திருடிய இதயத்தை
நம்வாழ்வின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முரண்பாடுகள் பல்வேறு கோணங்களில் எம்மைச் சுற்றிப் படர்கின்றன. அம் முரண்பாடுகள் தரும் மனவழுத்தத்தை ஆரம்பத்தில் நீக்கிவிடும் போதுதான் மனமும் லேசாகின்றது. அவ்வழுத்தம் , மனசைப் பற்றியிழுத்துப் பிறாண்டி கண்ணீரில் இதயத்தைத் தோய்த்தெடுக்கும் போது, கவலைக்குள் நாமழிந்து அமிழ்ந்து போகின்றோம்............ !

அதிலும் காதல் வலி தரும் சோகங்கள், இதயத்தின் உணர்ச்சி மையங்களைத் தீண்டி உயிரையே நெருடிவிடுகின்றன.....

நேற்றைய பொழுதுகளில், தன்னிருப்பையே அவள் மனதுள் விதைத்து, அவளது அழகான கற்பனைக் கோட்டைக்குள் இளவரசனாய் தன்னையே முடிசூட்டியவன், அவளது கனவுத் தோட்டங்களில் நீரோடையாய் சலசலத்தவன், திடீரென தன்னிலிருந்து நீங்கிவிடுமாறு வார்த்தைகளால் இம்சிக்கும் போது , எப்பெண்தான் தாங்கிக் கொள்வாள்.......

வாலிப வாழ்வின் மறுக்கப்பட முடியாத ஓர் பக்கமே காதல்..!
அந்த இனிய இம்சைக்குள் வீழாமல் தப்பியோடுபவர்கள் விரல் விட்டெண்ணக்கூடியவர்களே!  சில காதல் ....திருமணம் தொட்டு நிற்கும், சிலதோ உரிய கல்யாணப்பருவம் எட்டுமுன் பாதியிலே காணாமற் போய் விடும், சிலவோ வெளிப்படுத்தப்படாமல் , மனதுக்குள் மறைத்து வைக்கப்பட்டு வெறும் கற்பனையாகவே அமிழ்ந்து விடும்!

"தன் நேசிப்புக்கு உரித்தாளி" தன்னை மட்டுமே சுவாசித்து, கவனித்து அன்பு செலுத்த வேண்டுமென்ற , உந்துகையே காதலில் பிரிவினையையும், முரண்பாடுகளையும் தோற்றுவித்து விடுகின்றது...

காதல் நெஞ்ச முதிர்க்கும்  சொற்கள் ஒவ்வொன்றுமே, தேவாமிர்தமாய் மனசால்  உறிஞ்சுக் கொள்ள, அக் குரலலையையே எந் நேரமும் , நினைவுகள் உள்வாங்கிக் கொள்ள , இருதயமோ பட்டாம் பூச்சியாய் பறந்து திரிய, அந்த எதிரொலியின்  மயங்கத்தில் நாட்கள் கிறங்கிக் கிடக்க , அழகிய கனவுத் தேசத்தில் காதல் மனங்களை உலா வரத் தூண்டும் சக்தி இந்தக் காதலுக்கேயுண்டு!

எனினும் காதலர்கள் விரும்பாத வார்ததையொன்று இருக்குமானால் அதுதான் பிரிவு! மெய்க் காதல், பிரிவைக் கண்டால் துடித்து விடுகின்றது...தன் மெய்யையே வருத்தி அழகின் பொலிவையும் மங்கச் செய்துவிடுகின்றது.

மரண அவஸ்தையை விட கொடுரமானது காதல்ப்பிரிவு. ஏனெனில் ஒவ்வொரு கணமும் உயிருடன் வேரறுக்கப்படும் கணங்களே பிரிவின் தருணங்களாக அறிவிக்கப்படுகின்றன....

அதனால்தான் பிரிவின் அவஸ்தையிலிருந்து விலகிக் கொள்ள , நாயகி மன்றாடுகின்றாள். அவன் பார்வையால், நேசத்தால் பறித்தெடுத்த தன்னுணர்வை, நிம்மதியை, சந்தோஷங்களை மீளத் தன்னிடமே சேர்த்து விடும் படி என இறைஞ்சும் அவள் மன்றாட்டம்..........கண்ணீராய் கசிகின்றது இவ்வாறு!

"திருடிய இதயத்தை திருப்பிக் கொடு " என்றவள் கதற,

அவனோ ..........என்னிலிருந்து உன்னினைவுகளை யுமகற்றி என்னையும் நிம்மதியாக வாழவிடுவென்றும் மாறி மாறி துடிக்குமிதயத்தின் அலைவுகளை வார்த்தையாக்கி வெளிப்படுத்துகின்றனர்.

 அவர்களினிந்த வேதனைத்துடிப்பு,  இப்பாடலைக் கேட்போர் மனங்களில் சோகங்களையும் கொட்டிவிடுகின்றது...

எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காத சலிக்காத இப் பாடல் ,இதயத்தின் வழி நுழைந்த காதலினாழத்தையும், அக் காதலின்  வெளியேற்றத்தை மறுக்கத் துடிக்கின்ற இவ்விருதய வலியையும் உணர்வுபூர்வமாக நம்முள்ளும்  தொற்றி நிற்கின்றது..

இதுவும் என்னைக் கவர்ந்த பாடலிலொன்று...!

ஏனோ தெரியாது சிறுவயதிலிருந்தே சோகமெனக்கு ரொம்பப் பிடிக்கும். அச் சோகத்தைப் பிரதிபலிக்க வழங்கப்படும்  இசை​யும் அதைவிடப் பிடிக்கும்..........!

நினைத்து நினைத்து பார்த்தேன் பாடலை ரசிக்க

4 comments:

 1. Replies
  1. ம்ம் ஸ்ரீதரன்.ஒவ்வொரு வரிகளின் ஆழத்திலும் அதனிசையிலும் மனம் லயித்து விடுகின்றது !

   Delete
 2. “ உன் கையசைவிற்காகவே
  எத்தனைமுறை வேண்டுமானாலும்
  உன்னிடமிருந்து விடை பெறலாம் “

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துரைக்கு நன்றி அருண்

   Delete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை