About Me

2020/09/17

என்னவளே

 

ஏந்துகின்றேன் உனையே எந்தன் ஆசைக்குள்ளே/

ஏக்கங்கள் வெடிக்கின்றதே உனையே காண்கையிலே/

ஏந்திழை உனையே உயிருக்குள் உருக்குகையில்/

எனையும் தொடுகின்றதே உந்தன் புன்னகையும்/

 

உந்தன் விழிகளில் மொய்த்திடும் கனவுகளை/

எந்தன் மனமும் உரசி ரசித்திடவே/

பருவத்தின் நூலிழையில் பறக்கின்றேன் உன்னோடு/

கரும்பைப் பிழிந்தூற்றி நனைக்கின்றாய் என்னுயிரையே /  


இதழ்களின் விருந்தோம்பலில் சிலிர்க்கின்ற தேகமும்/

இதயத் துடிப்பினில் வருடுகின்றதே தித்திப்பை/

மையிடும் கண்களும் சந்தனத் தேகமும்/

பொய்யில்லா அன்புக்குள் வெட்கத்தில் சிவக்குதே/


உந்தன் தரிசனத்தினை நுகர்ந்திடும் பார்வைக்குள்/

உரிமை பெறுகின்றதே வனப்பான அன்பும்/

உறங்கிடாத நினைவுகளும் அலைகின்றதே நிழலாக/

உணர்ச்சியின் மையத்தில் வீற்றிருக்கின்றாய் இராணியாக/


எந்தன் சுவாசத்தினுள் விட்டுச் செல்கின்றாயே/

உன் அழகான வாசனையைக் கவிதையாக/

என்னையும் மொழிபெயர்க்கின்றேன் தினமும் தனிமைக்குள்/

எனக்குள் என்னையே அடையாளமிடுகின்றாய் அன்பினாலே/


ஜன்ஸி கபூர் - 17.09.2020

 

கல்லறையின் ஈரலிப்பில்

 கவிதாஞ்சலி வடிக்கையில் வழிகின்றதே கண்ணீரும்

கலங்கிய விழிகளின் ஈரலிப்பில் கல்லறையும்

உயிர்த்திடுமோ அன்பின் நினைவுகளையும் சுமந்தே

உணர்வும் துடிக்கின்றதே ஆத்மா சாந்திக்காக


ஜன்ஸி கபூர் - 17.09.20




இரட்டைக்கிளவி

மாணவன் மடமடவென பாடங்களை எழுதிட/

ஆசிரியர் கடகடவென பாடங் கற்பித்தார்/


இடைக்கிடையே விறுவிறுப்பான கதைகளும் சொல்லுகையில்/

வெடவெடவென நடுங்கியதே  தேகமும் எனக்குள்/


தரதரவென கதிரையை இழுத்தேன் நானும்/

நறுக்நறுக்கென பற்களைக் கடித்தாரே ஆசிரியரும்/


மன்றத்தில் தோழியின் கலகலப்பான பேச்சும்/

தைதை ஆட்டமும் கவர்ந்ததால் ரசித்தேனே/


இடைவேளை வந்ததும் மொறுமொறு முறுக்கினை/

மொச்சுமொச்சுவென சாப்பிட்டேனே பசியையும் தணிய/


கசகசவென தேகம் ஊறிய வியர்வையும்/

சிலுசிலுவென வீசிய காற்றில் கரைந்ததே/


ஜன்ஸி கபூர்





ஏழையின் குடிசையில் ஒளி விளக்கு

ஞானத்தை வழங்கிடும் நற் கல்வியை

ஞாலத்திலும் தடுத்திடுமோ வறுமை இருளும்

அறியாமை அகற்றியே அறிவினை ஏற்றிடவே

அனைவரும் கற்பது உரிமையே அகிலத்தில்


ஏழ்மைத் தணலும் வீழ்த்திடும் மனங்களும்

ஏக்கத்தினில் நொறுங்கி வருந்துதல் சாபமோ

ஏற்றத்தை வாழ்வில் ஏற்றிடும் ஒளியாக

எல்லோர் எண்ணத்திலும் இசைந்திடுமே கல்வியும்


உதரம் துடித்தாலும் உணர்வும் ஏந்திடும்

உயர்வான திறன்களை உருவாக்குமே கல்வியும்

உன்னத எதிர்காலம் உதயமாகுமே திறமையால்

உயர்வுக்கும் என்றுமே தடையில்லையே வறுமையும்


கற்பதற்கு ஆர்வமும் முயற்சியும் இருக்கையிலே

ஆற்றலும் ஆளுமே நம் வசமே

ஏழைக் குடிசையின் ஒளி விளக்காக

ஏற்றிடும் கல்வியால் எதிர்காலமும் சிறக்குமே


ஜன்ஸி கபூர்