About Me

2020/08/13

மூங்கில் காடுகளே

மூங்கில் இலைகளோ காற்றின் கைகள்/

கைகள் வருடுகையில் உயிர்த்திடுமே புல்லாங்குழல்/

புல்லாங்குழல் துளைதனை முத்தமிடும் தென்றலே/

தென்றலே காதோரம் இசைக்கின்றாய் கீதத்தினை/


கீதத்தினை கேட்கையில் மேகங்களும் துள்ளிடுமே/

துள்ளிடுமே உள்ளங்களும் தூறல்களில் நனைந்து/

நனைந்து சிலிர்த்திடுமே நுரைத்திடும் நீரோடையும்/

நீரோடை அசைவினில்  விழிகளுக்கும் பேரின்பமே/


பேரின்பமே  நமக்கும் இயற்கையின் அழகு/

அழகு வேண்டுமே மாந்தர் இதயத்திலே/

இதயத்திலே நிழலாடும் நினைவுகளும் சுகமாக/

சுகமாக வாழ்ந்திடத்தானே நமக்கிருக்கு மூங்கில்/

ஜன்ஸி கபூர் - 12.08.2020




2020/08/12

இலக்கியப்பூக்கள்

செந்தமிழ் பிழிந்தூற்ற இலக்கணமும் யாப்பேற்றும்/

வந்தமர் சந்தனமாய் இலக்கியமும் நறுமணத்தில்/  

சிந்தைக்குள் அலைகின்ற வாழ்வியல் தொகுப்பெல்லாம்/

வந்தமருமே சொற்களும் கசிந்தோடும் கற்பனைக்குள்/

கற்றோர் கல்லாதோர் கனிந்திடுவார் சுவைக்கையிலே/

காத்திடுவோம் உதிராமல் இலக்கியப்பூக்களை உயிர்ப்புடனே/

ஜன்ஸி கபூர் - 12.08.2020





கல்வி

கல்வி கற்றிட வயதும் தடையில்லை/

காலத்தோ டொற்றிக் கற்றிடல் சிறப்பு/

கற்காதோர் கண்டிடார் புது உலகை/


ஜன்ஸி கபூர் - 11.08.2020


2020/08/10

சோகத்தை சுமக்காதே

சுமைகளும் சுகங்களே வலியதையும் ரசிக்கையில்/

ஊமைக் காயங்களுக்குள்ளும்; தீர்வின் வழியுமிருக்கும்/

கருகிடும் கனவுக்குள்ளும் கருத்தும் மறைந்திருக்கும்/

விரும்பிடா வாழ்வுக்குள்ளும் அரும்பிடும் இலக்குமுண்டு/

கண்ணீரும் நனைக்காத தன்னம்பிக்கை துணையுடனே/

எண்ணங்களும் வலுவாகும் சோகத்தையும் சுமக்காதே/ 


ஜன்ஸி கபூர்