About Me

2019/06/22

மீளும் ஆளுமை

Image result for மீளும் ஆளுமை

வட மாகாணத்தில் அன்றைய காலங்களை  விட இன்றைய  கல்வி நிலை சற்று தாழ்ந்தே உள்ளது. இது யுத்தத்தின் தாக்கமாகவும்  இருக்கலாம். கற்றல் பெறுபேறுகளில் ஏறுமுகம் காண மாணவர்களின் கற்றலோடு ஆளுமை விருத்திக்கான உள பரிகாரத்தையும் ஏற்படுத்துவதே சிறந்த தீர்வாக இருக்கும் என கருதப்படுவதால், பாடசாலை மாணவர்களுக்கு ஆளுமை விருத்திக்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. அந்த வகையில்  யோகா பயிற்சியளித்தலும் கற்றல் ஒரு பகுதியாக தற்போது கல்வித்துறையில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. 

அதன் ஒரு அம்சமாக 21.06.2019  அன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு  யா| இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்ற  "மீளும் ஆளுமை"  அங்குராப்பண வைபவ நிகழ்வு  என்னையும் ஒரு கணம் சிந்திக்க வைத்தது .

அங்கு கூறப்பட்ட வளவாளர் கருத்துக்களோடு என் மனதையும் உள்வாங்கிக் கொள்ளுகிறேன். மனம் சுத்திகரிக்கப்படும் உணர்வு. மனதின் குழப்ப அலைகளை யாரோ நகர்த்தும்  பிரமை! 

புத்தி என்பது சரியான தீர்மானம் எடுக்கும் ஆழ் மனதின் பகுதி. இந்த மனமும், புத்தியும் ஓர் வழியில் பயணிக்கும் போதே உள ஆரோக்கியம் கிடைக்கும்.  இந்த உள அமைதிக்கு ஆன்மீகம் பாதை அமைத்துக் கொடுக்கின்றது. எனவே நாம் உள அமைதிக்கான வழிகளில் நம் மனதை நகர்த்த வேண்டும். ஆன்மீகமும், ஆரோக்கியமும் சீரற்று    போகுமானால் மனம் குழம்பி விடும்.  

மனம் என்பது எண்ணங்களை உருவாக்கும், உணர்ச்சி மயமான, ஆத்மாவின் ஒரு பகுதி. நம்மை சுற்றி படரும் பலவித எண்ணங்கள் நிமிடத்துக்கு நிமிடம் மாறிக்கொண்டே இருக்கிறன. இந்த மனதில் உருவாகின்ற தேவையான, தேவையற்ற  எண்ணங்களே   நம்மை வழி நடத்துகின்றன.

அனுபவங்கள் பதிந்து கிடைக்கும் பகுதி ஆழ்மனம் ஆகும். சூழல் நமது அனுபவங்களுக்கான ஒரு பொக்கிஷம். நாம் தினமும் பலவிதமான அனுபவங்களை அங்கிருந்து பெற்றுக் கொள்கின்றோம். அவை நம் எண்ணங்களுடன் கலந்து வடிவமைக்கப்பட்டு நடத்தைகளாக சீரமைக்கப்படுகின்றன. புத்தி என்பது ஆழ்மனது உள்வாங்கிக் கொண்ட உணர்வுகளை கிரகித்தல் அல்லது சிந்தித்தால் ஆகும்.  இந்த ஆழ்மனப் பதிவில் இருந்தே நேர், மறை எண்ணங்கள் நமக்குள் இருந்து உருவாகின்றன. புத்தியை முடிவெடுக்கும் திறன், அபிப்பிராயம் என்றும் கூறலாம். 

எண்ணப் பெருக்கத்தை புத்தி சீர் செய்யும். சில வெளியேறும், சில உள்ளே புகுந்து அலைக்கழிக்கும். நமது எண்ணங்களை செயலோடு இணைப்பது, நமது திறமைகளை நினைப்பது, தூங்கும் முன்பு நல்ல செயல்களை மனதில் கட்டளை இடுவது என்பது நமது ஆழ் மனதை சீர்படுத்துகிறது.

ஒவ்வொரு மனிதனும் தனித்து வாழ முடியாது. அவன் சமூகத்தின் ஒரு கூட்டு. இச்சமூகத்துடன் சமாதானம்,  புரிந்துணர்வுடன் இணைந்து வாழும் போதே சந்தோஷமான வாழ்வும் நமக்குச் சொந்தமாகின்றது. நாம் நம் மனதை ஒருமைப்படுத்தி சுய விசாரணை செய்யும் போது ஆழ்மனம் தன்னை ஒழுங்கு படுத்துகிறது.
  • நான் யார்?
  • என் இலக்கு என்ன?
  • எனக்கு நன்மையானவை எவை?
  • நான் தவிர்க்கவேண்டியவர்கள் யார்?
  • எப்படி என் வாழ்வுக்கான பாதையை நான் வகுக்க வேண்டும்?
இவ்வாறாக பல வினாக்கள் தொடுத்து நம்மை நாமே சுய விசாரணை செய்ய வேண்டும். அப்போது நம் மனதுக்குள் ஆன்மீகம் உள்ளாந்த புரட்சியை ஏற்படுத்துகிறது.  நமது வாழ்வின் ஒவ்வொரு சம்பவத்திற்கும் நானே பொறுப்பு எனும் உணர்வானது நமது எண்ணத்தின் முதன்மைச் சாவி ஆகிறது.  சூழலில் நாம்  கண்களால் காணும் காட்சிகள்  யாவும்  அவதானமாக மாறி தாக்கம் செலுத்துவதால் நடத்தை கோலங்களினுடாக நமது ஆளுமையும் பாதிக்கப்படுகிறது.  

    நாம்,  நமது வாழ்க்கை எனும்போது அந்த வாழ்க்கையின் பொறுப்பாளி நாமே! மனிதன் தானாக வாழும் போது சக்தி அதிகம். என்னை, எனக்காக வாழும் போதே அந்த வாழ்க்கை சிறப்பு பெறுகின்றது. உறவு, சொத்து, கல்வி, பட்டம், பதவி என்பவை நமக்கு பிறகே!   

என் எண்ணங்களோடு, என்னைச்  செலவழித்து மீண்டும் என்னுடன் என்னைக் கொண்டு செல்லுதல் மீளும் ஆளுமை எனப்படுகிறது ஒவ்வொருவரும் தமது சுய ஆளுமையை உணர்ந்து வாழ்தலே சுதந்திரமான வாழ்க்கை. ஆனால் நாம் எல்லோரும் வெளிவாரி வாழ்க்கையிலே கவனம் செலுத்துகிறோம்.  வாழ்க்கையின் ஆரம்ப அத்திவாரம் பலமாக இருப்பின் எதிர்காலம் சிறக்கும் 
என்பதில் ஐயமில்லை.

- Jancy Caffoor -
  22.06.2016 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!