2012/06/28
காத்திரு!
என்னிடம் திரும்பி வா
எனக்குன் காதல் வேண்டும்!
என் காற்றில் நெய்த தூதோலைகள்
சமுத்திரம் துளைத்துன் கரம் சேரட்டும்!
விண்வெளிச் சூரியப் பூ- நம்
பிரிவின் தீ வார்ப்பில் நசுங்கிப் போகட்டும்!
என்னிடம் திரும்பி வா
எனக்குன் காதல் வேண்டும்!
என் வழிப் பாதையில் ஒட்டிக்கொண்ட
உன் நேசிப்புக்களால்
என்னுயிரின் பெண்மை சிலிர்க்கட்டும்!
நம் வேடிக்கைச் சிதறலின்
ஈரத்தில் கூடல் கொஞ்சம்
வெட்கித்து மோகித்துக் கிடக்கட்டும்!
என்னிடம் திரும்பி வா
எனக்குன் காதல் வேண்டும்!
ஒவ்வொரு நிசப்தங்களிலும்
என் மூச்சின் விரல்களில் - உன்
முத்த ரேகைகள் சுகமாய் சயனிக்கட்டும்!
நீ தந்த தனிமைப் பொழுதின்
காயங்கள் யாவும்
கண்ணீரில் மௌனித்து கரையட்டும்!
என்னிடம் திரும்பி வா!
எனக்குன் காதல் வேண்டும்!
உன் நிழலோடு
என் தடங்கள் அலையும் பயணத்தில்
உன் தேசமே சொந்தமாய் வீழட்டும்!
சோகத்தின் துவம்சத்தில் சொக்கிக் கிடக்கும்
இப் பாவையின் ஏக்கம் தீரவே
மாரியாய் உன் தூறல் மாறட்டும்!
என்னிடம் திரும்பி வா!
எனக்குன் காதல் வேண்டும்!
இருள் கவிந்து மிரட்டும் - என்
திக்குத் தெரியா காட்டின்
திசைகாட்டியாய் உன் ஞாபகம் வீழட்டும்!
நிசர்சனங்களில் உனையேந்தி
நிழலுக்குள் மறைந்திருக்குமென்னை
உன் கண்கள் மட்டுமே துகிலுரிக்கட்டும்!
என்னிடம் திரும்பி வா!
எனக்குன் காதல் வேண்டும்!
உன் காத்திருப்புக்களின் சுயம்வரத்தில்
தொட்டுக் கொள்ளும் கணங்கள் தோறும்
உன் மாலை என் தோள் சேரட்டும்!
என்றோ திரும்பி வருவேன்
உன் காத்திருப்புக்கள் எனக்கானால்
உன் வசம் சேர்ந்திருப்பேன்!
ஜன்ஸி கபூர்
2012/06/26
சில நினைவுகள்
ஆசிரியர்த் தொழிலில் நானீட்டிய சில பசுமையான சாதனைகளின் நினைவுகளின் தொகுப்புக்கள் இவை
-----------------------------------------------------------------
வடமத்திய மாகாணத்தில் தமிழ் மொழி மூல சிறந்த விஞ்ஞான ஆசிரியையாக தெரிவு செய்யப்பட்ட போது
சர்வதேச ஆசிரியா் தினத்திற்காக பாடசாலையில் எனக்குக் கிடைத்த விருது
(குறைந்த லீவு)
தந்தவர் அன்றைய அதிபர் அன்பு ஜவஹர்ஷா சேர் அவர்கள்
தேசிய மட்ட ஆசிரியர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் பரிசில் பெறல்
தருபவர் அன்றைய கல்வியமைச்சர் ரிச்சட் பத்திரன அவர்கள்
என் இலக்கிய பயணத்திற்காக யாழ் முஸ்லிம் இணையத்தளம் வழங்கிய "விருது " .
நான் வரைந்தவை
"பெப்ரிக்" ( இந்தியா) வர்ண நிறுவனம் நடாத்திய துணி ஓவியப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட இருபத்தைந்து பேரில் முதலிடம் பெற்ற என் தூரிகை அசைவுகள் இவை-
மீண்டும் உரிய முன்பக்கத்திற்குச் செல்ல வேண்டுமாயின் இதனை அழுத்துக
விபத்துக்கள்
அழகான வாழ்க்கையின் அர்த்தங்கள் ஓர் நொடிப் பொழுதின் விபத்துக்கள் மூலம் சிதறிப் போய் விடுகின்றன. ஊனங்களும், உயிரிழப்புக்களும் விபத்தின் கொடுரமான பக்கங்கள். பெரும்பாலும் வீதி விபத்துக்களுக்கு கவனயீனம், அவசரமே காரணமாகின்றன. ஓர் நிமிட தாமதங்களை விரும்பாமல் விரைந்து செல்ல முயற்சிக்கும் போக்கு தரும் அழிவுகள் நாள் தோறும் செய்திகளாக அனுபவங்களாக நம் கண்முன்னால் வெடித்துக் கொண்டே இருக்கின்றன.
நானும் வீதி விபத்தொன்றில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சிக்கியவள் தான். முகத்தில் காயம். மயிரிழையில் எனது இடது கண் தப்பியது. மழை நாளொன்றில் எனது மோட்டார் வாகனத்தில் செல்லும் போது எதிர்பக்கத்திலிருந்து வந்த வாகனத்திற்கு இடமளிப்பதற்காக விரைவாகப் பாதையைக் கடக்க முயற்சிக்கும் போது மழைநீரில் நிரம்பியிருந்த குழியினுள் மோட்டார் வாகனச்சில்லு உருண்டதால் ஏற்பட்ட அந்த விபத்தின் ஞாபகங்கள் ஒவ்வொரு நாளும் அந்த முகத்தழும்புகளால் உயிர்ப்பூட்டப்படுகின்றன.
இரத்தத்தில் தோய்ந்த ஹெல்மெட் கண்ணாடியும், சிவப்பு நிறமாக மாற்றப்பட்ட என் மழை அங்கியும் இரத்தக் கசிவாகி நின்ற என்னைப் பார்த்த என் உறவுகளின் கதறல்களும் இன்றும் என்னுள் மறக்கப்படமுடியாத பதிவுகள்.
வீதியில் இறங்கும் போதே உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையில் பயணிக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம். இன்றைய கால கட்டத்தில் தொழிலுக்குப் போகும் பெண்கள் வீதியை மறந்து வாழ முடியாது.ஆண்களின் இயக்கம் அவர்களுக்கும் மறுக்கப்படாத நிகழ்வாகி விட்டன. விபத்துக்களைப் பொறுத்தவரையில் தாமே பயணித்து விபத்துக்குள்ளாகும் நிலை ஆண்களுக்கே அதிகம்.
நாம் எவ்வளவுதான் கவனமாக ,அவதானமாகச் செயற்பட்டாலும் கூட ஏனையோரின் கவனயீனமும் , அவசரமும் நமக்குள் பாதிப்பைத் தருகின்றன.
வீதியில் அன்றாடம் சதை கிழிந்து , குருதி கசிந்து மலினப்பட்டுக் கிடக்கும் மனிதங்களின் கோரங்கள் தினம் தினம் செய்தியாக அல்லது கண்ணுள் விழும் காட்சியாகிப் போகின்றது. இந்நிலையில் விபத்தைத் தவிர்ப்பதில் ஒவ்வொருவரும் பங்குதாரராக மாற வேண்டும்.
பெரும்பாலான விபத்துக்கள் இரவிலேயே நடைபெறுகின்றன. இதற்கு காரணமாக சாரதியின் தூக்கமோ அல்லது சனநடமாட்டம் குறைந்ததால் வேகமாகப் பயணித்து , அதன் விளைவாக தன்னிலைப்படுத்த முடியாமல் விதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்துடன் மோதுதல் அல்லது குடைசாய்தல் போன்றவற்றைக் குறிப்படலாம்.
---------------------------------------------------------------
பெரும்பாலும் இரவுப் பயணத்தை தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத காரணங்களால் பயணம் செல்ல வேண்டிய அவசியமேற்பட்டால் வாகனமோட்டுபவர் விழிப்புடன் ஒட்டுதல் வேண்டும். தனித்துப் பயணிப்பதை தவிர்த்தல் வேண்டும். உடல் அயர்ச்சியோ அல்லது தூக்கமோ ஏற்பட்டால் வாகனத்தை சற்று நிறுத்தி ஓய்வெடுத்தல் வேண்டும்.
மனஅழுத்தத்துடனோ அல்லது கவன கலைப்புக்களால் மனம் தடுமாறும் போதோ வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
வாகனம் வீதியில் பயணிக்க வேண்டிய குறித்த வேகங்களிலேயே பயணிக்க வேண்டும். பெரும்பாலானோர் தம் திறமையை அடுத்தவருக்கு வெளிப்படுத்த உச்ச வேகத்தில் பயணிப்பார். இத் தவறு கூட நம்முடன் பயணித்துக் கொண்டிருப்போரின் உயிரைக் காவு கொள்ளக்கூடியது.
சனத்தொகைப் பெருக்கத்தினதும், நகரமயமாக்கலினதும் முக்கியமான விளைவுகளுள் ஒன்றாக அதிகரித்த வாகனப் பயன்பாடுள்ளது. தற்போது வாழ்க்கைச் செலவு அதிகரித்த நிலையிலும் கூட ஒவ்வொரு வீடுகளிலும் வாகனங்கள் காணப்படுகின்றன. இதனால் வீதியில் வாகன நெரிசல்கள் ஏற்படுகின்றன.
நாம் பயணிக்கும் போது இரண்டு வாகனங்களுக்கிடையில் உள்ள இடைத்தூரத்தை பேணல் வேண்டும்.அத்துடன் வீதி விளக்குகள், சைகை விளக்குகள் உரிய விதத்தில் ஒளிரச் செய்வதும், வாகனப் பயன்பாட்டின் முன்னர் வாகனத்தின் இயக்க நிலையைச் சரி செய்வதும், நன்றாகப் பயிற்சி பெற்று உரிய சான்றிதழ் பெற்ற பின்னர் வாகனமோட்டுவதும் நமது கடமையாகின்றது.
பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் வாகன பின் இருக்கைகளில் அமரும் போது சேலை சில்லிற்குள் சுற்றுவதால் விபத்துக்கள் நிகழ்கின்றன.
மேலும் பேருந்து போன்ற பொது வாகனங்கள் உரிய தரிப்புக்களில் நிறுத்தும் போது பயணிகளை ஏற்ற அவசரப்படுத்துவார்கள். அவர்கள் ஏறுவதற்கிடையிலோ அல்லது இறங்குவதற்கிடையிலோ வாகனத்தை விரைவுபடுத்துவதாலும் பயணிகள் கீழே விழுந்து விபத்துக்களுக்குள்ளாகின்றனர். அதுமாத்திரமின்றி மதுபாவனை, நோயுடன் வாகனமோட்டுதல், வாகனம் பயணிக்கும் போது வீதியில் நடமாடும் மிருகங்கள் குறுக்கே பாய்வதும் விபத்துக்களின் மூலவேர்களாகும்.
நம் உயிரின் பெறுமதியை ஏனோ நாம் உணர்வதில்லை. எதிர்பாராமல் அசம்பாவிதம் நடைபெற்ற பின்னர் அந்தப் பாதிப்புக்கள் தரும் ஊனமும் உயிரிழப்புக்களும் நம்மை மட்டுமல்ல நம் உறவுகளையும் பாதித்து விடுகின்றன.
வாழ்க்கை என்பது நீண்டகாலப் பயணம். சில அவசரங்களும் கவனயீனமும் அந்த வாழ்க்கையைச் சிதைக்கும் போது அந்த இழப்புக்கள் தாங்க முடியாதவை. நம்மைப் படைத்தவன் நம்மைக் காத்தருளுவானாக!
Subscribe to:
Posts (Atom)