About Me

2020/07/16

தாயின் மடியில்

அமிர்தமாய் இனித்திடும் தாயின் நிழலினுள்/
அடங்கிக் கிடத்தலும் பெருஞ் சுகமே/
அருஞ்சுவைப் பாலதை உதிரத்தில் பிழிந்தே/
அன்போடு ஊட்டுகையில் ஆட்கொள்ளுதே ஆனந்தமும்/

ஈன்றவன் நெஞ்சின் ஈரச் சுவடுகள்/
ஈர்ப்போடிசைந்தே தொடர்கிறதே கருணையாய்/
ஈந்திட்ட பொழுதெல்லாம் தன்னலம் பாராமல்/
ஈடில்லா உறவாகிச் சுமக்கிறதே அழகாய்/

இடுக்கன் களைந்தே இன்ப மூற்றி/
இதயத்தின் அலைவுகளில் மூச்சாகும் தாய்மை/
பொருந்திட்ட அன்பினாலே பெருந்துயர் துடைத்தே/
பொல்லாத நோய்க்கும் மருந்தாகிக் காக்கும்/

உணர்வோடு உடலையும் பிழிந்தூற்றி பூரிப்பில்/
உயிர்த்தெழுகின்ற உன்னத தாயின் காலடியில்/
உறைந்திருக்கும் சொர்க்கத'தை தினம் கண்டேனே/
உலகமே அடைக்கலமே தாயின் மடியில்/

ஜன்ஸி கபூர் 

ஐய நின்னொடும் எழுவர் ஆனோம்

சிறைக்குள்ளே ஒளியிழந்தாள் சீதையும்- கானகத்
திரைக்குள்ளோ இன்னலுற்றான் இராமனும்
சீதையை விடுவிக்கும் சிந்தையுடன் விபீடணனும்
வதை செய்யும் இராவணனிடம் சொல்லுரைத்தான்

மறுக்காதே யண்ணா பலசாலி இராமனே
அறுத்திட்டான் இரணியனை திருமால் அவதாரமாய்
சீதை விடுவித்தலே நலமெமக்கு  என்றதும்
வெஞ்சினத்தால் விரட்டிவிட்டான் இராவணனு மவனை

இணைந்திட்ட மந்திரி நால்வருடன் விபீடணனும்
இராமன் நிழல் ஒதுங்கினான் அன்புடனே
இராமனின் மனமோ ஐயத்துடன் அலைவுற
இராவணன் சபைக் கூற்றுணர்த்தினான் அனுமானும்

வண்டுகள் மொய்த்திடும் வண்ணமாலை அணிபவனே
வஞ்சக மனமதை மறைத்திடல் சாத்தியமோ
வஞ்சகர் அடைக்கலமாகார் உம் வசமே
நெஞ்சத் தன்புடனே நாம் வந்தோ மென்றதும்

அகம லர்ந்தே அணைத்தான் ராமனும்
முகமதை நோக்கி யுரைத்தான் விபீடணனிடம்
அன்பின் சகோதர்கள் நாங்கள் நால்வராவோம்
பின்னர் குகனோடி ணைந்தே ஐவரானோம்

மேருமலை சுற்றிவரும் சூரியன் மகனாம்
சுக்ரீவன் இணைந்ததும் அறுவரானோம் இப்போ
நீயுமி ணைந்தாய் எழுவரானோம் என்றே அணைக்க
விபீடணனும் மகிழ்ந்தே இராமன் திருவடி தொழுதான்

 Jancy Caffoor




மழை இன்பம்


விண்மீது முகிலோட்டம் நீரள்ளி யூற்றும்/
மண்ணோடு மழைநீரும் மனசொன்றிப் போகும்/
எண்ணங்கள் குளித்திட கன்னங்களும் குளிர்ந்திடும்/
வண்ணப்பூக்கள் மழையள்ளிப் போகின்றன மகிழ்வோடு/

வெள்ளாடைக்குள் சகதிப் பூக்களின் கும்மாளம்/
வெட்க மறியாத சிட்டுக்களின் உலகமோ சிரிப்புக்குள்/
வெட்டும் மின்னல் கொட்டும்போது அச்சமும்/
முட்டுமே மனதினில் தேகமும் மறைவுக்குள்/

பள்ளி போகும் பாதித் தூரம்/
துள்ளி வழியும் தூற்றல் மழை/
வாழையிலைக் குடையு மாடும் குதூகலத்தில்/
பிள்ளைக் கின்பம் ஊட்டுதிந்த மழை/

ஜன்ஸி கபூர்  



கல்லாமை நீக்கிய கடவுள்

 

கருப்புக் காந்தியாய் செல்லச் சொல்லெடுத்த
விரும்பும் மனிதராய் விலாசமும் கண்டவர்
அறிவியல் தேடலுக்குள் தொழினுட்பமும் புகுத்தவே 
வறிய மாணவரும் பகுத்தறிவு கொண்டனர்

உள்ளத் துயர்விலே பள்ளிகள் மிளிர்ந்திட
ஊக்குவிப்புத் திட்டங்களும் பல வகுத்தே
இல்லாமை ஒழித்தே இன்னல்கள் துடைக்க
கல்விக் கண்ணதை திறக்கச் செய்தார்

வகுப்பறைகள் உறங்கின மாணவர் குறைவுடன்
வறுமையை அகற்றவே தந்திட்டார் சத்துணவை
வெறுங் கதிரைகள் நிரம்பின மாணவர்களுடன்
கற்றனர் கல்வியும் நிலைத்தது வாழ்வினில்

கல்லாமை நீங்கவே உள்ளமும் உருகவே
எல்லோரும் படித்திடும் கனவும் வென்றார்
இன்னல்கள் ஒழிந்தே மகிழ்வுடன் வாழ்ந்திட
இதயங்கள் போற்றும் கல்விக் கடவுளுமானார்

ஜன்ஸி கபூர்