About Me

2019/06/22

அன்றும் இன்றும்

வயது  என்பது உடல் சார்ந்த பெறுமானமே தவிர அகத்தின்  பெறுமதியல்ல. ஆனாலும் நமக்கு கிடைக்கும் அனுபவத்திட்கும், வயது எனும் எண் பெறுமானத்திற்கும்  நேர்ப்பெறுமானத் தொடர்பு  உண்டு. அந்த வகையில் வயது அதிகரிக்கும் போது அனுபவச் சேர்க்கை காரணமாக மனமுதிர்ச்சி உண்டாகிறது.  

அன்று.................!

2012 ஆம் ஆண்டு நான் இணையத்தோடு தொடர்புள்ள பயிற்சியில்  ஈடுபட்ட போது இந்த வலைப்பூவை உருவாக்கினேன். வலைப்பூ மூலம் முழு உலகையும் சில நொடிகளில் சுற்றிய மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியில் எதையாவது எழுதும் ஆர்வம்  மனதைப்  பிறாண்ட கற்பனைக்குள் நான் வசியமானேன்.  

மனம் நினைப்பதை எல்லாம் விரல்கள் வாசித்தன ஆர்வமாய்.  எழுத்துக்களால் ஒரு அடையாளம் கிடைக்க நிறைய போராட வேண்டி இருந்தது. ஒரு ஆக்கம் எழுதும் போது மகிழ்ச்சி வசமானது. நானே என் எழுத்துக்களுக்கு வாசகியானேன். அந்த மகிழ்ச்சி தந்த ஆர்வம், அதிர்வு இன்னும் எழுதத் தூண்டியது. பக்கங்கள் நிறைய, நிறைக்க   எழுதினேன்.  நான் எனும் உலகத்துக்குள் "நானே" வாசகியாய், விமர்சகியாய் உருக் கொண்ட தால் நிறைய எழுதவேண்டும் எனும் தாகம்  மனதுக்குள் கருக் கொண்டது. ஆனால் அப்படைப்பின் கனதி பற்றி மனம் எடை போடவில்லை. என்னைச் சுற்றி இருக்கும் உலகத்தில் எனது படைப்புக்களுக்கு வெளியுலகில் விமர்சனம் இருக்கும் எனும் எதிர்பார்ப்பு  ஏற்படவில்லை.

 ஆனால் ............

காலம் கடந்தது. மனம் முதிர்ச்சி அடைய பட்டம், பதவிகள் அடையாளமாகின. என்னைச் சுற்றி இருந்த உலகம் விரிந்து சென்றது. விமர்சகப் பார்வைகளும் விசாலமாகின.   

கற்பனைகள் ஒடுங்கிக் கொண்டன தானாக. யதார்த்தங்கள் சமீபமானது. ஒவ்வொரு எழுத்துக்கும் அர்த்தம் காண அருகே ஆயிரம் பேர்களின் விம்பப் பார்வைகள் விழுவதை போன்ற பிரமை. எதை எழுதினாலும் சரி எனும் நினைப்பு  மறைந்து, எதை எழுதுவதென்று யோசித்து நின்றது. படைப்புக்களில் இருந்த அலங்காரம், கருத்துச்செறிவுள்ளதாக மாறப்  போராடியது.  வெளியே அவதானித்துக் கொண்டிருந்த விமர்சகர் உலகம் பெரும் அண்டமாக விழி விரித்துக் காத்து நிற்பது   புரிந்தது.

ஒவ்வொரு அடியும் மிக  நிதானமாக பயணிக்க வேண்டிய அவசியம் புரிந்தது.  சின்ன வயதில் எதையும் எழுதலாம். ஆனால் இப்போது கருத்துச் செறிவுடன், புலமையும் கைகோர்த்து பயணிக்க வேண்டிய அவசியம் புரிந்தது.  நிஜங்களின்  செறிவின் முன்  கற்பனைகள்  யாவும் தடுமாறி ஓடி ஒளிந்து கொள்ள, மெதுவான என் எழுத்துப் பயணம் எனது அடையாளத்தைச் சிதைக்காதவாறு பயணிக்க ஆரம்பித்தது. 

இப்பயணத்தின் பரிமாணம் இப்போதெல்லாம் நிதானித்து, மனசுக்குள் ஒரு தடவை  எழுதியவற்றை சரி பார்த்து, கனதியுடன் படைப்பினை எனக்குள் விமர்சித்தே எழுதுகோல் பிடிக்கிறது. அலங்காரம், கற்பனை அதிகம் தொட்டுக்க கொள்ளாத யதார்த்தமான படைப்பினை நோக்கியதான அடுத்தவர் எதிர்பார்ப்பு பார்வையை நோக்கிய திசையில் எனது விரல்கள் பயணிக்க   ஆரம்பித்து விட்டன.

- Jancy Caffoor -
  22.06.2019

மீளும் ஆளுமை

Image result for மீளும் ஆளுமை

வட மாகாணத்தில் அன்றைய காலங்களை  விட இன்றைய  கல்வி நிலை சற்று தாழ்ந்தே உள்ளது. இது யுத்தத்தின் தாக்கமாகவும்  இருக்கலாம். கற்றல் பெறுபேறுகளில் ஏறுமுகம் காண மாணவர்களின் கற்றலோடு ஆளுமை விருத்திக்கான உள பரிகாரத்தையும் ஏற்படுத்துவதே சிறந்த தீர்வாக இருக்கும் என கருதப்படுவதால், பாடசாலை மாணவர்களுக்கு ஆளுமை விருத்திக்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. அந்த வகையில்  யோகா பயிற்சியளித்தலும் கற்றல் ஒரு பகுதியாக தற்போது கல்வித்துறையில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. 

அதன் ஒரு அம்சமாக 21.06.2019  அன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு  யா| இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்ற  "மீளும் ஆளுமை"  அங்குராப்பண வைபவ நிகழ்வு  என்னையும் ஒரு கணம் சிந்திக்க வைத்தது .

அங்கு கூறப்பட்ட வளவாளர் கருத்துக்களோடு என் மனதையும் உள்வாங்கிக் கொள்ளுகிறேன். மனம் சுத்திகரிக்கப்படும் உணர்வு. மனதின் குழப்ப அலைகளை யாரோ நகர்த்தும்  பிரமை! 

புத்தி என்பது சரியான தீர்மானம் எடுக்கும் ஆழ் மனதின் பகுதி. இந்த மனமும், புத்தியும் ஓர் வழியில் பயணிக்கும் போதே உள ஆரோக்கியம் கிடைக்கும்.  இந்த உள அமைதிக்கு ஆன்மீகம் பாதை அமைத்துக் கொடுக்கின்றது. எனவே நாம் உள அமைதிக்கான வழிகளில் நம் மனதை நகர்த்த வேண்டும். ஆன்மீகமும், ஆரோக்கியமும் சீரற்று    போகுமானால் மனம் குழம்பி விடும்.  

மனம் என்பது எண்ணங்களை உருவாக்கும், உணர்ச்சி மயமான, ஆத்மாவின் ஒரு பகுதி. நம்மை சுற்றி படரும் பலவித எண்ணங்கள் நிமிடத்துக்கு நிமிடம் மாறிக்கொண்டே இருக்கிறன. இந்த மனதில் உருவாகின்ற தேவையான, தேவையற்ற  எண்ணங்களே   நம்மை வழி நடத்துகின்றன.

அனுபவங்கள் பதிந்து கிடைக்கும் பகுதி ஆழ்மனம் ஆகும். சூழல் நமது அனுபவங்களுக்கான ஒரு பொக்கிஷம். நாம் தினமும் பலவிதமான அனுபவங்களை அங்கிருந்து பெற்றுக் கொள்கின்றோம். அவை நம் எண்ணங்களுடன் கலந்து வடிவமைக்கப்பட்டு நடத்தைகளாக சீரமைக்கப்படுகின்றன. புத்தி என்பது ஆழ்மனது உள்வாங்கிக் கொண்ட உணர்வுகளை கிரகித்தல் அல்லது சிந்தித்தால் ஆகும்.  இந்த ஆழ்மனப் பதிவில் இருந்தே நேர், மறை எண்ணங்கள் நமக்குள் இருந்து உருவாகின்றன. புத்தியை முடிவெடுக்கும் திறன், அபிப்பிராயம் என்றும் கூறலாம். 

எண்ணப் பெருக்கத்தை புத்தி சீர் செய்யும். சில வெளியேறும், சில உள்ளே புகுந்து அலைக்கழிக்கும். நமது எண்ணங்களை செயலோடு இணைப்பது, நமது திறமைகளை நினைப்பது, தூங்கும் முன்பு நல்ல செயல்களை மனதில் கட்டளை இடுவது என்பது நமது ஆழ் மனதை சீர்படுத்துகிறது.

ஒவ்வொரு மனிதனும் தனித்து வாழ முடியாது. அவன் சமூகத்தின் ஒரு கூட்டு. இச்சமூகத்துடன் சமாதானம்,  புரிந்துணர்வுடன் இணைந்து வாழும் போதே சந்தோஷமான வாழ்வும் நமக்குச் சொந்தமாகின்றது. நாம் நம் மனதை ஒருமைப்படுத்தி சுய விசாரணை செய்யும் போது ஆழ்மனம் தன்னை ஒழுங்கு படுத்துகிறது.
  • நான் யார்?
  • என் இலக்கு என்ன?
  • எனக்கு நன்மையானவை எவை?
  • நான் தவிர்க்கவேண்டியவர்கள் யார்?
  • எப்படி என் வாழ்வுக்கான பாதையை நான் வகுக்க வேண்டும்?
இவ்வாறாக பல வினாக்கள் தொடுத்து நம்மை நாமே சுய விசாரணை செய்ய வேண்டும். அப்போது நம் மனதுக்குள் ஆன்மீகம் உள்ளாந்த புரட்சியை ஏற்படுத்துகிறது.  நமது வாழ்வின் ஒவ்வொரு சம்பவத்திற்கும் நானே பொறுப்பு எனும் உணர்வானது நமது எண்ணத்தின் முதன்மைச் சாவி ஆகிறது.  சூழலில் நாம்  கண்களால் காணும் காட்சிகள்  யாவும்  அவதானமாக மாறி தாக்கம் செலுத்துவதால் நடத்தை கோலங்களினுடாக நமது ஆளுமையும் பாதிக்கப்படுகிறது.  

    நாம்,  நமது வாழ்க்கை எனும்போது அந்த வாழ்க்கையின் பொறுப்பாளி நாமே! மனிதன் தானாக வாழும் போது சக்தி அதிகம். என்னை, எனக்காக வாழும் போதே அந்த வாழ்க்கை சிறப்பு பெறுகின்றது. உறவு, சொத்து, கல்வி, பட்டம், பதவி என்பவை நமக்கு பிறகே!   

என் எண்ணங்களோடு, என்னைச்  செலவழித்து மீண்டும் என்னுடன் என்னைக் கொண்டு செல்லுதல் மீளும் ஆளுமை எனப்படுகிறது ஒவ்வொருவரும் தமது சுய ஆளுமையை உணர்ந்து வாழ்தலே சுதந்திரமான வாழ்க்கை. ஆனால் நாம் எல்லோரும் வெளிவாரி வாழ்க்கையிலே கவனம் செலுத்துகிறோம்.  வாழ்க்கையின் ஆரம்ப அத்திவாரம் பலமாக இருப்பின் எதிர்காலம் சிறக்கும் 
என்பதில் ஐயமில்லை.

- Jancy Caffoor -
  22.06.2016 

2019/06/16

வசந்தத்துளிகள்


எப்பொழுது நாம் பிறரால் மறுக்கப்படுகின்றோமோ, அன்றுதான் நாம் நமது ஆற்றல்களை உணர்ந்து, அவற்றை வெளிப்படுத்த முயற்சிக்கின்றோம்!
----------------------------------------------------- 


சனியில் நாங்கள் சட் செய்தோம்
ஞாயிறில் என் ஞாபகத்தில் நீ
திங்களில் முத்தங்களாய் தித்திப்பு தந்தாய் 
செவ்வாயில் திருமண உறுதி தந்தாய்
புதனில் கனவுலகில் புதுமணத் தம்பதியராய் நாம்
வியாழனில் வீட்டுக்கு வந்தாய் திகதி குறிக்க
வெள்ளியில் ........ உள்ளம் திருடிச் சென்றாய்!
----------------------------------------------------- 

ஆடம்பரமான ஹோட்டலில் புரியாணி சாப்பிட்டாலும் கூட, வீட்டுல குடிக்கிற கஞ்சிக்கு ஈடாகுமா

நாம் அடுத்தவருக்காக ஆடம்பரத்துல நாட்டம் காட்டினாலும் கூட, எளிமையிலதான் அதிகமான மகிழ்ச்சி இருக்கிறது.

---------------------------------------------------------- 
பெண்ணின் அழகும் இளமையும் தான் ஒவ்வொரு ஆணிணதும் உணர்ச்சியைக் கிளரச் செய்து அவளைத் திரும்பிப் பார்க்கச் செய்கின்றன!

ஆனால் அவளின் அன்பே அவன் வாழ்வை என்றும் முழுமையடையச் செய்கின்றன!
------------------------------------------------------ 



காதல் ஒரு வார்த்தைதான். ஆனால் அன்பின் முழு இராய்ச்சியமும் அதில்தான் அடங்கிக் கிடக்கின்றது!
------------------------------------------------------- 

பாம்பாட்டி மகுடி ஊதும்போது, பாம்பும் ஆடும்.
அது மகுடிக்காகவா!
இல்லையென்கிறது ஆராய்ச்சி!
பாம்பாட்டியின் உடல் அசைவைப் பார்த்துதான் பாம்பும் ஆடுதாம். என்ன உங்களுக்கும் பாம்பு போல ஆட ஆசை வந்திருக்குமே!

நான் சொல்ல வந்த விசயம் இதுதான்
ஒருவருடைய வீட்டுச் சூழலும், சமுகப் பின்னணியும் தான் அவருடைய முழு செயல்களையும் செய்கிறது. நீங்க தப்பு செய்தா உங்கள ஏசக் கூடாது. ஏனென்றால் அது பலனளிக்காது. அதனால உங்க அம்மா, அப்பாவத்தான் ஏசணும், நீங்க வளர்ந்த சூழலைத்தான் ஏசணும்.

ஆக நல்லவங்க தன்னை சுற்றியிருக்கிறவங்களுக்கு கெட்ட பெயர் வாங்கித் தரமாட்டாங்க..தவறுகளும் செய்ய மாட்டாங்க. அறியாம செய்தா திருந்திடுவாங்க.


- Ms. Jancy Caffoor -
   16.06.2019

கல்விப் பட்டங்கள்



வவுனியா கல்வியற்கல்லூரியில் என் பாதங்கள் பதிந்து பலவருடங்களும் கழிந்துவிட்டன.

பல ஆசிரியர்களை சமுகத்திற்குள் சேவைக்காக பயிற்றுவிக்கும் அக் கூடத்தின் நிழற்பரப்பில்தான் எனது கல்விமாணிப் பட்டப்படிப்பின் கூடமும் அமைந்திருந்தது

வவுனியா பூந்தோட்டத்திற்கே ஓர் முகவாயிலாக இக் கல்வியியற் கல்லூரி திகழ்கின்றது. இங்கு நான் என் கற்கையறிவுடன் இணைந்த நிலையில் பல நல்ல, என் தொழில் வாழ்விற்குரிய அனுபவங்களையும்  உள்வாங்கியுள்ளேன்..


கல்லூரிக்குள் நுழைந்ததும் ஆசிரியர் மாணவர்களின் பல சிந்தனைத்துளிகள் காட்சிக்குள் வைக்கப்பட்டிருக்கும். அவற்றை ஒவ்வொருமுறையும் விழிகளால் நுகர்ந்து, சிந்தைக்குள் நிரப்பியே உட்செல்வேன்!


இந்த நுழைவாயில் தந்த அறிவும் அனுபவமும் யாழ் பல்கலைக்கழகத்தின் முதுகல்விமானி வரை என் தொழிற்றகைமையை உயர்த்தியது.

கல்விக்குதான் தடையேது!

எல்லாப் புகழும் இறைவனுக்கே!















- Jancy Caffoor-
   16.06.2019