About Me

Showing posts with label தரிசனம். Show all posts
Showing posts with label தரிசனம். Show all posts

2012/09/21

தவறுகளும் தண்டனைகளும்


இது ஒரு படமோ....நாவலோ இல்லை...
பல மாணவ விழிகளை அதிர்ச்சியாக்கிய உண்மைச் சம்பவம் !

அவன் பத்தாம் வகுப்பில் கற்கும் மாணவன்....வயதுக்கேற்ற உடல்வாகு!
கட்டிளமைப்பருவத் துடிப்புக்கள் (காதல் சேஷ்டைகளல்ல...) அவனிடம் சற்று அதிகமாகவே இருந்தது. அவனைச் சுற்றி வட்டமிடும் நண்பர் கூட்டங்கள் வேறு! .அவர்கள் இவனை ரசிக்க வேண்டுமென்பதற்காகவே இவன் ஏதாவது செய்வான்......

கற்பிக்கும் போது, படிக்க ஆர்வமில்லாவிட்டாலும் கூட, எதையாவது சொல்லி ஆசிரியர்களைக் குழப்பத் துடிப்பான். அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவனைக் கட்டுப்படுத்தும் ஆயுதம் சிறிய தண்டனைதான்...ஏச்சுடன் அடியொன்று போடும்போது அடங்கிவிடுவான்...தன் நண்பர்கள் முன்னிலையில் தான் அவமானப்படுத்தப்படுவதாக உணர்ந்து மௌனமாகி விடுவான்.  கொஞ்ச நேரம் வகுப்புக்கூரை விட்டத்தை வெறித்து பார்த்துக் கொண்டேயிருப்பான். நாலைந்து தடவை அவன் பெயரை உச்சரித்து, பாடத்துக்குள் அவனை நுழைக்கும் போதே கொஞ்சமாவது கரும்பலகையைப் பார்ப்பான். ஆனால் பாடம் அவனுக்குள் நுழையாது..

ஏதோ பெற்றோரின் வற்புறுத்தல், அவனை பல மைல் தொலைவிலிருந்து பாடசாலைக்குள் விரட்டுகின்றது! பஸ் பயணம் அவனுக்கு விலக்கப்படமுடியாத சுமையாகிப் போனது!

சில நாட்களாக அவனை அவதானிக்கின்றேன்...எதையோ யோசித்துக் கொண்டிருப்பான்..அவன் தன் பிரச்சினையை எம்முடன் பகிர்வதாக இல்லை. அவனது போராட்ட  மனநிலையின் அழுத்தம், இப்போதெல்லாம் அவனது குழப்படியை விழுங்கி விட்டது..அவனது அமைதி சற்று ஆச்சரியமான விடயம்தான்..

அன்று..........இடைவேளை மணி அடித்தோய்ந்தது..மாணவர்க் கூட்டம் வகுப்பிற்குள் நுழைய முற்படும் நேரம்..........

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது, மாணவப் படையினர் மைதானத்தை நோக்கி ஓடுகின்றனர்..

"யாரோ........சண்டை பிடிக்கிறாங்க"

ஏனைய மாணவர்களின் கூவலைக் காற்றும் உள்வாங்குகின்றது. இவர்கள் ஏன் ஓடுகின்றார்கள்....?

"சண்டையை ரசிக்கவா.....விலக்கவா...அல்லது தாமும் இதனைப் போல் பழகிக் கொள்ளவா ......புரியவில்லையெனக்கு !

அவனுக்கும், பதினோராம் வகுப்பு மாணவனொருவனுக்கும் நடைபெறும் போராட்டமது...அந்த பதினொராம் வகுப்பு.மாணவன்....மாணவத் தலைவனாக இருப்பவன்!.

இவனிடம், அவன் ஏதோ ஒரு குறை கண்டு, அதற்காக இவனை அவனடிக்க, (மாணவர்த்தலைவர்களெல்லாம் இப்போ அதிகாரத்தை தன் கையிலெடுத்து ஹீரோவாக நினைக்கின்றார்கள் போல்) பதிலுக்கு இவனும் அடிக்க.........

தனியாள் சண்டை, வகுப்பு கோஷ்டி மோதலாக மாற, இவனுக்காக இவன் நண்பர்களும், அவனுக்காக அவன் நண்பர்களும் ரகஸியமாக யுத்தமொன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்..

இந்தப் பிரச்சினை முற்றி, அந்த மூத்தவன் தன் நண்பனின் துணையுடன் இவனைத் தேடி வந்தான். இவனது சேர்ட் கொலர் அந்த மூத்த மாணவன் கையில்...............

சுற்றியிருந்த மாணவர்கள் முன்னிலையில், பத்தாம் தர மாணவன், பதினோராம் வகுப்பு மாணவனால் கீழே வீழ்த்தப்பட, அந்த மூத்தவர்கள் இருவரும் மாறி மாறி அவனின் முகத்தில் குத்தினார்கள்..

(இப்போதெல்லாம் கண்ட கண்ட படங்களைப் பார்த்திட்டு, தாமும் அந்த கதா பாத்திரமா மாறனும் நினைக்கிற பசங்கதான் அதிகம் )

அந்தச் சின்னவன் எழ முயற்சித்தான்..........முடியவில்லை..தன் உடலின் பின்புறம் யூனிபோமில் மறைத்து வைத்திருந்த கூரிய பளபளக்கும் கத்தியை , யாரும் எதிர்பாராத விதமாக உருவி வெளியே எடுத்தான். கத்தியைச் சுற்றியிருந்த கடதாசி மின்னல் வேகத்தில் காற்றில் பறந்தது. அவன் உருவிய வேகத்தில், அக்கத்தியின் விளிம்பு அவன் கையைப் பதம் பார்க்க, இரத்தம் வெளியே எட்டிப்பார்த்தது.

"சதக்"........

தன்னைக் கீழே விழுத்தி, அழுத்திக் கொண்டிருக்கும் எதிரி மாணவனின் நெஞ்சை நோக்கி கத்தி வேகமாகப் பாய்ந்தது...

அந்த மின்னல் வேகத்தில், கத்திக்குத்துக்கு இலக்காகவிருந்தவனின் நண்பன் பாய்ந்து அதனைத் தடுக்காவிடில், நிச்சயம் கொலையொன்றும் அக் கொலைக் குற்றத்திற்காக சிறைத் தண்டனையோ, சீர்திருத்தப் பள்ளிக்கான அனுமதியோ இருவருக்கும் கிடைத்திருக்கும்...

கத்தியை பாடசாலைக்குள் கொண்டு வந்த மாணவன் விசாரிக்கப்பட்டு, அவனது தந்தையை வரவழைத்து வீட்டுக்கு அனுப்பப்பட்டான். இன்று அவன் ஓர் குற்றவாளி. அவன் தனது தற்காப்புக்காக கத்தியைப் பாவித்தாலும் கூட, பாடசாலைக்குள் அதனை கொண்டு வந்தது தவறு..அவன் பாடசாலையை விட்டு நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ இடைநிறுத்தப்படலாம். அவனது செயலுக்காக அவனது தந்தை அழுதார்..அந்தக் கண்ணீர் , வீட்டுக்குச் சென்றதும் ஆத்திரமாக மாறி, நிச்சயம் அம் மாணவனைத் தண்டிக்கும்.

அம்மாணவன் தன் முன்கோபத்தால் இன்று ஒரு கொலையாளியாக மாறியிருந்தால், அவனது எதிர்காலமும், அவனை நம்பி வாழ்க்கையொன்றை அவனுக்குக் கற்றுக் கொடுக்க முயன்று கொண்டிருக்கும் பெற்றோரின் கனவுகளும் அர்த்தமற்றுப் போயிருக்கும்......நினைக்கவே உடலெல்லாம் புல்லரிக்கின்றது!

(இது இச் சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த ஏழாம் வகுப்பு மாணவன் சொன்ன தகவல்...இச் சம்பவம் இடைவேளை நேரமாகையால், ஆசிரியர்கள் யாவரும் ஆசிரிய ஒய்வறையிலிருந்த போது நடைபெற்ற சம்பவம், திட்டமிட்டே அந்த இரு மாணவர்களும் தாக்கப் போயிருக்கின்றனர்.

பாடசாலையென்பது ஒழுக்க விழுமியங்களைக் கற்றுக் கொள்ளும் கூடம். சிறந்த மனித உற்பத்திகளை சமுகத்திற்கு வழங்கும் முயற்சியில் நாம் போராடும் இக்கால கட்டத்தில், மாணவர்கள் தாம் காணும் சமூகத்தாக்கத்தினால் வன்முறையாளர்களாக மாறுகின்றனர்.. இந்த வன்முறை ஆரம்பமே பின்னர் பெரிய வன்முறைகளுக்கும் வித்திடுகின்றது........பாடசாலையை யுத்தகளமாக்க ஒருசாரர் முயன்று கொண்டிருக்கும் இக்காலத்தில், ஆசிரியர்த்தொழிலென்பது பெரும் சவாலே!

மாணவர்கள் விடும் தவறுகள், அவர்களின் வாழ்க்கைப்பயணத்தையே மூழ்கடித்து விடும் பெரும் தண்டனையாக மாறிவிடுகின்றது என்பதை இன்றைய அவர்களின் வாலிப, கட்டிளமைப் பருவ வயது உணர்த்தப்போவதில்லை.  அவர்கள் எதிர்காலத்தில் வாழ்வியலை உணரும்போதுதான்,  வாழ்வின் பசுமைகள் யாவும் அவர்களை விட்டு நீங்கிப்போயிருப்பதை உணர்வார்கள்..

இன்று நவீனத்துவத்தின் பிடிக்குள் பல நன்மைகளை அனுபவிக்கும் இவ்விளஞ்சமுதாயம், தனது ஒழுக்கவியலையும் தானே வகுத்து, அதனடிப்படையில் நடைபயில முயலவேண்டும்..இது இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையுமாகும்.

உளரீதியில் திருந்த முயலாதவனை, அடுத்தவர் திருத்த முடியாது. இதுவே நிஜம்!




2012/09/14

ஏனோ இப்படி


இன்று தொழில்கூடத்தில் ஓர் பெண் ஆசிரியையால் நான் எதிர்நோக்கிய சம்பவமே  இதனை பதிவிடக் காரணமாகிக் கிடக்கின்றது....

மாணவர்களின் கற்றலடைவை பரீட்சைகள் மூலம் பரீட்சித்து, மாணவர் பெற்ற அறிவு, ஆற்றலை பெற்றோருக்குக் காட்சிப்படுத்த மாணவர் தேர்ச்சியறிக்கையை ஆசிரியர்கள் பதிவிட்டு, பெற்றோருக்கு அதனை அனுப்பி வைப்பதுண்டு.. அதற்காக நாங்கள் பரீட்சைப்புள்ளிகளைப் பதிவிட, அதற்கான படிவங்களைப் பயன்படுத்துவதுண்டு!

சென்றமாதம் முடிவுற்ற இரண்டாம் தவணைப் பரீட்சைப் புள்ளிப் படிவங்களைப் பதிவிட்டு உரிய பகுதித் தலைவரிடம் ஒப்படைத்தேன். வழமையாக நான் யாரிடமும் எந்தப் படிவமும் ஒப்படைக்கும் போது, அவர்களின் கையெழுத்தினைப் பெறுவதுண்டு. ஏனெனில் பல தடவைகள் நான் ஒப்படைத்தவற்றை தரவில்லையென்று முரண்பட்ட என் சக ஊழியர்கள் சிலர் தந்த அனுபவப்பாடங்களால் நான் கற்றுக் கொண்ட படிப்பினையே இது! இருந்தும் அன்றேனோ ஏதோ ஓர் அவசரத்தில் நான் ஒப்படைத்த படிவத்திற்கான கையொப்பத்தை பெற மறந்து விட்டேன்......!

அன்று கொடுத்த அந்தப்படிவத்தினை  உரிய பகுதித் தலைவரிடம் திருப்பிக் கேட்ட போது, அடித்துச் சொன்னார் தன்னிடம் தரவில்லையென்று ....நானும் சூடானேன்.....மனிதர்களுக்கு மறதி இயல்புதான் .அதிலும் வயது அதிகரித்த நிலையில் மறதி தவிர்க்கமுடியாத இயல்பொன்றே..ஆனால் அந்த ஆசிரியை
தன் மறதிக்கு நியாயம் தேடய செயலை என்னால் மன்னிக்க முடியவில்லை, என் வெறுப்பில் வீழ்ந்த அந்த மூத்தாசிரியை எனக்கு தந்த மனவழுத்தத்தில் இன்று எனது கற்பிக்கும் மனநிலையையே மாறியது. சில நியாயங்கள் அநியாயக்காரர்களால் சமாதியாகின்றன.

என்னிடம் திரட்டூக்கம் சிறுவயதிலிருந்தே அதிகமாகக் காணப்பட்டதனால் எப் பொருளையும் நான் உடனே வீசுவதில்லை. பிறகு தேவைப்படும் என சேகரித்து வைத்திருப்பேன். அத்தன்மையால், இப் புள்ளிகளின் பதிவுகளின் மூலப்பிரதி என் வசமிருந்ததால், எனக்குரிய பாடசாலைக் கடமையை தடையின்றி  பிறர் விமர்சனம் தவிர்த்துச் செய்து முடித்தேன்..

பிறரை நம்புவதால், எனக்கேற்ற துன்பத்தால் நானின்று மானசீகத் தீர்மானமெடுத்தேன்...

"இனி எப் பொருள், படிவத்தை பிறரிடம் ஒப்படைக்கும் போது, அவர்களின் கையொப்பத்தை கட்டாயம் பெற வேண்டும்"

மனிதர் ஒவ்வொருவரும் சூழ்நிலைக் கைதி, சுயநலவாதி, தம்மை நியாயப்படுத்தவே காலத்தைப் பயன்படுத்துகின்றனர். இம் மனிதர்களின் செயல்களே அவர்களை நம்முள் அடையாளப்படுத்துகின்றன. முரண்களை வெளிப்படுத்தும்  மனிதர்களிலிருந்து, நாம் ஒதுங்கிக் கொள்ளும் போது, பிரச்சினைகளும் விலகியோடுகின்றன...

ஒருசிலரின் இவ்வாறான செயற்பாடுகளால், நண்பர்கள்.........உறவுகள் யாருமற்ற வெட்ட வெளியில் என் சிறகுகள் பயணிப்பதைப் போன்றவுணர்வு ஏற்படுகின்றது இப்போதெல்லாம்......

பிரச்சினைகள் காணப்படாத இந்தத் தனிமை ரொம்பப் பிடிக்கின்றது. இத் தனிமைக்குள் வீழ்ந்து கிடக்கும் முயற்சியில் என் பயணச்சுவடு தனக்கான தேசத்தை தேடலில் கண்டறிந்துள்ளது.

இந்தத் தனிமை தேசம் எனக்குப் போதும்......இந்தவுலகில் பிறர் இம்சைகள் களையப்பட்டுள்ளன. சோகத்தை வடிக்கும் இதமான கண்ணீரும், மனதை சிவக்க வைக்கும் துன்பங்களும் என்னுறவாக, தனிமைக்குள் நடை பயில இதோ புறப்பட்டேன்.................

நானும் பெண்தானே!

2012/09/13

உடன்பாடுகளும் முரண்பாடுகள்


பெண் பற்றிய பார்வை
--------------------------------
மனித வாழ்வானது பாரிய விளையாட்டுத்திடல் போன்றது..பலர் நம் வாழ்வின் போக்குகளை ரசிக்க, விமர்சிக்க வந்து போவார்கள். வாழ்வின் சந்தோஷங்களையும், இம்சைகளையும், வேதனைகளையும் பகிரவும் , தோள் சாயவும் உறவுகளும் நட்புக்களும் நம்மை அரவணைத்துக் கிடப்பார்கள்..........!
இவ் அழகான வாழ்வின் மைல்கல் தான் தொழில்!

தொழில் புருஷலட்சணமென்பார்கள். ஆணோ பெண்ணோ தனக்கென ஓர் தொழிலைத் தேடி, தன் காலில் நிற்குமளவிற்கு சம்பாதிக்கும்போதே, தன்னம்பிக்கையுடன் கூடிய வாழ்வை அனுபவிக்கவும், பிறர் முகஞ்சுளிக்காமல் தத்தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் முடிகின்றது.

தொழில் என்பது தற்காலத்தில் பெண்களுக்கு வாழ்க்கைப் போராட்டமாகும். தன் தொழிலுலகத்தையும், குடும்பத்தையும் சமாந்திரமாக வழி நடத்திச் செல்லும்போதே,  பிரச்சினைச்சுழிகளில் அகப்படாமல் தப்பிக்க முடியும். தன் கணவன், பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தை கவனிக்கும் அதே நேரம், தொழில் கூடத்தின் கடமைகளையும் சரிவரச் செய்ய வேண்டியவளாக பெண்ணவள் உள்ளாள்.

வாழ்க்கைப்போராட்டம் உச்ச அளவில் தன் வாயைப் பிளந்து , நிம்மதியை உறிஞ்சிக்கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், இருவர் சம்பாதிக்கும் குடும்ப வாழ்வே ஓரளவாவது தமது தேவைகளை நிறைவேற்றி நகர்ந்து கொள்ளக்கூடியதாகவிருக்கின்றது.

குடும்பத்தில் விட்டுக்கொடுப்பும், சகிப்புத்தன்மையும், பொறுமையும் பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கே அதிகமுண்டு
( விதிவிலக்கான பெண்களை இங்கு நான் கணக்கிலெடுக்கவில்லை. )

இவ்வாறான மன அழுத்தங்களுடன் வேலைத்தளத்திற்குச் செல்லும் பெண்கள் , அங்கு நிர்வாகத்துடனும், சக ஊழியர்களுடனும் முரண்படும் தன்மை இயல்பாகவே ஏற்படுகின்றது. சிறு விடயங்களுக்கெல்லாம் பகைமையை தனக்குள் பூசி, அவற்றை உருத்துலக்குபவர்களாகவும், விமர்சிப்பவர்களாகவும் இவர்கள் இருக்கின்றார்கள்.

ஆக, ஒரு பெண்ணின் போக்கானது, குடும்ப வாழ்வெனும் அத்திவாரத்திலிருந்தே எழுப்பப்படுகின்றது. நல்ல கணவனை தன் வாழ்க்கைத்துணையாகக் கொண்டவள் வாழ்வு பற்றிய சவால்களிலிருந்து வெற்றிபெறக்கூடிய மனவலிமையைப் பெறுகின்றாள்.....!

மாறாக, ஒவ்வொரு இரவின் நிசப்தத்திலும் கூட, அவளின் துடிக்குமிதய ஒலியின் ஆர்ப்பாட்டங்களில் கண்ணீர் ரகஸியமாய் கறைத்திட்டுக்களாய் படியும் சந்தர்ப்பங்களையும் சில கணவன்மார் கொடுப்பதுண்டு!

அக்கினிக்குள் தன்னைப் பொருத்தி, இம்சைக்குள் தன் மூச்சுக்காற்றை நனைத்து வாழ்வு மறுக்கப்படும் பல பெண்கள், இன்றும் ஆண்களின் அடிமைப் பொட்டகத்தால் இறுகக் கவசமிடப்பட்டே இருக்கின்றனர்.

பிறப்பு, இறப்பு எனும் இரு எல்லைக்குள் உருண்டு மருளும் இந்த வாழ்வினை, பெண்ணால் அறுத்தெறிய முடியாது. ஏனெனில் கண்ணாமூச்சிகளாய் குவிந்தெழும் பல உறவுகளின் இறுக்கத்தழுவலிருந்து விடுபட முடியாத கடுமையான போக்கு பெண்ணில் காணப்படுகின்றது. எனவே இவ்வுலகிலிருந்து அவள் வாழ்வை மரணம் கொத்தும் வரை வாழத்தான் வேண்டும்.

இத்தகைய மன இறுக்கத்தில் தொழிலுக்குச் செல்லும் பெண்கள்,  பிறருடனான முரண்பாட்டையே  அதிகம் வெளிப்படுத்துகின்றனர் இதுவே நிதர்சனம்.......நான் என்னுடன் தொழிலாற்றும் சிலரை இதற்காக ஒப்பிடமுடியும். அவர்களிடம் (சில பகுதித்தலைவர்கள்) சில தொழில்சார் படிவங்களை ஒப்படைத்தால், அவற்றை வாங்கிக் கொண்டு சில நாட்களில் தரவில்லையென்று பிடிவாதத்துடன் மறுப்பார்கள்.எம்மை வம்பில் மாட்ட தெரிந்துகொண்டுதான் இத் தவறுகளைச் செய்கின்றனரா...........அல்லது தமது ஞாபக மறதியை நியாயப்படுத்தச் செய்கின்றனரா............புரியவில்லை. இத்தகைய முரண்பாட்டில் ஆர்வமுடையவர்களை நட்புப்பாதையிலிருந்து சற்று விலக்கி வைக்கும் போது சில, பல பிரச்சினைகளைத் தவிர்க்கலாமென்பது என் திண்ணம்.


2012/09/09

அடடா.........



டொக்..........டொக்..............!

இப்பொழுதெல்லாம் ...........காற்றின் சலசலப்பில் வீட்டுக்கூரையின் தலையை அடிக்கடி விளாங்காய் குட்டிக் கொண்டிருந்தது..

"பிள்ள..வெளில பேய்விடுவாள்......கவனம் ........தலைல விழுந்திடும்"

சின்னவளைக் கண்காணிக்கும் தந்தையின் குரலெடுப்பால், அதன் விழுகைச் சத்தம் அடிக்கடி என் கவனத்தைக் கிள்ளிக் கொண்டிருந்தது!

வீட்டின் வெளிவாசல் கேட் (படலை) சந்திக்குமிடத்தில் தான், தன் கிளைகளைப் பரப்பி நிமிர்ந்து நிற்கின்றது  பெரிய விளாமரமொன்று.. இப்பொழுது விளங்காய்  சீசன்..மின்குமிழ் பொருத்தியிருப்பது போல மரம் நிறைத்து விளாங்காய்களும் தொங்கிக்கொண்டிருக்கின்றன.

வழமையில் கனிந்த விளாம்பழமென்றால் சீனி பிரட்டி ஒருபிடி பிடிப்பேன். செங்காயென்றால் உப்பில் நனைத்த நிலையில், அது என் சமிபாட்டுத் தொகுதியை நிறைத்திருக்கும்............

ஆனால் இம்முறை மரத்தில் அதிகமாகக் கண்ட விளாங்காய் ஆர்வத்தைத் தரவில்லை. எதனை அதிகமாகக் காண்கின்றோமோ அது அலுத்துவிடும் என்பதனை சும்மாவா நம் முன்னோர்கள் சொன்னார்கள்.

பாடசாலை விடுமுறை விட்டிருந்த ஓரிரு நாட்களில், வெறுமைப்பட்ட என் பொழுதுகளை விரட்ட நொறுக்கித்தீனியாக விளாங்காயைச் சுவைத்ததில் அதன் ருசி பிடித்துப் போக இப்பொழுதெல்லாம் விழும் முதல்காயை எனக்கு எடுத்து வைப்பதே என் தந்தைக்குக் கடமையாகி விட்டது. அதிலும் செங்காயின் உட் சதையைவிட, அதனைச் சூழ்ந்திருக்கும் அந்த ஓட்டுப்பகுதியின் சுவையோ தனி!

வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் எங்கள் கார்க் கண்ணாடியினை அது பதம் பார்த்துவிடுமோ வென்ற ஆதங்கமும் அதன்பால் என் தனிப்பட்ட கவனத்தைத் திசை திருப்பி விட்டிருந்தது.

பகலில் காற்றுடன் கூடிய வறட்சி எவ்வளவு இருக்கின்றதோ, அதே போல் இரவில் கடும் குளிருடன் கூடிய காற்றும் உடலை மெதுவாக அழுத்தி இதம் தருவது தொடரான நிகழ்விங்கே!

இந்தக் காற்றின் பலத்தில் சிக்குண்ட  பல விளாங்காய்கள் நிலத்தில் சிதறி விழுந்து முற்றத்தைக் காயப்படுத்திக் கொண்டிருந்தன. நல்லவை எமக்குள் உறவாக ஏனையவை அழுக்குக் கூடைக்குள் தலைகுப்புறமாக ஒன்று சேர்ந்தன.

பின்னேரங்களில் அயல்வீடுகளிலுள்ள சிறு வாண்டுகள் எங்கள் வீட்டுமுற்றத்தில்  அணி திரள்வார். மரத்துக்கும் அவர்களுக்குமிடையில் கற்களால் சிறு யுத்தம் கூட நடக்கும். சிறுவர்கள் தம் யுத்தத்தில் வெற்றி பெற்ற களிப்பில் கை நிறைய விளாங்காயை அள்ளிக் கொண்டு போவார்கள். அவர்களின் களிப்பும், என் ரசிப்பும் தொடரத்தான் செய்தன பல மாலைப் பொழுதுகளில்!

இன்று மாலை திடீரென வீட்டுக் கேட்டைத் தள்ளிக் கொண்டு ஓர் ஆங்கிலத் தம்பதிகள் எமது வீட்டுக்குள் உள் நுழைய  வீட்டிலுள்ளோர் முகத்தில் கலவரம் கோடாகிப் படிந்தது.

வந்தவர்கள் எதுவுமே பேசவில்லை. எமது மௌனத்தையும், ஆச்சரியமான புன்னகைகையும் தமது சம்மதமாகக் கருதியவாறு, தம் கைப்பையில் செருகி வைத்திருந்த "டிஜிட்டல்" கமெராவை இயக்கி, விளாமரத்தை பல க்ளீக் செய்தார்கள். அவர்கள் விசிறிய ஒளிவீச்சில் மரம் நாணிக் கோணியிருக்க வேண்டும். வழமையை விட காற்றில் மிதமாக அசைந்தது. அவர்கள் தம் மகிழ்வை புன்னகையாக்கி தம் வேலையை நிறைவேற்றிய ரசிப்பில்  நன்றி செலுத்தியவாறு புறப்பட ஆயத்தமானார்கள்.

ஏற்கனவே வீட்டில் சேகரிக்கப்பட்டிருந்த சில பெரிய விளாம்பழங்களை பையிலிட்டு அவர்களிடம் கொடுத்த போது இதழ்கள் குவித்து இருவருமே ஒரே நேரத்தில் நன்றியை தந்தவாறு புறப்பட்டனர்.

புறப்படும் நேரத்தில் கூட ஓர் விளாங்காயை உடைத்து அதன் சுவையை நாவில் பரப்பியவாறு வீதியிலிறங்கி நடக்கத் தொடங்கினர். அவர்கள் போகு மழகை நான் பல நொடிகள் விழியில் விழுத்தி ரசித்துக் கொண்டிருந்தேன்.

எது அதிகமாகக் கிடைக்கின்றதோ, அது நமக்குள் அற்பமாகவும் எது அற்பமாகக் கிடைக்கின்றதோ, அது நமக்குள் அபூர்வமாகவும் தோன்றிவிடுகின்றது. இதுதான் மனித இயல்பு. 

மனிதன் தன் மனங்களின் அரசாட்சியினூடாகவே தன் வழிப்படுத்தலை மேற்கொள்கின்றான் என்பதே நிதர்சனம்!



















2012/09/06

வெள்ளத்தின் உள்ளத்திலே


நமது கடந்தகாலங்கள் என்றுமே நம்மால் மறக்கப்பட முடியாதவை. ஏனெனில் அவற்றின் ஞாபகங்கள் நிகழ்காலத்தின் ஏதோவொரு சம்பவங்கள் மூலம் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.

அந்தவகையில் எமதூரில் தற்போது கடும் வறட்சி நிலவுகின்றது. இந்த நீர்ப்பற்றாக்குறையும், பல குளங்களின் வற்றலும் எனக்கு தந்த ஞாபக உதிர்வாய் பதிவாகின்றது இந்தப் பதிவு!

2010 ஆண்டு ஜனவரி மாதம் அநுராதபுர நகரில் தாராளமாக மழை பெய்தது. இங்குள்ள பிரசித்தி பெற்ற குளங்கள் எல்லாம் நிறைந்து, வீதி வழியே உலவத் தொடங்கின. வீடுகளில் வெள்ளம் புகுந்து வேடிக்கை பார்க்க, உயிரைக் கையில் பிடித்த மக்களோ, பொது இடங்களில் பிரார்த்தனையுடன் தஞ்சம் புகுந்தனர். பாடசாலைகள், தொழில் நிறுவனங்கள் வாரக்கணக்கில் மூடப்பட்டன. இப்பகுதியில் ஏற்பட்ட இவ் வெள்ளம் மக்களுக்கு முதல் அனுபவமாதலால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பதற்றமும் சிரமமும் அடைந்தனர்.

எம்மிருப்பிடமான அநுராதபுர நகரின் வீடுகள், பாடசாலைகளிலும் வெள்ளம் புகுந்து பலவற்றை அழித்தன. சிறைச்சாலை வளவினுள் புகுந்த வெள்ளத்தால் அங்கிருந்த பொலிஸ் வாகனங்கள் புதைந்தன. போக்குவரத்துக்கள் தடைப்பட்டன. வீதிகள் உடைந்தன. வெள்ளம் பார்க்க வரும் பிற இட மக்கள் வெள்ளமும் நிறைந்தன.

யாரும் யாருக்கும் ஆறுதல் கூறமுடியாத நிலை. இதற்குக் காரணம், வெள்ளத்தால் நீர்மட்டம் நிரம்பி வழிந்த மல்வத் ஓயாவின் அருகில் எம்மிருப்பிடம் இருந்ததுதான்.

இன்னும் தொடர்ந்து மழை பெய்தால், அந்நீரால் நாச்சதுவ குளம் நிரம்பி அவ்வூருக்குள் நீர் புகும் எனவும், இதனைத் தடுக்க அக்குள அணைக்கட்டு உடைக்கப்பட்டு குளநீர் வேறு திசைகளுக்கு பரவ விடப்படும் எனக் கூறப்பட்டது.

 மேலதிகமாக மழைபெய்து இவ்வாறு நாச்சதுவ குள அணைக்கட்டும் உடைக்கப்பட்டிருந்தால் , அநுராதபுர நகரின் பெரும் உட்பகுதிகளின் நீர்மட்டம் 10 அடிக்குயர்ந்திருக்கும். இதனால் இம்மக்களின் சொத்துக்கள் நீரால் உறிஞ்சப்பட்டிருக்கும்.

மனப்பீதியுடன், உயிரைக் கையில் பிடித்து வைத்திருந்த எம்முதடுகள் இறைவனைத் துதித்தவாறே இருந்தன. அல்ஹம்துலில்லாஹ்!

அன்று வான் கண்ணீரின் தாராளம் மக்களைச் சினக்க வைத்தது. இன்றோ சூரிய கதிரின்  தாராளமும் மக்களை சினக்க வைக்கின்றது.

அதிகமாகக் கிடைக்கும் எதிலும் ஆபத்துக்களே நமக்குள் குவிந்து கிடக்கின்றன எனும் அந்த சிந்தனையை  மனதுள் அழுத்துகின்றன இப்புகைப்படங்கள் ! 
                                   
                                                         வீதியில் வெள்ளம்




எங்கள் பக்கத்து வீட்டை மூழ்கடித்த வெள்ளம்


எங்கள் வீட்டு வளவு


எங்கள் வீட்டின் பின்புறம்


எங்கள் வீட்டின் முன்பகுதி


எங்கள் வீடு


அநுராதபுர பொலீஸ் விடுதி


                              அநுராதபுர சிங்க கணு அருகில்

           
             வெள்ளத்தால் மல்வத்து ஓயா நிரம்பி வழிதல்
                                                 
                                                     
                                             மிஹிதுபுர வீதி


2012/08/22

பபா அம்புலி


வான் இருளை சற்றுக் கலைக்கும் வண்ணம் வானில் கால்வாசி மாத்திரம் நிரப்பப்பட்ட வண்ண நிலாவொன்றும், தம் மழகையும் ரசிக்கும்படி கண் ஜாடை செய்யும் பல நட்சத்திரங்களும், தம் ஒளியை வானில் அள்ளி வீசி இருளை சற்று அகற்றிக் கொண்டிருந்த அந்த நேரம் எங்கள் வீட்டுச் செல்லம் அஸ்கா, என் கைகளைப் பற்றி யிழுத்தவாறே வீட்டின் முற்றத்தில் கொண்டுபோய் நிறுத்தினாள்....

" என்ன குஞ்சு காட்டப் போறீங்க எனக்கு " 

நான் அவள் கன்னத்தை செல்லமாக வருடியவாறே கேட்டேன்.

"பபா அம்புலி வந்திருக்கு......அதைப் பார்க்கணும் "

என்றாள் அந்த மூன்று வயதும் நிரம்பாத மழலை!

பபா அம்புலி..........!

பாதி உடைந்திருக்கும் அந்த நிலாவுக்கு அவளிட்ட அந்தப் பெயர் கூட அழகாகத்தான் இருக்கின்றது. நானும் ரசித்தேன் அந் நிலவின் எழில் கசியுமந்த அழகை அவளுடன் சேர்ந்து நெடுநேரமாய்!

அஸ்கா............

வழமையாக அம்புலிக்குப் பயம்...அவளுக்கு தினமும் உணவூட்டுவதென்பது எங்கள் வீட்டில் பெரும் போராட்டம் தான். குழந்தை சாப்பிடுவதில் அக்கறை காட்டமாட்டாள். இரவில் உணவுண்ண அடம் பிடித்தால் இந்த நிலாவைக் காட்டித்தான் உணவூட்டல் நடைபெறும். அம்புலி மீதான பயத்திலும், தனதுணவை அம்புலிக்கு கொடுத்து விடுவார்களோ எனும் ஆதங்கத்திலும் உண்ணச் சம்மதிப்பாள். இப்படியாவது ஏதோ சிறு உணவுக் கவளங்கள் அவள் சமிபாட்டுத் தடத்தில் இறங்கி விடுகின்றதே எனும் திருப்தி எமக்கு!

அம்புலிக்குப் பயப்படும் பிள்ளை என்னை இழுத்து வந்து வானத்தைக் காட்டும்படி இன்று கூறியதைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன்......

"அஸ்கா பபா........நீங்க அம்புலிக்குப் பயமில்லையா"

நான் அப்பாவி போல் பிள்ளையிடம் கேட்க, அவள் பயம் என தலையாட்டினாள்

"நான் உம்மா அம்புலிக்குத்தான் பயம் , ஏன் நம்ம வீட்டுக்கு வருது" 

பிள்ளை தொடுத்த வினாக்களை ரசித்தேன் மெல்லிய புன்னகையை என்னுள் பரப்பியபடி !

ஏனோ சின்னப் பிள்ளைகள் தொலைவில் எட்டிப் பார்க்கும் நிலா மீது ஆசையை வைத்தாலும் கூட, பயத்தையும் வெளிப்படுத்துகின்றார்கள்..நிலா பற்றிய பிரக்ஞ குழந்தைகளுக்கு வெறும் கற்பனையுருவாகவே அமைந்து விடுகின்றது..கொஞ்சம் வெளியுலகைப் பார்க்கும், பிரித்தறியும் பக்குவம் வரும் போது நிலாவைத் தோழியாக்கி ரசிக்கின்றது பிள்ளை மனம்!

"ஓ..........உம்மா அம்புலி (பூரண நிலா) இன்னும் கொஞ்ச நாள்ல வந்திடுவா..அதுவரைக்கும் இந்த பபா அம்புலிதான் நம்மட வீட்டுக்கு வரும் " 

நானும் குழந்தையுலகில் பயணித்து அவளுக்கு சில விடயங்களைப் புரிய வைக்கத் தொடங்கினேன்.

"பபா அம்புலி எங்க போயிருந்தது " 

குழந்தை வினவ, நானும் சளைக்காமல் அவளுக்கேற்ப பதில் சொன்னேன்..

"பபா அம்புலி காலைல ஸ்கூல் பொயிட்டு, நைற்தான் அச்சா பபாவ பார்க்க வந்திருக்கு.......அந்த பபா அம்புலியோட விளையாடுவோமா நாம ரெண்டுபேரும்"

நான் இயல்பாகக் கேட்க, குழந்தை அபிநயத்து தான் அதற்குப் பயமென்பதை கூறி அவசரமாக மறுத்தாள்.

குழந்தையின் ஆர்வம் திடீரென நட்சத்திரங்கள் மீதும் பரவியது.

"இது என்ன"  வினவினாள் ஆவலுடன்...........

"இது தான் நட்சத்திரம்....ஸ்டார் .........."   

ஒற்றை நட்சத்திரமொன்றைச் சுட்டிக் காட்டிச் சொன்னேன். பிள்ளையும் கஷ்டப்பட்டு தன் மழலை மொழியில் நான் கூறிய அந்த வார்த்தைகளை மீள எனக்கு சொன்ன போது, அந்த மழலைத் தமிழை சில நிமிடங்கள் மெய்மறந்து ரசித்தேன்.

"அப்ப ஸ்டார் என்ன செய்யுது  ஏன் அங்கு வந்துது"  

பிள்ளையின் அடுத்த வினாத் தேடல் களத்தில் இறங்கியது.

"பபா நிலாட விளையாட்டுச் சாமான்கள் தான் நட்சத்திரம்.........பபா நிலா குழப்படி அதுதான் தன் விளையாட்டுச் சாமான்கள வானத்தில வீசியிருக்கு.... அஸ்கா பபா அச்சாவா கூடாதா, இப்படி விளையாட்டுச் சாமான்கள வீசியெறிவீங்களா"

நான் கேட்க, குழந்தை தன் கைகளை விரித்துக் காட்டியபடி  "அச்சா பபா" என்றாள். அவளை வாரியணைத்து கன்னத்தில் என் அன்பைப் பதித்து அவள் தலையை மெதுவாக வருட ஆரம்பித்தேன். 

இரவில் மெதுவாக வீசிக்கொண்டிருக்கும் கூதல் நிரம்பிய காற்றின் வருடலில் அவள் மழலை சுகம் மனதுக்குள் மானசீகமாக இறங்கிக் கொண்டிருந்தது.

இந்த வயதில்தான் பிள்ளை தன் சூழல் அனுபவங்களால் உலகையறிய முயற்சிக்கின்றது.  குழந்தையின் புத்திக்கூர்மையும் மெதுவாகப் பட்டை தீட்ட ஆரம்பிக்கப்படுகின்றது.  எனவே எதற்கெடுத்தாலும் வினாக்களே சிந்தனைத் தூண்டலாக மாற்றப்படுகின்றது. ஏன்.............எப்படி......எங்கு......இவ்வாறான வினவல்கள் தான் அவள் வார்த்தைகளுடன் இணைந்து தன்னைச் சூழவுள்ள நிகழ்வுகளை மனதுக்குள் படமாக்க வுதவுகின்றது. நான் குழந்தை உளவியல் பற்றி அறிந்திருப்பதால் அவளின் வினாக்களுக்குப் பொறுமையுடன் உண்மையான விவரங்களை அவள் புத்திக்கேற்ப அவள் பாணியில் கூறுவேன்.......இது எனக்கும் பிள்ளைக்குமிடையிலான தின நிகழ்வு..பிள்ளை விரும்பும் உலகத்திற்கு நான் அழைத்துச் செல்லத் தயங்குவதில்லை....

"யூ டியூப்பில்" குழந்தை விரும்பும் ரயில் கார்ட்டூன்களும், வானத்து நிலாவும் தினமும் இரவில் பிள்ளை ரசிக்கும் உலகங்களாக கவிழ்ந்திருக்கின்றன!

நாளையும் நிலா வரும்...........பிள்ளை கேட்கும் இதே கேள்விகளுக்கு , எனது விடைகள் மாத்திரம் வேறுபடும்.........

இயற்கையின் ரசிப்புடன் கூடிய மழலை சுகம், என் இரவுத்துளிகளை பனித்துளிகளாக்கி என்னுள் உலாவவிடத் தொடங்கின வாஞ்சையுடன் ! 

அகம் மெய்மறந்து அந்த வுலகில் வேரூன்றத் தொடங்கினேன் யதார்த்த வுலகின் இம்சைகளைக் கலைந்தபடி!

2012/08/20

மிஸ்ட் கால் (missed call )


2010ம் வருடம்............. ...........!

என்  ரிங்டோனாய் இடப்பட்டிருந்த  ஒலியின் அலைவு பலமாக என்னுள் நுழைந்து என் கவனத்தை அதன்பால் திசை திருப்பியது...

கைபேசியை அவசரமாக எடுத்து அழைத்தவர் யாரெனப் பார்ப்பதற்கு முயல்வதற்கிடையில், அது "மிஸ்ட் கோலாக"ப் பதிவாகியிருந்தது. அன்றைய தினம் கைபேசியில் அந்த அழைப்பு ஒலிப்பதும், நான் தூக்குவதற்கிடையில் அது துண்டிக்கப்படுவதும், ...........எரிச்சல் என் மனதின் கொதிநிலையைக் கூட்டியது....

"யாராவது என்னுடன்  விளையாடுகின்றார்களா !"

என் வினாவின் தொக்கலில் மனதின் அடித்தளத்தில் எரிச்சலும், ஆச்சரியமும் மாறி மாறி என்னைக் கௌவிப் பிடித்துக் கொண்டன. இருந்தபோதும் என் சினத்தைக் கட்டுப்படுத்தி உண்மைநிலையை எனக்குள் ஆராய்ந்தேன்.

"எனது அந்தத் தொலைபேசி இலக்கம் என் குடும்பத்தினர் தவிர வேறு யாருக்கும் நான் பரிமாறியதில்லை. எனவே இவ்வழைப்பில் வம்பு நோக்கமில்லை. இது அறியாத பிழையான அழைப்புத்தான் "

என முடிவெடுத்த நிலையில் நானே குறித்த அவ்விலக்கத்தை டயல் செய்தேன்...

"ஹலோ".........நான்

"ஹலோ"..........மறுமுனை

"ஓயா கவுத".......... நான் ( நீங்கள் யார் )

".................... இன்னவாத " மறுமுனை  (...........இருக்கின்றாரா)

" ஓ சொறீ.....ரோங் நம்பர் " ........நான்

தொடர்பைத் துண்டித்த நான்,  அவ்வழைப்பை மறந்தவளாய் என் கடமைகளுடன் மூழ்கியிருக்க,  குறித்த நம்பரிலிருந்து இரண்டு மணித்தியாலத்தின் பின்னர் மீண்டும் எனக்கு அழைப்பு வந்தது.

எடுத்தேன் அதே குரல்.............!

என்னைப் பற்றிய தேடலுக்கான அழைப்பது. வழமையாக என்னைப் பற்றிய விபரங்களை அறிமுகமில்லாதவர்களுக்கு நான் கொடுப்பதில்லை. அதிலும் அவர் பெண்ணாக இருப்பதனால்  "பாத்திமா" என ஒற்றைச் சொல்லில் அறிமுகப்படுத்தினேன்.

தன் விபரங்களையும் அப் பெரும்பான்மைத் தோழி கூறினார். அவ பேசின விதமும், பண்பும் என்னைக் கவர்ந்ததால் எங்கள் உரையாடல் உடனே அறுபடவில்லை. ஆவலுடன் .....நீளமானது

"எனக்கு நீங்கள் உதவவேண்டும். நான் தமிழ் பயிற்சிநெறி கற்கின்றேன். தேவைப்பட்டால் உதவுவீர்களா" 

என அவர் சிங்களத்தில் கோரிக்கை விட, நானும் அவரிடம் சிங்கள உச்சரிப்பை பழகிக்கொள்ளலாமென்ற நப்பாசையில் மகிழ்வோடு சம்மதித்தேன்.

அன்று தொடக்கப்பட்ட எம் நட்பு பாலம் மூன்று மாத காலமாக சிங்கள - தமிழ் மொழிபெயர்ப்பில் தன்னை முழுமையாக அடக்கிக் கொண்டது, இருவருமே மொழிப்பயிற்சி நன்கு பெற்றோம். காலங்கள் மூன்றும் மறைந்த போது அவள் பரீட்சையும் திருப்தியுடன் எழுதி முடித்திருந்தாள்.

ஒருநாள் அவளழைப்பே எனக்கு அலாமானது. பதறித்துடித்தெழுந்தேன்.

"ஏய் என்னடி ஆச்சு"

மனம் பதற்றப்பட, சிரித்தவாறே கைபேசியினூடே என் தலையில் ஒரு "நறுக்" வைத்தாள்.

"எப்ப பாரு........ஒரே பயம்தான்.....நான் 90 மாக்ஸ் என் தமிழ் கோர்ஸில் எடுத்து பர்ஸ்டா வந்திருக்கிறேன்டீ. உனக்குத்தான் இத பர்ஸ்ட்  சொல்லனும் என்று நெனைச்சேன்"


அவள் மகிழ்வு எனக்குள்ளும் நிரம்ப, அன்று முழுவதும் எங்கள் அன்புத் தொல்லையினால் எங்கள் கைபேசியின் பற்றரி மின்வலுவை இழந்து பல தடவை உயிர்ப்பிக்கப்பட்டது!


இவ்வாறாக எங்கள் நட்பும் நாட்களின் விரைவான சிறகடிப்பில் இறுக்கமாகப் பிணைந்தது . இந்த இரண்டு வருடமும் நாங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காத நிலையில் உண்மையான நட்பைத் தினமும் பரிமாறிக்கொண்டோம் இப்போது எங்கள் நட்புக்கு இரண்டு வயதும் கடந்துவிட்டது.

சென்றமாதம் திடீரென அவளிடமிருந்து அழைப்பு வந்தது.

"உன்னைப் பார்க்க எனக்கு ரொம்ப ஆசையாக இருக்கிறதடீ....இனியும் எனக்கு பொறுமையில்ல..உன்ன நேரில பார்க்கணும், வீட்டுக்கு வரட்டா" 

அவள் கைபேசியில் தன்னுணர்வைப் பதித்த போது.....


"வாவ்" 


நானும் உற்சாகமாக அவள் வருகைக்கு நாள் குறித்தேன், அந்த நாளும் வந்த போது அவள் காலடி என் வீட்டுத்தரையில் படிந்து அன்பைச் சிதறியது.

பல நாள் முகந்தெரியாமல், ஏதேதோ உருவ எதிர்பார்ப்புக்களுடன் நாங்கள் பண்ணியிருந்த கற்பனையுரு அன்று கலைந்தது..

அவள் அழகாய் இருந்தாள்.......ரொம்ப ரொம்ப ....பல கோணங்களில் அவளழகை, அன்பை, குறும்பை ரசித்தேன்...கண்களால் பார்வையுருட்டி , அபிநயத்து பண்ணும் பகிடியை.......அவள் எல்லாமே எனக்குப் பிடித்திருந்தது.

அவளுக்கும் என்னை................ரொம்ப ரொம்ப !

இத்தனை நாளும் அகத்தின் ஆட்சியில் அடங்கிப் போயிருந்த எங்கள் நட்பு , முதன்முதலாய் அன்று உருவங்கள் கண்டு மகிழ்வின் பேரலையில் சிக்கித் தவித்தது. நிறையப் பேசினோம்...இந்த இரண்டு வருடங்களும் பேசி முடிக்காத பல விடயங்களை அந்த இரண்டு மணித்தியாலத்தில் பேசி முடித்த திருப்தி!

அவளைப் பிரியும் நேரம் இருவர் கண்களும் கலங்கியது. என் கைகளைக் கண்ணில் ஒற்றிக் கொண்டாள்.....

விடைபெறும் இறுதி நொடியில் .........!

அவள் கரம் என் கரத்துடன் பிணைக்கப்பட்டபோதுதான் எதையோ அவள் என் கைகளுக்குள் அழுத்தும் விசையொன்றை உணர்ந்தேன். பார்க்க முயற்சித்த போது அழகாய்ச் சிரித்தாள்....

"இது என் அன்பான கிப்ட் உனக்கு! நான் வெளில போனதும் பாரு " .....

அவள் கோரிக்கையேற்று மௌனமாகத் தலையாட்டிய பின்னர்  சற்று குரலில் சூடேற்றினேன் !

" ஏய் .........என்னடி இது ! இத நான் உன்கிட்ட எதிர்பார்த்தேனா" 

நான் சற்று உரப்பை அதிகரித்த போது அவள் வார்த்தைகளி னன்பு  என்னைச் சற்றடக்கின.

"கூல்மா...........நீ.........ஏசுவேன்னு தெரிஞ்சுதான் நான் முதல்ல இத சொல்லல"

அவள் என்னை விட்டு மறையும் போது, அவள் எனக்காக சற்றுமுன் உதிர்த்த வார்த்தைகளும் தொலைவாகிப் போகின!

என் கரங்கள் அவள் விட்டுச்சென்ற அடையாளத்தை எனக்கு காட்சிப்படுத்த மெதுவாக விரிந்தது . உள்ளே...  கண்ணாடி மூடியால் மூடப்பட்ட சிறு பெட்டி ஆறு வெவ்வேறு நிறங்களுடன் கூடிய இரத்தினக்கற்களுடன் !

இரத்தினக்கற்களை விடப் பெறுமதியான அவள் நட்பைத்தான் எனக்கு விட்டுச் சென்றுள்ளாளே!................... அதை  நிரூபிக்கவா இது!

மனம் மிகையாக நெகிழ்ந்தது கண்ணீர்த்துளிகளுடன்!

அவள் என்றோ ஒரு நாள் சொன்ன அந்த வார்த்தைகளின் நிருபணமாய் இரத்தினக்கற்கள் என்னைப் பார்த்து சிரித்தன. ஒளிக்கதிர்களை ஞாபகங்களாக வெளிவிட்டபடி!

"நான் உன்ன எப்ப சந்திக்கிறேனோ அன்று உனக்கொரு இரத்தினக்கல் செட் தருவேன். அந்தக் கற்களைப் பாவித்து நீ மோதிரம் செய்து , உன் கைல அதப் போட்டுக்கணும்...ஏன்னா எப்பவும் நான் உன் கூட இணைந்திருக்கனும்"

அவள் அன்று  கூறிய வார்த்தைகளை நான் வேடிக்கையாக நினைத்து அதனையே , மறந்திருக்கின்ற ஓர் பொழுதில், அவள் அதனை உயிர்ப்பித்து என்னைக் கடனாளியாக்கிச் சென்று விட்டாள்...

அடுத்த எங்கள் சந்திப்பில்  நானும் அவளுக்கொரு ஏதாவது ...................

அவள் அன்பு மனசுக்குள் வீழ்ந்து கண்ணீர்த்துளிகளையும் கிளறிவிட்ட போது, அழுதேன் அந்தக் கணத்தில் நிறைய கண்ணீர்த்துளிகள் கன்னத்தில் உருண்டன..............

அவை ...........

ஆனந்தக் கண்ணீர்!

முகம் பார்க்கும் நட்புக்கள் கூட சீக்கிரம் அற்பக் காரணத்தால் முறிந்து விடும் இக்காலத்தில் அந்த "மிஸ்ட் கோல்" பாசம் உயிரில் நினைவுகளை விதைத்து போஷித்து வருகின்றது......

எங்கள் ஆயுள் வரை இவ்வன்பு தொடரும் எனும் நம்பிக்கையுடன் அவளை நினைவுகளால் அரவணைத்தவாறே பயணிக்கின்றேன் எங்கள் நட்புலகில்!





2012/08/10

மாற்றங்களும் ஏமாற்றங்களும்


சுஹிர்தா............!

அவள் நகரிலுள்ள பிரபல்யமான தொலைத் தொடர்பகத்தில் சேவையாற்றிக் கொண்டிருந்தாள். மாதாந்தம் என் கைபேசி பாவனைக்கான கட்டணத்தைச் செலுத்துவதற்காக அந்நிறுவனத்திற்கு அடிக்கடி  செல்வதுண்டு. ஆரம்பத்தில் நிறுவன வாடிக்கையாளர் பிரதிநிதியாகப் புன்னகைத்தவள் நாளடைவில் நட்புடன் பேசத்தொடங்கினாள்.. அரிதான புகைப்படங்களை மின்னஞ்சல் வழியாக எனக்குப் பரிமாறுமளவிற்கு எங்கள் நட்பு  இறுக்கமடைந்திருந்தது.

அவள் எனக்குள் அறிமுகமாகி மூன்றாண்டுகள் உதிர்ந்து விட்டன. அழகான மெழுகுச்சிலை போன்ற உடல் வார்ப்பும், பளிச்சென்ற வெண் தோலும் அவளை எனக்குள்ளுமொரு அழகியாகவே பறைசாற்றியது. அவள் சூழல் கல்வி கற்ற மொழித் தாக்கத்தால் அவள் பாவனை மொழியாக ஆங்கிலமும் சிங்களமும்  நுனி நாக்கில் தவழும். அவள் என்னுடன் ஒருநாளும் தமிழில் பேசியதில்லை.

அந்நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதற்காக நான் செல்லும் போதெல்லாம் அவளுடன் இரண்டு வார்த்தைகளையாவது பேசாமல் வருவதில்லை. எனது அலுவல் முடிந்ததும் அங்கு சனக்கூட்டம் குறைந்திருக்கும் நேரத்தில் சிறிது நேரம் எங்கள் சொந்த விடயங்களைப் பற்றியும் கதைத்து விட்டு வருவேன்.

ஓருநாள்  அவளுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். கைபேசி சிணுங்கியது . தன் மென்விரலால் கைபேசியை அழுத்தியவள் "ஹலோ" வென்றவாறே என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

"என்  லவ்வர்தான் லைனில் நிற்கிறார் ..........பேசுங்க அவர் உங்களுக்கும் தெரிந்தவர்தான்"

நான் எதிர்பார்க்காமலே தன் 3ஜி கைபேசியை என்னுள் திணிக்க, நான் தடு மாறிப்போனேன்.

 "பரவாயில்ல சுஹி ! "

நான் மறுத்த போதும் வற்புறுத்தி என்னை அவனுடன் பேசவைத்தாள். அவனும் வீடியோ கோலில் புன்னகைத்தவாறே ஸலாம் கூறி சகஜமாய் நலம் விசாரிக்கத் தொடங்கினான்"

"அவன்.......எனக்குத் தெரிந்தவன்..அவளது வருங்காலக் கணவன்............!"

மகிழ்ச்சியில் என் வாழ்த்துக்களை அவர்கள் வசப்படுத்திவிட்டுப் புறப்பட்டேன் என் வீட்டுக்கு!

தொடர்ந்து வந்த நாட்களில் அவள் காதலின் வளர்பிறைச் செழிப்பை எனக்குள் அடிக்கடி காட்சிப்படுத்துவாள்.

"எப்போ உங்கட கல்யாணம், என்னைக் கூப்பிடுவீங்க தானே"

ஒருநாள் நான் வேடிக்கையாகக் கேட்டேன்.

"இன்ஷா அல்லாஹ்! சீக்கிரம் முடிப்போம், நீங்க இல்லாமலா" காதலின் வசந்தத்தை அனுபவித்துச் சிரித்தாள். அவள் நாணத்தை அன்று ரசித்த போது அந்த அழகியின் இளமை பூத்த வெண் கன்னங்கள் செக்கச் சிவந்து கிடந்தன.

வருடங்கள் இரண்டு தாவியோடியது. நாங்கள் பல தடவைகள் சந்தித்தாலும் கூட அவளின் காதல் பற்றியும், அவனைப்பற்றியும்  துருவியாராயவில்லை. அவளும் எதுவும் சொல்லவில்லை. வாடிக்கையாளர்கள் தொகை அதிகரிப்பும், எம் வேலைப்பளுவும்  எங்களுக்கிடையில் சிறிய இடைவெளியை ஏற்படுத்தி நின்றது. கண்டால் கதைப்போம் ..........அதுவும் ஓரிரு வார்த்தைகளாகச் சுருங்கிப் போனது

அண்மையில் ஓர்நாள் வழமைபோல்  எனது கைபேசியழைப்பிற்கான மாதக் கொடுப்பனவைச் செலுத்த  அந்நிறுவனத்திற்கு காலையில் சென்றிருந்தேன்.  அவள் வழமைக்குமாறாக கவுண்டரில் அமர்ந்திருந்தாள். என்னைக்கண்டதும் புன்னகைத்தவாறே ஸலாம் கூறி சுகம் விசாரித்தாள்.  எங்களைப்பற்றி சிறிது நேரம் நாங்கள் உரையாடிக்கொண்டிருந்த போதுதான் அவதானித்தேன் அன்றவள் மிக அழகாகவிருந்தாள். கழுத்து ,கை, விரல்களில் புதிய தங்க நகைகள் மின்னிக்கொண்டிருந்தன.

"ஏதும் விஷேசமா.............இயல்பாய் நானும் கேட்க, "

சிறிது மௌனித்தவாறு "ம் ம் " எனத் தலையாட்டினாள்.

அவள் காதல் கைகூடிவிட்ட மகிழ்வை நானும் வாழ்த்துக்களாக்கி அவளுக்கு முன்வைக்கப் போகும் போது, இடைமறித்தாள்

அவள் குரல் உடைந்து தளர்ந்து போனது . தான் கல்யாணம் முடிக்கப் போறவர்  பற்றிய விபரங்களைச்  சொன்னாள்.

"என் லவ்வர் என்னைப் பிரிஞ்சு இப்ப ஒரு வருஷமாச்சு!. எங்ககிட்ட பிரச்சினை வந்திட்டுது....அவர்ட்ட நிறைய முரண்பாடுகளிருக்கு. காதலிக்கும் போது அது எனக்குத் தெரியல. ஆனால் கல்யாணத்துக்கு நெருங்கும் போதுதான் அவரோட சுயரூபம், சுயநலம் எல்லாமே வெளியில தெரிஞ்சுது, அவர எங்கட வீட்டாக்கள் வேணாமென்று சொல்லிட்டாங்க"

அவள் தன் சோகங்களை அவிழ்த்தபோது நான் பிரமித்துப்போனேன். அவர்கள் தங்கள் காதலில் காட்டிய உற்சாகமும், நெருக்கமும் நன்கறிந்தவள் நான். சுஹி அவனுக்காக தன் வாழ்வில் காட்டிய மாற்றமும் கூட எனக்குத் தெரியும். அவனது விருப்புக்கேற்பவே அவளது நடை, உடை, பாவனை கூட அவளிடமிருந்து மாறிப்போனது. பிரச்சினைகள் வாழ்வில் ஏற்படுவது இயல்பே! ஏதோ சில அற்பங்களுக்காகவும், அடுத்தவர்களுக்காகவும் அவர்களின் அன்பு   காணாமல் அழுகிப் போனதுதான் எனக்கு கவலையாகவிருந்தது. அந்தப் பிரிவுத் தாக்கமும், ஏமாற்றங்களும், கோபமும் அவர்களிருவரையுமே அந்தக்கனவு  வாழ்க்கையிலிருந்து வேரறுத்து மறுத்து வேறொரு திசைக்குள் தள்ளிவிட்டது.

அவளை நான் கண்ணிமைவெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். தன் மனதுக்குள் புகைந்து கொண்டிருந்த துன்பத்தை அவள் மறைத்தவளாக,

"திருமணத்தைப் பற்றியும், தனக்கு மாப்பிள்ளை வீட்டார் அணிவித்துச் சென்ற திருமண அடையாளத்தைப் பற்றியும் அவள் கூறத் தொடங்க நானோ அதிர்ச்சியிலிருந்தும் கலையாதவளாய் விக்கித்து நின்றேன்..

மனப் பொருத்தப்பாடில்லாத இருவர் திருமணத்தி லிணைவதை விட, பிரிந்து செல்வது மேல்தான். ஏனெனில் சொற்பகால வாழ்வின் சந்தோஷங்களை  அத்துன்பங்கள் எரித்துவிடுகின்றனவே!.

"பெருநாளைக்குப் பிறகு எனக்கு கல்யாணம் வைச்சிருக்கிறாங்க........உங்கள இன்வைட் பண்ணுவேன்.........கட்டாயம் வரணும் "

சுஹா தன்னைச்சுற்றி வரையப்பட்டிருக்கும் விதியின் போக்குகளை எனக்குள் அவிழ்த்துக் காட்ட முயற்சிக்க, நானோ, அவர்கள் கசக்கியெறிந்த அந்த காதல் ஞாபகங்களை எனக்குள் நிழற்படுத்தியவாறு மெதுவாய் வீதிக்குள் இறங்கிக்கொண்டிருக்கின்றேன்.  





2012/08/09

காதலென்பது


என் தோழி சுஜா......................!

அனாதைப் பெணணவள். திருமணம் எனும் வாழ்வியலின் மறுபக்கம் அவள் வறுமை நிலையால் எட்டாக் கனியாயிற்று. அழகில் மயங்கிக் கிடக்கும் பல ஆண்களுக்கு அவளின் வறுமை, அழகின்மை கண்களை உறுத்த, அவளைத் திருமணம் செய்யத் தயங்கினர். அவள் கறுப்பென்றாலும் அம்சமாகவே இருந்தாள். புற அழகின்மையால் அவள் மன அன்பின் இனிமை கூட செல்லாக் காசாகிப் போனது.

வயது 30 ஜத் தொட்டும் கூட வறுமையால் வாழ்க்கை பற்றிய கனவுகள் நிஜம் தொடாமலே எட்டாத் தொலைவில்  அவளைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது 

அவள் குடும்பம் வறுமைப்பட்டிருந்தாலும் கூட அவளது கல்விப் பயணத்திற்கு ஒருபோதும் தடை விதிக்கவில்லை. படித்தாள். அரச வேலையொன்றைப் பெற்றுக் கொள்ளுமளவிற்கு அவள் கற்றல் வாய்ப்பளிக்கவில்லை.

சுஜா பெற்றோருக்கு ஒரே மகள்.   பெற்றவர்களிருவருவருமே   ஊமைகளானதால்    பேச்சுத்துணைக்கு கூட ஆள் யாருமேயில்லாத நிலையில்  தனிமைப்பட்டுத்தான் போனாள். காலவோட்டத்தில் பெற்றவர்கள் வயதாகிப் போனதால் அதுவரை காலமும் கூலி வேலை மூலம் கிடைத்த சம்பாத்தியமும்  நின்று போனது. ஒருவேளை உணவுக்கே போராடும் நிலையில் அவள் புற வாழ்வின் ஆடம்பரத்திலிருந்து அகன்று அந்நியப்பட்டுப் போனாள்.

என் உறவினரொருவரின் தொலைத்தொடர்பகத்தில் அவளுக்கேற்ற வேலை யொன்றைப் பெற்றுக் கொடுத்தேன். அவள் உயர்தரம் வரை கற்ற கல்வி அந்தத் தொழிலுக்குக் கைகொடுத்தது. அவள் அவ்வுழைப்பில் தன்னை யீடுபடுத்திய  பின்னர் வாழ்க்கைச் சுமையும் லேசாய் தணிந்தது. அத் தொலைத் தொடர்பகத்தில் கணனித் தட்டச்சுக்கள் , இணைய செயற்பாடுகளை இவளே நேர்த்தியாய் செய்து கொடுப்பாள். கிராபிக்டிசைன் வடிவமைப்பு, ஆட்டோசொப் போன்றவற்றிலும் முன்னர் பெற்றுக் கொண்ட பயிற்சி அவள் தொழிலுக்கு துணையானது. அவள் திறமை கூட ஓய்வுநேரங்களில் அவளுக்கு வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும் துறையாக மாற, கடன் அடிப்படையில் கணனி ஒன்றையும் வாங்கியவளாய் இணையத் தொடர்பையும் பெற்றாள்.

அவள் வாழ்க்கையின் நெருக்கடிகள் ஓரளவு தணிய ஆரம்பிக்கவே முகநூல் பக்கமொன்றும் ஆரம்பித்து, அதில் பல டிசைன்களைக் காட்சிப்படுத்தத் தொடங்கினாள். அது அவளது பொழுதுபோக்காக அமைந்ததுடன் வருமானம் பெற்றுத் தரும் வழியாகவும் மாறியது.

அவள் முகநூல் நண்பர்களில் ஜெய்சங்கரும் ஒருவன். அதுவரை ஆண்களுடன் பழகியிராத அவளுக்கு ஜெய்யின் அன்புத் தாக்குதல் புதியதோர் அனுபவமாக மாற மனசு நெகிழ்ந்தாள். அவனது வார்த்தை நெருடல்களில் அவளுக்குள் கருகியிருந்த கற்பனைகள் மீண்டும் தளிரிடத் தொடங்கின .அவளும் உணர்ச்சியுள்ள சாதாரண பெண்தானே ..அவன் காதல் அவ​ளைப் பரவசப்படுத்தி வாழ்க்கை பற்றிய எதிர்பார்ப்புக்குள் தள்ளியது.

அவன் அயல் நாட்டைச் சேர்ந்தவன். அவனால் கூறப்பட்ட வார்த்தைகளே அவளுக்கு நிஜமாக்கப்பட்டது. அவன் தன் காதல் ஞாபகங்களாகத் தினம் தவறாமல் அனுப்பும் செய்திகளும், தொலைபேசி அழைப்புக்களும் அவனது உலகத்தில் அவளையும் ஈர்த்துக் கொள்ளவே காதலின் நினைவுகளாக அவர்களுக்கிடையில் புகைப்படங்களும்,  முத்தங்களும், முகிழ்க்கும் கனவுகளும் , எதிர்கால எதிர்பார்ப்புக்களும் பரிமாறப்பட்டன.

நாட்கள் வேகமாக நகர்ந்தன.  அவர்கள் முகங்கள் சந்திக்காத காதல் பாதி கற்பனை வாழ்க்கையில் நகர்ந்து இரகஸியமாக குடும்பமும் நடத்தினர். அவர்கள் காதல் முகநூல் நண்பர்களுக்கிடையிலும் கசியத் தொடங்கியது்.

இச்சுகந்தமான நெருடலில் மாதமொன்று நாணியவாறே ஓட்டமெடுத்த பின்னரே. ஜெயசங்கரின் மறுபக்கம் பற்றி அவளுக்குள்ளும் லேசாகத் தெரிய ஆரம்பித்தது. அவன் பெண்களுடன் சகஜயமாக பழகுபவன். ஆரம்பத்தில் அவள் சாதாரணமாக அதை எடுத்துக்கொண்டாலும் கூட நாளடைவில் ஏதோ உறுத்தலுக்குள்ளானாள். ஜெய்யை ரகஸியமாகப் பின்தொடர்ந்தாள். அவன் தன்னைப் போலவே இன்னும் சில காதல் தொடர்புகளுடன் உல்லாசமாக இருக்கும் நாயகன் என்பது அவளுக்கு உறுதியான போது உலகமே இடிந்து அவளிதயத்தை நொறுக்கிய பிரமை. அழுகை மட்டுமே அவள் சொந்தமாக விரக்தி தணலில் விழும் புழுவாய் துடித்தாள்.

முன்பின் தெரியாத ஒருவனை, அவன் வார்த்தைகளை நேசித்த பயங்கரம் அவளுக்குள் உறுத்தியது. தன் மடமை, தவறு உணர்ந்தவளாக ஓர் மாலைப் பொழுதொன்றில் அவன் காதலை முற்றாகத் துண்டித்து அவனையும் தன் நண்பன் பட்டியலில் இருந்து நீக்கி விட்டாள். இவ்வாறான மன விகாரம் படைத்தவர்கள் காதலித்தவர்களை மட்டும் காயப்படுத்த வில்லை. புனிதமான காதலையும் கொச்சைப்படுத்துகின்றார்கள்.

அவள் அவனை நேசித்தது உண்மையான உணர்வே. அவ் வலி பல காலம் நீடித்திருந்தாலும் கூட, அவனிடம் ஏமாறாமல் அவளது வாழ்க்கை காப்பாற்றப்பட்ட திருப்தியில் மனசு லேசானது.

சில ஆண்களே.............!

காதலை நீங்கள்  கற்றறிந்த பின்னர் தூது விடுங்கள். முகநூல் தொலை பக்கம் என்பதால் பலர் பெண்களின் அன்பு செய்யும் மனதை பலகீனமாகக் கருதி, பொழுதுபோக்கிற்காக தினம் விளையாடும் தமது மைதானமாக அவர்களது வாழ்வை மாற்றி விட முயற்சிக்கின்றார்கள். தங்களுக்குத் தேவைப்படுகின்ற பொழுது அவர்களை நெருங்கவும், தேவையற்ற போது புறக்கணிக்கவும் ,தமது காமத்தின் வேட்டைக்கு அவர்களை இரையாக்குவதும் அநாகரிகமான செயல் என்பதை அவர்கள் ஏனோ மறுக்கின்றார்கள்.

"ஊசி இடம் கொடுத்தாலே நூல் உள்ளே செல்லும்."

பெண்கள் எப்பொழுதும் தமது துன்பத்துக்கு தாமேதான்  காரணமாகின்றார்கள். இவ்விடயத்தில் பெண்கள் அவதானமாக இருத்தல் வேண்டும். தம் வாழ்வில் சந்திக்கின்ற ஆண் நண்பர்களுடன் நட்புடன் பழகுவதில் தவறில்லை. ஆனால் அந்த நட்பெல்லையை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.காலவோட்டத்தில் நாம் ஒவ்வொருவரும் அனுபவங்களைப் பெற்று விடுவோம். ஆனால் அந்த அனுபவங்கள் கிடைப்பதற்குள் பல துன்பங்களும் நமக்குள் சொந்தமாகி விடும். இதுவே இன்றைய கால யதார்த்தம்!



2012/08/07

மனசே மனசே


வீட்டு முற்றத்தில் சிதறிக்கிடந்த  இரையை உற்சாகமாகத் தேடிப் பொறுக்கித் தின்னும் சின்னச்சிட்டுக்களின் சிரிப்பொலியும் அவ்வொலி ஞாபகப்படுத்தும் சலங்கை யொலியும் பலமாய் என் காதுகளுக்குள் விழுந்த போது மேலும் உறங்க முடியவில்லை. தூக்கம் சிதறியோடியது. கண்களை விரித்து உறக்கத்திற்கு விடை கொடுத்தேன்.....நன்றாக விடிந்து விட்டது. கடிகார முட்கள் ஏழைத் தொட்டு நின்றன.

விடிந்து விட்ட இயற்கையின் பரபரப்புக்குள் ஒன்றித்துக் கிடக்க மனசேனோ இடம் தரவில்லை. அமைதிக்குள் அடங்கிப் போனவளாய் வெளி முற்றத்தில் என் கால்களைப் பதித்தேன்.

என் பார்வை என்னையுமறியாமல் மேல் மாடியில்  வீசப்பட்டது.  காயப் போடப்பட்டிருக்கும் வெள்ளை நிற தாதி யூனிபார்ம் கோட்டுக்களால் நிரப்பப்பட்டிருக்கும் கயிற்றுக் கொடிகள் பொலிவிழந்து வெறுமையாகிக் கிடந்தன. மனம் சங்கடப்பட அப் பார்வையை அறுத்தவளாய் மறு புறத்திலுள்ள மோட்டார் சைக்கிள் தரிப்பிடத்தைப் பார்க்கின்றேன். அங்கும் வெறுமை......... மீண்டும் மனசு வெறுமைப் பிரளயத்தில்  கரைந்தோட சில நினைவுகள் எனக்குள் உட்கார்ந்து விழிகளை அரிக்கத் தொடங்கின!

" நிசங்க"

பார்க்குமிடத்திலெல்லாம் அவன் விம்பமாய் பூத்து நின்றான்.

நாங்கள் குடியிருக்கும் வீட்டின் மேல் மாடியிலுள்ள அறையொன்றில்தான் அவனும்  வாடகைக்கு எடுத்துத் தங்கிருந்தான்.அவன் ஒரு பயிலுநர் தாதி. எங்களூர் வைத்தியசாலையிலேயே நியமனம் கிடைத்திருந்தது. ஆரம்பத்தில் அவனுக்கும் எனக்கும் இடையில் வெறும் புன்னகை மட்டுமே பாஷையாக இருந்தாலும் கூட  காலப் போக்கில் எங்கள் சின்னப் பாப்பா மூலம் அவனுடன் பேசும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.

"நர்ஸ் மாமா வாறார் "

இரண்டரை வயதுக்குழந்தையின் மழலை மொழி கேட்கும் போதெல்லாம் அவன் பாப்பாவுடன் கதைக்க எங்கள் வீட்டு முற்றத்திற்கே  வந்துவிடுவான். அவன் கதைக்கும் சிங்களப் பாஷை குழந்தைக்கு விளங்காவிட்டாலும் கூட அவன் காட்டும் அன்பும், அவன் சிரித்த முகம் காட்டும் அபிநயமும்  அவளுக்கு ரொம்ப பிடித்துப் போய்விட்டன.

எங்கள் வீதியில் அவன் மோட்டார் சைக்கிள் உறுமிக் கொண்டு வரும் போதெல்லாம் பிள்ளை அவனை வீட்டுக்குள்ளிருந்தே அடையாளம் கண்டவளாய் , "நர்ஸ் மாமா" என கூவிக் கொண்டு வீட்டுக்குள் மறைந்து நின்று அவன் வருகையை எதிர்பார்த்து  காத்து நிற்பாள். அவன் வீட்டுக்குள் நுழைந்ததும் வெளி முற்றத்துக்குள் வந்து அவனது மேல்மாடி அறையை அண்ணார்ந்து பார்ப்பாள்.. அவனுக்கு அவளைப் பற்றித் தெரியும் என்பதால் வீட்டுக்குள் போவதைப் போல் பாசாங்கு செய்து கதவுக்குள் மறைந்து நின்று அவள் வெளியே வந்ததும் ஓடி வந்து தூக்குவான். அவள் சிரித்துக் கொண்டே அவன் பிடியிலிருந்து விலகி வீட்டுக்குள் ஓடி வரத் துடிக்கும் போதெல்லாம், அவர்கள் இருவருக்குமிடையில் நடுவராக நின்று அவன் பிடியிலிருக்கும் அவளைச் சமாதானப்படுத்துவது  நானே என்பதால் தொடர்ந்து வந்த நாட்களில் அவன் புன்னகை என்னைக் கண்டதும் வார்த்தைகளாக மாறின. பிள்ளையின் செயலைப் பற்றி கதைப்போம். அந்த நல்ல நட்பில் அவன் என் மனதுக்குள் மெதுவாக இறங்கினான்.பாப்பாவுக்கும் அவனுக்குமிடையிலான இந்த அன்பு விளையாட்டை நான் அதிகம் ரசித்தேன். சில நேரங்களில் அவர்களின் சிரிப்பில் என் சிரிப்பும் கலந்து கிடக்கும்

நாட்களின் வேகமான பயணத்தில் அந்த நாட்களும் வந்தது. அவன் தாதிப் பயிற்சி நிறைவடைந்து தன் ஊருக்கே மாற்றலாகிப் போகும் அந்த இறுதித் தருணங்களும் வந்தன..சின்னவளோ இந்த உண்மையை அறியாமல் வழமைபோல் அவனுடன்  ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
அவன் எங்கள் ஊரைவிட்டுப் போகும் கடைசி நிமிடங்களையும் சந்தித்து எம்மிடமிருந்து விடைபெற்றும் சென்றுவிட்டான் ....

உர்ரென்று வீதியை உரசிச் செல்லும் மோட்டார் சைக்கிளின் ஓசையொன்றின் அதிர்வைக் கேட்டு  சின்னவள் கைதட்டி உற்சாகமாகச் சிரிக்கின்றாள்

"நர்ஸ் மாமா வாறார்" "நர்ஸ் மாமா வாறார்" "நர்ஸ் மாமா வாறார்"

அவள் குரலதிர்வு எனக்குள் வேதனையைக் கிளற ,மெதுவாக குழந்தையிடம் சொல்கின்றேன்.

" நர்ஸ் மாமா , இனி வரமாட்டார் செல்லம்"

மனசின் வேதனையோடு  நான் கூறும் வார்த்தைகளை அவள் கேட்பதாக இல்லை. புரிந்து கொள்ள முடியாத அந்த வயசு, தன்னிடம் பதிவாகியுள்ள நம்பிக்கையை மட்டுமே சுமந்தவாறு மீண்டும் மீண்டும் உற்சாகமாக குரல் கொடுக்கின்றாள்.........

"நர்ஸ் மாமா வாறார்............நர்ஸ் மாமா வாறார்"

அவள் அன்பு .......வார்த்தைகளாகி காற்றோடு வேகமாக மோதி வீடெங்கும் ஒலிக்கத் தொடங்க,  நானோ   பிள்ளையின் தவிப்பைக் கண்டு கண்கலங்கி நிற்கின்றேன் சோகத்துடன் !............

இந்த அன்பின் அவஸ்தையில் தவித்துக் கிடப்பதென்னவோ மனசுதானே!

2012/07/30

அந்த சில நிமிடங்கள் !


இரவின் நிசப்தத்தில் என் சுற்றுப்புறம் அடங்கிக் கிடந்தது. கடிகார முட்களின் ஓசை தவிர்ந்த வேறெந்த ஒலிகளும் கலக்காத மௌனத்தில்  ஊர் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தது, அந்த அமைதியைச் சற்று சலனப்படுத்தும் விதமாக என் வீட்டுக் கடிகாரம் நள்ளிரவு மணி 12 ஐ அடித்தோய்ந்தது.

மனசேனோ கடந்த கால சில கசப்புக்களை நினைவிலிருத்தி, விழித் தூக்கத்தை விரட்டிக் கொண்டிருந்தது. சுடும் யதார்த்தங்களால் இருளின் செழிப்பில் கூட கனவுகள் எட்டிப்பார்க்க விரும்பவில்லை. அந்த இருண்டவெளியில்  ஊர்க்குருவிகளின் சிறகடிப்பும், சிறு குரலெழுப்பலும் அவ்வவ்போது வெறுமை வெளிக்குள் சலனத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. சின்னக்குருவியிடம் இருக்கும் இந்தப் பறக்கும்  துணிச்சல் கூட என் வசமில்லாமல் போனது ஆச்சரியமே! பல்வேறு சிந்தனைக்குள் மனம் தடுமாறிக்கொண்டிருந்தபோதுதான், அந்த இருளை ஊடுறுவும் வண்ணம் டோச்லைற் வெளிச்சமொன்று நான் படுத்திருக்கும் அறையை எட்டிப் பார்த்தது.

அச்சத்தில் உயிர் உறைந்து கொள்ள, மனசு மட்டும் பலகீனப்பட்டு அலறிக்கொண்டிருந்தது. ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது எனும் உணர்வுடன் சற்றுத் தலையை உயர்த்தி அந்த வெளிச்சத்தை நோக்கினேன்.

அந்த அறையின் மேற்பரப்பில் காற்று நுழைவதற்காக சிறு பூக்கற்கள் அடுக்கப்பட்டிருந்தன. அந்தக் கற்களினூடாகவே ஓளி வந்திருக்க வேண்டும். மீண்டும் அந்தப் பூக்கற்களை நோக்கி பார்வையைச் செலுத்தியவாறு படுக்கையிலிருந்து எழ  முயன்றேன். மின்னல் வேகத்தில் ஏதோ திரவ ஸ்ப்றேயொன்று நாசிக்குள் கலந்தது. அதன் வாசனை மலத்தியோன் என்பதை அநுபவ வாயிலாக உணரத்தொடங்கும் நேரம் .............. மெல்ல மெல்ல விழிகளும் தம்மை மயக்கத்தில் சொருகத் தொடங்கின. ..உடலோ தன் வலிமையை இழந்து வெற்றுக்கூடாய் உருமாறும் பிரமை!

"கள்ளன்.......கள்ளன்"

என்னருகில் உறங்கிக் கொண்டிருந்த என் தாயார் கலவரப்பட்டு சப்தமிடும் வார்த்தைகளின் உரப்பொலி படிப்படியாக என் நினைவுலகத்திலிருந்து மங்கத் தொடங்கியது.....

பல  நிமிடங்கள்..........

மூச்சை மட்டுமே ஏந்திய என்னுடல் இவ்வுலகை மறந்து கிடக்க, இருதயத்துடிப்பொலி மட்டும் என்னுயிர்ப்பை அடுத்தவருக்கு பறைசாற்றிக் கொண்டிருந்தது.











2012/07/27

பாட்டி எங்கே போறியள்



மதியம் 12 மணி...........

சுட்டெரிக்கும் வெயில் அன்றேனோ எட்டிப் பார்க்கவில்லை. லேசான சிணுங்கலுடன் கூடிய மழைச் சிவிறல்களில் வவுனியா பஸ் நிலையமும் நனையத் தொடங்கியது. என் வகுப்பு முடிந்ததும் அவசர அவசர ஆட்டோ பிடித்து ...........................பஸ்ஸூக்குள்  தாவி ஏறினேன்......ஓரிரு இருக்கைகளே என்னைப் பார்த்து கையசைக்க யன்னலோரம் அமர்ந்து கொண்டேன். மழைப் புழுக்கம் தேகத்தை வேறு வறுத்திக் கொண்டிருந்தது. பின்சீட்டில் பாட்டியொருவர் அமர்ந்திருந்தார். பெரிய நெற்றி பொட்டும் சிவப்புக்கல் மூக்குத்தியும் அவர் அடையாளங்களாக.............

பாட்டி.......

சூழ்நிலையைச் சமாளிக்கிற அளவுக்கு கொஞ்சம் சிங்களத்தை நுனி நாக்கில வைத்திருந்தார்..

"மணிக்கூட்டு கோபுரம் பக்கத்தில இருக்கிற ஆமி காம்ப் பக்கத்தில இறக்குங்க"

தன் அருகிலிருந்த எல்லோரிடமும் சிங்களத்தில் கூறிக் கொண்டே இருந்தார்..
பஸ்ஸின் பயணப்பாதையில் அவர் கூறும் அந்த இடம் இல்லாததால் எல்லோரும் குழம்பி ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தனர்..ஆனால் பாட்டி விடுவதாக இல்லை. தனது வார்த்தைகளை திருப்பித் திருப்பிச் சொல்லி எல்லோரையும் குழப்பிக் கொண்டிருந்தார். அப் பாட்டிக்கு காது வேறு கேட்காத நிலை.....உரத்து பதில் ​சொல்லுவதால் பஸ்ஸில் இருந்த எல்லோரின் பார்வையும் பாட்டி மீது நிலைப்பட்டுக் கிடந்தது...

" பாட்டி .......நீங்க போக வேண்டிய இடத்தைச் சொல்லுங்கோ"

ஒரு இளைஞன் கேட்டதற்கு தெரியாது என்று தலையாட்டினார்..

"ஏன் அம்மா.......வயசான காலத்தில இப்படி அட்ரஸ் தெரியாம அலைகிறிங்க...காலம் கெட்டுக்கிடக்கு"

அருகிலிருந்த பெரியவர் சற்று சினத்தார்.

அருகிலிருந்த பெரும்பான்மையைச் சேர்ந்த ஒருவர் என்னிடம் சொன்னார்

" அவ சிங்களம் கதைத்தாலும் கூட தமிழ்தான்........எங்கட ஆட்கள் மூக்குத்தி போட மாட்டார்கள்....நீ அவகிட்ட தமிழில பேசு "

என்னை உசுப்பி விட, நானும் பாட்டியிடம் பேச்சுக் கொடுத்தேன். நான் தமிழில் பேசியதைக் கண்டு பாட்டிக்கு சரியான மகிழ்ச்சி.......
இறங்க வேண்டிய இடத்தின் அடையாளம் சொன்னார்...அவரை நான் தைரியப்படுத்தினேன்.

"பிள்ள......இறங்க வேண்டிய இறக்கம் வந்தால் சொல்லும் என்ன"

பாட்டியின் வேண்டுகோளை நான் ஏற்றுக்கொண்டதில் அவர் மகிழ்ச்சி இரட்டிப்பானது...

அவருக்கு பக்கத்தில இருந்த எனது பாடசாலை மாணவன் அவர் கூறும் இடத்தை ஊகித்தவனாக,

"பாட்டி பயப்படாதிங்க...அநுராதபுரத்தில இறங்கினதும் நான் ஆட்டோ பிடிச்சு தாரேன்.............நீங்க சொல்ற இடத்துக்கு போகலாம்"

இப்பொழுது பாட்டி மனதில் நிம்மதி ............................அது சொற்ப நேரமே ...........!
மீண்டும் புறுபுறுக்கத் தொடங்கினார்.

"உது என்ன இடம் பிள்ள"

பஸ் தரிப்பையெல்லாம் காணும் போது என் உயிரை வாங்கத் தொடங்கினா.....நானும் அவர் மேல் அனுதாபப்பட்டு இடத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டே வந்தேன்.......

" ஈரப்பெரியகுளம்...............பூனாவ..........மதவாச்சி"

ஐயோ......ஏன் பஸ் இந்த றோட்டால போவுது?  ஏன் இவ்வளவு நேரம் எடுக்குது...

பாட்டியின் புறுபுறுப்பு கேட்டு பலர் எரிச்சலுடன் முகம் சுளிக்க, சிலர் அனுதாபத்துக்குள் நனைத்தனர்..

மதவாச்சி.......

சற்று பெரிய ஊர்..பாட்டி அத்தரிப்பிடத்தில அவசரமாக இறங்கப் போக, நாங்கள் வலுக்கட்டாயமாக அவரை பஸ் இருக்கையில் உட்கார வைத்தோம்..

வஹமல்கொல்லாவ....இக்கிரிகொல்லாவ......ரம்பாவ....சாலியபுர..அநுராதபுரம்

ஊர்கள் கடந்தன. அடுத்து அநுராதபுரம் பழைய பஸ் நிலையம்...............

பஸ் கன்ரக்டரின் கூவலைத் தொடர்ந்து பாட்டி இறங்கப் போனார்....

"இல்ல பாட்டி.....இது தூரம்........என்னோட  புதிய நகரத்தில இறங்குங்கோ"

மீண்டும் நம்பிக்கையூட்டினேன்...நான் சொன்ன பேச்சு அவர் காதில் விழவில்லை...என்னிடம் விடை பெற்றார்...நானும் பொறுமையிழந்து மௌனித்தேன்...

பாட்டியின் செயலால் பஸ்ஸிலிருந்த அனைவர் கவனமும் பாட்டியின் மீதுதான்...

"இந்த வயசான காலத்தில உது தேவையோ"

இன்னுமொருவர் முணுமுணுத்தார்...பாட்டி தன்னிருக்கையை விட்டெழுந்து சற்று முன்னே நடந்தவர் திடீரென இன்னுமொரு இருக்கையிலிருந்தவரிடம்
சிங்களத்தில் ,

'உதுல இறங்கினா எனக்குப் போகலாம் தானே"

பாட்டி.........தன் பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக்கி ஆளுக்காள் அபிப்பிராயம் கேட்டுக் கொண்டிருந்தா.....வயசானாலே பிடிவாதமும் சந்தேகமும் தான்................... என்  மனது அலுத்தது..

அம் மனிதர் பாட்டியை உற்றுப் பார்த்தவாறு தன் புருவங்களைச் சற்று உயர்த்தினார்.......

" அக்கா...நீங்க நொச்சியாகம யில இருந்தனீங்கள் தானே....மாணிக்கத்திட பெண்சாதியே நீங்க.......உங்கட வீட்டுக்கு ஒருக்கா நான் வந்திருக்கிறன்...நான் செல்வராசன்..........மறந்திட்டியள் போல...மாணிக்கம் அண்ணா சுகமே"

பாட்டி சற்று நேரம் யோசிக்கத் தொடங்கும் போதே பஸ் மீண்டும் தன் இலக்கு நோக்கி புறப்படத் தொடங்கியது..

"ஓமடா......செல்வா.........ஞாபகம் வருது...........பக்கத்தில இருக்கிறவ உன்ர மனிசியே........பார்த்து கனநாளாகுது உன்ன"

அவர்கள் பேச்சு தொடர்ந்தது....

"அக்கா.......கணேசன்ர வீட்டுக்கே போறியள்..........அவன் திசாவையில இருக்கிறான்...அவன்ர பக்கத்து வீட்டிலதான் நாங்க இருக்கிறோம்... எங்களோட வாங்கோ"

அவர்களின் உறுதிமொழியை பாட்டிக் ஏற்றுக் கொண்டே ஆகணும். உரிய இறக்கம் வந்ததும் என்னிடம் விடைபெற்றுக் கொண்டு அவர்களுடன் பாட்டி இறங்கினார்....

"வயதான காலத்தில் தெரியாத இடத்திற்கு பயணிப்பது எவ்வளவு பிழையான விடயம்" எனக்கு நானே கூறிக் கொண்டேன்...!




2012/07/26

சாதனை


அன்று  எனது கல்விமாணி பட்டப்படிப்பு வகுப்பிற்கு கலந்து செல்வதற்காக வவுனியா பஸ்ஸில் ஏறி அமர்ந்திருந்தேன்........அநுராதபுரத்திலிருந்து  அந்த பஸ் புறப்படுவதற்கு இன்னும் சில நிமிடங்கள் இருந்தன.!

அப்பொழுது ஒருவன் கையில் சில உரித்த தேங்காய் மட்டைகளுடன் பஸ்ஸூக்குள் ஏறினான். எல்லோரும் அவனை வேடிக்கையாகப் பார்ப்பதனைக் கூட அவன் பொருட்படுத்த வில்லை..

"தேங்காய் மட்டை 3 துண்டுகள் பத்து ரூபாய் " என சிங்களத்தில் விற்பனை செய்தவனை பஸ்ஸூக்குள் அமர்ந்திருந்தோர் கேலியாகப் பார்த்தனர்..என் வாழ்க்கையிலேயே பஸ்ஸூக்குள் தேங்காய் மட்டை விற்பனையைக் கண்ட முதல் சம்பவமும் அதுதான் ! என்னிடமும் மட்டையை நீட்டினான். நானோ அவசரமாக வேண்டாமென தலையாட்டினேன்

யாருமே அவனது வார்த்தைகளை பொருட்படுத்தவில்லை..

தனது விற்பனையை முடிவுக்கு கொண்டு வந்தவனாய் எங்கள் எல்லோரையும் பார்த்து சிங்களத்தில் பேசத் தொடங்கினான்.

"ஐயோ......நான் பிபிலையிலிருந்து பல மைல் தொலைவுக்கு வந்துள்ளேன்.......நான் கொண்டு வந்த தேங்காய்மட்டையை யாருமே வாங்கவில்லையே........நான் சுமந்தது வீண்தானோ !"

எனப் புலம்பி சில நிமிடங்கள் கழியவில்லை......

"ஹா ஹா"

உரத்துச் சிரித்தான்...அவனது பைத்தியக்காரச் செயல் எமக்கு வேடிக்கையாக இருந்தாலும் கூட, அவனிடமிருந்து நுழைந்த சாராய வாடை அவன் மீது எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது

" ஹா ஹா......நான் உங்களைச் சிரிக்க வைக்கவே இதனை விற்பதைப் போல் நடித்தேன்"

என்றவாறு தனது பழைய தோற் பையிலிருந்து நன்கு உலர்ந்த செவ்விளநீர்த் தேங்காய் ஒன்றை வெளியே எடுத்தான் ....

நான் இதனை 5 நிமிடத்தில் பற்களால் உரிக்கப் போகின்றேன்.....யாரால் இவ்வாறு செய்ய முடியும் " சவால் விட்டான்...

ஆனால் பஸ்ஸிலிருப்போர் எதுவும் பேசாமல் அவனது செயல்களை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்....

அந்த தேங்காயை திடீரென என் இருக்கையில் வைத்து விட்டு பஸ்ஸை ஒரு சுற்று சுற்றினான்.......நானோ பயத்தில் உறைந்து கிடந்தேன்..

சரி சரி ..........யாரும் இல்லையா........நானே உடைக்கின்றேன்.......ஆனால் நீங்கள் தர்மம் செய்ய வேண்டும் "

எனும் கோரிக்கையை பயணிகளிடம் முன்வைத்தான்.

அப்பொழுதும் அங்கே மௌனமே நிலவியது.

என்னிடம் வைத்த தேங்காயைத் திருப்பி எடுத்தவனாக சில நிமிடம் கண்களை மூடி கடவுளைப் பிரார்த்தித்தவாறே, ஆழமாக இரு தடவை மூச்சை உள்ளிழுத்தான். அதே வேகத்தில் பயணிகளின் அம்மௌனத்தை சம்மதமாகக் கருதி  பற்களால் மிக விரைவாகத்  தேங்காய் மட்டையை இழுத்தெடுத்து  சொன்னதைப் போல் உரித்து முடித்தான்.

நாங்களோ அவன் செயலால் அதிர்ச்சியில் உறைந்து கிடந்தோம்..உரித்த தேங்காயை என்னிடம் நீட்டி தனக்கு இருபது ரூபாய் தரும்படி கூறினான்... நான் அவன் கூற்றுக்கு இணங்காமல் வேண்டாமென தலையசைத்தேன்.

உண்மையில் அவன் சாதனை பிரமிக்கத்தக்கது. ஆனால் அவன் அந்த சாதனையை வெளிப்படுத்திய விதம், இடம், சந்தர்ப்பம் பொருத்தமற்று இருந்ததால் யாருமே அவன் செயலுக்கு கை தட்டக்கூட இல்லை..........

என் மனம் அதற்குத் துடித்தாலும் கூட, கூட்டத்தின் மௌனத்திற்கு கட்டுப்பட்டு என் கரங்களும் கை தட்ட மனமின்றி அடங்கிக் கிடந்தன......!

அவன் சாதனைக்காக பஸ்ஸில் சேகரித்த ஒரு சில நோட்டுக்களுடன் புன்னகைத்தவாறு  அடுத்த பஸ்ஸை நோக்கி நகர்ந்தான்  தன் திறமையை விற்கும் வியாபாரியாய் !


மயக்கமென்ன



அவன் ......................!

முப்பதைத் தாண்டாத அழகான வாலிபன்........நான் குடியிருக்கும் பகுதியிலேயே அவனும் அறையொன்றையெடுத்து நீண்ட காலமாக தங்கியிருக்கின்றான்..அரச வைத்தியசாலையில் தாதியாகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் அரச ஊழியன் அவன்...!

நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் ஒற்றைப் புன்னகையொன்று மட்டுமே பரிமாறுவோம்..........ஆனால் என்னைப் பொறுத்தவரை அவன் ரொம்ப நல்லவன்....அவனிடமுள்ள பலகீனம் பெண்களுடன் இயல்பாய், சரளமாய் பேசுவான், அவன் நிற்கும் இடங்களில் கலகலப்பு பூத்துக் கிடக்கும்

அவன் அவசர அவசரமாக ஒருத்தியைக் காதலித்து கரம் பிடித்து 2 வயது பெண்பிள்ளையின் தந்தை என்பது மட்டும் எனக்குத் தெரியும்..அவன் மணவாழ்க்கையில் ஏற்பட்ட முரண்பாடுகள் விவாகரத்து வரை நீள மீண்டும் தனிமரமாகி நிற்பதைக் காணும் போது என் மனசுக்கும் சற்றுச் சங்கடம்தான்......

மனம் நன்கு ஒன்றித்துத்தானே காதலிக்கிறார்கள்........ஏன் அந்தக் காதல் சீக்கிரம் அறுகின்றது...............ஆசை கொண்ட மனம் அலுப்பதற்குக் காரணமென்ன ...................யாரைத்தான் குறை சொல்வதோ!

ஆனால் நான் அவனை அடிக்கடி ஒரு பெண்ணுடன் கண்டிருக்கின்றேன்... அவளும் அவனுடன் வேலை செய்பவள் தான் போல்..தாதி சீருடையிலேயே அவனுடன் அவன் இருப்பிடத்திற்கு வருவாள்....

வீட்டுக்கார சகோதரியின் கண்டிப்பான உத்தரவின் பேரில் அவன் அவளை  தன்னறைக்கு அழைத்துச் செல்வதில்லை. வெளியே உட்கார்ந்து பேசுவார்கள். அல்லது இருவரும் உடனே வெளியே சென்று விடுவார்கள்..

அவள் சற்றுக் குண்டான மாநிறமான சின்ன வயசுப் பொண்ணு......அழகிய என்று சொல்ல முடியாவிட்டாலும் கூட, அவனுடன் ரொம்ப கலகலப்பாகப் பேசுவாள்......

திடீரென ஓர் நாள் அடிக்கடி வந்தவள் காணாமற் போனாள்.  .....அவளுக்கென்னாச்சு...........அவள் யார்.......அவனின் நண்பியா...... காதலியா.....இல்லை வருங்கால மனைவியா...
வீண் ஆராய்ச்சிக்குள் மூக்கை நுழைக்க விரும்பவில்லை...

பாவம் தான் அவனும்...சின்ன வயதில் தன் வாழ்க்கைத் துணையை இழந்திருக்கின்றான்......தனக்கொரு வாழ்வை மீண்டும்  அமைக்க நினைப்பதில் என்ன தவறு .............அவனும் வாழத்தானே வேண்டும் !

என் மனமும் அவனுக்காகப் பரிந்து பேசியது...

ஒரு சில மாதங்களின் பின்னர் மீண்டும் ஒரு பெண்ணுடன் அவனைக் கண்டேன்...ஆனால் அவள் முன்பு கண்ட பெண்ணல்லள்..........இவள் சற்று மெல்லியவள்..........அவனுடன் மோட்டர் சைக்கிளில் வரும் போது உரசிக் கொண்டுதான் வருவாள்.......அவள் வயதின் பருவக் கிளர்ச்சி அவனுடன் நெருங்கிப் பழக வைத்துள்ளது.........

இவளும் கூட அவனின்........................

மீண்டும் ஒரு சில வாரங்களின் பின் அவனுடன் முதலில் சுற்றிய பெண் அவனைத் தேடி அவனிருப்பிடத்திற்கு வந்தாள்........முன்பெல்லாம் அவன் அறைக்குள் செல்லாதவள் அன்று நேரே அவனறைக்குள் சென்று அவனுடன் சண்டை போட்டாள்..........

அவனோ எதுவுமே பேசவில்லை.....ஆனால் அவள் கதறல் காற்றின் மௌனத்தினையும் கசக்கிப் பிழிந்தது........அவனது அறைப் பொருட்களை தூக்கியெறிந்தாள்...........சில நிமிட காதல் யுத்தத்தின் பின் அவள் அழுதவாறே வெளியேற அவனும் அவள் பின்னால் ஓடினான்..........

காதல் வளர்த்து கனவுகள் காத்து ஆசையுடன் அவள் எதிர்பார்த்துக் காத்திருக்கையில் அவன் ஏமாற்றி விட்டானா..................

அல்லது புது நண்பியின் வருகையால் அவர்களுக்குள் முரண்பாடு வளர்ந்து பிரிவுக்குள் இருவரும் தள்ளி விடப்பட்டனரா.........

காலத்தின் புதிருக்குள் அவர்கள் வினாவும் விழுந்து கிடக்கின்றது.

நான் அவனைக் காணும் போதெல்லாம் அவளைப் பற்றி கேட்பதேயில்லை...அவர்களது தனி வாழ்வின் ரகஸியங்களாக அவை இருக்கக்கூடும் இன்னும் சில நாட்களில் அவன் இடமாற்றமாகி தன்னூருக்குச் செல்லவுள்ளான்.........

அவன் காதல் சூழ்நிலைக் காதல் போலும்.........வெறுமைப்பட்ட மனதுக்கு அன்பு கிடைத்திருக்கின்றது.... ...அந்த அன்பில் சலிப்பு ஏற்படும் போது ஆளும் மாறுகின்றது..........முரண்பாடுகள் முளைக்கும் போது மனம் வெறுத்து புதிய துணையின் பால் ஈர்க்கப்படுகின்றது......

காதல் என்பது பரிசுத்தமான உணர்வுகளின் சங்கமம் எனும் நிலை மாறி, இப்பொழுதெல்லாம் அங்கு காமத்தின் சேர்க்கையும் கலந்து விடுகின்றது.
காமம் இல்லாத காதல் செல்லாக் காசாகிக் கிடக்கின்றது..

ஓர் ஆண் , பெண்ணாணவள் தன்னை நோக்கி கவரப்படுகின்றாள் எனத் தெரிந்து கொண்டதும் அவனின் மனதிலும் அவளை உள்வாங்கத் தயாராகின்றான்.....அன்பு இவ்வுலகில் மிகப் பெரும் சக்தியாக இருப்பதே அதற்குக் காரணமாகும்..

ஆனால் இது உறுதியானதாக அவளை மட்டுமே துணையாகக் கொள்ளுமளவிற்கு எல்லார் மனங்களும் ஒருமித்து கிடப்பதில்லை.ஆழமான அன்பு , காதல் இருப்பவர்கள் மட்டுமே அந்தக் காதலை திருமணம் வரை நகர்த்த, பெரும்பாலான ஆண்கள் தங்களின் தனிமைக்குள், வெறுமைக்குள் நிரம்பும் காதலி .......திருமணம் எனும் எல்லைக்குள் நகரும் போது.....பின்வாங்கி விடுகின்றார்கள்......இந்த ஆண் மனநிலையை ஒத்த பெண்களும் இருக்கின்றார்கள் என்பதும் கவலைக்குரிய விடயம் தான்...............

முள்ளில் சேலை விழுந்தாலும்
சேலையில் முள் விழுந்தாலும் பாதிப்பு சேலைக்கே!

பெண்ணும் சேலைக்கு ஒத்த மென் மனதால்.!
..அந்த பலகீனம் தான் ஆணுக்கு பலமாகி காதல் உலாவில் வலம் வர வாய்ப்பளிக்கின்றது !

உணர்ச்சிகளை அலை மோத விட்டு புரியாத வயதில் அறியாமல் நிகழும் தவறுகளின் தண்டனை பெரும்பாலும் பெண்ணுக்கே வழங்கப்படுகின்றது... அத்தண்டனையால் அவள் ஆயுட் காலமுழுவதும் முட்களும், சகதிகளும் நிறைந்த பாதையில் பயணிக்கின்றாள்..இந்த முடிவு அவளாகவே தெரிவு செய்தது...அவள்தான் அனுபவிக்க வேண்டும் !விடுகின்றன........

அனுபவங்களால் வாழ்வை பெண் உணரும் போது அவளது எதிர்காலம் அவளை விட்டு தொலைந்து போகின்றது !