அன்று எனது கல்விமாணி பட்டப்படிப்பு வகுப்பிற்கு கலந்து செல்வதற்காக வவுனியா பஸ்ஸில் ஏறி அமர்ந்திருந்தேன்........அநுராதபுரத்திலிருந்து அந்த பஸ் புறப்படுவதற்கு இன்னும் சில நிமிடங்கள் இருந்தன.!
அப்பொழுது ஒருவன் கையில் சில உரித்த தேங்காய் மட்டைகளுடன் பஸ்ஸூக்குள் ஏறினான். எல்லோரும் அவனை வேடிக்கையாகப் பார்ப்பதனைக் கூட அவன் பொருட்படுத்த வில்லை..
"தேங்காய் மட்டை 3 துண்டுகள் பத்து ரூபாய் " என சிங்களத்தில் விற்பனை செய்தவனை பஸ்ஸூக்குள் அமர்ந்திருந்தோர் கேலியாகப் பார்த்தனர்..என் வாழ்க்கையிலேயே பஸ்ஸூக்குள் தேங்காய் மட்டை விற்பனையைக் கண்ட முதல் சம்பவமும் அதுதான் ! என்னிடமும் மட்டையை நீட்டினான். நானோ அவசரமாக வேண்டாமென தலையாட்டினேன்
யாருமே அவனது வார்த்தைகளை பொருட்படுத்தவில்லை..
தனது விற்பனையை முடிவுக்கு கொண்டு வந்தவனாய் எங்கள் எல்லோரையும் பார்த்து சிங்களத்தில் பேசத் தொடங்கினான்.
"ஐயோ......நான் பிபிலையிலிருந்து பல மைல் தொலைவுக்கு வந்துள்ளேன்.......நான் கொண்டு வந்த தேங்காய்மட்டையை யாருமே வாங்கவில்லையே........நான் சுமந்தது வீண்தானோ !"
எனப் புலம்பி சில நிமிடங்கள் கழியவில்லை......
"ஹா ஹா"
உரத்துச் சிரித்தான்...அவனது பைத்தியக்காரச் செயல் எமக்கு வேடிக்கையாக இருந்தாலும் கூட, அவனிடமிருந்து நுழைந்த சாராய வாடை அவன் மீது எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது
" ஹா ஹா......நான் உங்களைச் சிரிக்க வைக்கவே இதனை விற்பதைப் போல் நடித்தேன்"
என்றவாறு தனது பழைய தோற் பையிலிருந்து நன்கு உலர்ந்த செவ்விளநீர்த் தேங்காய் ஒன்றை வெளியே எடுத்தான் ....
நான் இதனை 5 நிமிடத்தில் பற்களால் உரிக்கப் போகின்றேன்.....யாரால் இவ்வாறு செய்ய முடியும் " சவால் விட்டான்...
ஆனால் பஸ்ஸிலிருப்போர் எதுவும் பேசாமல் அவனது செயல்களை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்....
அந்த தேங்காயை திடீரென என் இருக்கையில் வைத்து விட்டு பஸ்ஸை ஒரு சுற்று சுற்றினான்.......நானோ பயத்தில் உறைந்து கிடந்தேன்..
சரி சரி ..........யாரும் இல்லையா........நானே உடைக்கின்றேன்.......ஆனால் நீங்கள் தர்மம் செய்ய வேண்டும் "
எனும் கோரிக்கையை பயணிகளிடம் முன்வைத்தான்.
அப்பொழுதும் அங்கே மௌனமே நிலவியது.
என்னிடம் வைத்த தேங்காயைத் திருப்பி எடுத்தவனாக சில நிமிடம் கண்களை மூடி கடவுளைப் பிரார்த்தித்தவாறே, ஆழமாக இரு தடவை மூச்சை உள்ளிழுத்தான். அதே வேகத்தில் பயணிகளின் அம்மௌனத்தை சம்மதமாகக் கருதி பற்களால் மிக விரைவாகத் தேங்காய் மட்டையை இழுத்தெடுத்து சொன்னதைப் போல் உரித்து முடித்தான்.
நாங்களோ அவன் செயலால் அதிர்ச்சியில் உறைந்து கிடந்தோம்..உரித்த தேங்காயை என்னிடம் நீட்டி தனக்கு இருபது ரூபாய் தரும்படி கூறினான்... நான் அவன் கூற்றுக்கு இணங்காமல் வேண்டாமென தலையசைத்தேன்.
உண்மையில் அவன் சாதனை பிரமிக்கத்தக்கது. ஆனால் அவன் அந்த சாதனையை வெளிப்படுத்திய விதம், இடம், சந்தர்ப்பம் பொருத்தமற்று இருந்ததால் யாருமே அவன் செயலுக்கு கை தட்டக்கூட இல்லை..........
என் மனம் அதற்குத் துடித்தாலும் கூட, கூட்டத்தின் மௌனத்திற்கு கட்டுப்பட்டு என் கரங்களும் கை தட்ட மனமின்றி அடங்கிக் கிடந்தன......!
அவன் சாதனைக்காக பஸ்ஸில் சேகரித்த ஒரு சில நோட்டுக்களுடன் புன்னகைத்தவாறு அடுத்த பஸ்ஸை நோக்கி நகர்ந்தான் தன் திறமையை விற்கும் வியாபாரியாய் !
மிக அருமையான கதை....நேரில் பார்த்த அனுபவம் ஜான்சி :)) தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி பிரபு ...........
Delete