தமிழ் வணக்கம்
--------------------------
உணர்வுகளில் அழகு சூட்டி அமிர்தமாய் இனிக்கும் என் அன்புத் தமிழே உன்னை வாழ்த்தி வணங்குகிறேன்
தலைமை வணக்கம்
----------------------------------
இன்றைய நிகழ்விற்கு தலைமை தாங்குகின்ற நீதி வழுவா மதிப்புமிகு தலைவருக்கு என் பணிவான வணக்கங்கள்
சபை வணக்கம்
------------------------------
தத்தம் தலைப்பிற்கே செந்தமிழ்ச் சுவையினில் எழில்க் கவியிசைக்கும் நிலாமுற்றக் கவிஞர்கயுக்கு என் அன்பான சபை வணக்கங்கள்
தலைப்பு
-------------------
தூது செல்வாய்
துணைத் தலைப்பு
------------------------------
தென்பொதிகைத் தென்றல்
-------------------------------------------
தென்பொதிகைத் தென்றலே
தெற்குத் திசையில் எந்தன் தெய்வமகள்
தெவிட்டா நினைவுகளுடனே
தொலைவான என் தேவதையிடம்
தொல்லையின்றி நீயும் தூது செல்லு
கானமிசைத்த கானக் குயிலாள்
காந்த விழியால் கட்டிடுவாள் அன்பாலே
காணும்போதெல்லாம் தேனிடுவாள்; வார்த்தைகளில்
காணாம லின்று வலி சுமக்கிறேன்
கண்ணீருக்குள் உறைந்தே உயிர் ஏந்துறேன்
வண்டே துளைக்கா அமிர்த மவளுள்
வந்தமர்ந்ததோ வைரஸ் முட்கள்
வனப்பெல்லாம் துயரால் கரைய
வருந்தி வீழ்கிறாள் வாழ்வை வெறுத்தே
வலிக்கின்றதே எந்தன் நெஞ்சும் பிரிவால்
கொரோனா என்றனர் பிரித்தனர் எம்மை
கொளுத்தும் வெயிலால் மகுடம் சூட்டினர்
கொடி யிடையாள் ஒடிந்தே போனாள்
கெஞ்சிக் கேட்கிறேன் சேதி சொல்லு
கெட்டி மேளம் கொட்டும் நாள் அருகென்றே
தனிமையே மருந்தாக துடிப்பவளுக்கே
தங்கையாய் நீயும் துணையாய் இரு
தடையெல்லாம் உடைந்ததும் தாவி வருவேன்
தரணியும் நலம் செழித்து வாழட்டும்
தங்கத் தென்றலே அதுவரை அன்பூற்று
ஊசித் தீண்டலுக்கும் அஞ்சும் மென்மலரில்
ஊட்டிவிடு நீயும் அன்பைக் குலைத்து
ஊரெல்லாம் மரண ஓலம்
ஊர்வசி யவளின் அச்சம் பிடுங்கி
ஊஞ்சலாட்டு நீயும் சுகம் மனதை வருடட்டும்
பல மைல் தொலைவினில் பாவை யவள்
பாதை யிருந்தும் பயணத் தடை
பறந்து செல்ல வழியுமுண்டோ
மதி யறியும் உணர்வின் முகவரி
விதிக் கொடுமையோ நுண்ணுயிர்க் காவலிது
கண்மனி காத்திருக்கிறாள் நாட்களை எண்ணியபடி
கண்ணீரை உலர்த்தவே விரைந்தோடு தென்றலே
கண்ணன் எந்தன் மனதைக் கூறிடுவாய்
கன்னிமகளும் காத்திருப்பாள் நம்பிக்கை பூக்க
காலங்கள் கூடுமெங்கள் கரங்களும் சேர
நன்றி நவிலல்
------------------------
நிலாமுற்றத்து 222 ஆம் கவியரங்கினில் கவிபாட வாய்ப்பளித்த தலைமைக்கவிஞர் அவர்கட்கும் முற்றத்து சொந்தங்களுக்கும் பெருநன்றியை மகிழ்வுடன் முன்வைக்கிறேன் கவிஞர்களுக்கு வந்தமர்ந்ததே
- ஜன்ஸி கபூர் -
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!