About Me

2020/06/26

இசையின் துடிப்பு


இசையின் அதிர்வெல்லாம் உயிரை வருடுகையில்/
அசையும் சந்தங்களும் ஊற்றாய் உள்ளத்திலே/
மூங்கில் துளையோரம் மூச்சும் மெல்லிசையே/
சங்கின் அலைவுடனே காற்றும் துள்ளிசையே/

மழலை மொழியினில் மயங்கும் குயிலோசை/
தழுவி அணைக்கிறதே மனதும் சிரிக்கிறதே/
நழுவும் அருவியுடன் வீழும் மழைத்துளியும்/
அழகிய சங்கீதம் ரசித்திடும் நாதங்களே/

அன்றிலின் சிறகடிப்பில் சிந்துதே ராகமொன்று/
கொன்றலின் மின்னலுமே சுரமாய் வீழ்ந்திடுதே/
தென்றலின் கிசுகிசுப்பில் வெடித்திடும் மொட்டிலுமே/
இன்னிசை வாழ்ந்திடுமே மெட்டொன்றைத் தந்திடுமே/

சிட்டாய் சிறகடிக்கும் சருகின் ஓசையிலே/
பாட்டெழுதும் புல்லினங்கள் பரவசமாய் துள்ளிடுமே/
எட்டுத் திக்கெங்கும் ஈர்த்திடும் தமிழொலியும்/
திகட்டா அமிர்தமே இசையின் துடிப்பினிலே/

ஜன்ஸி கபூர் - 26.06.2020

2020/06/25

படிக்காத மேதை

 பாமரன் சிந்தைக்குள்ளும் அறிவுண்டு தானும்/
கற்றிடும் திருக்குறளாய் வாழ்ந்திடும் நெறியுண்டு/
சுற்றியோடும் அனுபவங்களாய் இசைந்திடும் துணிவுண்டு/
படிக்காத  மேதைக்குள் மனிதமெனும் ஞானமுண்டு/

ஜன்ஸி கபூர் 



  •   

எண்ணம் போல் வாழ்க்கை


அற்பமான வாழ்வுக்குள் அற்புத எண்ணங்கள்/
கற்பகதருவாய் வாழ்ந்திடலாம் பிறருக்கும் பயனாய்/
பெற்றோரைக் காத்திடும் பொற்கரங்கள் யாவும்/
போற்றப்படுமே சுற்றும் பூமியின் அச்சாணியாய்/

மனதின் நீட்சியே குணமாகிப் போகும்/
கனவும் வாழ்வின் தொடராகி மோதும்/
பகட்டினில் மதியிழந்து கடன்படும் வாழ்வும்/
அகத்தினில் துன்பம் ஊற்றிக் கரைக்கும்/

நன்றும் தீதும் நம்மையே தொடரும்/
என்றும் செயல்களே விதியாகிக் கூடும்/
சேர்க்கும் நட்புக்களும் நிறமாற்றிப் போகும்/
வார்த்திடும் நல்லவற்றால் மனிதம் பூக்கும்/

சித்தம் நிரப்பும் சத்தியம் நமதாக/
நித்தம் சூழும் உறவுகளின் இதமாக/
அன்பைப் பகிரும் நெஞ்சின் அரணாக/
இன்பத்துடன் வாழ்ந்திடலாம் புன்னகைகளைச் சுமந்தபடி/

ஜன்ஸி கபூர் 


  •  
     

2020/06/24

மாறுவோம்

அதிகாரம்  மிடுக்கல்ல இலக்கிற்கான துடுப்பே
மதி கெடுக்காத வல்லமையே மாண்பாகும்
விதியையும் வெல்லலாம் சமத்துவப் பேணலிலே
புதிதாய் பூப்போம் அறநெறியில் வாழ்வோம்

ஜன்ஸி கபூர்