About Me

2020/08/01

ஹஜ் பெருநாள் கவிதை

பத்தாம் பிறைமுனைப் பேனாவில் துளிர்க்கும் தியாகத்தின் பிரகாசம் - 

துல்ஹஜ் பத்தில் முழங்கிடும் தக்பீரும்
துணிந்திட்ட தியாகமதை நமக்குள் திருநாளாக்கும்
அணிந்திட்ட புத்தாடையும் இசைந்திடும் நறுமணமாய்
இனித்திடும் பலகாரம் கனிந்திடும் உறவெனவே
சூழ்ந்திடும் மனதைத்தான் பள்ளியும் தானழைக்கும்

தீனொளிச் சுவைதனில் தீதுக்கள் கரைந்திடவே
தீட்டிடுவோம் நன்மைதனை துரத்திடுவோம் முரண்களையே
எட்டுத்திக்கெங்கும் இப்றாகிம் நபியவரின் 
இறையன்பில் வியந்து நிற்க
கொட்டிடுமே  மாண்புகளும் ஈகையேந்தும் அழகினிலே

கனவுக் கட்டளையும் கருத்தை நிறைத்ததனால்
கல்பின் வெளியெல்லாம் உயிர்த்திடுமே தியாகம்தான்
புத்தாடை புனைந்தே புதுப் பாதை அமைத்திடவே
பக்குவமாய் நாமும் வாழு 
நமக்குள்ளும் உரைத்திடுமே தியாகத்தை

பிறை ஒன்பதிலே அரபா நோன்பும்
பிரார்த்தனைகளுடன் குர்பானும்
இறையன்பை வருடும் நமக்குள்
இதயங்களையும் இணைக்கும் உறவாய்

இறையன்பின் ஆழமும் சிகரமென உயர
இணைந்திட்டோம் நாமே சாந்தி நெறியினில்
இறை பள்ளியில் மறை ஓதிடும் நெறி வாழ்வுதனில்
இதயமும் நனைந்தே வாழட்டும் தினம்

ஈதுல் அழ்காவின் ஈகையழகை ஈர்த்திடும்
ஈகையாளரின் மாண்புகளும் உவப்பேறி போகுமே
சுங்கை பொருந்திய திருநாளில் சமூக 
இடைவெளி நாம் பேணி
இல்லாதொழிப்போம் தொற்றுக்களை
வல்லோனின் ஆசி பெற்று
வையகத்தினில் வாழ்ந்திடுவோம் நலமாக

ஜன்ஸி கபூர்

01.08.2020 ஆம் திகதியன்று இலங்கை வானொலி முஸ்லிம் சேவை 
கவிதா சாளரம் விசேட நிகழ்வில் ஒலிபரப்பான எனது கவிதை
 

இல்லறத் தாய்


நாகரிகத் தேடலும் 
மௌனித்துக் கிடக்கும்/

நவீனத்து வாழ்வின் 
நளாயினியைக் கண்டே/

நினைவில் வந்தவன் 
பெருநோய் கொண்டதனால்/

நீங்கிடுமோ மெய்க்காதலும் 
பாசமும் துறந்தே/

நுகர்ந்திட்ட காதலும் 
வலிதனை மறந்து/

நெஞ்சத்தில் ஏந்திடும் 
இல்லறச் சுவைதனை/

வறுமையும் முதுமையும் 
துரத்திடும் போதிலும்/

வலிமை கொண்டே 
காத்திடும் அன்பிது/

ஜன்ஸி கபூர் 
 





2020/07/31

உறங்காத உண்மைகள்

முழுமதி முற்றத்திலே பறந்திடும் கவிகள்/
வழுக் காணா அற்புதப் படைப்புக்களே/
தழுவி யணைக்கையில் மணக்கும் செந்தமிழே/
முழுமையும் பெற்றதே சிறந்த குழுமமாய்/

ஜன்ஸி கபூர்  


நீ நான் குடை மற்றும் காதல்

 

காதல்!
நமக்குள் இளைப்பாறிக் கொண்டிருக்கிறது!

காற்றின் விரல்களாய்
மாறிக் கொண்டிருக்கிறாய் நீயும்!
நானோ
வெட்கத்தில் வெடிக்கிறேன் 

இறுக்கிக் கொள்கிறதே மழையும்
உந்தன் குறும்பாய் 
நானோ  
கரைகிறேன் ஈரத்துளிகளின் சுவைதனில்!

வெட்டும் மின்னல்கள் தொட்டிடுமோ என்னையுமே 
கட்டியணைக்கிறாய் உந்தன் காதலால்
வானும் முறைக்க!

தூரத்திலே  
தூங்கிடா கார்மேகங்கள் 
மௌனிக்கிறதே நம் மோனக் காதல் கண்டே!
உந்தன் கரங்களும் 
என்னுள் காதலைப் பின்னிடுகையில்
மின்னலாய் வெடித்தே ரசித்திடும்!

எந்தன் நெற்றி முத்துக்களை உடைக்கும்
உந்தன் பார்வை கண்டே 
சிறகு விரிக்கும் வண்ணக் குடையும்
உறவாகி எனைத் தழுவும் உனைப் போல!

அடடா 

இருளை நசித்தே 
மெல்லிய மேகத் துளிகள்
நமை வாசிக்கத் தொடங்கி விட்டனவே ஆவலாய்!

நாமோ 
யாத்துக் கொண்டிருக்கிறோம்
புதுக் காதல் இலக்கணத்தை!
நீ_நான்_குடை_மற்றும்_காதல்

ஜன்ஸி கபூர்