About Me

2020/08/31

இயற்கையின் சீற்றம்

 


மேக மழையின் மோக எழுச்சி

தேகமும் நனைந்திட  விளைச்சலாய் வெள்ளமே

வேக நீரின் ஊற்றினில் கரைந்திடும்

பாதக வாழ்வுக்குள் தாழ்ந்திடுமே பாரே


ஆழிக்குள் திமிரெடுக்கும் பேரலைப் புரட்சியும்

அழித்திடுமே வாழிடம் அண்டத்தின் சுவடுகளையும்

வெட்டிடும் மின்னலும் வேரறுக்கும் பசுமையை

திட்டிடுமோ இயற்கையும் தீங்கிழைத்த மாந்தருக்கே


பனிப்பூக்கள் சிதறுகையில் உருகிடுதோ தென்றலும்

தனிப் பாதையோரம் பனியின் ஆவேசம்

மனித வேட்கையினில் மாறியதோ இயற்கையும்

மறந்த விழுமியம் அழிவின் உச்சத்தில்


நெகிழி தடையின்மை வருத்திடும் ஓசோனை

நெஞ்சமும் பிழிந்தூற்றும் இயற்கைச் சீற்றங்களை

நெருடட்டும் மண்வாசனையும் நெடுங்கால வாழ்வுக்கே

பெருந்துன்பம் வேண்டாமே என்றைக்கும் தலைமுறையினருக்கும்


ஜன்ஸி கபூர் 



மழலை இன்பம்

மழலை மொழி செவியின் நாதமே/

அழகுச் சொல்லில் தமிழும் தித்திக்குமே/

பழகும் மாந்தரும் மகிழ்வார் கொஞ்சி/

தவழுமே காற்றினில் மனமும் ரசித்திட/


ஜன்ஸி கபூர் - 31.08.2020


நாவினால் சுடாதே

நெஞ்சத்து உணர்வே உதிரும் வார்த்தைகளாய்

வஞ்சனை சொல்லாடல் வதைக்குமே நமக்கே

சினமும் சுட்டெரித்தால் விழிநீர் பொங்கிடுமே

அனலின் வடுவாகுமே பண்பில்லாச் சொற்களே

தினம் பேசிடலாம் பயன் அறிந்தே

ஆறாதே நாப் புண் வலிதான்


ஜன்ஸி கபூர் - 31.08.2020


ஓவியங்கள் ஒளிமயமாகுமா

 


இயற்கை செழிப்பினை விழிகளும் ஏந்திட

இதயமும் மகிழுதே பசுமையின் ஆட்சியில்

விளைந்திட்ட வயலின் உழைப்பெல்லாம் முத்தாக

விருப்பினில் வேளான்மை தருகின்றதே மனநிறைவை


உரல் இடிக்கையில் உளத்திற்கும் ஆரோக்கியமே

உடல் உழைப்பினில் மாசுக்கள் இல்லையே

கூட்டுறவின் குதூகலம் கிராமத்தின் எழிலாகும்

கூடிடுமா ஒளிமயமாக்கம் ஓவியம்போல் நிசத்தினிலே


ஜன்ஸி கபூர் - 31.08.2020