About Me

2020/06/05

காலம் பதில் சொல்லுமோ

வரண்டு போன கானகங்கள் விலங்குகளின்
மரணக் கிடங்குகளோ மனிதம் மறந்தவர்களால்!
ஓர் மாதக் கரு சுமந்தே
தாய்மையால் தள்ளாடி தெருவோரம் திரிந்து

இரை தேடிய யானைக்கோ இவ்விதி
அனல் கக்கும் வெடி புதைத்த
அன்னாசி தின்னக் கொடுத்தவன் ஐந்தறிவால்
பலியானது யானையே அறமும் சிதைந்ததே

வெந்த புண் வலி தீர
நொந்து நெடுநேரம் நீரில் நின்றே
உயிர்  விட்டதே விதியும் நொந்ததே
நம் கண்களிலும் ஈரக் காயங்கள்

பஞ்சமா பாதகர்கள் வாழும் இப்பூமியில்
காலம் வருமோ  பதில் கிடைக்குமோ
அன்பும் மனதில் வாழுமோ
அகிலத்தின் அநாகரிகங்கள் வீழுமோ

ஜன்ஸி கபூர் 



ஈரமான மனது

இயற்கைக்கும் இதயமுண்டு குளிர்த்திடும் ஈரமுண்டு/
உறவுகளைப் பிணைத்திடும் அன்பிலும் வாசமுண்டு/
உயிராகும் கருவருறையில் தாய்மையின் நிழலுமுண்டு/
உயிரினத்தில் பேதமின்றி ஈரமான இரக்கமுண்டு/4

அன்பும் கருணையும் பிசைந்திடும் மொழியால்/
பாசம் உயிர்க்கும் நேசம் வருடும்/
பூகோளம் புதுக்கோலம் கொள்ளும் அழகாய்/
உறவாகி இணைந்த நெஞ்சங்கள் மகிழ்வாகும்/8

ஐந்தறிவு ஆறறிவு எனப் பேதமில்லை/
அறிவுப் புரட்சியிலும்; ஈரம் உண்டு/
இரக்கம் மனதின் நல் அறமானால்/
பகை தவிர்க்கும் எண்ணம் வசமாகும்/12

பிறர் இடரில் கலங்கிடும் நெஞ்சில்/
இரக்கம் உயிரில் கலந்தே சிறக்கும்/
எல்லா உயிர்களிடத்தே அன்பு காட்டுகையில்/
மகிழ்ந்து புன்னகைக்கும் ஈரமான மனது/16

ஜன்ஸி கபூர்  

2020/06/04

மயிலாடும் சோலை

இருள் உடைக்கும் நிலவுப் புரட்சியால்
கரும்படை பூ இதழ்களை மூட
களவாய் தேன் நுகர்ந்த வண்ணாத்துப்பூச்சி
மது உண்ட களிப்பில் கிறங்கியே
சிறகு விரித்து பறக்கத் துடிக்கும்
ரம்மிய அழகில் மனம் லயிக்கும்

மயிலாடும் சோலையிலே வண்ண மலர்கள்
எழில் கொஞ்சும் வாசப் பூக்கள்
தென்றல் வருடும் பாட்டுக் கேட்டே
தோகை விரித்தே ஆட்டம் போட
பச்சைக் கம்பளத்தில் நிழல் பதித்த
மயிலின் காத்திருப்பு அற்புதம் ஆனந்தமே

ஜன்ஸி கபூர்