About Me

2012/09/07

காற்றே என் வாசல் வந்தாய்



மருதாணி பாடலை ரசிக்க இவ்விணைப்பை அழுத்துக

திருடிய இதயத்தை




நம்வாழ்வின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முரண்பாடுகள் பல்வேறு கோணங்களில் எம்மைச் சுற்றிப் படர்கின்றன. அம் முரண்பாடுகள் தரும் மனவழுத்தத்தை ஆரம்பத்தில் நீக்கிவிடும் போதுதான் மனமும் லேசாகின்றது. அவ்வழுத்தம் , மனசைப் பற்றியிழுத்துப் பிறாண்டி கண்ணீரில் இதயத்தைத் தோய்த்தெடுக்கும் போது, கவலைக்குள் நாமழிந்து அமிழ்ந்து போகின்றோம்............ !

அதிலும் காதல் வலி தரும் சோகங்கள், இதயத்தின் உணர்ச்சி மையங்களைத் தீண்டி உயிரையே நெருடிவிடுகின்றன.....

நேற்றைய பொழுதுகளில், தன்னிருப்பையே அவள் மனதுள் விதைத்து, அவளது அழகான கற்பனைக் கோட்டைக்குள் இளவரசனாய் தன்னையே முடிசூட்டியவன், அவளது கனவுத் தோட்டங்களில் நீரோடையாய் சலசலத்தவன், திடீரென தன்னிலிருந்து நீங்கிவிடுமாறு வார்த்தைகளால் இம்சிக்கும் போது , எப்பெண்தான் தாங்கிக் கொள்வாள்.......

வாலிப வாழ்வின் மறுக்கப்பட முடியாத ஓர் பக்கமே காதல்..!
அந்த இனிய இம்சைக்குள் வீழாமல் தப்பியோடுபவர்கள் விரல் விட்டெண்ணக்கூடியவர்களே!  சில காதல் ....திருமணம் தொட்டு நிற்கும், சிலதோ உரிய கல்யாணப்பருவம் எட்டுமுன் பாதியிலே காணாமற் போய் விடும், சிலவோ வெளிப்படுத்தப்படாமல் , மனதுக்குள் மறைத்து வைக்கப்பட்டு வெறும் கற்பனையாகவே அமிழ்ந்து விடும்!

"தன் நேசிப்புக்கு உரித்தாளி" தன்னை மட்டுமே சுவாசித்து, கவனித்து அன்பு செலுத்த வேண்டுமென்ற , உந்துகையே காதலில் பிரிவினையையும், முரண்பாடுகளையும் தோற்றுவித்து விடுகின்றது...

காதல் நெஞ்ச முதிர்க்கும்  சொற்கள் ஒவ்வொன்றுமே, தேவாமிர்தமாய் மனசால்  உறிஞ்சுக் கொள்ள, அக் குரலலையையே எந் நேரமும் , நினைவுகள் உள்வாங்கிக் கொள்ள , இருதயமோ பட்டாம் பூச்சியாய் பறந்து திரிய, அந்த எதிரொலியின்  மயங்கத்தில் நாட்கள் கிறங்கிக் கிடக்க , அழகிய கனவுத் தேசத்தில் காதல் மனங்களை உலா வரத் தூண்டும் சக்தி இந்தக் காதலுக்கேயுண்டு!

எனினும் காதலர்கள் விரும்பாத வார்ததையொன்று இருக்குமானால் அதுதான் பிரிவு! மெய்க் காதல், பிரிவைக் கண்டால் துடித்து விடுகின்றது...தன் மெய்யையே வருத்தி அழகின் பொலிவையும் மங்கச் செய்துவிடுகின்றது.

மரண அவஸ்தையை விட கொடுரமானது காதல்ப்பிரிவு. ஏனெனில் ஒவ்வொரு கணமும் உயிருடன் வேரறுக்கப்படும் கணங்களே பிரிவின் தருணங்களாக அறிவிக்கப்படுகின்றன....

அதனால்தான் பிரிவின் அவஸ்தையிலிருந்து விலகிக் கொள்ள , நாயகி மன்றாடுகின்றாள். அவன் பார்வையால், நேசத்தால் பறித்தெடுத்த தன்னுணர்வை, நிம்மதியை, சந்தோஷங்களை மீளத் தன்னிடமே சேர்த்து விடும் படி என இறைஞ்சும் அவள் மன்றாட்டம்..........கண்ணீராய் கசிகின்றது இவ்வாறு!

"திருடிய இதயத்தை திருப்பிக் கொடு " என்றவள் கதற,

அவனோ ..........என்னிலிருந்து உன்னினைவுகளை யுமகற்றி என்னையும் நிம்மதியாக வாழவிடுவென்றும் மாறி மாறி துடிக்குமிதயத்தின் அலைவுகளை வார்த்தையாக்கி வெளிப்படுத்துகின்றனர்.

 அவர்களினிந்த வேதனைத்துடிப்பு,  இப்பாடலைக் கேட்போர் மனங்களில் சோகங்களையும் கொட்டிவிடுகின்றது...

எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காத சலிக்காத இப் பாடல் ,இதயத்தின் வழி நுழைந்த காதலினாழத்தையும், அக் காதலின்  வெளியேற்றத்தை மறுக்கத் துடிக்கின்ற இவ்விருதய வலியையும் உணர்வுபூர்வமாக நம்முள்ளும்  தொற்றி நிற்கின்றது..

இதுவும் என்னைக் கவர்ந்த பாடலிலொன்று...!

ஏனோ தெரியாது சிறுவயதிலிருந்தே சோகமெனக்கு ரொம்பப் பிடிக்கும். அச் சோகத்தைப் பிரதிபலிக்க வழங்கப்படும்  இசை​யும் அதைவிடப் பிடிக்கும்..........!

நினைத்து நினைத்து பார்த்தேன் பாடலை ரசிக்க

திரும்பத் திரும்ப பார்த்து.............




விழியோரம் கசியும் அன்பே காதலாகி இதயத்தில் படரும் போது, மனசும் மகிழ்வுக்குள் நிரம்பிக் கொள்கின்றது.

காதல் அழகானது....அதன் அன்போ ரம்மியமானது! அதனால்தான் அது சலிப்பில்லாமல் தன்னுயிரைத் திரும்பத்திரும்ப பார்க்கத் தூண்டுகின்றது. அவள் மூச்சுக்காற்றில் அவன் சுவாசமாய், அவனுயுரில் அவள் உணர்வாய் நினைவுகளைப் பரிமாறத் தூண்டுகின்றது காதல்!

அவனது விழி வருடலில், அவள் பெறும் சுகங்கள் கனவாகி அந்த இரவினில் முகிழ்க்கையில், காதல் கொண்ட  மனங்களோ இறக்கை கட்டி வானமதில் கூடு கட்டி நிலாவிலே உலாவத் துடிக்கின்றது............

காதல் ஓர் உணர்ச்சிப் பிழம்பு..அதனால்தான் இருதயத்துடிப்போட்டங்கள் கூட சடுதியாகி, மனங்களில் மண்றாடிக் கிடக்கின்றன.......

இவ் அவனி கூட அன்பின் பிணைப்பிலடங்கிக் கிடப்பதால்,இயற்கை கூட காதலை வளர்த்து விடுகின்றது.....அவள் சேலை  காற்றிலே பறந்து மேகத்தில் சென்று வானவில்லாகி அவனையே வளைத்துப் போடுகின்றது. இந்தப் பரவசமும் ரசிப்பும் காதலில் மட்டுமே சாத்தியம்.......

காதலுக்குள் இத்தனை இனிமையே, அவன் இமைகள் மூடும் போது , அவளுருவம் மறைந்து போக, அத்துக்கம் தாளாமல் மருத்துவம் தேடும் இந்த வேட்கையும், பிரிவை வெறுக்கும் மனமும் காதலில் மட்டுமே உள்ளது என்பது பொய்யில்லைதான்..........

இறப்பு, பிறப்பு போல வாழ்வில் ஒருமுறை மாத்திரம் தோன்றும் இந்தப் பிணைப்பின் இறுக்கமுணர்த்தும் இந்தப் பாடலின் வரிகளும், இசையும் என்னையும் வளைத்துப் போட்டதில் ஆச்சரியமில்லைதான்..........

என் ரசிப்பில் நிறைந்திருந்த குனால்- மொனல், தங்கள் சொந்த வாழ்வுப் போராட்டங்களால் தம்முயிரை நீத்து, இப்பொழுது ஓர் வருடம் ஓர்நொடியாய் பறந்தாலும் கூட, இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம், அதன் காதல் சுவை குன்றாமல் எம் மனதையும் கட்டிப் போட்டிழுக்கின்றதே!

திருடிய இதயத்தை திருப்பி கொடுத்திடு பாடலை ரசிக்க இவ்விணைப்பை அழுத்துக

சிவகாசி



இயற்கையின் மோகனத்துள்- பல
வுயிர்கள் தம் யதார்த்த வாழ்விலிணைய.......
கிழக்கு தொட்டு  விடியல் பரப்பி
ஒளி சிந்திச் சென்றான் ஆதவன்!

பட்டாசு  உரு கோர்த்துத் தொழிலாற்ற
இட்டத்துடன் தொழிலகம் சென்றவர்களால்........
சிவகாசியில் மட்டுமன்று அஸ்தமனம் முகங்காட்ட
பூத்த விடியலும் கருகிப் போச்சு !

பாதுகாப்பற்ற தொழிலறைகள்
ஆபத்துக்களோடு பேரம் பேசியதால்...........
வெடிப்பூக்கள் மோதுகைக்குள் வீழ்ந்து சிரிக்க
துடிபடக்கி வெந்து நின்றனர் பலர்..........

விழிகளில் கனவு தேக்கி
வாழ்வைத் தேடலில் செதுக்கியோர்
கல்லறைக்குள் வீழ்ந்து கிடக்க
விதியிங்கு வினையொன்று செய்ததோ!

மனசெங்கும் சோகம் பிழிந்து
கன்னவோரம் நீர் நனைத்துக் கிடக்க.........
மனிதவுடல்கள் சதை கிழிந்தறுந்து
இன்னொரு ஹிரோசிமாவாய் சரிதம் தொட்டது!

பசுமையில் குஷாலித்த சுற்றமெங்கும்- வெடி
மாசுக்களால் மோகித்துக் கிடக்க........
வெண்ணிற மேகங்களும் தமக்குள்
கருமை பூசி கண்டனம் செய்தன ...........

எட்டப்பராய் எட்டிப் பார்த்த மரணங்கள்
பட்டாசு நிலவறையைக் குத்தகைக்கெடுத்ததில்...
கண்ணீரும் அவலமும் தேசியமாகிப் போகவே
சுக நலமிங்கு சிதைந்துதான் போனது!

இரசாயனங்கள் தம்முள் மோதியெழுந்ததில் - பல
இரகஸியங்கள் யிங்கு பரகஸியமானதே.......
கந்தக நெடியின் அராஜகத்துள்
சிந்திக் குழறின குருதித்துளிகள் கனமாய்!

தீக்குச்சியாய் இவர்கள் மாறியதில்- சிவகாசித்
திக்கெங்கும் பொசுங்குமுடல்களே மலையாக.............
தேசமெங்குமிவை செய்தியாய் பரவியதில்.......
பாசத்தின் கண்ணீரஞ்சலி ஈரம் தந்தது!

இழப்புக்கள் கண்ட பாசங்களினி
அழுகைக்குள் தமை சிறைப்படுத்த..........
வெடிவிபத்தின் சோகங்களைப் பிழிய- இனி
இடி மழையாய் அரசியல் கோஷங்கள் மோதும்!

உரிமையாளர் தேடலும்  பலர் கைதுமென- இனி
வருடங்களும் கடந்தோடும்!
பலிக்கடாக்களாகும் மனிதங்களுக்காய்
நீலிக் கண்ணீர் சிந்தும் அரசியலினி !

வெறுமைப் பட்ட சிவகாசி யினியும்
உயிரறுக்குமோ பட்டாசுக்களால் !
வருங்காலத்திலும் மனிதவுயிர் காக்கப்படவே
இறைவன் தானருள வேண்டுமென்றும்!







(படங்கள் உதவி- நண்பர்  Isac Jcp - சிவகாசி)

மேலதிகக் காட்சிகளைக் காண இவ் விணைப்பை அழுத்துக.

சிவகாசியிலுள்ள , முதலிப்பட்டி ஓம்சக்தி பட்டாசு ஆலையில் , விபத்தைப் பார்க்கப் போனவர்களும், காப்பாற்றப் போனவர்களும் கூட பலியாகியுள்ளனர். பலர் இதில் பலியாகி (அரசு தரப்பு கூறும் தொகை 35) யுள்ளதுடன், பலர் கடும் காயங்களுக்குமுள்ளாகியுள்ளனர். இன்னும் பலர் எரிகாயங்களுடன் சுயநினைவற்றுள்ளனர்.

இவ்விபத்துக்குக் காரணம் பட்டாசு அதிபர்களின் விதிமுறை மீறல்களும், தலைவிரித்தாடும் லஞ்சமுமென குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    நன்றி- ஜூனியர் விகடன்