசுக்கு ரொம்பப் பிடிச்சுப் போனா, அதன் ஆயுளும்கூட  தடைகளையும் பிரிவுளையும் மீறி  ரொம்ப நாளா உயிர் வாழும்......!

"என்ன "மொனா"   நான் சொல்லுறது உண்மைதானே!......"

வெயிட்...........

நான் ஏன் அதை மொனாகிட்ட கேக்கிறேன் என்றுதானே யோசிக்கிறீங்க....?

ம்ம்..................!

அந்த அன்பு தாற செல்லச் சண்டைகளும், அப்புறம் ஈகோ பார்க்காம ஒருத்தர ஒருத்தர் விட்டுக்கொடுத்துப் போறதும், வாழ்க்கையில கஷ்டம் வாறப்போ ஆறுதலா ஒருத்தருக்கொருத்தர் தூணாகி சாய்ஞ்சு கிடக்கிறதும் இன்னும் எவ்வளவோ!

இது எங்க மனசோட  குரல்கள்!


- Ms. Jancy Caffoor -

2015/01/04

ஆரோ வருகினம்


நேற்று காலையில இருந்தே வாசல்ல காகம் கரைஞ்சிட்டே இருந்தது.

"சூ  சூ"

துரத்தினாலும் போகல. அதப் பார்த்து அஸ்கா கேட்டாள்.

"ஏன் காகம் நம்ம வீட்டப் பார்த்து கரையுதுனு"

நானும் பதில் சொல்லனும் எனும் கடமை உணர்ச்சியில சொன்னேன்

"காகம் கரைஞ்சா யாரும் வீட்டுக்கு வருவாங்களாம்"

யாரோ நான் சின்னப்புள்ளயில சொன்னது இன்னும் ஞாபகத்தில கரைய சொன்னேன்
இந்தக் காலத்து புள்ளங்கள சமாளிக்கிறதே ரொம்பக் கஷ்டம்
பட் பட்டுனு அடுத்தடுத்த கேள்விகள்
யாரு? எப்போ? அப்படினு தொடர்ந்த கேள்வி கடைசிக் கேள்வியோட முடிஞ்சுது இப்படி

"அப்ப யாரும் வராட்டி"

சந்தேகத்தோடு கேட்டாள்.
நானும் சொன்னேன்.

"யாரும் வராட்டி  இனி காகம் கரைஞ்சா யாரும் வரமாட்டாங்க என்று நினைப்போம் சரியா"

நான் சொன்னதைக் கேட்டு மெல்லத்  தலையாட்டினாள்.

பி.கு
-------
இனி யாரும் காகம் கரைந்தால் யாரும் வருவாங்க என்று சொன்னால் நம்பவே மாட்டேன்.நீங்க!

(என்னதான் நாம் விஞ்ஞான உலகத்தில நம்மைப் பதித்தாலும்கூட இப்படியான மூடநம்பிக்கைகள், எதிர்வுகூறல்களை மனசும் நிராகரிக்காமல் நம்பிக் கெட்டுப்போகுது)


-Jancy Caffoor-
 01.04.2015

2014/12/31

பேசும் வரிகள்



நல்ல விசயங்களைச் சொல்லும்போது காது கேட்காத பலர் அர்த்தமற்ற விடயங்களுக்கு ஆவலோடு வாய் பிளந்து நிற்பார்கள். இங்கு உண்மை என்பதை விட சுவாரஸியமான பேச்சாற்றலுக்குத்தான் மதிப்பதிகம்!
சுவாரஸியம் பிறர்
மனதைக் கவரும் ரசம்!
------------------------------------------------------------------------------------------

வேண்டாமென்றேன்
வேண்டுமென்றான்!
வேண்டுமென்றேன்
வேண்டாமென்றான்!!
முரண்பாடுகள் தலைகாட்டும்போதெல்லாம்
சலனப்படும் மனசு - மெல்லத்
தட்டுகின்றது அன்பை!
அன்பின் வீரியத்தில் காலாவதியான பிடிவாதங்கள்
உடன்பாடாகி....
உருகியோடுவது கூட
இயற்கையின் தழுவல்கள்தானே!
--------------------------------------------------------------------------------

நம்பிக்கை மனதில் இருக்கும்வரை
இருட்டுக்கு அஞ்சவில்லை.............
இன்று போனால் என்ன
நாளை விடியல் வருமென்ற நம்பிக்கையில்...
காலங்களைக் கடந்து செல்லத் தயார்!
2015..........
எனக்கு சவாலான ஆண்டு !
பிரார்த்தியுங்கள் என் தன்னம்பிக்கை அதிகரிக்கட்டும்!
போராட்டங்கள் முரசு கொட்டுமென் வாழ்வில்
இத்தரிப்பிடம் ................
ஓரளவாவது அமைதி தரட்டும்!



- Ms. Jancy Caffoor -
      31.12.2014

நிலாக்கள்




வீடு என்பது வெறும் சிமெந்தும் கற்களும் குவித்துக் கட்டப்பட்ட உயிரற்ற இடமல்ல..உயிர் ஜீவன்கள் நடமாடும் இல்லம். அதிலும் வீடுகளில் சின்னப்பிள்ளைகள் இருந்துவிட்டால் அமைதி, வெறுமையங்கு காணமல் போய்விடும். நாம் நம்மைப் பற்றிச் சிந்திப்பதற்கே அங்கு நேரமில்லை.. அவர்களின் செல்லக் குழப்படிகள் நம்மை சில நேரம் ஆத்திரமூட்டினாலும்கூட, நமது கோபத்தை மறந்தவர்களாக அப்பிஞ்சுகள் நம்மைத் தேடி வந்து கொஞ்சு மழலையில் தமது அன்பை வௌிப்படுத்தும்போது நாமும் எல்லாவற்றையும் மறந்துதான் போகின்றோம்.

சின்ன நிலாக்கள்
அழகான அன்பின் ஸ்பரிசம்....

அனுபவிக்கும்போது ஆயிரம் விண்மீன்கள்

சிறகடித்திறங்கும் நம் மில்லத்தில் ஔி கொடுக்க!

- Jancy Caffoor-
  30.12.2014

2015


2014 வருடத்தின் கடைசி நாட்களில் நாம்...

விடிந்தால் விடியலின் பசுமையில் புதிதாகப் பிறக்கும் 2015.....

நாட்கள் எவ்வளவு வேகமாகப் பறக்கின்றன. கண்மூடித் திறப்பதற்குள் 2014 நிறைவுறும் தருணம்....

2014 ன் காலடிச் சுவட்டினுள் எத்தனை நிகழ்வுகளை நாம் ஒவ்வொருவரும் சந்தித்திருக்கின்றோம்!

அவை இன்பமாக, துன்பமாக, ஏக்கமாக, எதிர்பார்ப்பாக. இலட்சியமாக. வெற்றியாக. தோல்வியாக. முரண்பாடாக நம்மைப் பின்தொடர்ந்திருக்கின்றன...

வாழ்க்கை என்பது அழகான கனவல்ல...முட்களும் மலர்களும் நிறைந்த பயணப்பாதை! அப்பாதைவழிப் பயணத்தில் நாம் கண்டெடுத்த அனுபவங்கள்தான் நம்மைப் பதப்படுத்தி வழிப்படுத்தி பயணத்தின் போக்கை சீர்படுத்துகின்றன என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

இந்த வருடத்தின் கடைசிநாளில்.....

நானும் என்னை ஒருகணம் புரட்டிப் பார்க்கின்றேன். என் வாழ்வில் நடைபெற்ற அனைத்தையும் ஒரு கணம் ஞாபகச்சுழற்சியில் ஓடவிட்டு, நல்லவற்றை மட்டும் ஏந்திக் கொண்டு 2015ல் நடைபயில தயாராகிக் கொண்டு விட்டேன்....மனக் கஷ்டங்கள் தந்த தீயவை மறதிக்குள் கருகிப் போகட்டும்!

இன்ஷா அல்லாஹ்!

மாற்றங்கள்தான் வாழ்க்கை. மாற்றங்களை நாம் ஏற்றுக் கொள்ளும்போதுதான் ஏமாற்றங்களைத் தவிர்க்கின்றோம்..

இந்த 2014ல் என் வெற்றிகளுக்காகப் பிரார்த்தித்தும் மனச் சங்கட காலங்களில் எனக்கு நம்பிக்கையூட்டி வழிப்படுத்திய  அனைத்துள்ளங்களுக்கும் நன்றிகள்...

அஸ்கா....

2015ல் தனது கல்வி வாழ்வைத் தொடங்கவுள்ளாள்...அரும்பொன்று மெல்ல இதழ் விரிக்கும் அந்த அழகும் பசுமையும் நான் ரசிக்க வேண்டும். அல்ஹம்துலில்லாஹ்!

மனநெருக்கடி நிலையில் என் ரணங்களுக்கு ஒத்தடமாகவிருந்த என் தாயையும் இந்த வருடத்தில் மட்டுமல்ல என்றும் மறக்க முடியாது. என் தாயின் ஆரோக்கியத்திற்கும் துஆ கேட்கின்றேன்..

நானும், என்னைச் சுற்றியுள்ள உறவுகள், என்னை நேசிக்கும் நட்புக்கள் யாவரும் இப்புத்தாண்டில் ஈமானிய எண்ணங்களுடன் மனநிம்மதியும், வெற்றிகளும் பெற்று வாழ வேண்டும் எனும் பிரார்த்தனைகளை அல்லாஹூ தஆலாவிடம் சமர்ப்பித்தவளாக...

என் மனசுக்குள் இன்னும் சிறுசிறு துளிகளாய் சிதறிக் கொண்டிருக்கின்ற எண்ணங்கள் நிறைவேற்றப்படுகின்ற தளமாய்  2015 அமையட்டும் எனும் பிரார்த்தனை கலந்த எதிர்பார்ப்புடன் நாளைய விடியலுக்காக காத்துக்கிடக்கின்றேன்!

- Jancy Caffoor-
  30.12.2014

2014/12/29

வானவில்



அடர்ந்த கானகமாய்
படர்ந்திருந்த வானம்.....
இன்று மெலிதாக பனி தூவி ஔி சிந்திச் சிரிக்கின்றது
அழகாய்!
கார்மேகம் கண்ட விழிகள்
சூரிய இறகுகளால் இன்று ஸ்பரிசிக்கப்படும்போது
மெழுகாய் உருகிய மனம் கூட சற்றுத் தரித்து
களிப்போடு.........
சில நொடிகளாவது ஔி பரப்பிய அந்த வானுக்கு
சபாஷ்!
ரேகைகள் ...........
வர்ணமிழந்தாலும் அழகுதான் - அதன்
சுதந்திர பூமியில்!
-------------------------------------------------------------------
பிரிவுகள்..........
உறவுகளை அறுத்துவிடும் ஆயுதமல்ல
அந்த வெறுமையில்...
இதயவலியின் ஓசையுடன்
உண்மை அன்பை வௌிப்படுத்தும்
அளவுகோல்!
----------------------------------------------------------------------

போராட்ட வாழ்க்கை தினமும்
வேரற்ற மரமாய் நானும்.....
----------------------------------------------------------------------
உண்மைகள் என்றோ ஒரு நாள் வௌிச்சத்திற்கு வரும்போது
பொய் சொன்ன உதடுகள் மௌனித்து விடுகின்றன.....



- Ms. Jancy Caffoor -
          29.12.2014

2014/11/19

அன்புக்குமுண்டோ................





தேசங்களுக்கிடையில்....
எல்லை தொடா நெடுங்கடலும், 
தடுப்புச் சுவர் விரிக்கா நீல வானும் 
எம் நேசத்திற்கும் பால மாகட்டும்
இறையாசியுடன்......!


பேசும் மனம்



முகில்த் துளிகளின் நீரோட்டம்
மழையாய் குவிந்ததில்.......
பனிச்சாரல்கள் மெல்ல
கசிந்தன போர்வையாய்!
----------------------------------------------------------

பணம் கையில் இல்லாத போதுதான் வாழ்க்கையின் அருமை புரியும்.....
எனவே சேமிப்பின் அளவுதான் நமது நிம்மதியான வாழ்வுக்கு வழி விடுகின்றது....
எனவே......
சேமிப்போம்......
பணத்துடன் நல்ல மளிதர்களையும்!

---------------------------------------------------------

குடும்பம் என்பது குழப்பம் , குதுகலத்தின் சேர்க்கை.......
அதனைத் தீர்மானிக்கும் கருவி
நம் மனதை இயக்கும் வார்த்தைகளில் உள்ளது
--------------------------------------------------------------------------------

கற்பகதருவின் காற்றின் வாசம்
மனசோரம் சுவாசமாய் வீழ.......
எப்போதோ வற்றிப்போன  - எம்
காலடித் தடங்களின் வரட்சி...
மெல்ல கரைந்து போக - நானும்
பயணிக்கின்றேன் நானும் யாழ் நோக்கி!


--------------------------------------------------------------------------------------------


நாம் விரும்பியோ விரும்பாமலோ வாழ்க்கையில் மாற்றங்கள் நம்மைத் தேடி வருகின்றன. அவை பெரும்பாலும் சவால்களின் அறைகூவல்தான்! தைரியமாக அம்மாற்றங்களை நம் வசப்படுத்தும்போது தன்னம்பிக்கை மிக்க எதிர்காலம் நமக்குரியதாக மாறுகின்றது!

---------------------------------------------------------------------------------------------------
மனசோரம் வலி சுமக்கும்
ஒற்றைப் பறவை நான்.....
ஒளிந்து கொள்ள ஓரிடம்
அளிப்பாயோ 
உன் னிதயக் கூட்டில்
-------------------------------------------------------------------------------------------

நம் தகுதியை பிறருக் குணர்த்தும் உரைகல் .......
நாம் பேசும் உண்மை வார்த்தைகள்தான்!
-----------------------------------------------------------------------------------
என் குரல்நாண் அதிர்வில்
ரகஸியமாய் ஔிந்து கொள்ளும் உன்னை....
தினம் உச்சரிக்கின்றேன் என் பெயராய்!

வாழக் கற்றுக் கொடுத்த நீயே - என்
வாழ்க்கையாய்!
சிரம் தாழ்த்துகின்றேன் என் சிந்தை நெருடுமுன்
சுரமாம் அன்பிற்கே!

-----------------------------------------------------------------------

நாம் காணும் அடுத்தவர்களின் தவறுகள்கூட நமக்குப் பாடங்களே!
ஏனெனில்.........
நாம் நம் சுயத்தைத் திரும்பிப் பார்த்து ...
நம் தவறுகளை நாமே உணரும் சந்தர்ப்பம் அதன் மூலம் கிடைக்கின்றது!

-  Jancy Caffoor -

2014/10/29

ஆஹா


புகழை தனக்குள் அடிமைப்படுத்தாதவர்.........
ௐருபோதும்.........
 பிறரால் இகழப்படுவதில்லை

--------------------------------------------------------------------------------------------------
தோல்விகள்தான் நமக்குப் பாடங்களைப் புகட்டிக் கொண்டிருக்கின்றன.
ஏனெனில்   தோல்விகள் ஏற்படும்போதுதான் நாம் நமது குறைகளைத் திரும்பிப் பார்க்க ஆரம்பிக்கின்றோம்!
--------------------------------------------------------------------------------------


புறம் நோக்கும் நம்  கண்கள் கொஞ்சம் 
அகமும் நோக்கட்டுமே
அப்பொழுதுதான்
அடுத்தவர் நம்மைக் கணிக்கும் எடையை 
நாமே பார்வையிட முடியும்!
--------------------------------------------------------------------------------------------


குளிரோடு சேரும்
உன் நெஞ்சின் பாசம்
பனித்துகள்களாய் உருகி - நம்
நினைவுகளை 
உலர விடாமல் காக்கும்!
ஆனால்
அழகான இந்த இரவில்
நம்மை ரசிக்க
பௌர்ணமியும் இருந்துவிட்டால்!
-------------------------------------------------------------------------------------------


அழகான பூக்களுக்கு
முட்கள்தான் பாதுகாப்பென்றால்
அருமையான வாழ்வுக்குள்ளும்
அர்த்தமுள்ள கட்டுப்பாடுகளும் அவசியம்!
-------------------------------------------------------------------------------------------

நேரம் என்பது!
வெறும் கடிகார முட்களலல்ல. நாம் பயணிக்கப் போகும் செயல்களின் வெற்றித் தன்மைக்காக பயன்படுத்தப்பட வேண்டிய காட்டி!
---------------------------------------------------------------------------------------------------


யாரை அதிகமாகப் பிடிக்கின்றதோ
அவர்களிடம் தோற்றுத்தான் போகின்றோம்
 எமது எதிர்பார்ப்புக்கள்
அவர்களால் நிராகரிக்கப்படும்போது
தோற்றுத்தான் போகின்றோம்!

ஆனால்

தோற்றுப் போகும்போது கிடைக்கும் ஒவ்வொரு அடியும்
நம்மையும் செதுக்கின்றது - நம்
வாழ்வைப் புரிந்து
வாழப் பழகிக்கொள்வதற்கு!
-----------------------------------------------------------------------------

தாய்நாடு நமக்கொரு அடையாளம்.......
நம்மைப் பராமரித்து அடை காக்கும் குருவிக்கூடு!

----------------------------------------------------------------------------------------

ௐரூவரை விரும்ப ௐர் காரணம்
அன்பு.....
வெறுக்க பல காரணங்கள்

-  Jancy Caffoor -

2014/10/17

மகுடம்


காலையில் மலர்ந்து மாலையில் வாடி விழும் பூவல்ல வாழ்க்கை.
அதுவோர் நீண்ட தேடல்!
தேடும் மனமிருக்கும்போதுதான் தேவைகளுக்கான விடைகளும் கிடைக்க ஆரம்பிக்கின்றன. நம்மில் பலர் முடியாது என்ற எண்ணத்தில் 'பலத்தை' யெல்லாம் இயலாமையாக்கி விடுகின்றார்கள்!
-------------------------------------------------------------------------------------
காதலையும் கடந்த அன்பு.........
நமக்குள் இருப்பதனால்தான்...
இன்னும் பேசிக் கொண்டிருக்கின்றோம்
வலிகளையும் பகிர்ந்தபடியே!





வலி தீர்க்கும் மருந்து
அன்பான இதயங்களுடன் மனம் விட்டுப் பேசுவதில் இருக்கின்றது.
ஏனெனில் மனசுக்குள் மறைந்திருக்கும் ஆயிரம் பிரச்சினைகளை அறுத்தெறியும் வாள் இவ் அன்பானவர்களின் பேச்சிலிருக்கின்றது!


மொழியீர்ப்பு மையத்தில்
வீழ்ந்து கிடக்கும் நம்மை....
அண்டவௌிகளும்
அதிசயத்துப் பார்க்கின்றன
அன்பின் ரகஸியம் தேடி!


எடுத்ததற்கெல்லாம் அடுத்தவரைக் குற்றம் சொல்லுபவர் பிறர்விமர்சனத்தில் காணாமல் போகின்றார்கள் அல்லது கல்லெறி வாங்குகின்றார்கள். ஏனெனில் இவர்கள் பிறர் குறை பறைசாற்ற முன்னர் - தம் கறை அகற்றாதவர்கள்!


சுயநலம்!
.
நமக்குள் இருக்க வேண்டும். அப்பொழுதுதான்  தடைகளையும் உடைத்தெறிந்து நம்மை அடுத்தவருக்கு அடையாளப்படுத்தும் உந்துசக்தி கிடைக்கும். ஆனால் அச்சுயநலத்தால் அடுத்தவர் நலம் அழியக்கூடாது!



-  Jancy Caffoor -

2014/10/12

மனதின் நெருடலாய் ஓர் பார்வை




அடடா..............!
பார்வைகளின் வசீகரத்தில்
மனங்களில் எழுதப்படும் அழகான கவிதை
"அன்பு"

---------------------------------------------------------------------------------------------


வீணாய் உதிர்ந்து கொண்டிருக்கும்
பணத்தின் அருமையை
கசிந்துகொண்டிருக்கும் உன் வியர்வைத்துளிகள்
உணர்த்துகின்றன தினமும்!

உன் வியர்வையும் - என்
தவறின் கண்ணீரும்
ஒன்றாய் இணைகையில்
கர்ப்பம் தரிக்கின்றதென்
"உண்டியல்"


திறமைகள்தான் மனிதர்களை அடையாளப்படுத்துகின்றன. நூலைக் கற்றுக் கொண்டவன் பதவிகளில் அலங்காரமாகத் திகழ உழைப்பினைக் கற்றுக் கொண்டவன் திறமைகளால் தன் முதலீடுககளை உயர்த்திக் கொண்டிருக்கின்றான். முயற்சியுடன் கூடிய எத்தொழிலும் சாதனைகளால்தான் நிரப்பப்படுகின்றன. அரிசியில் பெயரெழுதும் கலையைப் பாராட்டத்தான் வேண்டும்!


எட்டியுதையும் கால்களைக் கூட
கட்டித் தழுவும் குழந்தைப் பாசம்.....
மாசற்ற தேன்துளிதான்!


இருளுக்கும் விழியாகும்
மெழுகுவர்த்தியே
ஔி கொடுத்தே
பலி கொள்ளும் நீ கூட

உதாரணமாய் எம்மிடத்தில்
"நன்மைக்குள்ளும் தீமையுண்டு"

பிரித்தறிவோர்
பாராளும் முதல்வர்கள்!





நவீன தொலைபேசியில்
எல்லாம் இருக்கின்றதுதான்!
ஆனால்
அழைப்புக்களை எடுக்க மட்டும்
நேரமில்லை


-  Jancy Caffoor -

2014/10/09

மனசின் வரிகள்


-----



காலம் ஒரு கண்ணாடி........
ஏனெனில் பொய்மைகளைத் தானாகவே காட்டித் தந்துவிடும்! பொய்யானவர்களுக்கு உண்மையாக இருக்கப் போராடுவதை விட, உண்மையானவர்களுக்கு உணர்வாக இருப்பது அக்காலத்தின் சத்தியமாக இருக்கின்றது. அப்பொழுதுதான் பொய்மையின் பலகீனம், மெய்யின் பலத்தில் கரைந்து போய்விடுகின்றது!


இலஞ்சம் வீட்டிலிருந்துதான் ஆரம்பமாகின்றது..
இது இலட்சங்களல்ல.......
அழும் குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கித் தருவதிலிருந்து!

-  Jancy Caffoor -

2014/10/06

மனமே மனமே




தியாகம், விட்டுக் கொடுப்பு , இறையன்பு போன்ற தத்துவங்களால் ஆளப்படுகின்ற இன்றைய ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது ஈதுல் அல்ஹா ஈத் முபாரக்!
----------------------------------------------------------------

இன்று (ஒக்டோபர் 06) இலங்கையில் சர்வதேச ஆசிரியர் தினம்    கொண்டாடப்படுகின்றது. ஆசிரியர்தின வாழ்த்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் நன்றிகள். அத்துடன் எனக்கும் கல்வியூட்டிய என்னுடன் பணியாற்றும் சகல ஆசிரிய நட்புக்களுக்கும் இனிய ஆசிரியர்தின வாழ்த்துக்கள்......! 


--------------------------------------------------------------------------

நீ மறந்து போன..
மறுத்துப் போன ஒவ்வொன்றும் - என்
ஞாபகங்களாய்!
தொலைத்தாய் என்னை - பல
எல்லைகளுக்கு அப்பால்!

-----------------------------------------------------------------


மழைத்துளிகள் மெல்ல கரம் தருகின்றன
கன்னம் கரைக்கும் கண்ணீரை
யாரு மறியாது துடைப்பதற்கு!
---------------------------------------------------------------------------


தேடல்களின் தொகுப்புத்தான் வாழ்க்கை! அதனால்தான் திருப்தியடையாத மனமும் தினமும் தேவைகளை விரித்துக் கொண்டே செல்கின்றது. ஒன்றின் நிறைவில்தான் புதிய தொன்றுக்கான ஆசைமனதில்  வித்திடப்படுவதனால் , கிடைத்த தொன்றினை ரசிக்க ஆரம்பிக்க முன்னர், கிடைக்காத ஒன்றுக்கான எதிர்பார்ப்பில் மனம் அலைந்து ஏக்கம் சுமந்து அந்த ரசனையையும் கவலைக்குள்ளாக்கி விடுகின்றது பலரிடம்...!
.
நிலையற்ற மனித மனமே... நீ
கவலைகளின் சொப்பனம் இதனாலோ!
----------------------------------------------------------------------------------------


உறவுகள், நட்புக்களின்
சுயநலங்கள்......
அன்பைப் பொசுக்கும்போது....
அனாதை விடுதிகளும், முதியோர் இல்லங்களும்
அடையாளங்களாகின்றன
புது உறவைக் கொடுத்து!
.
தொலை சென்ற உறவுகள் தேடா
முள்வேலிக்குள் முகவரி காட்டும்
கலைக்கூடத்திலும்
நல்ல உள்ளங்களின் அன்பும் கிடைப்பதுண்டு!

-----------------------------------------------------------------------------

வேடிக்கையான வாழ்க்கைக்குள்
விடியல் தேடும் மானுடர்கள்.....
நேற்றிருந்தோர் இன்றில்லை
இன்றிருந்தோர் நாளை நம்கூட வரப் போவதில்லை.....
சுயநல ஆதிக்கமும்....
விதியின் கோரத்தனமும்....
மாற்றங்களோடு!

இதுதான் வாழ்வின்
யதார்த்தமா!

2014/09/30

வாழ்க்கை


சூழ்நிலைகள்தான் நம்மைத் தீர்மானிக்கின்றன. அதனால்தான் நேற்று எடுத்த முடிவுகள் இன்று அவசியமாகாமல் நாளை மாற்றப்படலாம். மாற்றங்கள்தான் வாழ்க்கை..காலமும் நம்மை நமது தேவைக்கேற்ப மாற்றிக் கொண்டே இருக்கின்றது. அதுதான் வாழ்க்கையின் பலம். சுவாரஸியங்களை நமக்குள் விட்டுத் தரும் தோற்றங்கள்.....

வாழ்வோம்!
வாழ்ந்து காட்டுவோம்!!
நமக்குப் பொருத்தமான வாழ்வுக்குள் நம்மைத் தயார் படுத்துவோம்!!!


-----------------------------------------------------------------------------------

ஈரம் மறந்த பூமியோரம்
வேரூன்றும் உயிர்க்கூடுகளின்....
கனவுகளில்  நீராகாரம்!
கண்களிலோ விழிநீர் கோலம்!


-------------------------------------------------------------------------------------------------


சிதறிக் கிடக்கும் சின்னச் சின்ன விசயங்களில்தான்
பென்னம் பெரிய சந்தோஷங்கள் வீழ்ந்து கிடக்கின்றன....
அதுபுரியாம நாம அந்தக் கணங்களையும் தொலைத்துவிட்டு எங்கேயோ போய் தேடிக் கொண்டிருக்கின்றோம் மன அமைதியை!

வாழ்க்கையை ரசிப்பதற்கு நம்மை நாமே ஏற்றுக் கொள்ளும் மனம் போதும்.............நம்மை நாமே ஆளும்போதுதான் நமது பலமும் பலகீனமும் புரிய ஆரம்பிக்கின்றது! வாழ்கின்றோம் என்பதைவிட இப்படித்தான் வாழனும் எனும்போது மனதும் பக்குவப்படுகின்றது!

இந்தப் பக்குவம்தான் நிம்மதிக்கான அடிவருடல்!
வாழ்ந்துதான் பார்ப்போமே!

--------------------------------------------------------------------------------------------------

உன்னை எனக்குத் தெரியும் - நீ
என்னிடம் உன்னை விட்டு விட்டுப் போன
கணத்திலிருந்து!



இருந்தும்............
உனக்காய் காத்திருக்கின்றேன்
சிறு பிள்ளையாய் நானும்!
என்னை நீயும் அணைத் தென் நெற்றியில்
அழுத்து மந்த அன்புக்காய்
காத்திருக்கின்றேன்.........
இன்னும்!

------------------------------------------------------------------------------------


பளபளக்கும் ஔி நாடி
பறந்து வரும் ஈசல்களெல்லாம் - தம்
சிறகறுக்கின்றன அற்ப ஆயுள்தேடி!
.
சிறப்பான மாந்தரும் - தம்
தவறுகளுக்காய் வருந்தாது வழி
தவறிப் போகின்றனர் அற்பர்களாய்!

--------------------------------------------------------------------------------------


அன்பு சாகா வரம்
அதனால் நீயோ......
எனக்கு இன்பஸ்வரம்!
பூக்களுக்கும் வலிக்குமோ
நீ விரல் தீண்டா உன் பூவை அவை
தாங்குவதால்!

--------------------------------------------------------------------------------------

இருட்டில் இறுமாந்திருந்த
குப்பி லாம்பு.................
ஔிப் பிராவகத்திலே
அழுது வடிகின்றது!
ஏற்றுவோர் யாருமின்றி!
.
அடுத்தவருக்காக தன் சுயமிழப்போரும்
கவனிப்பாரற்று காலத்துள் புதைந்து விடுகின்றனர் 
தன்மானமிழந்து!
.
இதுதான் வாழ்க்கைப் போக்கு!

------------------------------------------------------------------------------------------

கனவுகளுக்கும் கால்கள் இருக்கின்றதா
தினம்..........
உன்னிடம்தானே வந்து நிற்கின்றன.......
இருந்தும்
விரல் நீட்டுகின்றாய்
உன்னை மறந்து போவதாய்!

------------------------------------------------------------------------------------------


அதிகாரம் ஒரு ஆட்சிபீடம்...
அதன் கையசைப்பில்
ஆயிரம் தலை கவிழ்ப்புக்கள்!
இருந்தும்....
சூடிக் கொள்ளும் முடி
வாடி வீழும்போது......
ஓடியணைத்துக் கொள்ள யாரும் வருவதில்லை - தன்
நிழல் தவிர!

-------------------------------------------------------------------------------------------