About Me

2020/06/27

தமிழுக்கு மகுடம்

தமிழ் வணக்கம்
------------------------------
வளரும் பயிராக முத்தமிழ் தித்திப்புடன் முற்றம் நுழைகின்றேன். தமிழ் வார்த்தைகளாலும் சொற்களாலும் என்னை ஆட்சி செய்யும் நற்றமிழே அமிர்தமாகி நானிலம் போற்றும் உன்னை வாழ்த்தி வணங்குகின்றேன்

தலைமை வணக்கம்
-----------------------------------
கவியரங்கின் நாயகராம் நீதி வழுவாமற் அரங்கை நகர்த்திச் செல்லும் தமிழ்ப் புலமைக்கு எனது இனிய கோடான கோடி வணக்கங்கள்

அவை வணக்கம்
------------------------------
தத்தமது தலைப்பிற்கே சொல் கோர்த்து அழகு தமிழில் கவி வார்த்துப் பாடுகின்ற வாதிடும் கவிப் புலமைகளுக்கும் அரங்கினைத் தொட்டுச் செல்கின்ற அனைவருக்கும் எனது அன்பு கனிந்த வணக்கங்கள்

தலைப்பு
நிலாமுற்றம்

துணைத் தலைப்பு
தமிழுக்கு மகுடம்

இணையக் குழுமங்கள் பல இங்குமங்கும்/
இரகஸியமாய் தலைகாட்டி மறையும்/
இதயம்கலந்தே பலர் நினைவேற்றி மகிழும்/
இரசிப்பின் தரிசிப்பாம் நிலாமுற்றத்தில்/
இரவு பகலாய் தடம்பதித்தே மகிழும்/
இனிய தென்றலாய் மெல்ல மீட்டுகின்றேன்/
இனிய தமிழ் ஏடெடுத்து வழியும் செழுமையினை/
இரசித்தே கவியெழுதுகின்றேன் நிலாமுற்றச் சிகரமேறி/
இரவைத் துரத்திக் கொண்டிருக்கும் வானில்/
இனிய நிலாவோ முற்றத்தில் கனவுகள் சுமந்து ஒய்யாரமாய்/
இளமைத் துள்ளலுடன் காத்து நிற்கிறது/
இனிமைத் தமிழ்ச்சாறின் பா அருந்த/
இன்முகம் காட்டும் பலருள் நானும் ஒருத்தியாய்/
இங்கு கவியில் நனைந்தே இதம் காண்கின்றேன்/
இயலாதோறும் இங்கு வந்தால் கவி புனைவார்/
இரகஸியம் என்னவோ மனமே புதிர் அவிழ்/
இனிமை தெவிட்டாத தமிழ்ப்பால் என்றும் உவப்பால் கட்டி/
இழுக்குமே இரம்மியம் நமக்குள் வார்த்தபடி/

குழுமங்கள் பலவாம் இணையத்தின் முகவரிகளாம்/
குழாவித் திரிகின்றன இரவும் பகலுமாய்/
குத்துவிளக்கின் மங்கலமாய் பிற மொழிக் கலப்பின்றி/
குவலயத்தின் ஒளி நிலமாய் தெளிவான வழிகாட்டலுடன்/
குறைகளின்றி ஒளிர்கின்றதே நிலாமுற்றம் நிறைவோடு/
குழுவினரின் தமிழ்ப்புலமையும் கூட்டுறவும் அறநெறியும்/
குன்றின் ஆதவனாய் உற்சாக ஒளியெடுத்தே/
குடியிருக்கும் மொழி வளத்தால் அழகு பெறுகின்றது/

தமிழைச் சுவாசித்து தமிழாய் வாழ்ந்து/
தங்கத்தமிழைப் பிழிந்தூற்றி கற்கச் செய்து/
தரணியிலே தடம்பதிக்கும் வண்ணத்/
தமிழ் கூடமாய் தன்னை யுயர்த்தி/
தனித் தமிழிலே பா இசைத்தால்/
தடவிக் கொடுக்கும் பின்னூட்டங்களும் கைதட்டல்களும்/
தன்னம்பிக்கையுடன் கவியெழுதத் தூண்டும்/
தலைநிமிர்ந்தே கவிஞர் என்றுரைக்கும் நாமம் சூட்டி மகிழும்/

கவியாடு தளத்தினிலே கருக்கள் பல தந்தே/
களிப்போடு பாக்கள் இசைக்க உணர்வசைத்து/
கவிச் சந்தத்தில் சிந்துகளும் இசைத்து/
கரகோஷ ஆரவாரத்தில் வெற்றித் திலக முமிட்டு/
கண்குளிரும் சான்றிதழ்கள் அழகுத் தமிழாய்/
கனிவோடு வழங்கும் செழுமையில் சுந்தரத் தமிழும்/
கண்ணோரம் கருக்கட்டும் கனவுகளும் தமிழ்க்/
கருத்தாகி மணக்கும் முற்றத்தின் மன்றலில்/
கண்ணின் மணியாய் தமிழ் வாழ்கின்றது வளமாயிங்கு/
கன்னித்தமிழ் வளர்ப்போரும் கடலாய் தமிழ் ஆள்பவரும்/
கரம் சேர்த்தே மகிழும் குன்றமிது ஆரோக்கிய மன்றம்/
காலமெல்லாம் வளர்ந்து தளிர்க்கும் முத்தமிழ் அரங்கு/

முகநூலின் முற்றமுமாய் முழு உலகின் சொத்துமாய்/
முகங் காட்டும் பலரது புலமையிங்கு புதுமைதான்/
முத்தமிழின் வாசத்தினில் கவிகளை அற்புதமாய்/
முத்திரையிடும் கவிகள் கரம் தொடுவதுமிங்கேதான்/
முழு மூச்சாய் வண்ணத் தமிழ் கொய்து/
முழு நிறைவாய் புலமைகள் ஆளுமிங்கே/
முகத்திரை யேதுமின்றி அனைவோரின் சிந்தைகளுமே கூடுமே/
முற்றத்து நிலா என்றும்  தமிழ் வாழ்த்துக் கூட்டில்/
முத்துப்பேட்டை நாயனாரின் சிந்தை தொட்ட யுக்தியிங்கு/
முறுவலித்தே புன்னகைக்கின்றதே  தமிழையும் வளர்த்தே/

நிலாமுற்றம் தனித்துவம் தமிழ்க்களம் என்றுரைக்கும்/
நினைவுகள் நீங்காத வரம் கொண்டே/
நித்திலத்தில் பொற்கிழியாய் நீடூழி வாழ்ந்திடுமே/
நிலாவிலே கவியோட்டம் அழகோட்டம்/
நிதர்சனமாய் மொழி வளர்க்கும் கலைக்கூடம்/
நினதும் எனதும் புகழ் வளர்க்கும் உயிர்க்கூடம்/
நல்லோர்கள் உயிர் மூச்சில் இன்பமதை நெய்தே/
நன்னிலத்தில் தமிழ்பாடி உயிரூற்றும் நிலாமுற்றம்/
நீண்ட காலம் தமிழ் வளர்க்கும் மொழிக்கூடம் இது/
நிமிர்ந்த பார்வையில் மகுடம் சிரிக்கின்றது தன்னடக்கமாய்/

நன்றி நவிலல்
----------------------
முத்தான முற்றத்தின் சொத்தாகிய 221 ஆம் கவியரங்கின் தலைவர் உள்ளிட்ட குழுமம் பெருந்தகைகளுக்கும் பெரு நன்றிகளும் பெரு வாழ்த்துக்களும் பெரு மனதுடன்
தமிழ் வளர்க நிலாமுற்ற அரங்கும்

ஜன்ஸி கபூர்



  • badge icon

     அருமையான தொடக்கம் வாழ்த்துகள்



    •  ஆற்றுவெள்ளம் பொலெழுந்து ஓடி வரும் பாட்டு
      அருமை எனச் சொல்லிவரும்
      முற்றத்திலும் பாட்டு
      வாழ்த்துகள்


       

    •  


      நிலாமுற்றத்தின்
      பெருமைக்குறிய 221-வது கவியரங்கத்தில்,
      வரலாற்று சிறப்பு மிக்க
      இவ்வரங்கத்தில்
      எண்ணத்தில் வண்ணமும்
      வான்மேகத்தில்
      கவியாரமும் செய்து
      # தமிழுக்கே மகுடம்
      என்று
      பூஞ்சோலையில்
      இரும் மலர்கள்போல்
      எழில் கொஞ்சும்
      வார்த்தைகள் நெய்து
      அந்தியில் எழும்
      சந்திரன் ஒளியாய்
      அற்புதம் செய்யும்
      கவி வரிகள் தந்த
      கவிப்பெரியோர்க்கு நன்றி
      உங்கள் தமிழ்ப்பணி மேலும்
      உயர்வடைய கோடி வாழ்த்துகள்
      கூறி மகிழ்கிறோம்

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!