About Me

2020/07/14

வாழ்க்கைத் தத்துவம்

 காற்றிலாடும் கூடொன்று தென்றலிடம் முரணாகி/
சிதைந்தே போனதில் சிதறின குஞ்சுகள்/
வருந்திய தாயுமே வனப்பின்றி பறந்தது/
பருந்தொன்று கண்டதால் விதியும் மாறியதே/
இசைந்தே வாழ்ந்திட்டால் அழிவும் தானேது/
வளைந்தே கொடுத்தேதான் உயிர்க்கிறது நாணல்/

ஜன்ஸி கபூர்  


சமூக இசைவு

 ஒற்றுமை கொண்டால் பெற்றிடலாம் பலத்தை/
வேற்றுமைத் தீதும் வேரறுந்தே போகும்/
உற்ற துணையாய் சூழ்ந்திடுவார் நல்லோர்/
பெற்றிடலாம் நாமும் அழகிய சமூகத்தை/

ஜன்ஸி கபூர்  

தாயின் மடியில்

அமிர்தமாய் இனித்திடும் தாயின் நிழலினிலே
அடங்கிக் கிடத்தலும் பெருஞ் சுகமே
அருஞ்சுவைப் பாலதை உதிரத்தில் பிழிந்தே
அன்போடு ஊட்டிடுகையில் ஆட்கொள்ளுதே ஆனந்தமும்

ஈன்றவள் நெஞ்சின் ஈரச் சுவடுகள்
ஈர்ப்போ டிசைந்தே தொடர்கிறதே கருணையாய்
ஈந்திட்ட பொழுதெல்லாம் தன்னலம் பாராமல்
ஈடில்லா உறவாகி சுமக்கின்றதே   அழகாய்

இடுக்கண் களைந்தே இன்ப மூற்றி
இதயத்தின் அலைவுகளில் மூச்சாகும் தாய்மை
பொருந்திட்ட அன்பினாலே பெருந்துயர் துடைத்தே
பொல்லாத நோய்க்கும் மருந்தாகிக் காக்கும்

உணர்வோடு உடலையும் பிழிந்தூற்றி பூரிப்பில்
உயிர்த்தெழுகின்ற உன்னத தாயின் காலடியில்
உறைந்திருக்கும் சொர்க்கத்தை தினம் கண்டேனே
உலகமே அடைக்கலமே தாயின் மடியினிலே

ஜன்ஸி கபூர்  

நலமோடு வாழ

பறக்குது காற்றிலே கொரோனாக் கொடி
பதறித் துடிக்குது பாரும் நோய்முற்றி
உதறுது ஆரோக்கியம் உயிரை வருத்தியபடி
உழைப்போ ஏதுமின்றி உறங்குது ஊரடங்கில்

உன்னத மனிதமும் உறவின் அருமையும்
உணர்த்திய பாடங்களாம் உருண்டன நெஞ்சோடு
இறுமாப்பில் நிமிர்ந்தோரும் இன்னலுடன் தலைகுனிந்தே
வறுமைச்சுவை தானறிந்தே வாழ்வையும் புரிந்தனரே

முகக்கவசம் மூச்சுக்காற்றின் முத்தமாய்  அலைந்ததுவே
அகக்கண்ணிலோ அச்சம் மொத்தமாய் வீழ்ந்ததுவே
முத்திரையாம் கைக்கவசமும் இடைவெளியும் நலமாகும்
முடிவுரையாய் ஆரோக்கியப் பயிற்சியும் நமதாகும்

ஜன்ஸி கபூர்