About Me

2014/08/03

வழித்துணை



நாம் வாழ்க்கையில் சந்திக்கும் நபர்கள் ஏதோ ஓர் வகையில் நமக்குப் படிப்பினையாக உள்ளனர். அந்த படிப்பினைகளைப் பகிரும் பதிவு இது
---------------------------------------------------------------------------------------------

இன்று....
யாழ்ப்பாணம் - கொழும்பு பஸ் என்னைச் சுமந்தவாறு பயணித்தது என் இருப்பிடத்தை நோக்கி! சிறிது நேரத்தின் பின்னர் முன்பக்கத்தில் ஓர் இருக்கை கிடைக்க.

அப்பாடா.... அமர்ந்தேன்!
எனது சற்று முன்புறமாக ஓர் கிறிஸ்தவப் போதக சிஸ்ரர் இருந்தார். அவர் ஆங்கிலத்தில் பஸ் சாரதியுடன் தான் இறங்க வேண்டிய இடம் தொடர்பாக கேட்டுக் கொண்டே வந்தார். பஸ்ஸில் இருந்தவர்கள் தமிழ் அல்லது சிங்களம் பேசக்கூடியவர்கள். கோவாவிலிருந்து வந்த இச்சிஸ்ரரின் பிரச்சினையை யாரும் காது கொடுக்கவில்லை.

பேரூந்து

சாலியவெவயில் உணவுக்காக நிறுத்தப்பட்டபோது, அச்சிஸ்ரர் என்னை நெருங்கினார். ஆங்கிலத்தில் , எங்கே போகின்றாய்" என்றார்.
நானும் பதில் கூறினேன்.
தான் ஹபரணை போவதாகவும், எப்படி எந்த பஸ்ஸில் போக முடியும் என்றும் கூறினார். நானும் பதில் கூறினேன்.
அநுராதபுரம் வந்து போங்கள் என்று சொன்னபோது அவர் மறுத்தார். தனக்கு நேரம் போகுமென்று சீக்கிரம்  தானங்கு போக வேண்டுமென்றும் கூறினார்.

பேரூந்து மின்னல் வேகத்தில் பறந்தது. திடீரென போக்குவரத்துப் பொலிசார் பஸ்ஸை நிறுத்தி அரை மணித்தியாலம் தாமதிக்க வைத்தபோது அவர் பதற்றமும் அதிகரித்தது.

போகும் வழியில் பஸ் இறக்கம் இருந்தால் இறக்கி விடும்படி சாரதியிடம் கூறினார்.

ஆனால் அவர் கோரிக்கை நிறைவேறவில்லை.

பஸ் அநுராதபுரத்தை அடைந்தது. என்னுடன் வரும்படி அழைத்தேன். இறங்கினார். வழமையாக மட்டக்களப்பு பஸ் நிறுத்தப்படும் இடத்திற்கு அழைத்துச் சென்றேன். அவர் கெட்ட காலம் அங்கிருந்தோர் மாலை  4.30 ற்குப் பிறகு பஸ் புதிய பஸ் நிலையத்திற்கு வருவதில்லை என்றும் பழைய நகர் சென்றால் தம்புள்ள பஸ்ஸில் ஏறி செல்ல முடியுமென்று கூற, நானும் ஆட்டோ ஒன்றை அவருக்காகப் பேசினேன்.

ஆட்டோக்காரன் 150 ரூபா கேட்க சிஸ்ரர் 100 ரூபா சொல்ல பயணம் தடைப்பட்டது. மீண்டும் சிறிது தூரம் நடந்து இன்னுமொரு ஆட்டோவை பேரம் பேச அவனும் அதே வாடகையை கேட்க வேறு வழியின்றி சிஸ்ரர் ஆட்டோவில் ஏறினார். தனக்கு பழக்கமில்லாத ஊரென்பதால் என்னையும் பஸ் நிலையம் வரும்படி அழைத்தார்.

அப்பொழுது நேரம்  மாலை 6 மணி. அவர் அழைப்பை நிராகரிக்க மனமில்லை என்றாலும்கூட மறுத்தேன். என்னை வீட்டில் தேடுவார்களென!

அவ் ஆட்டோக்காரனுக்கு விபரம் சொல்லி பத்திரமாக அவரை அனுப்பி வைத்தது மனதுக்கு திருப்தியாக இருந்தது.

உண்மையில் நமக்கு பழக்கமில்லாத ஊரில்கூட உதவி செய்ய யாரேனும் வருவார். இறை நம்பிக்கை பலமாக இருந்தால்!

-Jancy Caffoor-

சுயநலம்



சாலையோரம்

அருகே தலை நிமிர்ந்து நிற்கும் மரங்களின் அழகான மலர்கள் உதிர்ந்து கிடக்கின்றன. அதன் நறுமணமோ நாசிக்குள் உட்புகுந்து மனதை வருடிக் கொண்டிருக்கின்றது. பூக்களை மிதித்துதான் அவ்வழியைக் கடக்க வேண்டும். சுதந்திரமாக உதிர்ந்து கிடக்கும் இயற்கையின் கொடையை! மிருதுவான மேனியுடன் சாலையோரம் வீழ்ந்து கிடக்கும் அம் மென்னிதழ்களை நசுக்க யாருக்குத்தான் மனம் வரும்.

இருந்தும் நம் வழிப்பாதையின் தடைக் கற்கள் அவை! கடந்துதான் ஆகவேண்டும்.மிதிக்கின்றேன். இதமான மென்மையுடன். மனசு வலிக்கின்றது. நாளை அவை உலர்ந்து சருகுகளாகி விடலாம். அல்லது அழகு அழிந்து காற்றில் வேறெங்காவது பறந்தும் போகலாம்! நம் சுயநலம். இயற்கையை ஏதோ வகையில் இம்சித்துக் கொண்டே இருக்கின்றது.

-  Jancy Caffoor -

2014/07/29

உனக்கான என் வரிகள் - 5



நாளை தமிழ் புத்தாண்டு. ...2014

எங்கும் பட்டாசுகள் ஆக்ரோசமாக வெடிக்கின்றன..மனமோ உன் நினைவில் பின்னோக்கி ஓடுகின்றது...

அன்று

ஜனவரி முதலாம் திகதி...புதுவருடம் பிறந்து இன்றுபோல் பட்டாசுக்கள் வெடித்துக் கொண்டுதான் இருந்தன். எனக்கு புதுவருட முதல் வாழ்த்து உனதாக இருக்கவேண்டுமென்ற உன் அன்புக் கட்டளையில் நானும் காத்திருக்க.

டாண்....டாண்...

கடிகாரம் பனிரெண்டு அடித்தோய்ந்தது..தூக்கத்தை விரட்டி நானும் உனக்காக காத்திருந்தேன். ஆனால் திடீரென அன்று என் தந்தைக்கு மாரடைப்பு வந்ததில் வீட்டில் யாருமே உறங்கவில்லை.

தந்தையோ என்னை தன்னருகில் இருக்கும்படி கூறியதையும் பொருட்படுத்தாமல் உன்மீதான அந்த அன்புக்காக எனதறைக்குள் ஓடுகின்றேன்.

உன் தொலைபேசி அழைப்பு வருகின்றது. எனக்கு இது புது அனுபவம்...என் தந்தையின் உடல்நிலை தந்த சோகத்தையும் மறைத்து உன்னுடன் பேசுகி்ன்றேன்.  எவ்வளவு சந்தோசமாக அன்றைய நாட்கள் இருந்தன.

நாளை விடிந்தால் புதுவருடம் பட்டாசுக்களைப் போல இப்போதெல்லாம் நீயும் என்னுடன் வெடிக்கின்றாய். என் அன்பு இப்பொழுதெல்லாம் உனக்கு புரிவதில்லை. சண்டை பிடிப்பதற்காக காரணம் தேடுகின்றாய். என்றோ ஒருநாள் என் அன்பை புரிந்து கொள்வாய். ஆனால் அன்று நான் உன்னை விட்டு வெகுதொலைவில்!

- Ms. Jancy Caffoor -



மீள வருமோ டா...


முட்கள்
என் தேசத்தின் அரண்கள்!
இருந்தும்
வந்தாய்
சிறையறுக்கும் நலனாய்!

விகடமும் விநோதமும்
கற்கண்டாய் வீழ்ந்து நிற்கும்
சொற்கூட்டமும் உன்
அற்புதங்களாய் என் ரசிப்பில்!

இருபத்தி ரெண்டு
பருவத்தின் சாயல்
இருந்தும்
முதுமை யுன் வாக்கினில்!

அவ்வவ்போது...

அதிரசமாய் காதலும்
அக்கினித் தீயாய் தவறுரைக்கும்
நட்பும்
விழிநீர் துடைக்கும் உறவும்
நீ விட்டுச் செல்லும் தடங்களாய்
வீழ்ந்து கிடக்கின்றன!

இருள் துடைக்கும் விடியலில்
மருண்டு கிடக்கும் பிறையொளியாய்...
உருண்டு கிடந்தேன் - உன்
வருடு மன்பில்!

நம்மைத் தொட்டுச் சென்ற
ஏழு மாதங்கள்
அழகான காப்பியங்கள் நமக்கு!

அழுகையும்
ஆரத்தழுவலும்
ஆறுதல் பிழிதலும்
ஆரறிவார் நமக்குள்
ஆயிரமாயிரம்!

கடந்த
ஆண்டொன்று புரண்டு- வான்
கொன்றலும் கிழித்து
றமழானும் புன்னகைக்க
நமக்குள்ளும் முப்பது நோன்புகள்!

நோன்பின் மாண்பில்
ஒன்றியிணைந்த நாம் - நமக்குள்
அலாரமாய்
மணியுரைத்தோம் நமாஸூக்காய்!

இருளிலில்
தலையணையில் சிணுசிணுங்கும் - நம்
அலைபேசி அதிர்வில்
துயில் கலைத்த நம் ஸஹர்  நாட்கள்
மீள வருமோ!

இப்தார் அழைப்பிலும் கூட
இங்கிதமாய் யுன் குரல் ஒலித்தே
என்
நோன்பு திறத்தலை விசாரிக்கு முன்
அன்பு!

மறக்காத நிஜங்களாய்
விட்டுச் செல்கின்றது இவ் ரம்ழான்
என்னிடம்!

காகிதப் பூக்களுக்குள்ளும் வாசம்
சுரந்து
வானவில்லின் சாயம் பிழிந்து
கானலுக்குள் விரிந்து கிடக்கும்
பூவுக்கு - நீ
விட்டுச் செல்லும் சொத்து
தெவிட்டாத அன்பூ!.

நீ.....!
மறக்காத நிஜம்!
மறுக்காத சொந்தம்!!
வெறுக்காத வரிகள்!!!

இன்ஷா அல்லாஹ்!

இன்னொரு ஸஹ ரழைப்பில் - நம்
மனங்கள் ஒன்றிணைந்து
துஆக்களையும் நமாஸ்களையும்
ஞாபகப்படுத்து மந்த கணங்கள்
மீள
விரைந்தே வரட்டும்!

உனை எனக்குள் விட்டுச் சென்ற
வல்லோனே
அல்ஹம்துலில்லாஹ்!


- Jancy Caffoor-
 29.07.2014