About Me

2020/08/30

விடையில்லாத முள்மரம்

ஏடெடுக்கா கரத்தினில் வன்மத்தின் ரேகைகள்/

ஏழ்மையின் ஏக்கத்துக்குள் எரிமலைப் பூக்கள்/

தோற்றுப்போன வாழ்வில் தொடாத வசந்தங்களும்/

பற்று வைத்ததோ பாலகன் வாழ்வினில்/


இனிமையான வாழ்வோ இரும்புத் திரைக்குள்/

தனிமைக்குள் தள்ளாடுதே அறியாத வயதும்/

கனிந்திட்ட மனதுக்குள் கறைகளே குற்றங்களாய்/

மனிதம் துறந்ததனால் மலராதே எதிர்காலமும்/


விழி நீருக்குள் வீழ்ந்திட்ட கனவெல்லாம்/

அழிகின்றனவே நெறி துறக்கும் வாழ்வினால்/

வழி தவறுகையில் சட்டம்தான் பிணைத்திடும்/

பழித்திடுமே வையகமும் பாதகங்களை நினைவுறுத்தியே/


பாசமில்லா மாந்தரும் வகுத்திட்ட விதியால்/

வாசனை அறியாத பூவோ வெயிலுக்குள்/

பழகிய நண்பரும் பழக்கிய பாதகங்களால்/

அழகிய வாழ்வும் சிதறுதே வெறுமையில்/


ஜன்ஸி கபூர் 



  •  

     

தேநீரும் நானும்

உரு மாறும் மேகங்களின் ஊற்றால்/

திரு மேனிக்குள் நடுக்கப் புரட்சி/

தருகிறாள் இல்லாள் சூடான தேநீர்/

விருப்பின் விருந்தாய் ஊறுகின்றது நாவுக்குள்/

பருகும் பானம் படர்கின்றது உணர்வினுள்/

 

உறைக்கின்ற வடையும் உற்சாகத்தில் புரள/

குறைகின்றதே தேநீரும் வெறுமைக்குள் மனசும்/

மறைகின்ற நீராவிக்குள் உறைகின்றதே சுவாசமும்/

நிறைந்திருந்த சோர்வும் அறுந்தோடுகிறது தானாய்/

புத்துணர்ச்சித் துள்ளலோடு அன்றைய பொழுதுகள்/


ஜன்ஸி கபூர்- 30.0/8.2020




 


2020/08/29

நீர்ப்பூக்கள்

வான்முகில் வந்திட மயில்கள் ஆடிட

தேன் துளிகளின் தித்திப்பில் மனமாட


கண்ணோரம் நனைந்திடும் இயற்கையின் எழிலில்

எண்ணமும் சிறகடித்துப் பறந்திடுமே உவகையினில்


வெடித்த தரைக்குள் உயிர்த்த அரும்பும்

வெற்றிச் சிலிர்ப்பினில் புன்னகையை ஊற்றும்


பசுமைக் குடையின் ஈர்ப்பில் புவியும்

பரவசத்தில் செழிப்பினைக் காட்டும் விழிகளுக்கே


பறவைக் கூட்டத்தின் குளியலோ விண்ணில்

உறவாகுமே மழையின் இனிமையும் மனதில்


ஜன்ஸி கபூர் 

உதவும் கரங்கள்

 அழுக்கும் பழகிய அவல வாழ்வு

நழுவாமல் ஈர்க்கின்ற வறுமைப் போராட்டம்

தழுவாத உறவுகளால் உரிமையான வீதியோரம்

எழுதப்படாத விதியாக அழுத்திச் செல்கின்றதே


உணர்வுக்குள் பிசையப்பட்ட மனித நேயங்கள்

உலாவும் பூமிக்குள் புளாங்கித மழை

உதரத்தின் ஓலத்திற்கு உரமாகும் கரங்களே

உள்ளத்தின் மாண்பை  உயிர்த்திடுமே சிகரமாய்


நிலையற்ற வாழ்வுக்குள் அலைகின்ற துன்பங்களை

கலைக்கின்ற கருணையும் விலையற்ற பொக்கிஷமே

பாலைவன வெயிலையும் குளிர்த்திடும் பாசத்தினில்

சாலையோர யாசகமும் உயிர்த்திடும் தினமும்


இரக்கத்தில் இசைகின்ற மனங்களில் என்றுமே

இறைவனின் நேசமும் நிறைத்திடும் உதயத்தினை

இதயத்தின் அன்பினில் இன்னலும் கரைந்திடும்

இறந்தும் மறக்கப்படாதே உதவும் கரங்கள்


ஜன்ஸி கபூர்